"என்னடி பத்தினியாட்டம் பேசுற தேவடியா ! காலி பண்ணுனா ரொம்ப பேசுற நாளைக்கு காத்தால கட இருக்கக் கூடாது" இருள் அடர்த்தியாய் போத்தியிருந்த அம்மாவாசை இரவினை கிழித்துக்கொண்டு வார்த்தைகள் வெளியே வந்தன. மாரியம்மன் கோவிலின் முன் பஞ்சாயத்து கூடியிருந்தது. தின்னையின் நடுனாகமாய் நாட்டுக் கவண்டன் அமர்ந்திருந்தான், இடது பக்கம் ஊர் கவண்டன் பாஸ்கரனும், வலது புறத்தில் சின்னத்தம்பி கவண்டனின் மகனான முனுசீப் சன்முகமும் அமர்ந்திருந்தார்கள். மற்ற சில கவண்டன்மார்களும் பஞ்சாயத்து கட்டிடத்தின் வலதுபக்கமிருந்த தனியான சிமண்டு தின்னையில் உட்கார்ந்திருந்தார்கள், பகல் நேரங்களில் ஊர் கவண்ட இளசுகள் தாயமாடும் இடம் அது தான். ஊர் பிரசிடண்ட் சென்னகேசவன் சக்கிலி தின்னையின் ஓரமாய் கைக்கட்டியபடி நின்றிருந்தான். பறையன், சக்கிலி, கவண்டன், குறும்பன் என்று பலபட்டரை 12 சாதியும் அங்கு கூடியிருந்தது. அம்மாவாசை இருட்டு அங்கிருந்த சூழலை போன்று கடுமையானதாகவே இருந்தது, பஞ்சாயத்து ஆபிஸ் அருகில் புதிதாய் போடப்பட்ட சோடியம் விளக்கு மஞ்சள் ஒளியால் அந்த இடத்தை நனைத்துக் கொண்டிருந்தது. பஞ்சாயத்தில் இருந்த அத்தனை முகங்களும், கோவில் ம...