"என்னடி பத்தினியாட்டம் பேசுற தேவடியா ! காலி பண்ணுனா ரொம்ப பேசுற நாளைக்கு காத்தால கட இருக்கக் கூடாது"
இருள் அடர்த்தியாய் போத்தியிருந்த அம்மாவாசை இரவினை கிழித்துக்கொண்டு வார்த்தைகள் வெளியே வந்தன. மாரியம்மன் கோவிலின் முன் பஞ்சாயத்து கூடியிருந்தது. தின்னையின் நடுனாகமாய் நாட்டுக் கவண்டன் அமர்ந்திருந்தான், இடது பக்கம் ஊர் கவண்டன் பாஸ்கரனும், வலது புறத்தில் சின்னத்தம்பி கவண்டனின் மகனான முனுசீப் சன்முகமும் அமர்ந்திருந்தார்கள். மற்ற சில கவண்டன்மார்களும் பஞ்சாயத்து கட்டிடத்தின் வலதுபக்கமிருந்த தனியான சிமண்டு தின்னையில் உட்கார்ந்திருந்தார்கள், பகல் நேரங்களில் ஊர் கவண்ட இளசுகள் தாயமாடும் இடம் அது தான். ஊர் பிரசிடண்ட் சென்னகேசவன் சக்கிலி தின்னையின் ஓரமாய் கைக்கட்டியபடி நின்றிருந்தான். பறையன், சக்கிலி, கவண்டன், குறும்பன் என்று பலபட்டரை 12 சாதியும் அங்கு கூடியிருந்தது. அம்மாவாசை இருட்டு அங்கிருந்த சூழலை போன்று கடுமையானதாகவே இருந்தது, பஞ்சாயத்து ஆபிஸ் அருகில் புதிதாய் போடப்பட்ட சோடியம் விளக்கு மஞ்சள் ஒளியால் அந்த இடத்தை நனைத்துக் கொண்டிருந்தது. பஞ்சாயத்தில் இருந்த அத்தனை முகங்களும், கோவில் மணலில் அமர்ந்திருந்த சனங்களின் மனங்களும் கோபத்தால் நிரம்பிகிடந்தன. அந்த வார்த்தைகள் வந்த அடுத்த நொடி எல்லோரும் ஒரு சேர அந்த அக்காவை பார்த்தனர்.
"காலிப்பண்ணமுடியாது, இங்க வாய தொறக்க எந்த கவண்டனுக்கும் தவுதி கிடையாது. என் கூட படுக்கும் போது தெரியலையா இது பொறம்போக்கு எடம்னு" , என்று பதில் சொன்னாள் அந்த அக்கா.
"தாயோளி மவளே நாளைக்கு கடைய காலி பண்ற இல்ல கடையோட சேதி எருச்சிப்புடுவோம் !" என்று அவளை அடிக்க கையோங்கியவாறு சொன்னான் பச்சைத்துண்டு கவண்டன்.
"முடிஞ்சத பார்த்துக்குங்க, என்னால காலி பண்ண முடியாது" என்று பதில் சொன்னவளாய் நடக்க ஆரம்பித்தாள் அக்கா. பின்னாலே அவள் கணவனும் மகனும் நடக்க ஆரம்பித்தனர். இப்படி தான் நான் எழுத நினைத்த என் கிராமத்தின் கதை ஆரம்பிகிறது. வேறு பலவிதங்களில் ஆரம்பித்தும், இந்த ஆரம்பமே என் ஊரை பேச சரியானதாய் இருக்கிறது.
அந்த தேனீர் விடுதி ஊரின் பேருந்து நிறுத்தத்துக்கு அருகிலே இருந்தது, அக்கடையை வைத்திருக்கும் அக்காவை எனக்கு சிறுபருவம் முதலாகவே தெரியும். எப்போதும் முகம் நிறைய மஞ்சள் பூசி, மலர் சூடி, புன்னகை புரிந்தவளாய் காட்சிதருவாள் . அவள் முகம் சோர்ந்து நான் பார்த்ததே இல்லை. அவள் எப்படியோ அப்படியே அந்த தேனீர் கடையும் இருக்கும். நன்கு சாணமிட்டு, அழகான கோலத்துடன் எப்போதுமே காட்சி தரும். ஒரு சில தினங்கள் வடை, பஜ்ஜி என்று பலகாரங்கள் வாங்குவதோடு அவள் உறவு முடிந்துவிடும் என்றாலும் என் தத்தா வீட்டுக்கு அவள் கடையை கடந்தே செல்லவேண்டும் என்பதால் தினமும் அவளை பார்ப்பேன், ஒரு சில நாட்கள் உடல்நிலை குறையினாலோ, உறவினர் வீடுகளுக்கு சென்றதாலோ அவள் கடையினை நான் கடக்கவில்லை எனில் மீண்டும் அவளிடம் பலகாரம் வாங்க செல்லும்போது பாசத்துடன் கன்னத்தை தடவி நலம் விசாரிப்பாள். அவள் என் கன்னத்தை தடவும் சமயங்களில் என்னுடல் சில தூண்டல்களை உண்டுசெய்யும். இவ்வுளவு நாட்கள் அவளை தெரியும் எனினும் அவள் பெயர் தெரியாது. எனக்கு தெரிந்து அவள் பெயர் போயச்சி. இப்படியாகவே ஊரில் இருக்கும் எல்லோரும் அவளை அழைப்பார்கள், அவள் தேனீர் விடுதியின் பெயரும் அதுவே - போயச்சி கடை. 20 வருடங்களுக்கு முன் வடக்கிலிருந்து கனவன் மற்றும் கைக்குழந்தையுடன் அக்கா எங்கள் ஊருக்கு வந்ததாய் ஒரு முறை எங்கள் வீட்டு கிழவி யாரிடமோ சொல்ல கேட்டிருக்கிறேன். அவள் கனவன் தான் டீ அடுப்பில் எப்போதும் நின்றுக்கொண்டிருப்பான். அவள் பக்கத்தில் இருக்கும் அடுப்பில் வடையோ, முருக்கோ சுட்டுக்கொண்டிருப்பாள். அவளின் மகன் பாலிடெக்னிக் படித்துக் கொண்டிருந்தான், பள்ளியில் என் அக்காவின் வகுப்பு தோழன். எப்போதும் அவளின் கடை பரபரப்பாகவே இருக்கும் வயது வந்த கவுண்டமார்கள் எப்போதும் அங்கிருப்பார்கள். அதனாலே பலபட்டரை சாதியினர் அந்த கடைக்கு போக மாட்டார்கள். அவர்களுக்கு தான் பக்கத்தில் சதாசிவத்தின் டீ கடை இருந்தது, அவனோ எல்லா சாதிகளுக்கும் கிளசில் டீ கொடுக்கமாட்டான்.
மாதேஸ் – எங்கள் ஊரின் ஆஸ்தான அழகியல் நிபுணன், ஊர் அமட்டன். சிறுவயதில் மாதேசின் அப்பனான முனுசாமி எனக்கு முடிதிருத்தினார் இன்று மாதேஸ் செய்கிறான், முனுசாமியின் அப்பன் தனக்கு முடிவெட்டியதாய் என் தத்தா கூற கேட்டிருக்கிறேன். தின்னையில் தாயம் விளையாடிவிட்டு மீதி நேரங்களில் ஊர் இளவட்டங்கள் எல்லோரும் மாதேசின் கடையில் தான் குடியிருப்பர். மாதேசின் கடை அக்கா கடைக்கு நேரதிராக இருக்கும் இரண்டு கடைகளையும் சேலம் அரூர் நெடுஞ்சாலை பிரித்து வைத்திருந்தது. மாதேஸ் கடைக்கு பக்கத்தில் தாஜான் வீடும் அவனின் பெட்டிக்கடையும். நான் முடிவெட்ட செல்லும்போது எல்லாம் அவர்களின் பேச்சுக்களை ஆர்வத்துடன் அதே நேரம் அமைதியாய் கேட்பேன். அவர்கள் அநேகமாய் எதோ ஒரு கதாநாயகியை பற்றியோ இல்லை ஊரில் இருக்கும் ஏதோ ஒரு பெண்ணை பற்றியோ பேசிக்கொண்டிருப்பர். பல சமயங்களில் அவர்கள் பேச்சு அந்த அக்காவை பற்றியதாகவே இருக்கும். சில நேரங்களில் புதிய மனிதர்கள் யாரேனும் வந்து அவளை பற்றி விசாரிப்பார்கள். இதற்கு மாதேஸ் சொல்லும் பதில்கள் என்னை எப்போதுமே கிளர்ச்சியடைய செய்யும்.
"அவளா?, ஐம்பது ரூபா சார், அதுவே அதிகம்...ஊர்ல செய்யாதவன் எவனும் இல்ல, எல்லாம் தொங்கி போச்சு, புதுசா பாருங்க சார்"...என்பான், அசட்டுத்தன்மாய் சிரிக்கும் எதிர்முகத்தை பார்த்தபடி....”பார்த்து ஒர வாங்கிட்டு போங்க நோய், கீய் வந்துட போவுது" என்று சொல்லி சிரிப்பான். இம்மாதிரியான பேச்சுக்கள் என்னை மேலும் மேலும் கிளர்ச்சியடைய செயதன், மேலும் அந்த நேரத்தில் தான் நான் நீலப்படங்களை பார்க்கவும், காம கதைகளை படிக்கவும் ஆரம்பித்திருந்தேன். எனக்கு அவள் மீது ஒருவித மோகம் உண்டானது, அவளுடன் எப்படியாவது உறவுக்கொள்ள துடித்தேன், பல இரவுகள் அவளுடன் கனவுகளில் புணர்ந்தேன். அவளை காதலிப்பதாய் நம்ப ஆரம்பித்தேன். அவளை பார்ப்பதற்காகவே பத்து முறையேனும் அவள் கடையை கடக்க முற்பட்டேன். பலகாரம் சுட்டப்படியோ, பலகையில் அமர்ந்து பேசியப்படியோ அல்லது புலிய மரத்தின் மீது சாய்ந்தப்படியோ அவள் ஒவ்வொரு முறையும் எனக்கு காட்சியளித்தாள்.
அந்த கிராமத்தில் எல்லாமே இருந்தது, பரங்கியர்களின் காலத்தில் மிகமுக்கிய ஊர் என்றும் அவர்கள் இந்த வழியில் சென்றால் இங்குத் தான் தங்குவார்கள் என்று தாத்தன் கூற பலசமயம் கேட்டிருகிறேன். அதற்கு சாட்சியாக எங்கள் நிலத்துக்கு அருகில் இடிந்துப்போன ஆங்கிலேய கால கட்டிடம் ஒன்றும் இருந்தது. வெள்ளையர்களே காவல் நிலையம், அஞ்சலகம் என்று எல்லா அரசாங்க துறைகளையும் கொண்டுவந்ததாய் தாத்தா சொல்லுவார். பள்ளி, மருத்துவமனை இப்படி அடிப்படை தேவைகள் நிரம்பிய ஊரிலே நாங்கள் வாழ்ந்தோம்.
ஊருக்கு புதிதாய் நூலகம் கட்ட அரசு பணம் ஒதுக்கியிருந்தது. நூலகம் எங்கே கட்டுவது எனும் கேள்வி எழுந்தது. அதற்கு தான் அணைத்து சாதியரும் பஞ்சாயத்து கூடினார்கள். பேச்சு மட்டுமே வளர்ந்துக்கொண்டு சென்றது. பணமும் நிலமும் கொண்ட கவுண்டர்களோ நிலம் தர முன்வரவில்லை. நூலகம் வேண்டாமென்று அரசுக்கு பதில் எழுதலாம் என்று முடிவுசெய்தனர். என்னத்தான் ஊரின் ஊராட்சி தலைவர் சக்கிலியர் என்றாலும் முடிவு எடுக்கும் அதிகாரம் கவுண்டர்களிடமே இருந்தது. சென்னகேசவன் பாவம் கவுண்டர்களின் கைபிள்ளையாகவே கிடந்தார். பேச்சுக்களின் இறுதியில், இடம் தர பறையர்கள் முன்வந்தனர்
" ஏன்டா, நாங்க என்ன தெனமும் பறத்தெருவுக்கு வந்து தினத்தந்தி படிக்கனுமா"
" இன்னும் என்ன பறையனும் குடியானவனும் கல்யாணம் பண்ணி சம்மந்தியாவது ஒன்னுத் தான் கொற"
என்று கோபத்தில் கத்திய நாட்டுக்கவண்டன், நூலகம் கட்ட தாங்களே இடம் தருவதாகவும் அது ஊருக்கு பொதுவாய் இருக்கும் இடமென்றும் சொன்னான், புதிர் வைத்து பேசிய கவண்டனின் பேச்சு மற்ற சாதியினரை குழப்பமடையசெய்தது. கேள்விகளால் நிரம்பிய மக்களின் முகங்களுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார் கவுண்டர்
" நம்ம போயச்சி கடை பொதுவுல தான் இருக்கு. அது ஊர் நெலம், அவள காலி பண்ண சொல்லிடலாம், அண்ட வந்தவத்தானே" என்றான்.
இது கவுண்டர்கள் சிலருக்கே அதிர்ச்சியாய் இருந்தது. அவள் இல்லாமல் போனால் என்ன செய்வது எனும் தயக்கம் அவர்களிடம் வெளிப்படையாக தெரியவே செயது. இதற்காய் அடுத்த வாரம் மீண்டும் பஞ்சாயத்து கூடியது, அந்த பஞ்சாயத்து தான் இந்த ஊர் கதையின் தொடக்கம். எங்கள் ஊரின் கதையை இதற்கு மேல் சொல்ல நான் விரும்பவில்லை, எண்ணங்கள் முழுவதுமாய் அந்த அக்கா நிறைந்துள்ளாள். இத்தோடு இந்த கதை முடிகிறது. அப்படியே வேறு யாரேனும் இந்த கதை மேலும் தொடர்ந்திருந்தால் இப்படி எழுதியிருப்பார்கள், இல்லை நானே இப்படியெல்லாம் எழுதியிருக்கலாம்
1) அந்த அக்கா கடையை அங்கிருந்து எடுக்கவில்லை, நூலகம் கட்ட வேறு இடத்தை மேக்கத்தி கவுண்டன் கொடுத்தான். அவள் அங்கேயே இருந்தாள், வழக்கம் போல் கவுண்டர்கள் அவள் வீட்டுக்கு வந்துப்போனார்கள்.
2) அந்த கடையும் அவளும் அங்கே இருகின்றனர் நூலகம் வேண்டாமென்று முடிவு செய்யப்பட்டது. அவள் அங்கேயே இருந்தாள், வழக்கம் போல் கவுண்டர்கள் அவள் வீட்டுக்கு வந்துப்போனார்கள்.
3) அந்த கடை எரிக்கப்பட்டு அவள் ஊரை விட்டு துரத்தியடிக்கப்பட்டாள். புதிய கட்டிடத்துடன் திறப்புவிழாவுக்கு தயாரானது நூலகம். பின்னொருநாளில் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நூலகத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
4) நூலகம் வேண்டாமென்று முடிவு செய்யப்பட்டது அல்லது நூலகம் கட்ட மேக்கத்தி கவுண்டன் நிலம் கொடுத்தான். எது எப்படியோ அவள் ஊரை விட்டு போய்விடவில்லை. மாதேசின் உதவியுடன், என் முதல் இரவை அவளுடன் பகிர்ந்துக்கொண்டேன். நான் உச்சத்தை அடந்த வேளையில் அவளின் விரைத்த உடல் சில்லிட்டிருந்தது. நான் சோர்ந்துபோய் சுருண்டு படுத்தேன், அவள் ஆடைகளை எடுத்து உடுத்த ஆரம்பித்தாள்.
இப்படியாய் பல முடிவுகளை அந்த கதை கொண்டிருக்கும். ஆனால் நான் எதையும் எழுதவும் முடிக்கவும் விருப்பவில்லை. நான் சொன்ன அதே இடத்தில கதை அப்படியே முடிகிறது
ஆதிக்க சாதியினரின் சாதிவெறியை அழகாக படம் பிடித்துள்ளது
ReplyDelete