Skip to main content

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்: வெறுப்பை ஜனநாயகப்படுத்தும் அழகியல்!


0.
பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது.


கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்:

“நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது”

1.
மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போலிச் செய்திகளைப் பற்றிய முந்தைய கட்டுரையில் நான் முன்பு குறிப்பிட்டது போல, கோவிட்-19 பெருந்தொற்று இணைய வெளியில் பல லட்சம் திடீர் மருத்துவ அறிஞர்களையும், நோய் தொற்று ஆய்வாளர்களையும், புவிசார் அரசியல் வல்லுநர்களையும், உயர் ஆற்றல் இயற்பியல் மேதைகளையும், பொருளாதார மேதைகளையும், வரலாற்று ஆய்வாளர்களையும், காளான்கள் போல் ஒரே இரவில் தோற்றுவித்தது.

அப்படி தோன்றிய காளான் வல்லுநர்களில் பலர் இணைய வெளி முழவதிலும் வெறுப்பின் கதைகளை மிதக்க விட்டார்கள். பெருந்தோற்றத்தின் தொடக்க நாட்களில் மடிக்கணினி மற்றும் அலைபேசி திரைகள், கோவிட் -19 இன் பிறப்பு அடையாளம், கோவிட் -19 இன் தேசி அடையாளயம், கோவிட் -19 இன் மதம், உலக சுகாதார நிறுவனத்தின் புவிசார் அரசியல், இல்லுமினாட்டிகளின் மனித இனத்தின் மீதான போர், உயிரியல் போர், பெருமருந்து நிறுவனங்களின் உபரி மீதான பேராசை மற்றும் ஒரு குறுகிய அளவிலான இணைய வெளியினை அறிவியல் தரவுகளும், ஆய்வுகளும் ஆக்கிரமித்திருந்தன - கிட்டத்தட்ட அனைத்து தீவிர/மக்கள் நலக் கட்டமைப்புகளும் பேராசிரியர் நோம் சாம்ஸ்கியின் உரையாடல்களை தங்கள் சமூக ஊடகங்களில் ஒழுங்கு செய்தன.

இன்றைய பெருந்தொற்று உலகின் சமூக கட்டமைப்பைத் தீர்மானிப்பதில் ‘வெறுப்பு’ முக்கிய பங்கு வகிக்கிறது. தோல்வியுற்ற வலதுசாரி நிர்வாகிகள் தங்களின் நிர்வாக சீர்குலைவுகளை மறைக்கவும், மக்களின் விரக்தியையும், கோபத்தையும் மடைமாற்றவும் ஒரு குறிப்பிட்ட பொது எதிரி தேவையானதாக இருக்கின்றது. அப்படியான பொது எதிரியை சமூக அரசியல் லாபத்துக்காக உருவாக்கி, பரப்பும் பணியை இணையத்தின் மிக முக்கிய அங்கமான சமூக ஊடகங்களும், அதன் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களும் செய்கின்றன.

ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ், சீன வைரஸ், முஸ்லீம் வைரஸ் (இந்தியாவில்) போன்ற புரளிக் கதைகள் அரசு இயந்திரத்தின் தோல்விகளிலிருந்து வெளிப்பட்டன. இத்தகைய அரசாங்கங்கள் அல்லது தலைவர்கள் தங்கள் அதிகாரத்தை பாதுகாக்க 'வெறுப்பை' பயன்படுத்தினர்/துகின்றனர். நிர்வாக கட்டமைப்புகளை நோக்கி கேள்வியை/கோபத்தை வெளிப்படுத்துவதற்கு பதிலாக, கட்டமைக்கப்பட்ட சமூக எதிரி எனும் எளிதான இலக்கை நோக்கி மக்களின் கோபம்/கேள்வி மெய்நிகர் உலகின் வழியாக திசை திருப்பப்படுகிறது.

வெறுப்பை ஒரு சுயநலப் பிரச்சினை என்று கூரும் சிக்மண்ட் பிராய்ட், அது மகிழ்ச்சியின் மூலத்தை அழிக்க விரும்பும் ஒரு நிலை என்று வரையறுத்தார். வெறுப்பு என்பது ஒரு மனித உணர்ச்சி. மற்ற உணர்ச்சிகளைப் போலவே மனித உடலின் இரசாயனங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சி மட்டும் அல்லாது, அதற்கு 'சமூகம்' என்ற கூடுதல் காரணியும் உள்ளது. மனிதர்கள் வெறும் சதை, எலும்பு மற்றும் நரம்புகளின் தொகுப்பு அல்ல, மாறாக சமூக-கலாச்சார காரணிகளால் கட்டப்பட்ட சமூக விலங்கு என்பது நாம் அறிந்ததே.

பிர்கிட்டே ஷெப்லெர்ன் ஜோஹன்சன் எழுதிய 'வெறுப்பைக் கண்டறிதல்: உணர்ச்சிகளின் பொருள் குறித்து’ எனும் சுவாரஸ்யமான கட்டுரையில், "உணர்ச்சிகள் நாம் அறிந்த உலகை நமக்கு வெளிக்காட்டுபவை மட்டுமல்ல நாம் விரும்பும் உலகை குறிப்பிடத்தக்கதாக மாற்றும் வல்லமை கொண்டவை" என்று குறிப்பிடுகிறார். உணர்வுகள் வாழ்வில் நிரம்பியிருக்கும் தனிப்பட்ட அனுபவங்களின் நினைவுகள் மற்றும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்புகளுக்கு இடையே இருப்பை வேறுபடுத்தி காட்டுகிறன.

உணர்ச்சிகள் இரசாயனங்கள் வினைகள் உருவாக்கும் இயற்கையான ஒன்று என்றாலும் அவை வெறும் இராயனை வினைகள் மட்டுமல்ல அவை சமூகத்தாலும் வடிவமைக்கப்பட்டுகின்றன. ஒவ்வொரு உணர்ச்சிகளுக்கும் தூண்டுதல்கள் சமூகத்தால் மனித சதைக்குள் சமூகமயமாக்கலின் வழி செலுத்தப்படுகின்றன. சமூகமயமாக்கலின் காரணமாக இயற்கையான இரசாயன வினைகள் மனித இருப்பின் அடிப்படையாக மாறிவிடுகிறது.

மற்ற எல்லா மனித உணர்வுகளையும் போலவே, வெறுப்பும் மனித வாழ்க்கையில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது - மகிழ்ச்சி, துக்கம், வேதனை, வெறுப்பு ஆகியவை அன்றாட நிகழ்வுகள். இருப்பினும், மற்ற உணர்ச்சிகளுக்கு மாறாக வெறுப்பை பொதுவான அன்றாட வெறுப்புகள் - வாழ்க்கை மீது, வேலை மீது, காதல் மீது என்றும், கருத்தாக்கம்/கொள்கை உருவாக்கும் கருத்தியல் வெறுப்பு என்று வகைப்படுத்தலாம்.

கருத்தியல் அல்லது கொள்கையால் தூண்டப்பட்ட வெறுப்பு சமூகத்திற்கும், வெறுப்பை வெளிப்படுத்தும் தனிநபருக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது ஒரு மனிதனை வெறுப்பது அல்லது அன்றாட நிகழ்வுகளில் ஏதோ ஒன்றை வெறுப்பது அல்ல மாறாக கற்பனையையான அல்லது உண்மையின்மையற்ற ஒன்று உருவாக்கும் உணர்வு. மனித இருப்பு முழுவது கற்பனாவாதக் கதைகள் நிரம்பி உள்ளன - மகிழ்ச்சிகரமான சொர்க்கத்தின் கதைகள், சமத்துவ உலகின் கதைகள், தெய்வத்தின் கதைகள், சாத்தானின் கதைகள் மற்றும் பல. ஆனால் அனைத்து கொள்கைகளும் அல்லது கருதியல்கள்களும் கற்பனாவாத பொன்னுலகம் மீதே உருவாக்கப்பட்டுள்ளன. இப்படி உருவாக்கப்பட்டுள்ள ஏதோ ஒரு கருத்தியலின் வழியில் பயணிக்கவே ஒவ்வொரு மனிதரும் பழக்கப் படுத்தப்பட்டுள்ளனர்.

பிர்கிட்டே ஷெப்லெர்ன் ஜோஹன்சன் தன் கட்டுரையில் ஒரு சமூகத்தில் அமைப்பின் வெறுப்பின் துல்லியமான இருப்பிடம் என்ன? வெறுப்பின் தோற்றம் எது? - என்று வெறுப்பின் வேர்களைப் புரிந்துகொள்ள முயன்றார். சமூக வலைதளத்தில் வெறுப்பின் முழுமையான தோற்றுவாயினை புவியிடங்காட்டியை (GPS) கொண்டு கணக்கிட முடியாது. மாறாக கூட்டாக ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உருவாக்கும் பல்வேறு காரணிகளை நாம் புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக வெறுப்பின் வழித்தடத்தை அறிந்துக்கொள்ள இயலும்.


நாசி படுகொலைகள் குறித்து வெளியான ஜிக்மண்ட் பாமானின் ‘மார்டானிட்டி அன்ட் ஹாலோகாஸ்ட்’ என்ற புத்தகம் யூத படுகொலைகளின் காரணிகளை பட்டியலிடுகிறது. வெறுப்பு என்ற ஒற்றை உணர்வு மட்டு இனப்படுகொலையை நிகழ்த்தவில்லை. அது திட்டமிட்ட மற்றும் கட்டமைப்பு பொறிமுறையாக உருவானது எனும் பாமன், அதற்கு மறைமுகமாக பங்களித்த சமூகம் மீதான பொதுமக்களின் அக்கறையின்மையை பற்றயும் எழுதுகிறார்.

இன்றைய உலகில் இதுவே நடக்கிறது என்று நினைக்கிறன். திட்டமிட்ட மற்றும் கட்டமைப்பு பொறிமுறையால் உருவாக்கப்படும் வெறுப்பை இணையத்தின் ஊடாக பெரும்பான்மையான அரசுகள் பரப்புகின்றன. கடந்த நாலாயிரம் அல்லது ஐயாயிரம் வருட மனித வரலாறு முழுவதும் வெறுப்பு பிரச்சாரங்களால் நிரம்பி இருக்கிறது. இத்தகைய வெறுப்பு, அதை உற்பத்தி செய்பவர்களுக்கு அதிகார நலன், பொருளாதார நலன் என்று ஏதோ ஒரு லாபத்தை அல்லது இரண்டும் உள்ளடக்கிய லாபத்தை கொடுக்கிறது.

வெறுப்பை உற்பத்தி செய்பவர்கள் சுய நலன்களை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அதை உருவாக்குகிறார்கள் என்று முழுமையாக சொல்லமுடியாது என்றாலும் பல நேரங்களில் அது லாபத்தை நோக்கியதாகவே இருக்கிறது. சில தருணங்களில் செருக்கு அல்லது கர்வத்தை மட்டும் மையமாக கொண்டு இயங்கும் வெறுப்புகளும் இணையத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. இந்திய சாதி பெருமிதங்களை எடுத்துக்காட்டாக கருதலாம். ஆனால் சாதி பெருமிதங்கள் வெறும் செருக்காக மட்டுமே முடிந்துவிடுவதில்லை என்பதே அதன் எதார்த்தம். காரணம், இந்தியாவில் சாதி ஒரு சிலருக்கு அனைத்துவித சலுகைகளையும் கொடுக்கிறது - பொருளாதார, சமூக, பண்பாட்டு, அரசியல், அதிகார சலுகைகளை குறிப்பிட்டு சொல்ல முடியும்.

ஒழுங்கமைக்கப்பட்ட வெறுப்பு கதைகளை உருவாக்குவதிலும், பரப்புவதிலும் சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு தகவலை யார் ‘முதலில்’ வெளியிடுவது என்பதிலிருக்கும் போட்டியும், அதிக விருப்ப குறிகள், பகிர்வுகள் மீதான வேட்கை/போதையும் மனிதர்களை சமூக பொறுப்பின்றி இணைய வெளியில் இயங்க வைக்கின்றது. இப்படி பொறுப்பை துறக்கும் சமூக வெளியென்பது வெறுப்யை தூண்டும் இயந்திரங்களின் செயல்பாடுகளை எளிதாக்குகிறது. மேலும் விருப்பக்குறிகள் அல்லது பகிர்வுகள் அல்லது சந்தாதாரர்கள், பார்வையாளர்களின் எண்ணிக்கை பணம் ஈட்டுவதற்கான வழியாக மாறும் நிலையில் ​ஒரு பதிவின் பதிவர் தன் தார்மிக பொறுப்புகளை இழந்துவிடுகிறார். எடுத்துக்காட்டாக, சூதாட்ட தளங்கள் அல்லது எளிதில் பணம் சம்பாதிக்கும் வழி குறித்த விளம்பரங்களை எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல் வெளியிட்ட தமிழ் சமூக ஊடக தளங்கள் பலவற்றையும் பட்டியலிடலாம்.

முதலாளித்துவம் உருவாக்கிய தனிநபர் நலன் மட்டுமே சார்ந்த ‘சுயம்’, புதிய தாராளமயம் மற்றும் கூட்டு முதலாளித்துத்தின் வருகையுடன் மேலும் குறுகி ‘தான்’ மட்டும் எனும் தனித்த நிலையில் சுருக்கிங்கிவிட்டது. மனித இருப்பை அதிகம் நெருக்கமானதாகவும் கூட்டுறவனானதாகவும் மாற்றும் அனைத்து சாத்தியங்களையும் கொண்டிருந்த இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் அதிலிருந்து விலகி விருப்ப குறிகளும், பகிர்வுகளும், பார்வைகளும் உருவாக்கும் பொருளாதார உபரியையும், தரவுகளின் உபரியை தேடியும் அலைகின்றன. மனித அறிவை ஜனநாயகமயமாக்குவதற்குப் பதிலாக, பல தலைமுறையின் கடுமையான உழைப்பில் கண்டடைந்த அறிவியல் மேன்மைகளை, போலிச் செய்திகள் மற்றும் புரளிகள் மூலம் சிதைக்கும் பணியை செய்கின்றன. சமூக ஊடக வெளியின் இந்த அம்சங்கள் வெறுப்பு பிரசாரங்களின் வழியை எளிதாக்குகின்றன. இணையத்தில் உருக்கொள்ளும் வெறுப்பு யாரோ சிலரின் சுய தேவைகளுக்காக சமூகத்தில் ஏற்கனவே இருக்கும் மதம், இனம், சாதி, நிறம், பாலினம், பாலியல், அறிவு வெறுப்புகளை/பிளவுகளை மேலும் வலிமையாக்குகிறது.

2.
அனைத்து விதமான சமூக ஊடக பதிவுகளையும் - ட்வீட், புகைப்படம், வீடியோ, மீம், வெறுப்பு அரசியலின் கருவிகளாக வரையறுக்கலாம். மெய்நிகர் உலகில் உலாவும் வெறுப்பின் திகிலூட்டும் அழகியல் என்பது அது எப்படி மனிதரின் சிந்தனையை இடைமறிக்கிறது மற்றும் மனிதர்கள் கேள்விகளைக் கேட்பதைத் தடுக்கிறது என்பதில் இருக்கின்றது. மனித சிந்தனையின் ஆதாரமே கேள்விகள் தான் ஆனால் இத்தகைய வெறுப்பு பிரச்சாரங்கள் மனிதர்களின் கேள்வி திறனை வெகுவாக சீர்குலைக்கின்றன.

சமூக ஊடகங்களில் பார்க்கும்/வாசிக்கும்/கேட்கும் ஒவ்வொரு பத்து கருத்துக்களில் ஐந்து அல்லது ஆறு பதிவுகள் வெறுப்பு பிரச்சாரங்கள் அல்லது புரளிகளாகவே இருக்கின்றன. அதாவது இந்தியாவில் மக்கள் சமூக ஊடகங்கள் வழியாக அறிந்துக்கொள்ளும் செய்திகளில் குறைந்தது 40-50% போலிச் செய்திகளாக இருக்கின்றன என்று statista இணையதளம் குறிப்பிடுகிறது. இப்படி பரவும் போலிச் செய்திகளின் சிறப்பு என்னவெனில், அதுவே வெறுப்பு பிரச்சரத்தின் ஊது குழலாக இருக்கிறது. போலிச் செய்தி இல்லாமல் வெறுப்பு வாழ முடியாது, இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைத்தே இயங்குகின்றன.

பல நேரங்களில் காதல் பற்றிய ஒரு சாதாரண பதிவு அல்லது தற்செயலான ஒரு புகைப்படம் கூட வெறுப்பை உமிழ்வதற்கான களங்களாக மாறிவிடுகின்றன. குறிப்பாக ஒரு பெண் தன் விடுமுறையில் நீச்சல் உடையை அணிந்த புகைப்படத்தை பதிவேற்றினால் அந்த படத்துக்கு விருப்ப குறியீடும் அதே நபர், அந்த பெண்ணுக்கு ஒழுக்கம் பற்றி வகுப்படுத்து கருத்திடுவார் அல்லது பண்பாடு குறித்து கருதிடப்படும் அல்லது அந்த பெண் அவமானப்படுத்தபடுவார் அல்லது சொற்கள் வன்முறையை, அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும்.

சமூக ஊடகத்தில் தங்களுக்குப் பிடித்தமான உணவைப் பகிர்ந்து கொண்டதற்காக - குறிப்பாக மாட்டிறைச்சி என்றால், கொலை மிரட்டல் விடப்படுகிறது. 21ஆம் நூற்றாண்டில் இந்திய சாதிப் பெருமிதத்தின் வெளிகளாக சமூக ஊடகங்கள் இருக்கின்றன. சமூக ஊடகத்தில் நீங்கள் சாதியின் பெயரால் அமெரிக்காவில் இருந்து அல்லது ஐரோப்பாவிலிருந்து மற்ற மனிதர்கள் மீது உங்கள் வெறுப்பை வெளிப்படுத்தலாம், மற்றும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை வாழ்க்கை முறை என்று கூறலாம். இதே வடிவிலான வெறுப்பை LGBT மக்கள் மீதும் வெளிப்படுத்தலாம். இவை அனைத்துக்கும் நீங்களாக உருவாக்கும் அல்லது எங்கிருந்தோ ஒட்டி வெட்டும், அல்லது பகிரும் போலிச் செய்தி உதவிகரமாக இருக்கும்.

ஜாக்கரி லாப், வெளி உறவுகள் சபையின் வலைப்பதிவில் எழுதுவது போல், "மெய்நிகர் பயனர்களின் அனுபவங்கள் அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள்/விதிமுறைகள் (algorithms) மற்றும் தரவு கட்டமைப்புகளால் (data structures) சமன் செய்யப்படுகின்றன”. இந்த வழிமுறைகள்/விதிமுறைகள், அநேக நேரங்களில் அபத்தமான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கிறன. சில வலைதள கண்காணிப்பு குழுக்களின் கூற்றுபடி சமூக ஊடக காணொளிகளில் இருக்கும் தானியங்கி செயலி ஒரு காணொளியின் முடிவில் அதற்கு தொடர்புடைய இன்னொரு காணொளியை இயக்குவது பலநேரங்களில் தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கின்றது. வால் ஸ்ட்ரீட் சஞ்சிகையின் அறிக்கையின்படி, இணைய வழிமுறைகள்/விதிமுறைகள் பல நேரங்களில் இணைய பயன்பாட்டாளரை சதி கோட்பாடுகளை அல்லது பிளவுகளை ஊக்குவிக்கும் காணொளிகளை நோக்கி தவறாக வழிநடத்துகின்றன அல்லது போலிச் செய்திகள் நிரம்பிய காணொளிகளை பார்க்க தூண்டுகின்றன.

இணைய வழிமுறைகள்/விதிமுறைகள் நம் நடத்தைகளைத் தீர்மானிக்கும்போது, அவை லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு இயங்கும் போது, பயனாளர் எதை பார்க்க/படிக்க விரும்புகிறார் என்பதை காட்டிலும் பயனாளர் எந்த தகவலை பார்த்தால் அதிக உபரியை ஈட்ட முடியும் எனும் நோக்கிலே அவை இயங்கும். அதுவே, இணையத்தை பயன்படுத்தும் அனைத்து மனிதர்களின் இருப்பையும் வழிநடத்துகின்றன. இதுவே போலித் தகவல்களை கொண்டு வெறுப்பை பரப்புவதற்கும், அதன் மூலம் அரசியல், சமூக, பொருளாதார பலன்களை அடைவதற்கும் வழியாக இருக்கின்றன.

சமூக ஊடகத்தில் உலாவும் வெறுப்பு பிரசாரங்களில் குறிப்பிடும்படியான அம்சம் என்னவென்றால், நிர்வாகத்தில் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்' என்பது தான். வெறுப்பை உமிழும் அல்லது பொய்யான தகவலை பரப்பும் காரணத்துக்காக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இது அமெரிக்காவுக்கு மட்டுமான பிரச்சனை இல்லை, நிர்வாகத்தில் தோற்றுப்போன ஆட்சியாளர்கள் அனைவரும் பொதுவாக செய்கின்ற ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் வாட்ஸப்பில் பரப்பப்படும் வெறுப்பு செய்திகள் தேர்தலில் வெற்றிபெற உதவுகிறது.

இந்த கட்டுரையின் இடையே குறிப்பிட்டுள்ளபடி, சதி கோட்பாடுகள், போலிச் செய்திகள் மற்றும் புரளிகள் வெறுப்பைத் தூண்டவும், பரப்பவும் உதவுகின்றன. மெய்நிகர் உலகம் முழுவதும் பரவியிருக்கும் வெறுப்பு மனிதர்களின் அடிப்படை உணர்ச்சி மட்டுமல்ல. இந்த வெறுப்புகள் எதோ ஒரு சித்தாந்தத்தின் மீது கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றன. இந்த மெய்நிகர் வெறுப்புகள் மனிதர்களின் புறஉலகில் படுகொலைகளாக, வன்முறைகளாக, துவேஷங்களாக, அடக்குமுறைகளாக உருக்கொள்கிறது.

ஒரு விளையாட்டு போட்டியில் அணி தோல்வியடைந்ததற்காக ஒரு கிரிக்கெட் வீரரின் குழந்தைக்கு அல்லது ஒருவரின் கருத்தியல்/அரசியல் நம்பிக்கைக்கு எதிரான ஒரு பாத்திரத்தைத் நடித்ததற்காக ஒரு திரைப்பட நடிகருக்கு பாலியல் வன்முறை அச்சுறுத்தலை வெளிப்படுத்தும் இடமாக சமூக ஊடகங்கள் மாறிவிட்டன - சமூக ஊடகங்கள் வெறுப்பை ஜனநாயகப்படுத்திய இயந்திரங்களாக மாறிவிட்டன!

சமூக ஊடகங்களால் இயக்கப்பட்ட/உருவாக்கப்பட்ட ஜனநாயக மாற்றங்களின் உதாரணங்களுடன் - வால் ஸ்ட்ரீட் போராட்டம், அரபு வசந்தம், பிளாக் லைப் மேட்டர்ஸ், எதிர்வாதத்தை அணுகலாம். ஆனால் நெட்ஃபிலிக்ஸில் வெளியான சோஷியல் டைலெமா திரைப்படம் கூகிள், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என்று அனைத்து இணைய வெளிகள் மீதும் கடுமையான தாராளவாத விமர்சனத்தை முன்வைத்தது ஆனால் நெட்ஃபிலிக்ஸ் பற்றி ஏன் எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்கவில்லை என்று ஆய்வு செய்ய தேவையில்லை என்றே நினைக்கிறன். நெட்ஃபிக்ஸை சமூக ஊடக வெளியாக கருத முடியாது என்றாலும் சமூக ஊடக இயந்திரங்கள் பயன்படுத்தும் அதே வடிவமைப்பிலான பயன்பாட்டாளரின் உணர்வுகளை மையப்படுத்தி தூண்டும் வழிமுறைகள்/விதிமுறைகளையே நெட்ஃபிலிக்ஸும் பயன்படுத்துகிறது. இருந்தும் நெட்ஃபிலிக்ஸ் பற்றி எந்த ஒரு விமர்சனத்தையும் அந்த படம் முன்வைக்கவில்லை. காரணம் அப்படத்தை தயாரித்தது/வெளியிட்டது நெட்ஃபிலிக்ஸ்.

உதாரணமாக, சமூக ஊடகங்களில் இந்தக் கட்டுரை வெளியானால் இது அதிகமான கவனம் பெறாமல் போகலாம் அதற்கு காரனம் 500 வார்த்தைகளுக்கு அதிகமாக எழுதப்படும் பிரதிகளை வாசிக்க நேரத்தை விரயம் செய்ய இணைய பயனாளர் விரும்புவதில்லை என்பதை தாண்டி, மெய்நிகர் உலகின் வழிமுறைகள்/விதிமுறைகள் பெரும் தகவல் தொழிநுட்ப நிறுவனங்களால் அப்படி தான் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. அதிக நேரம் ஒரே பதிவை வாசிப்பதற்கான நேரத்தை பார்வையாளர் செலவிட்டால் மற்ற பதிவுகளை பார்க்காமல்/கேட்காமல்/வாசிக்காமல் போக்கக்கூடும் - மோசமான கட்டுரை ஒன்றை எழுதிவிட்டு, அதை குறைவானவர்களே வாசித்ததின் காரணியாக தகவல் தொழிநுட்ப நிறுவனங்களின் வழிமுறைகள்/விதிமுறைகள் துணைக்கு அழைக்கலாம்.

நீங்கள் என்ன வாசிக்க வேண்டும், பார்க்க வேண்டும், கேட்க வேண்டும் என்று சர்வாதிகாரமாக கட்டளையிட மாட்டேன் ஆனால் நீங்கள் பார்க்க, கேட்க அல்லது படிக்க வேண்டியதை மட்டுமே பார்க்கும்படி நான் அதை வடிவமைப்பேன். நீங்கள் சனநாயகபூர்வமாக அவற்றை பார்க்கலாம், கேட்கலாம், வாசிக்கலாம். இல்லுமினாட்டி புரளிகள் அல்லது தட்டையான பூமி கதைகள் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈட்டும், அதேசமயம் பெர்னார்டின் எவரிஸ்டோ அல்லது டேவிட் கிரேபர் எழுதிய கட்டுரையை சில நூறு பேர் அல்லது சில ஆயிரம் பேர் வாசிக்கக் கூடும்.

மெய்நிகர் உலகில் பரவும் வெறுப்பு பிரச்சாரங்களின் வருத்தமளிக்கும் அம்சம் என்னவென்றால், முற்போக்கு வெளிகள் கூட உரையாடல்கள் சாத்தியப்படாத சக மனிதர்கள் மீது கருத்தியல் வெறுப்புகளை நிகழ்த்தும் களங்களாக மாறிவிட்டன என்பது தான். வெறுப்பு பெரும்பாலான சமூக ஊடக விவாதங்களை ஆரோக்கியமான உரையாடலுக்கான இடங்களாக உருவாக்காமல், சுயபிம்பத்தை நிறுவதற்கான இடங்களாகவே மாற்றி விடுகிறது. சுயபிம்பத்தை நிறுவ உதவி புரியும் வெறுப்பின் பக்க விளைவுகளாக வசவுகளும், அச்சுறுத்தல்களும், அடக்குமுறைகளும் இருக்கின்றன.

நாம் எப்படி இதை சரி செய்ய போகிறோம்? ‘டீப் பேக்’ போன்ற புதுமையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் வருகையால், மெய்நிகர் உலகம் இன்னும் சிக்கலானதாகி இருக்கிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பூமி தட்டையானது என்றோ அல்லது ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் டிஎன்ஏ ஒரு தேவையற்ற கற்பனை நூலைத் தவிர வேறொன்றுமில்லை என்றோ உரை நிகழ்த்தக்கூடிய காணொளிகளை பார்க்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம் - ‘டீப் பேக்’ தொழில்நுட்பத்தை கொண்டு இதை செய்துவிட முடியும். இவை அனைத்தும் யாரோ ஒரு சிலரின் லாபத்துக்காக மனிதர்களை மேலும் தனித்து விடப்பட்டவர்களாய், வெறுப்பு மிகுந்தவர்களாய், வன்முறையாளர்களாய் மாற்றக்கூடும்.

இணையம் மற்றும் கோவிட் 19 தான் வெறுப்பரசியலை அல்லது பிரச்சாரத்தை கண்டுபிடித்தது என்று முடிவுக்குக் கொண்டு வருவது இந்த பிரதியின் நோக்கமல்ல. ஆனால் இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வெறுப்பை பரவலை ஜனநாயகமயமாக்கியன - இது கோவிட்-19 கால புரளி கதைகள் மூலம் மிகவும் நிரூபணமாகிறது. மனிதர்களுக்கு என்று இணையை வெளி எதை மிச்சம் வைத்திருக்கின்றது ? - நான் அவநம்பிக்கையான மனிதன், எனவே இணையவெளி நமக்கு எதையும் மிச்சம் வைக்கவில்லை, காலநிலை மாற்றத்தில் அழிந்துப்போவதை தவிர்த்து என்று வேணுமெனில் சொல்லலாம். ஆனால், இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு உயிரினங்களும் உயிர்வாழும் உள்ளுணர்வைக் கொண்டுள்ளன. அந்த உள்ளுணர்வே நம்மை வெறுப்பை எதிர்த்தும் போராட வைக்கிறது!

கலைமுகம் - இதழ் 73.

Comments

Popular posts from this blog

In the most health-obsessed society ever, all is not well*: On Trauma

1 Philosopher Byung-Chul Han's essay Neuronal Power begins with the following lines: " Every age has its signature afflictions. Thus, a bacterial age existed; at the latest, it ended with the discovery of antibiotics. Despite widespread fear of an influenza epidemic, we are not living in a viral age. Thanks to immunological technology, we have already left it behind. From a pathological standpoint, the incipient twenty-first century is determined neither by bacteria nor by viruses, but by neurons ". Modern integrative body mind science defies Byung-Chul Han’s statement, that it is reductive to define human suffering solely in terms of ailments. However, we are living in an era, where production relations dictate nearly everything about human existence, in this specific context Byung-Chul Han’s statement—that the majority of human society is afflicted by mental or neuronal issues—serves as a foundational lens to understand contemporary humans and their struggles. In today’...

படுகொலைக்கு முன்னான சில மணி நேரங்கள்

    ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன் , எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை . அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட   நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன் , ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல் . கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை . உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை , இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை . அதே நேரம் ஒளியற்று , ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது , சூடான மழைத் துளியை போல் . மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது ... அம்மாவின் முலை காம்புகள் , விபத்தொன்றில் மரணித்த நன்பன் , தேர் திருவிழா , அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள் , அவளின் முதல் முத்தம் , இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம் , கல்லூரியின் விடுதி அறை , முதல் காமத்தின் வெள்ளை இரவு ... இப்படி சொல்லி ம...