மேற்கு - கிழக்காக இடைவிடாது சுழன்றுக்கொண்டிருக்கும் அந்த நெடுங்காடு ஆதியின் முதல் கிழமைகளில் மனித மூச்சினை அறிந்திராத வல்லையாக இருந்ததென்று ஆங்கிலோ பாதிரி டானியல் ஈஸ்ட்பெரி தன் வாழ்க்கை குறிப்பில் எழுதிவிட்டு சென்றிருந்தான் .. கானக இலைகளுக்கிடையே பாசியின் நிறம் ஒத்த பச்சை வாசத்தை கொண்டிருந்த குறுஞ்சி மனிதர்கள் வாழ்ந்ததை டானியல் அறிந்திருக்கவில்லை .... பின்னாளில் காப்பி கொட்டையுடன் வந்த பாதிரியின் பேரன் பேட்ரிக் ஈஸ்ட்பெரி , வன மனிதர்களின் பச்சை குருதியினை கொண்டு ஆழிக்கும் பாலைக்குமாய் முடிவற்று நீண்டு கிடக்கும் மலை பூமிக்கு வழித்தடம் சமைத்தான் . இரும்பின் இடைவிடாத ஓசையில் வீழ்ந்து செத்த நிலத்தின் மரங்களுடன் , மனிதர்களும் செத்தார்கள் . பேட்ரிக்கின் மேலாள் அரசிக்கு எழுதிய கடிதத்தில் இப்படி சொல்கிறான் “ மரங்கள் வரிசையாக வெட்டுபட்டு விழும் நேரத்தில் எங்கள் கண்களில் கண்ணீர் அருவியாய் வழிந்தோடியது ... மரங்களின் சாபத்துக்கு பரிகாரமாய் அவை செத்த 16 வது நாளில் மரணமுற்ற ஆன்மாக்களுக்கு மனிதர்களை படையலிட்டோம் , பெருமதிப்புக்குறிய அரசியாரே ! மனித தலைகள் உருண்டோடியது ஏனோ அத்தனை சுவையான...