அன்புக்குரிய பீம்தாஸ், உங்கள் புத்தகத்தை படித்து முடித்த அடுத்த சில நிமிடங்களில், உங்களுடன் பல விடயங்களை பகிர்ந்துக்கொள்ள தன்னெழுச்சியாக எழுதப்படும் இக்கடிதம் பேச வந்ததை பேசாமல், உங்களின் சந்திப்பு குறித்தோ, நேர்காணல் குறித்தோ, நாவலின் சுருக்கம் குறித்தோ பேசுவதாக அமைந்தால் அதை நீங்கள் ஆதவனிடம் தான் கேட்க வேண்டும். பால்டிக் கடலின் மத்தியில் அமைந்திருக்கும் மனிதர்களால் கைவிடபட்ட அந்த தீவுக்கு இந்த கடிதம் வருமென்றும் அப்படி வரும் இந்த கடிதத்தை கார்ட்னர் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார் எனும் நம்பிக்கையிலும் எழுதுகிறேன். காவி வண்ணத்திலான தீபகற்ப தேசத்தின் தென் திசையிலிருக்கும் நெருக்கடியான பெருநகரத்தின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 2வது தளத்தில் இருந்தப்படி இந்த கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கும் நான் ஒரு பச்சை தமிழன் என்பதை உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பச்சை தமிழ் குருதிக்கான ஆதாரத்தை அப்பலோ மருத்துவமனை ‘பச்சை இனகுருதி’ ஆய்வின் முடிவில் எனக்கு வழங்கியது என்பதையும் சொல்லிக்கொண்டு, இந்த தகுதியையும் தூய்மையையும் அடிப்படையாக கொண்டு உங்களுக்கு...