கே த்தரின் டிசோசாவை நேரில் சந்திப்பதற்கான அவனது திட்டம் எதிர்பார்க்காத மிக மோசமான ஒரு முடிவை கொடுத்திருந்தாலும், அவளை சந்திக்க வேண்டியதின் காரணங்களை யாரும் படிப்பதற்கு முன்பே கரையான்களுக்கு இரையாகியிறுந்த, ஆயிரம் பக்கங்களில் பதுக்கி வைத்திருந்தான். ஒரு சமயம் அந்த ஆயிரம் பக்கங்களும் கிடைக்கப்பெற்றிருந்தால் அவனின் மரணமும் எந்த ஒரு முக்கியத்துவத்தையும் பெற்றிருக்காமல் போயிருக்கக்கூடும். அவளை சந்திக்கவேண்டி அவன் எடுத்த முடிவை பலரும் விமர்சிக்ககூடும் அபத்தத்தின் உச்சம் என்று சொல்க்கூடும் தெளிவான சித்தனை இருக்கும் எவரும் செய்ய துணியாத செயல் என்றும் நினைக்கக்கூடும். ஆனால் இந்த விமர்சனங்கள் எவற்றுக்கும் இப்போது அர்த்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அன்று நடந்த அந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஓர் நொடி விடாது அந்த நாளின் வாசனை உட்பட அனைத்தையும் நினைவில் வைத்திருக்கிறேன். எரிந்த புத்தகக் கடைகளில் இருந்து வெளியேறிய கரிய நிற புகை நிறம்பிய இருண்ட வானத்தின் கீழ் அது நடந்தது. நகரத்திலிருந்து இருபத்தி ஏழு மைல்கள் தொலைவில் அமைந்துள்ள குப்பைக் மலைக்கு நீண்ட பழைய லேலண்ட் லாரியில்...