தொலைந்துப்போன சொற்களை பற்றி பேசிய போது நடுங்கிய அவன் கை விரல்களின் வழியே வெளியேறிய வார்த்தைகளில் பரவியிருந்த அச்சத்தின் நாற்றம் செந்தாமரையின் மனத்தை ஒத்திருந்தது. மழை மறந்துப்போன அந்த நாகரிக நகரத்தின் இடுக்கான சந்து ஒன்றில் அமைந்திருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் வலது பக்கமிருந்த 2வது வீட்டின் முன்னறையில் அமர்ந்தப்படி சரியாக 1 வருடம் 8 மாதங்கள் 27 நாட்களுக்கு முன் அந்த கதையை அவன் சொல்லிக்கொண்டிருந்தான்.. அந்த கதையினை அவர்கள் பறையிசையினை கேட்பதான முறுக்குடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.. மெட்டல் ராக்கினை கேட்பதான தோரணை என்று கூட சொல்லலாம். ஏனெனில் அது ஒரு “சூப்பர் ஹீரோ” கதை, காரணம் கதையில் துவக்குகள் இருந்தன, கிபீர்கள் இருந்தன, தோட்டாக்களின் மிச்சங்கள் இருந்தன, கதையின் வழியெங்கும் வழிந்தோடிய தடம் கடல் பாலத்தினூடே அவன் தீவை அடைந்திருந்தது, அதன் வீச்சம் அவர்களை மயக்கியது. சிதறிக் கிடந்த சதைதுண்டுகளும், விறைந்துப்போன சடலங்களும் அவர்களை கிளர்ச்சியூட்டி உச்சம் தொட தூண்டின. சொல்லிக்கொண்டிருந்த அந்த கதையை அவன் இப்...