ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன், எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை. அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன், ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல். கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை. உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை, இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை. அதே நேரம் ஒளியற்று, ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது, சூடான மழைத் துளியை போல். மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது... அம்மாவின் முலை காம்புகள், விபத்தொன்றில் மரணித்த நன்பன், தேர் திருவிழா, அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள், அவளின் முதல் முத்தம், இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம், கல்லூரியின் விடுதி அறை, முதல் காமத்தின் வெள்ளை இரவு... இப்படி சொல்லி முடிக்க முடியாத பட்டியல் ஒன்று நீண்டுக்கொண்டே செல்கிறது. பிராத்திப்பதற்காய் மண்டியிட்டு அமர்கிறேன், ஆனால் மனதின் வேகத்தை கட்டுபடுத்தவே முடியவில்லை. உடல் முழுவதுமாய் வியர்வையில் நனைந்திருக்கிறது, என்னிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருப்பது இயலாமையா, கோபமா, துரோகத்தின் வலியா, கவிழ்விறக்கமா, விரக்தியா எதுவென்று தெரியவில்லை, தெரியவில்லை என்று சொல்வதைக் காட்டிலும் தெரிந்துக்கொள்ளும் நிலையில் மனமில்லை. ஆனால் ஏதோ ஒன்று வியர்வை துளிகளாய் என் உடல் முழுவதையும் நனைத்துக்கொண்டிருக்கிறது. ஒரு வேளை பயமாக கூட இருக்கலாம், பயம்... ஹா ஹா.. சபதமாய் சிரித்துக்கொள்கிறேன், பயம் கொள்ளும் நொடியிலா நான் நின்றுக் கொண்டிருக்கிறேன் ? இனி பயப்பட என்ன மிச்சமிருக்கின்றது....
தாழ்வாரத்தின் நடைபாதையில் அவர்கள் என் அறைக்கு அருகே வருவதும் போவதுமாய் இருக்கிறார்கள். மின்சார விளக்குகளின் மஞ்சள் ஒளி படிந்திருந்த அவர்களின் முகத்தில் பரிதாபத்தின் ஓவியங்கள் பூசியிருந்தது தெரிகிறது. அவர்களிடம் ‘உங்கள் பரிதாபம் எனக்கு எந்த அளவிலும் பயன்தரக் கூடியதாக இல்லை, அதனால் மிக இயல்பாக ஒரு சினிமா பார்ப்பதை போன்றதான தோரனையுடன் முகத்தை வைத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்ல வேண்டும் என்று தோன்றியது ஆனால் சொல்லவில்லை. நானும் முடிந்தமட்டில் சினிமா பார்ப்பதான தோரனையுடன் முகத்தை வைத்துக்கொண்டு அவர்கள் வருவதையும் போவதையும் வேடிக்கை பார்க்க முயற்சிக்கிறேன்.. அவர்கள் அவர்களுக்குள்ளாகவே முனுமுனுத்துக் கொள்கிறார்கள், எனது பார்வை அவர்களை தொந்தரவு செய்கிறது என்று நினைக்கிறேன். அவர்களை விட்டு என் பார்வையை வேறு பக்கம் திருப்ப முயற்சிக்கிறேன் மறுபக்கமிருக்கும் சுவரில் இருள் மட்டுமே நிறம்பி இருக்கிறது, கண்கள் தன்னச்சையாக வெளிச்சத்தின் பக்கம் திரும்புகின்றன, பார்வை திரும்பிய கனத்தில் கதவின் கிறிச்சிடும் ஒலியினூடாக அந்த மனிதர் அறைக்குள் நுழைகிறார். நான் அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறேன் அவரின் உதடுகளில் வழிந்த புன்னகையில் நான் இதுக்காலம் எதற்காக காத்திருந்தேனோ அதை கண்டுவிட்டதாய் மனம் சொல்கிறது, என் கைகளை பற்றி தன் ரத்த அளவை கருவியில் என் ரத்த அழுத்தத்தை பரிசோதிக்கின்றார். அவர் சொல்லவே இல்லை என்றாலும், குருதியின் அழுத்தம் மிக அதிகமாக தான் இருக்கும் என்று நிச்சயமாக தெரியும் எனக்கு. இதுப்போலான ஒரு அற்புத சூழலில் ரத்த அழுத்தம் ஒன்று மிக அதிகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ தான் இருக்கு முடியும். அவர் இன்னும் வேறு பல பரிசோதனைகளை என் உடலில் மேற்கொள்கிறார், நான் அமைதியாக இருக்க முயற்சித்தும் முடியாமல் வெடித்து சிரிக்கிறேன், பல ஆண்டுகள் கழித்து இப்படி சிரிக்கின்றேன். அவர் கருனை பொங்கும் விழிகளுடன் என்னை கடைசியாக ஒரு முறை பார்த்துவிட்டு என் அறையை விட்டு வெளியேறுகின்றார்.
சரியாக இருபது வருடங்களுக்கு முன் இந்த கதவுகளுக்குள் வந்தபோது இதே அறை எனக்கு ஒவ்வாமை தருவதாக இருந்தது. மூச்சு விடுவதற்கு கூட வழியற்ற ஒரு சந்தில், கம்பிகள் அடுக்கப்பட்டிருக்கும் கதவுகளுக்கு பின் நான் மட்டும் தனியாக வாழ்வது என்பது அப்போது மிகவும் கடுமையானதாக தான் இருந்தது. எத்தனை ஆசைப்பட்டும் இந்த கம்பிகளை உடைத்தெறிவதற்கான பலமோ, உடைவாட்களோ, அதிகாரமோ என்னிடம் இருக்கவில்லை. எந்த பக்கம் திரும்பி பார்த்தாலும் அழுக்கேறி ஆங்காங்கே சிதிலமடைந்து கிடக்கும் சுவர் மட்டுமே கண்களுக்கு தெரியும், இதோ இப்போது அமர்ந்து கிடப்பதை போன்று தான் பல நாட்கள் அப்போதும் அசைவற்று அமர்ந்திருந்தேன். நாட்கள் செல்ல செல்ல அது எனது அறையானது, சுக (!) துக்கங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரே நண்பனாகிப் போனது எனது அறை. எனக்கென்று அடுத்த சில மணி நேரங்கள் வரையேனும் மிச்சமிருப்பது அந்த அறை மட்டும் தான். ஆரம்ப நாட்களில் எதையும் செய்யும் மனநிலையில் நான் இருக்கவில்லை, எல்லாமும் சூன்யமாய் தான் இருந்தது.....உணவு உன்பதை கூட தவிர்த்துவிடுவேன், உண்மையை சொல்ல வேண்டும் என்று சொன்னால் எனக்கு பசி எடுத்து இருபது ஆண்டுகளாகிறது, வாழ வேண்டும் எனும் வேட்கையின் பொறுட்டே தினமும் சாப்பிட்டு வந்தேன் ஆனால் எல்லவற்றுக்கும் வெற்றிகரமான ஒரு முடிவு வரப்போகிறது இன்னும் சில மணி துளிகளில்.
எனக்கே எனக்கானதாய் இதுகாலம் இருந்த என் அறையின் அழுக்கேறிய சுவர்களை முத்தமிட வேண்டும் என்று தோன்றுகின்றது, என் உதடுகளை சுவரில் அழுத்தி பதிக்கின்றேன். சில நொடிகளுக்கு பின் அமைதியாக திரும்பி மீண்டும் பழைய நிலையிலே அமர்ந்துக்கொள்கிறேன். சோகம் ததும்பும் முகத்துடன் அறைக்குள் வந்த அவர் எனக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்கிறார், புன்னகையுடன் ‘நான் யாசித்ததை தான் உங்களால் தர முடியவில்லையே’ என்கிறேன், ஏதும் சொல்லாமல் சுவரினை வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறார். முடிந்தால் ஒரு காகிதமும், ஒரு பேனாவும் மட்டும் கொடுத்துதவுங்கள் என்கிறேன். சிறிது யோசித்தவர் ‘சரி’ என்று சொல்லிவிட்டு செல்கிறார். நடக்கவிருக்கும் நிகழ்வு அவருக்கு விருப்பமானதாக இருக்கவில்லை என்பது அவரது முகத்தில் வெளிப்படையாக தெரிந்தது. இருபது வருடங்கள் தொடர்ந்து பழகிய ஒருவனுக்கு இப்படியான முடிவு என்பதை ஏற்க சற்றே கடினமானது தான். மேலும், என் மீது அவருக்கு எப்போதுமே நல்லெண்ணம் இருந்தது. யாருக்கும் எந்த சூழலிலும் தொல்லை கொடுக்காத ஆள் நீ என்று அடிக்கடி என்னிடம் சொல்வார். நான் அப்படி இருந்தேனா என்று எனக்கு தெரியவில்லை அப்படியான ஒரு மனிதனாக நான் இருந்திருந்தால் இந்த உலகத்துக்குள் நான் வந்திருக்கவே மாட்டேன். காலத்தின் ஓட்டத்தில் நான் எங்கெங்கோ சிக்குண்டு, கைப்பாவை வாழ்க்கை வாழ்ந்து, ரத்த கரைபடிந்த கைகளுடன் அழைந்து, இறுதியில் இந்த இடத்தில் தூக்கி வீசப்பட்டேன். என் பொம்மை கரங்களை இயக்கியவர்கள் எங்கோ தூரத்தில் குளிரூட்டப்பட்ட அறைகளில் அதிகாரங்களின் அறியனைகளில் அமர்ந்திருக்கிறார்கள்..ஹா! ஹா! இருபது வருடங்களுக்கு முன் இப்படி பேசியிருக்கமாடேன்.. இப்போதுதோ ஒரு ஞானியை போல் பேசிக்கொண்டிருக்கிறேன், கேட்க தான் மனிதர்கள் இல்லை. இரவு பகல் பிரித்தறிய முடியாமல் கடந்த ஒவ்வொரு நாளின் விடியலையும் யாரோ ஒருவரின் கருனையில் கிடைத்த பிச்சையாகவே எண்ணி கடந்து கொண்டிருந்தேன். காற் புள்ளிகளாய் தொடர்ந்து கொண்டிருந்த ஒவ்வொரு பொழுதும் நரகமாகவே கழிந்த போதிலும் வாழ்தல் மீதான வேட்கை எங்கோ யாராலோ போடப்படும் பிச்சையை யாசித்து வாழவே விரும்பியது. ஓரங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் நம்பிக்கைகள் சிதைந்து வெறுமை மட்டுமே மிஞ்சிய பொழுதுகளில் இந்த நீண்ட அலைகளிப்புகளுக்கு ஒரு முடிவு வந்துவிடாதா என்று ஆன்மா ஏங்கும். ஒரு கிழமையோ அல்லது நாற்பது ஆண்டுகளோ எப்படி இருப்பினும் முடிவு ஒன்றாக தான் இருக்க போகிறது, பின் எதற்காய் இந்த நாடகங்கள் எல்லாம் என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன் ஆனால் பதில் எப்போதுமே கிட்டியதில்லை. இலையுதிர்கால இரவொன்றில் ஆளரவமற்ற களிமண் சாலையில் தனித்து உதிரும் காய்ந்த இலையாய் அழைந்து கொண்டிருக்கும் ஆன்மாவுக்கும் அதன் கேள்விகளுக்கும் பதில் சொல்ல தெரியாமல் என்னை நகர்த்தி கொண்டிருந்தேன்.
தை மாத இரவொன்றில் ஆளரவமற்ற இருண்ட சாலையின் ஓரத்தில் வைத்து தான் அவனை கொலை செய்தேன், அவனுக்கு35 அல்லது 40 வயதிருக்கும். அவன் முகம் கூட நினைவில் இல்லை, சரியாக சொல்வது என்றால் அவனது முகத்தை நான் பார்க்கவில்லை. கனத்த கருமையான தேகம் அவனுடையது, சுருட்டை முடி. அவன் கழுத்திலிருந்து வழிந்த குருதியின் வாசம் 20 வருடங்கள் கழித்து இன்னும் என் நினைவுகளில் தங்கியிருக்கின்றது. எங்கிருந்தோ கிட்டிய ஆனையின் பொருட்டு செய்யப்பட்ட கொலை அது, யாருக்காகவோ செய்யப்பட்ட கொலை. அது எனது நான்காவது கொலை, ஆனால் நான் அறிந்திருக்கவில்லை நான் செய்யப்போகும் கடைசி கொலை என்று. நான் செய்த அத்தனை கொலைகளுமே யாருக்காகவோ செய்யப்பட்டவை தான். அவனது தாயோ, மகனோ, மனைவியோ, காதலியோ யாரோ ஒருவர் அவனுக்காய் அன்று கதறி அழுதிருப்பார்கள். அந்த அழுகையை, வலியை எதை கொண்டும் ஈடுசெய்துவிட முடியாது. எனது கொலை கூட அதை ஈடுசெய்யும் என்று நான் நம்பவில்லை.. இல்லாமல் போனவர்களை எது கொண்டும் மீட்டுவிட முடியாது தானே. மழைதுளியினை போல், இல்லாமல் போனவர்கள் இல்லாமல் போய்விடுகிறார்கள் அவ்வுளவுதான். ரத்தகறை படிந்திருக்கும் எனது கரங்களை எந்த நியாத்தையும் கொண்டு கழுவ விரும்பவில்லை ஆனால் எனக்கு நிகழவிருக்கும் நிகழ்ச்சி எனக்கு எந்த விதத்திலும் விருப்பமானதாக இல்லை, எனக்கு வாழ வேண்டும் என்று ஆசை இருக்கின்றது எனது மகனை கட்டி அனைத்து கொஞ்ச வேண்டும், மனைவியுடன் காமம் கொள்ளவேண்டும் இப்படி எத்தனையோ ஆசைகள் என்றும் நிறைவேறப் போகாத ஆசைகள். என்னால் கொல்லப்பட்ட நால்வரும் அவர்களின் கடைசி நொடியில் என்னைபோல் வாழ்தலுக்காய் ஏங்கியிருப்பர்கள் தானே, எப்படியாவது பிழைத்துவிட மாட்டோமா என்று நம்பியிருப்பார்கள் தானே. நானும் இன்று இவர்கள் எனக்கு செய்யப்போவதை போல் தொழில் என்று சொல்லியப்படி தானே அவர்கள் 4 பேரையும் கொன்றேன். அவர்களும் இன்று நான் இருப்பதை போல் யாரோ முகம் தெரியாத ஒருவனான என் கருனையை யாசித்திருப்பார்களே, ஆனால் துண்டித்து விழுந்த நான்கு தலைகளையும் எந்த சலனமும் இல்லாமல் தானே பார்த்தேன். இதை கேட்டதும் இரக்கம் இல்லாத கொடூரன் என்பதான பின்பம் என்னை பற்றி எழக்கூடும் ஆனால் தொழில் முறை கொலைக்காரர்கள் அப்படியானவர்கள் இல்லை அவர்களுக்கு கருப்பு பூணைகளை மிகவும் பிடிக்கும், மழை நாள் ஒன்றில் கையேந்தியபடி உணவு கேட்கும் ஒரு கிழவியை உணவகத்துக்கு கூட்டிசென்று சோறு வாங்கி தருவார்கள், முத்தமிடுவார்கள் இன்னும் இப்படி பல.. இருந்தும் அவர்கள் கொலைக்காரர்கள் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை.
எனது தூக்கு மேடையையும், தூக்கு கயிற்றையும் பார்க்கவேண்டும் என்ற பேராவல் எனக்கு தோன்றுகின்றது, பேப்பரையும், பேனாவையும் எடுத்து வந்த அவரிடம் எனது விருப்பத்தை சொல்லியும், அவர் அதை காதில் வாங்காதவர் போல் வெளியேறுகின்றார்.......அம்மாவின் முலை காம்புகள், விபத்தொன்றில் மரணித்த நன்பன், தேர் திருவிழா, அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள், அவளின் முதல் முத்தம், இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம், கல்லூரியின் விடுதி அறை, முதல் காமத்தின் வெள்ளை இரவு... அந்த பட்டியல் மீண்டும், மீண்டும் என்னுள் ஊர்ந்து செல்கின்றது. இதயத்தின் ஆழத்தில் சர்ப்பம் ஒன்று இதய சதைகளை கடித்து கிழித்தப்படி மெதுவாக மிக மெதுவாக ஊர்ந்து முன்னேறுகின்றது. மயிர்காம்புகளின் வழியே வெளியேறும் அச்சத்தின் நாற்றம் குமட்டலை தருகின்றது. ஓடிப்போய் கழிவிடத்தில் தலையை கவிழ்த்தபடி சில நிமிடங்கள் அமந்திருக்கின்றேன். மீண்டும் எழுந்து வந்து படுக்கையில் விழுகின்றேன். சப்பாத்துக்களின் நடை சப்தங்களும், கதவுகளின் கிரீச்சிடும் ஓசைகளும் செவிபறையினுள் ஆழ பயணித்து மறைகின்றன. எனக்கு மிகவும் பிடித்த “காத்தடிக்குது, காத்தடிக்குது, காசி மேட்டு காத்தடிக்குது” பாடலை கேட்க வேண்டும் என்று தோன்றுகின்றது, அடுத்த கணமே “பெப்சி” குடிக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். இதயத்தில் ஊர்ந்துக் கொண்டிருந்த பாம்பு மெதுவாக தலையை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதை உணர்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் செல்களை புசிக்க தொடங்குகின்றது. மிகவும் பாரமாய் தோன்றிய தலையினை இரண்டு பக்கங்களிலும் ஆட்டி பார்க்கின்றேன்.. எவ்வித மாறுதல்களுமின்று வழமையான தலையாக திரும்பிக் கொடுக்கின்றது. அவர்கள் சொன்ன நேரத்தை நெருங்க இன்னும் ஒரு மணி நேரமிருக்கின்றது... அதிகாரி கொண்டு வந்து கொடுத்துவிட்டு சென்ற காகிதத்தில் என் மகனுக்கான இறுதி வரிகளை எழுத ஆரம்பிக்கின்றேன்.
“அன்பு மகனே – உன் முகத்தை கான வேண்டும் எனும் பேராவலில் எழுதுகின்றேன், உன்னை இனிமேல் என்னால் பார்த்துவிட முடியாது என்று எனக்கு தெரியும் இருந்தும் ஏதாவது ஒரு அதிசயம் நமக்கான சந்திப்பை ஏற்படுத்திவிடாதா என்று ஏங்கியப்படி இதை எழுதுகின்றேன். அந்த அதிசயம் இருண்டுப்போன இந்த காட்டை விட்டு உன்னிடம் என்னை மீட்டு கொண்டுவிடாதா எனும் பேராசையுடன் எழுதுகின்றேன். நீ இதுவரை என்னை வந்து பார்க்கவில்லை. ஒரு வேலை உனக்கு என்னை பார்க்க பிடிக்காமல் இருக்கலாம் அல்லது ஒரு கொலைகாரனை தந்தை என்று சொல்லிக்கொள்ளும் விருப்பம் இல்லாமல் தந்தையே இல்லை என்று கூட நீ சொல்லிக்கொள்ளலாம் எது எப்படியாயினும் பரவாயில்லை இந்த கடிதத்தை நீ படிக்க கிடக்கும்போது அழாதே நீ அழுவதற்கான எந்த தகுதியுமற்றவன் நான், ஒரு கொலைக்காரனின் மகன் எனும் பெரும் பாவம் போதாதா உனக்கு இன்னும் இன்னும் தொல்லை தர எனக்கு விருப்பமில்லை” என்று ஆரம்பித்த அந்த கடிதத்தை எழுதி முடித்த அந்த நொடியில் அவர்கள் என் அறைக்குள் நுழைகின்றார்கள், அவர்கள் அனைவரும் கூர்மையான கண்களுடன் என்னை நோக்குகின்றார்கள், ஏதும் சொல்லாது, எழுந்து அவர்களுடன் நடக்க ஆரம்பிக்கின்றேன்.
Comments
Post a Comment