குடிப்போமா என்றாய் – ஒருநொடி திடுக்கிட்டுப் பார்த்தவன் சரி என்றேன் – அதுதான் மிகச் சரியாக நம் முதல் உரையாடல் – அலைகள் நம் இருவரின் கால்களையும் ஒருசேர நனைத்துக்கொண்டிருந்தன – நாம் வீதியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம் – இரவு அனேகமாய் 9 மணியை நெருங்கியிருந்தது – ஒரு நொடி நின்றவன், எங்கு குடிப்பது என்றேன் – என்னைப் பார்த்து மௌனமாய் புன்னகைத்தபின் மீண்டும் நடக்க ஆரம்பித்தாய் – நான் உன்னைத் தொடர்ந்து நடக்கலானேன் – என்னையும் உன்னையும் தாங்கியப்படி, உன் ஊதாநிற ஸ்கூட்டர் நகரத்தின் வீதிகளில் ஊர்ந்து கொண்டிருந்தது – நகரத்தின் இரைச்சலுக்கு மத்தியில் ஆழ்ந்த நிசப்பதம் நிலவியது, நம்மிடையே – உன் வாசனைத் திரவியத்தின் நறுமணம் அடிமனதில் ஊடுருவிக்கொண்டிருந்தது, மழைச்சாரலைப்போல்– நான் உன்னைத் தீண்டாமலமரத் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருந்தேன் –நீயும் விடாமல் பிரேக் போட்டுக் கொண்டே வந்தாய் – மதுக்கூடம் வரை நம்மில் அந்த விளையாட்டு தொடரவே செய்தது – ஒருசில முறைகளைத் தவிர அனேகம் நீயே வெற்றி பெற்றாய் – ஒன்று இரண்டு தடவை விளையாட்டின் ஆர்வத்தில் எதிர்பாராமல் பிரேக் பிடித்து வண்டியுடன் கீழேவிழப்போகவும் செய்தோம் –அது...