Skip to main content

பஃபூன் நடிகனின் இறுதி ஒத்திகை வசனம் - இசே


                   தொலைந்துப்போன சொற்களை பற்றி பேசிய போது நடுங்கிய அவன் கை விரல்களின் வழியே வெளியேறிய வார்த்தைகளில் பரவியிருந்த அச்சத்தின் நாற்றம் செந்தாமரையின் மனத்தை ஒத்திருந்தது. மழை மறந்துப்போன அந்த நாகரிக நகரத்தின் இடுக்கான சந்து ஒன்றில் அமைந்திருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் வலது பக்கமிருந்த 2வது வீட்டின் முன்னறையில் அமர்ந்தப்படி சரியாக 1 வருடம் 8 மாதங்கள் 27 நாட்களுக்கு முன் அந்த கதையை அவன் சொல்லிக்கொண்டிருந்தான்.. அந்த கதையினை அவர்கள் பறையிசையினை கேட்பதான முறுக்குடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.. மெட்டல் ராக்கினை கேட்பதான தோரணை என்று கூட சொல்லலாம். ஏனெனில் அது ஒரு “சூப்பர் ஹீரோ” கதை, காரணம் கதையில் துவக்குகள் இருந்தன, கிபீர்கள் இருந்தன, தோட்டாக்களின் மிச்சங்கள் இருந்தன, கதையின் வழியெங்கும் வழிந்தோடிய தடம் கடல் பாலத்தினூடே அவன் தீவை அடைந்திருந்தது, அதன் வீச்சம் அவர்களை மயக்கியது. சிதறிக் கிடந்த சதைதுண்டுகளும், விறைந்துப்போன சடலங்களும் அவர்களை கிளர்ச்சியூட்டி உச்சம் தொட தூண்டின. சொல்லிக்கொண்டிருந்த அந்த கதையை அவன் இப்படி தான் தொடங்கினான்.

“ஒரு போர் நாளின் முடிவில் வெற்றியும், தோல்வியும் மிச்சமிருப்பதில்லை, அங்கு இருப்பதெல்லாம் வெடித்த ஷெல்களின் சிதறல்களும், அதை ஓடி பொறுக்கி விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளும், சில பல சாவுகளும்.. ஒப்பாரிகளும், ஓலங்களும் மட்டும் தான்”

அவர்கள் தூண்டப்பட்டவர்களாய் அவன் வார்த்தைகளுக்கு ஏங்க ஆரம்பித்தார்கள். வார்த்தைகளை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருந்தவனின் வார்த்தைகளுக்கான ஏக்கமது.

”என் நண்பன் செத்துப்போன.. இல்லை சுட்டுக் கொல்லப்பட்ட நாளில் தான் என் பள்ளி சீருடையை கடைசியாக அணிந்திருந்தேன். அதற்கு பின்னான ஓட்டமும் அலைதலுமே வாழ்க்கையாகி இன்று வரை தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. நாடுகள், நகரங்கள், மனிதர்கள் வாழ தகுதியற்ற அகதி முகாம்கள் என்று நீண்ட வாழ்க்கை இன்று உங்கள் முன், இடுக்கான ஒரு சந்தில் இருக்கும் இந்த வீட்டின் முன்னறையில் நிலைகொண்டிருக்கிறது – அடுத்த 10-12 மணி நேரங்களுக்கு. சூரியன் தன் முதல் கதிரை விரிக்கும் முன் நான் மீண்டும் ஓட ஆரம்பிக்க வேண்டும். ஒரு அகதியின் வாழ்க்கையில் அழைதல் மிகவும் அடிப்படையானது தானே.. இன்னும் சொல்லப்போனால் சோற்றையும், காற்றையும் விட அத்யாவசமானதா இருக்கிறது.


”நீ எதற்கு அலைய வேண்டும்? நாங்கள் எதற்கு இருக்கிறோம்? எத்தனை ஆண்டுகள் என்றாலும் நீ இங்கு இருக்கலாம் நண்பா. இது உன் வீடு” என்று உணர்ச்சி பெருக்கத்தில் சொன்னவனுக்கு மெலிசான புன்னகையொன்றைப் பதிலாக்கி “இப்படியான வசனங்கள் சலித்துபோய்விட்டன தோழா! வேறதாவது பேசலாம். நீங்கள் வாங்கி கொடுத்த இந்த மதுவுக்கு பதிலாக நான் எதையாவது செய்தாக வேண்டும். ஆனால் என்னிடம் மிச்சமிருப்பது எல்லாம் மரணங்கள் மட்டும் தான், உங்களுக்கு மரணத்தின் கதைகள் சலிப்பூட்டுகிறது என்றால் நான் ஒரு சுவாரஸ்யம் நிரம்பிய சாகஸ மனிதர்களின் கதையைச் சொல்லவா?” என்றான்.

பேரார்வத்தில் விரிந்த கண்களை பார்த்து “மூக்கை மூடிக்கொள்ளுங்கள், அகதி வாழ்வின் நாற்றம் உங்களுக்கு குமட்டலைக் கொடுக்கலாம், அப்படியே கண்களையும் மூடிக்கொள்ளுங்கள்” ஆனால் அவர்கள் இங்கு செந்தாமரையின் மனம் வீசுகிறது…. அதுவும் உன்னிடமிருந்து தான் வருகிறது என்றார்கள்.





                                            நன்றாக வெயில் எரித்துக்கொண்டிருந்தது. ஆனாலும் மழைப்பொழிவும் அன்று இருக்கத்தான் செய்தது. தகரக் கூரைகளில் சத்தம் கேட்டதை வைத்துத்தான் அவன் சொல்லிக்கொண்டிருந்தான்.

அன்று மழைப்பொழிவு இருந்தது. ஆனால் அன்றைக்கு எந்தச் செய்தித்தாள்களிலோ தொலைக்காட்சிகளிலோ மழை பற்றின எந்தக் அறிவித்தல்கலையும் கண்டதாகத் தெரியவில்லை. நான் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தேன். மழை பொழிந்தது; வெயிலும் எரித்தது. தர்க்க ஞாயங்களையெல்லாம் விட்டுவிட்டுப் பார்த்தால் எறும்பைத் தின்று தொலைத்திருந்தேன், எறும்புகளைத்தான். சிறிது சிறிதானதாகவும், உடல் செம்மஞ்சள் நிறத்திலும் கீழ்ப்பகுதி கடும் கறுப்பாகவும் இருந்தது அந்த எறும்புகளுக்கு. பசி, அன்றைய என் இரவு உணவு எறும்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததை என்னால் எதிர்கொள்ளவே முடிந்திருக்கவில்லை.

உடலெங்கும் எறும்புகள், சற்றுத் திரும்பிப் படுத்தால் அவை கீழே இறங்குகின்றன, மேலேறித் தன் பட்டாலியன்களுக்கு கட்டளை இடுவதைப்போன்று திரும்பிப் பார்க்கிறது அல்லது ஏதாவது ஒரு எறும்பு முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. நான் அவை செல்வதைப் பல முறை பார்த்திருந்தேன். இதுவரை நான் கொன்ற எறும்புகளும் ஏராளம். எண்ணிக்கையில் லட்சங்களைத் தாண்டிக் கொலை செய்தேன். இன்னும் எறும்புகள் உடலைவிட்டு நீங்கியதைக் காணோம்.

எறும்புகள் உடலில் ஊர்வதைப் பற்றியோ அல்லது எறும்புகளைப் பற்றிய நல்லெண்ணங்களோ என்றைக்கும் எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால் எறும்புகள் ஊர்வது, இந்த வியாதி, அது வியாதிதான். அறிந்துகொண்ட வகையில், கல்லறைப் பூ வியாபாரியின் மகளுக்கும் மற்றும் சிங்க அரசனின் 3ஆவது மனைவிக்கும் இது இருந்து தொலைந்திருக்கிறது. இதில் சிங்கனின் மனைவிக்கு கொடூரமானதாகவே இருந்திருக்கிறது, அதாவது அவள் உடலில் சவ எறும்புகள் மொய்த்திருக்கின்றன.

சாக்குருவி கத்திற்று. மூன்று தெருக்களைத் தாண்டியும் அதன் கீச்சல் கேட்டிருக்கும். அவ்வளவு சரியாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். எந்த விசேடமும் இல்லை. அடர்வான ஈரமும் நீலமுமல்லாத ஒரு இரவில் சாவுகளின் ஓலங்கள் அதிகமாகவேதான் கேட்கிறது. சரியாகக் கவனித்தால் சத்தங்கள் அதிகமானதாகத்தான் கேட்கிறது. தண்டவாளங்களின் பிசுபிசுப்பும், அதன் கொடிய சப்தங்களும் ஈவிரக்கமற்றவை. நாடிகள் துடி துடித்து சதுப்புகளை நோக்கி இழுபடுகிறது ஒரு மெல்லிய இழை. காதுகளும் கன்னத் தசைகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம் மாறித் தொலைக்கிறது. எறும்பு ஊர்கிற நேரங்களைத் தவிர அவை மேல் எனக்கு எந்தவித புகார்களும் இல்லை. அதாவது, ஒன்றைத் தவிர, பெரும்பாலான இரவுகளில் எறும்புகள் ஆக்கிரமிக்கின்றன என்பதே அந்தப் புகார். ஒரு இரவில், முதல் மூன்று விரல்களை மடக்கி, மிக வேகமாக எறும்புகளைத் தாக்கி அழிக்கிற என் கைகள் தன்னிச்சையாய் வேலை செய்யத் தயாராகிறது. ஒரு எறும்பு காகிதத்தில் குருமணலிப் போன்று கிழிந்த இடத்தை மிகப் பெரியதாய்க் கிழித்து எடுத்துச் செல்லப் போகிறது. என்னில் இருந்து இறங்கியது மட்டுமில்லாமல் போகிற வழியில் இந்த வேலைகளைச் செய்யப் பார்க்கிறது. இப்பொழுது பாருங்கள், சிறிது நேரம்தான் ஆகியிருக்கிறது ஆனால் ஒரு பட்டாலியனே இறங்கி அந்தக் காகிதத்தை கிழித்துச் செல்லப் போராடிக்கொண்டிருக்கின்றன.

கடைசியாக, செப்புப் பாத்திரங்களில் வேர்களும், நார்களும் என ஊறவைக்கப்பட்டு மென்பழுப்பு நீரை சிறிய மூங்கில் சாடிகளில் ஊற்றி அவற்றை ஒவ்வொரு கதிரைகளின் முன்னே இருக்கக்கூடிய மேசையின் பகுதிகளில் வைத்தாள் - அந்த நேரத்திலும் அவள் கைகளிலிருந்து சில எறும்புகள் மெதுமெதுவாக இறங்கிக்கொண்டிருப்பதையும் அவனித்திருந்தாள் - அவை இறங்கிச் செல்லும் வேகத்தில் அத்தனை மெத்தனமிருந்தது - எறும்புகள் எதற்கும் அலட்டிக்கொள்பவையாகத் தெரியவில்லை - பணிப்பெண்ணிடம் தன் மகன்மாரிடம் கூறவேண்டிய தகவல்களையும் சில வஸ்த்துக்களின் பெயர்களையும், அவை இருக்கும் இடங்களையும் ரகசியமாகக் கூறினாள் - ரகசியங்கள் கூறப்பட்டவுடன் காட்டின் எல்லையிலிருக்கிற பழமையான மரங்களின் தோப்புக்குக் கிழக்கே இருக்கக்கூடிய வேடவர்களின் குடிலுக்கு இவள் சென்றுவிட வேண்டுமெனவும் கட்டளையிட்டாள் - பின்பு ராணி மெல்ல ஒரு சிறிய தோல் வெளிர்ந்த முதிய பாம்பைப் போல அவ்விடத்தை விட்டு வெளியேறினாள் - குடுவைகளில் அடைக்கப்பட்டிருந்த திராவகத்தை அருந்தினாள் - மெதுவாக தன் படுக்கையில் படுத்துக்கொண்டாள் - எறும்புகள் அப்போது வெளியேறி வெகு தொலைவு சென்றிருந்தன.

சுயமைதுனத்திற்கான எந்தத் தேவைகளும் பொதுவாக பெறப்படுவதில்லை. அவை கணநேரத்தில் தோற்றம் பெறுகின்றன. பனி பெய்துகொண்டிருக்கிற, அடர்ந்த இரவுகள் நண்பகலில் வியர்த்து ஊற்றிக்கொண்டிருக்கிற பொழுது என எந்தக் காலங்களும் அவசியப்படுவதில்லை - அந்த நீல இரவுகளில் கரிய மதர்ப்பான தேகத்தை அவள் கற்பனை செய்துகொண்டாள். அந்தத் தேகத்தில் பரவி கலந்திருக்கிற, கைப்பிடிகளுக்குள், முலையில், வயிற்றில், தொடையிடுக்குகளில் தேகத்தின் சிறிய பகுதிகள் படுகிற, சிறிய உரசல்களுக்குள் பூஞ்சனம் பிடித்து தேக்கப்படுகிற வெப்பம். அவள் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் சுவாசமாய் வெளியேறிக்கொண்டிருந்தது. அந்த விரிப்பு நசநசப்புக்குள்ளாகியிருந்தது. அவர் தன் உணவு மேசையை அலங்கரிப்பதில் சற்று அக்கறை எடுத்துக்கொள்பவராய் இருந்தார். அவர் தன்னுடைய உடலில் சவ எறும்புகள் இறங்கிச் செல்வதும் ஏறிச் செல்வதுமாய் இருப்பதைப் பார்த்தார். கிட்டத்தட்ட இருபது நாட்களுக்கு மேலாகவே தொடர்ச்சியாக எறும்புகளைக் கொலை செய்திருக்கிறார். ஆனால் எறும்புகள் குறைந்த பாடில்லை.

இறுதியாக அவர் தற்கொலை செய்வதற்கு ஆயத்தங்களைச் செய்யலானார். ஓர் பின்னைய மதியப் பொழுதில் தயாரானார். அவர் தற்கொலைக்குத் தயாரான விதம் சற்று நகைப்புக்குரியது - தன் உணவு மேசையை அலங்கரித்தார் - செஞ்சந்தன மரத்தால் அந்த மேசை செய்யப்பட்டிருந்ததது. அந்த மேசையின் நான்கு கால்களிலும் சிங்கங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அவை தரையில் ஆடாமல், அசையாமல் இருப்பதற்காகவே துருக்கிய இராச்சியத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கற்கள் அந்த மேசையின் கால்களுக்கடியில் பொருத்தப்பட்டிருந்தது. அந்தக் கற்களின் சிறப்பு – அது துருக்கியிலிருந்து கொண்டுவரப்பட்டது. அதை அவர் பலமுறை எண்ணிக்கொள்வார். அவருக்கு அதில் ஒருவித பரவசம் ஏற்படுவதுண்டு. அவரின் செய்கைகள் போர்த்துக்கீச ராணிக்கு எப்போதும் தான் விசுவாசமிகு ஊழியை என்பதை படு அப்பட்டமாகவே அறிவிக்கவும் செய்தன. ஆனால் எறும்புகளின் பார்வையில் அவர் விழுந்தது தற்செயலானதல்ல, அதேபோல் அவர் போத்துக்கீச ராணியாரின் ஊழியை என்பதனாலும் அல்ல. அவருக்கு மிகப் பெருமையான ஒரு பக்கம் எப்போதுமே இருந்தது; அதில் எப்போதும் தோல்களே உருகும் அளவுக்கு ஏதாவதொரு பாராட்டும் கிளர்ச்சியும் அவருக்கே உரித்தான மனிதர்களால் கிடைத்தது. அதைவிடுத்து அவர் தன் அறையில் இருந்த மேசை சிறப்பானதாய், ஆனால் எந்த விதத்தில் என்பதை அவர் ஆய்வுக்குட்படுத்தியிருக்கவேண்டுமென்றே தோன்றுகிறது. ஏனெனில் அவர் அவ்வளவு நேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்தார். அந்த மேசை மிகச் சிறப்பாகவே வடிவமைக்கப்பட்டிருந்தது - அவர் பழங்களையும் சந்தன மங்குஸ்தான் பழத்தைப் போன்று எட்டு சுளைகள் இருக்கக்கூடிய, கறுப்பான பழங்களை மெள்ளத் துடைத்து அடுக்கினார் - காட்டு மாங்காய்களை சிறிய துண்டுகளாக அரிந்து அவற்றை பூ போன்று வடிவமைத்தார் - பாலின் மேல் இருக்கிற ஆடையை மெதுவாக உரித்து அதில் அவித்த கிழங்குகளையும் வைத்து, அதை உருளையாக்கினார் - வாட்டப்பட்ட இறைச்சியை அந்த மேசையின் ஒரு மூலையில் வைத்தார் - அந்த மேசை பல்வேறான இனிக்கிற, புளிக்கிற, உறைப்புச் சுவை கொண்ட பழங்கள், கிழங்குகள் என நிறைந்திருந்தது - விலங்குகளின் சதைத் துண்டுகளும் அந்த மேசையில் இருந்தன - அழகாக பன்னிரண்டு பேர் அமரக்கூடிய அந்த மேசைக்கென்றே பிரத்தியேகமாகத் தயார் செய்யப்பட்ட கதிரைகளை மேசையைச் சுற்றி அடுக்கினார் - அவர் இவ்வளவு அலங்கரிப்பு வேலைகளைச் செய்யும் போதும் அவரின் பணிப்பெண் அருகே நின்று அவரை அவதானித்துக்கொண்டிருந்தார்.

நதி ஓடக்கூடிய பள்ளத்தாக்குகளின் ஒரு கிராமத்தில் அந்தக் கிழவன் இருந்தான். அவன் குடும்பம் தீவிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வெளியேறியது. மூண்டுபோன அந்தத் தீவையும் மக்களையும் கிழவன் சந்தித்ததில்லை. அந்தத் தீவு வன்செயல்களின் பின்னான அமைதிப்பொழுதாய் பெரும்பாலும் குமைந்து கிடந்தது. கடற்கரையோரங்களில் சேர்கிற பழம் பொருட்களைப் பாதுகாப்பதற்காகவே தான் பிறந்திருப்பதாகக் கதை விட்டுத் திரிகிற சடையன் அர்மேனியர் ஒருவர் கிழவனின் நெருங்கிய நண்பனாயிருந்தார். எனவே அவரை, நான் பார்த்து எப்போதும் கடற் பொருட்களையோ அல்லது கடலில் விபத்தாகி நொடிந்து வெளியேறுகிற பொருட்களையோ நம்பி அவர் இருந்ததாக என்றும் நம்பத் தயாரில்லை. பொதுவாக சடையன் திருடனாகவே இருப்பார் என நான் நம்பிக்கொண்டிருந்தேன். கிழவன் சடையனை எதிர்பார்த்து இருப்பவரில்லை. சடையனைப் பற்றி ஏதேனும் கேட்டால்கூட மிக அக்கறையினமையோடு அல்லது தன் சட்டையின் பொத்தான்களைச் சரி செய்தவாறு குறுக்கி ஒருமுறை பார்த்துவிட்டுத்தான் அவனைக் காணவில்லை,,, அவன் தொலைந்துவிட்டான்... நீ பார்த்தால் என்னிடம் சொல்’ என்றுவிட்டுக் கிழவர் தன் வேலைகளில் மூழ்கிப்போவார். கிழவரை நான் கடைசியாகச் சந்தித்தபோது ’சில காலமாக இந்தக் கல்லறைகளைப் பாதுகாக்கிறவனாய் வேலை செய்துகொண்டிருக்கிறேன்’ என்றபடி மிகப் பலமாகச் சிரிக் ஆரம்பித்திருந்தார்.

ஒரு நிலத்தின் பாடலை இயற்றுகிறான் ஒருவன். தண்டவாள இரவுகள் மருட்கிறது. தண்டனை நிறைவேற்றப்படாத நகரம், குற்றஞ்சாட்டப்படுகிற நகரம்; வேடிக்கையுடன் பார்த்துச் சிரித்துக்கொள்கிறார்கள் நகரத்து விருந்தாளிகள். கிழவன் கேட்டறிந்த செய்திகளெல்லாம் வியப்பூட்டக் கூடியளவில் இருந்தன.

கிழவர் பசுமையான கொடிகளைப் போர்த்து உறங்குகிற அந்த மனிதர்களின் கல்லறைகளைத் தாண்டி நடந்தார். (அங்கு ஒரு நாயும் கல்லறைக்குள் அடைக்கப்பட்டிருக்கிறது) கப்பலின் கைப்பிடி வழுவழுக்கின்றன. கப்பலின் கண்ணாடிகள் இறுகச் சாத்தப்படுகின்றன. கப்பலின் தளத்தில் கிழவரின் மகன் நின்றுகொண்டிருந்தான். பெரும் புயல் கடந்தபோது அவன் அந்தப் படிகளில் இருக்கவில்லை.

ஊளைச் சத்தமொன்று தன் வீட்டைக் கடந்ததாக்க் கிழவர் அறிவித்தார். அவர் வீடு வந்தபோது பானையொன்றிருந்தது. அந்தப் பானையின் கழுத்துப்பகுதி சிறியதாயும், வாய் சற்று பெரியதாகவும் வட்டமாகவும் இருந்தது. அதை தலைகீழாக வைத்தார். அதில் பாடல்களை நிறைக்கப்போவதாய் சபதமேற்றுக்கொண்டார். சரியாக ஒரு மதியப்பொழுதில் அவர் பாட ஆரம்பித்தார்.

கிழவர் எறும்புகள் ஊர்வதைப் பார்த்த கணம் இவ்வாறாயிருந்தது - அழுந்தத் துடைக்கப்பட்டிருந்ததைப் போல் கல்லறைகளில் பாசிகள் படர்ந்து, சிலவற்றை பற்றைகள் மூடுவதற்கும் முயல்வதைப் போன்றிருந்த மழைப்பொழுதொன்றில் கிழவர் அவனித்தார். பச்சைப் பாசி ஊறியிருந்த தடிமனில்லாத இலையின் நரம்புகளில் எறும்புகள் ஊர்ந்துகொண்டிருந்ததன. மெல்லிய சிறகசைப்பினோடு அதற்கு பறக்கும் தன்மையிருக்கிறது. தேவதைக் கதைகளில் வருகிற தேவதையின் வண்ணங்களோடு எறும்புகள் வெளிக்கிளம்பும். அவற்றின் அசைவில் ஒரு பெரும் வெப்பம் காணாமல் போகும். அந்த மண்ணில் வசந்தம் குடியேறுமென சொல்லப்படுகிற தேவதைக் கதைகளை எறும்புகளிடமே அவர் சொல்ல ஆரம்பித்திருந்தார்.

சிறிது காலங்களிலேயே அவரது கண்கள் பழுப்பேறியிருந்தன. கதைகளில் சாத்தான்களின் வருகைப்படலம் விரைவில் நிகழயிருப்பதாய் சொல்லிக்கொண்டார். இருட்டில் அவர் கண்கள் அந்த இருளையே வயப்படுத்திக்கொள்கிறது. அவர் கண்கள் விடிகாலைப்பொழுதுகளில் மினுங்கி மறைகின்றன.

அவர் தன்னிலை மறந்திருந்தார். எறும்புகளோடு அவரது விளையாட்டுகள் தொடர்ந்தன. மெல்லிய அரவங்களுக்கும் பச்சைப்பாம்புகளின் நகர்வுகளுக்கும் அவர் விழித்துக்கொள்கிறார். தூங்குகிறாரா விழித்திருக்கிறாரா என்பதுகூட தெரியவில்லை. பூ விற்றுக்கொண்டிருந்த அந்தக் கல்லறைச் சிறுமி புலம்பிக்கொண்டிருந்தாள். அவள் கையில் மெல் ஊதா நிறத்தில் பூவொன்றிருந்தது.

வரலாறுகள் உருவாக்கப்பட்டிருந்தன. அதன் சிடுக்குகளுக்குள் எளியவர்கள் சிக்கிக்கொண்டிருந்தனர். கிழவரின் சொற்கள் கல்லறைகளின் ஒவ்வொரு பளிங்கு கற்களிலும் பட்டுத் தெரித்தன. சுக்குநூறாய் தன் உடல் பிரிந்து நறநறவென தின்னப்பட அவர் தனக்கான திரிகளை ஏற்றினார். அவரின் இறுதிச் சொற்கள் இவ்வாறிருந்தது. ‘நான் மெல்லிய இழைகளால் ஆகியிருக்கிறேன்.’

பஃபூனைக் காண்கிற சில தருணங்கள்; தோன்றி மறைகிறான் பஃபூன் நடிகன், பூனையைப் போன்ற சிறிய கண்களுடன். கிளர்ச்சியை உண்டுபண்ணுகிறது அவனது சிரிப்பு. உதடுகளுக்கு உதட்டுச் சாயத்தை அன்றைக்கு அவன் பூசியிருக்கவில்லை. தன் கண்களை மூடி மூடி திறந்ன். தொளதொளத்த உடலுடன், கால்களில் பொருந்த காலணிகளால் அவன் நிலத்தைத் தேய்க்கிறான். திடீரென உற்சாக மூட்டுவதற்கான செய்கைகளைச் செய்யத் தயாராகிறான்.

சில நேரங்களில் “பெறக்கிக்க” என்ற ஏளனச் சொற்களுடன் அவன் சில நாட்கள், பல வாரங்கள் என காணாமல் போகிறான். அவனைக் காண்கிற நொடிகளில் கையெடுத்து அழ ஆரம்பிக்கிறான். அவனை அணைப்பதற்கான மறுகணத்தில் பின்வாயிலை நிறைத்து நிற்கிறான். பஃபூனைக் காணாத சில இரவுகள் புகை மண்டியிருக்கின்றன. பொதுவாக பஃபூன் நகரத்தில் நுழைகிற இரவு ஈரலிப்பான, காற்று மிதமாக வீசிக்கொண்டிருக்கிற ஓர் இரவாய் அமைந்துவிடுகிறது. இரவுகள் மெல்லிய சோக இழைகளைக் கொண்டிருக்கின்றன. சில்லிடுகிற உடல் தரைகளிலிருந்து மெல்ல வான்நோக்கி எழுந்துகொள்கிறது. அன்றிரவிலேயே பஃபூன் இரவுக்கான சில கீர்த்தனைகளைப் பாடுகிறான்.

நாடக ஒத்திகையில் இறுதிக் காட்சியின் நடிகன் கதாபாத்திரங்களின் ஓர்மைகளை, தவிட்டுச் சாயங்கள் பூசப்பட்ட சொண்டுகளையும் சிடுக்குகளால் பின்னப்பட்ட கதாபாத்திரத்தை அவிழ்ப்பதான பதற்றத்துடன் முன்னேறிக்கொண்டிருந்தான். அவன் அவிழ்க்கிற முடிச்சுகள் பாரதூரமானவையாக இருக்கும்.

நம்பிக்கையான காலைகள் தனக்குப் பூப்பதில்லை; அவை பெரிய அண்டவெடிப்பாய் நிகழ்ந்துவிடுகிறது. என்னில் தொற்றிக்கொள்கிற பதற்றம் சற்றும் அலட்சியம் செய்வதற்கானவையாய் இராது எனத் தன் விரல்களைச் சுழற்றி கண்களைக் குறுக்கிக்கொண்டான்.

அவன் வளைந்திருந்தான். மார்பு விரிந்திருந்ததைப் போன்றதான சில ஆடைகளை அணிந்திருந்ததைப் போலிருந்தது. குமைந்துகொண்டே பேசினான். “இல்லை. என்னால் முடித்துவைக்கப்படப் போகின்ற காரியங்களை நீ பார்க்கத்தான் போகின்றாய்” என்றவன் அடுத்த சில நொடிகளில் “ம்ம்ம் . . . அது என்னால் முடியாதுதான்” என்றபடி தன் கைகளிலிருந்த சிறிய தொப்பியைச் சுழற்றினான். பாசிப்பிடித்து ஒருவித மணத்தோடு இருக்கிற தண்ணீர்த் தொட்டிகள் தான் வாழ்வதற்கு போதுமானவையென பல்வேறு நேர்காணல்களில் உளறிக்கொண்டிருந்தான். காதுகள் இல்லாத மனிதர்கள் உடலில் பூ பூக்கிற சிறுமி, வெளிச்சமில்லாத மலைநகரத்துக் குளிர் என தன் தேசாந்திர மொழியில் ஒப்பித்துக்கொண்டிருந்தவன் திடீரென எறும்புகள் இறங்குகிற மனிதர்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்ன்.

அமைதி எனலாம்

ஒரு நடு இரவில்

பெருவிரல்கள் நிலைகுத்தி,

அந்தரித்த வேளை

சொல்லிப் போனான்

இன்றிலிருந்து பதினாறாம் நாள்

புழுதியேறிய குறுத்துச் சிவப்பு மண்

புரண்ட காலோடு

வெள்ளி சமைந்த இரவுகளில்

சூன்யக் களிப்பில்

பாலைவனச் சுழலில்

நீ உன்

காற்று

உலர்த்தப்பட்ட

வறண்ட இரவை

அடைவாய்



மூக்கிலிருந்து நிணம் வடிகிறது

ஏய் சூன்யக்காரா...

என்னைப் பார்,

நீ எப்போதும்

சான்றிதழ்கள் தருவதை நிறுத்தப்போவதில்லை!

இல்லையா?


பஃபூன் நடிகனின் இறுதி ஒத்திகை வசனம்: 

இந்த நூற்றாண்டின் துயர்மிகு வரிகள் எழுதப்பட்டாயிற்று, சொற்களும் எழுத்துக்களும் சின்னாபின்னமாய் சிதறிச் செல்லும் வரிகள். அகதிச் சான்றிதழ்களோடு அலைந்தே சாவு. சாபமிட்டுச் செல்கிறது அந்த வரிகள்.

நாடக அரங்கைவிட்டு வெளியேறுகையில் கைகளிலிருந்த மணிக்கூடை சரிசெய்துகொண்டான் பஃபூன் நடிகன். அவன் நகரில் செய்திகளைப் பரிமாறுபவனாக அறியப்பட்டிருந்தான். எறும்பு வியாதி பற்றிய தகவல்களடங்கிய தன் பழைய சூட்கேஸை எடுத்துக்கொண்டு சிங்கனின் மனைவியிடம் சென்றான்.

கூடாரக் கதவுகளில் குளிர் ஏறுகிறது. பெயர்த்து வரப்பட்டிருந்த மரக்கதவுகள் உள்ள வாசல்கள் ஈரலிக்கின்றன. மருத்துவர் ம்ஸன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டார். தன் மூக்குக் கண்ணாடியையும் ஆராய்ந்தார். அது பனியில் நனைந்திருந்தது. துடைத்தார்.

மருத்துவரின் உதவியாள் தூரத்தில் அமர்ந்திருந்தாள். பதற்றமாய் அந்தக் கட்டிடம் அதிர்ந்தது ம்ஸனுக்கும் தெரிந்திருந்தது. அவளும் தன் தலையை ஆட்டி கட்டடம் அதிர்வதை உறுதி செய்தாள். அவர் மாற்றலாகிப் பணிபுரியச் செல்கிற மருத்துவமனைகள் பெரும்பாலும் கடலின் அருகிலேயே அமைந்துவிடுகிறன. மருத்துவமனைகள் பற்றியும் அங்கே வருகிறவர்களைப் பற்றியும் அவர் குறிப்புகளையும் எழுதிக்கொண்டிருந்தார். பண்புரிகிற இடங்களும் அதைச் சுற்றியிருக்கிற மனிதர்களைப் பற்றியும் தன் குறிப்புகளில் குறித்துக்கொண்டார். ஆனாலும் அவற்றை மட்டுமே அவர் எழுதினாரில்லை. அவர் சற்றுத் துடிப்பான மனிதர். ம்ஸன் தன் குறிப்புகளில் சில சுதந்திரமான வசைகளையும் எழுதுவார். அந்த வசைகள் ‘இல்லாமல் போகட்டும், உயிர்ப்பறுந்து போகட்டும்’ என்கிற மாதிரியான வசைகளாய் இருந்தன. ஆஸ்பத்திரி பெரும்பாலும் வெம்மையாகவே இருந்ததாகவும், அங்கே நிசப்தம், அழிவின் பின்னான மௌனமாய்க் குமைந்திருந்தது எனவும் குறிப்புகளை எழுதிக்கொண்டார். இந்தக் குறிப்புகளோடு அவரிடம் சுவாரசியமான சில குறிப்புகளும் இருந்தன.

அந்தக் குறிப்புகள்:

*எறும்புகள் சிவப்பு எண்ணெயைப் போன்றிருக்கின்றன.

*துணிப் பைகளுக்குள் பார்த்தேன். எறும்புகள் பட்டாளம் பட்டாலியன் பட்டாலியனாக வேலை செய்து கொண்டிருக்கின்றன. நிச்சயமாய் மனிதனைத் தின்பதற்கான, செரிமானங்கள் உண்டு. இவை நினைத்ல், மனிதர்களைக் கடத்த முடியும். மனிதர்களுக்கும் தெரியாமலேயே மனிதனைப் புதைக்க முடியும்.



*சிறுவனின் கால்கள் வீங்கியிருந்தன. அவன் கண்கள் பழுப்பேறியிருந்தன. அவன் சிரிப்பு நிச்சயமாய்ச் சொல்வேன். அது உயிர்ப்பிருக்கிற ஒரு மனிதனின் சிரிப்பு.

*சிறுவனின் வெடித்திருந்த கால்களில் பெரிய புண் ஏற்பட்டிருக்கிறது.

*சிறுவன், எறும்புகள் புண்ணிலிருந்து வெடித்து வெளியேறி போவதைப் பார்த்னாம். அவன் கண்கள் நீலமாகியிருந்தன. அவை வெறித்திருந்தன.

*அவன் உடல் சிதைய ஆரம்பித்திருக்கிறது. அவன் தோல் உடலிலிருந்து மெல்ல மெல்ல விலக ஆரம்பித்திருக்கிறது.

*சிறுவனுக்கு உடலியல் தொற்றேதும் ஏற்படவில்லை.

*ஆம். நான் அதைக் கவனித்தேன். அவன் குரலில் உற்சாகம் தெறித்தது. அவன் ஒரு விலாங்கு மீனைப்போல துடிப்பானவனாய் இருந்தான்.

*ஆனாலும் அவன் குரலுக்கும் துடிப்பிற்கும் அந்த உடலால் ஈடு கொடுக்க முடியவில்லைதான்.

*அவன் உடல் நீரில் ஊறின பிரேதம் போல் மாறிக்கொண்டிருக்கிறது. கண்கள் வெளித் தள்ள ஆரம்பித்திருக்கின்றன. அவன் சாம்பல் வர்ணம் பூசியவனைப்போல் மாறிவிட்டிருக்கிறான். ஆனாலும் அவன் உற்சாகமாய்த்தானிருந்தான்.

*பொருக்குகள் விழுந்த மனிதனாக அந்தச் சிறுவன் மாறியிருக்கிறான்.. உடலிலிருந்து இறங்குகிற எறும்புகள் பற்றிய கவலைகள் எதுவும் அவனுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அவன் தன்னைப் பன்றியாக எண்ணிக்கொள்கிறான்.

மருத்துவர் ம்ஸன் எறும்பு இறங்குகிற மனிதர்கள் இருக்கிறார்களென்பதை தன் சித்திரக் கதைகளில் கண்டிருந்தார். உண்மையில் ம்ஸனுக்கு சிறுவன் மேல் எந்த அக்கறையும் இல்லை. அவன் சுவாரசியத்துக்கானவன் என்பதை ஆணித்தரமாகவே நம்பிக்கொண்டிருந்தார்.

சிறுவன் தொலைந்துபோன செய்தியைக் கேட்டபோது ம்ஸன் எந்த ஆரவாரமுமின்றி உடலைக் குலுக்கிக் கண்களைத் தாழ்த்திக்கொண்டார்.

“ஆம். அவன் இல்லாமல் ஆகிவிட்டான். சுவாரசியத்தின் முடிச்சுகளைத் தன்னோடே இழுத்துக்கொண்டான்.”

யுவும் மகளும் பிரமிப்பூட்டுகிற அந்த பழுப்பேறிய நகரத்திற்கு வந்தார்கள். இருண்டிருந்தது அந்த பொழுது. வெப்பம் பரவியிருந்த இரவுகள் - இரு பெண்களும் சுழலுக்குள் நுழைந்து கொண்டார்கள்.

அப்பு நகரத்தின் உணவகம் ஒன்றில் இரவு நேரப் பணியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர் நகரில் பகல் பொழுதுகளில் பெரிதாய் அலைந்துகொண்டிருப்பதில்லை. இரவுகளில் அரச எச்சங்களோடும் லத்திகளோடும் அவருக்கு மோத வேண்டியிருந்தது. உண்மையில் அதை மோதல் என்று சொல்ல முடியாது; அவர்கள் தாக்கினால் இவர் வாங்கிக்கொண்டு வந்துவிடுவார். மாலை நேரங்களில் அப்பு சாராயக் கடையில் நன்றாகக் குடித்துவிட்டு படு தூஷணத்தால் சுற்றிவிட்டுக்கொண்டே அவர் காதுபெருத்த தையல்கார பெண்ணின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அப்பு தையல்கார பெண்ணின் வீட்டில் மூன்றாம் மாடியில் குடியேறியிருந்தார். அப்புவிடம் முதல் தளத்தில் குடியேறுவதற்கான எந்த வசதி வாய்ப்புகளும் இருக்கவில்லை. மாடிப் படிகளில் ஏறும்போது சர்வ நிச்சயமாக காது பெருத்த பெண்ணிற்கும் அவளின் ஊதிப் பெருத்த கணவனுக்கும் வசவுகள் கிடைக்கும். அவள் வீட்டின் வாடகைக் கேட்க வருகிற நேரங்களில் அவளை அலைக்கழித்தார். அவளும் இவரை திட்டிவிட்டு வெறி ஆவேசத்தோடு வெளியேறினாள். ஆனாலும் அவள் மீண்டும் வாடகை கேட்டு வரும்போது புதிதாகவே வருகிறாள். அப்புவால் அவளை விளங்கிக்கொள்ள முடிந்ததில்லை.

முதல் நாள் அவர் பெண்ணையும் அவளின் மகளையும் அழைத்து வந்தபோது, வீட்டின் உரிமையாளரான அந்தப் பெண் அங்கிருக்கவில்லை. அவள் வெளியே சென்றிருந்தாள். காதுபெருத்தவள் அங்கில்லையென்பது கிழவருக்குச் சற்று ஆறுதலான செய்திதான். அவர் வீட்டிற்குள் அழைத்துச் சென்றபோது வீடு இருண்டிருந்தது.

“இவற்றில் பூக்கள் இருக்கின்றன” என்றாள் அந்தக் குட்டிப் பெண். அவள் கண்கள் ஆச்சரியத்தில் அங்கிருந்த செடிகளை நோக்கிப் பரபரப்பாக அசைந்தன. “இங்கு நாம் சமைக்கலாமா அப்பு?” என்றபோது அவள் கைகளுக்குள் ஊர்ந்துகொண்டிருந்த எறும்புகளை இனங்கண்டாள்...




                  அவன் சொல்லி முடித்த எறும்புகளின் கதையை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த எனக்கு அவனிடத்தில் கேட்க ஒரு கேள்வியிருந்தது... நீங்கள் ஒரு சிறந்த கதை சொல்லி நண்பா, இப்படியான கதையை இதற்கு முன் கேட்டதே இல்லை... ஆனாலும் பார் நண்பா... உங்களுக்கு எவ்வளவு சிக்கல்கள், பரவாயில்லை... சரி அதைவிடு... இப்போது காப்டன் இருக்காரா, இல்லையா?


கையில் இருந்த மதுவை ஒரே மிடறில் குடித்து முடித்த அந்த மனிதன் என்னை உற்றுபார்க்க ஆரம்பித்தான். அவனின் உடல் செம்மஞ்சள் வண்ணத்தில் மாற ஆரம்பித்திருந்தது. அவன் தலையை விட்டு இறங்கிய கோடிகணக்கான எறும்புகள் இப்போது அந்த அறையை முழுமையாக ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தன. ’அங்கிருந்து வெளியேற நிச்சயமாய் எனக்கு அப்போது அவகாசம் இருந்தது என் நண்பனே.’

Comments

  1. செந்தூரன் ஈஸ்வரன்March 5, 2016 at 6:02 PM

    நாங்களும் கருத்து சொல்லலாமா தோழர் :P

    ReplyDelete
  2. ஏம்பா நீங்களே எழுதுவிங்களாம், நீங்களே படிச்சிபிங்களாம் நீங்களே கருத்து சொல்லுவிங்களாம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்: வெறுப்பை ஜனநாயகப்படுத்தும் அழகியல்!

0. பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்: “நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது” 1. மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போ...

In the most health-obsessed society ever, all is not well*: On Trauma

1 Philosopher Byung-Chul Han's essay Neuronal Power begins with the following lines: " Every age has its signature afflictions. Thus, a bacterial age existed; at the latest, it ended with the discovery of antibiotics. Despite widespread fear of an influenza epidemic, we are not living in a viral age. Thanks to immunological technology, we have already left it behind. From a pathological standpoint, the incipient twenty-first century is determined neither by bacteria nor by viruses, but by neurons ". Modern integrative body mind science defies Byung-Chul Han’s statement, that it is reductive to define human suffering solely in terms of ailments. However, we are living in an era, where production relations dictate nearly everything about human existence, in this specific context Byung-Chul Han’s statement—that the majority of human society is afflicted by mental or neuronal issues—serves as a foundational lens to understand contemporary humans and their struggles. In today’...

படுகொலைக்கு முன்னான சில மணி நேரங்கள்

    ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன் , எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை . அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட   நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன் , ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல் . கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை . உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை , இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை . அதே நேரம் ஒளியற்று , ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது , சூடான மழைத் துளியை போல் . மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது ... அம்மாவின் முலை காம்புகள் , விபத்தொன்றில் மரணித்த நன்பன் , தேர் திருவிழா , அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள் , அவளின் முதல் முத்தம் , இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம் , கல்லூரியின் விடுதி அறை , முதல் காமத்தின் வெள்ளை இரவு ... இப்படி சொல்லி ம...