* “எனக்கு முத்தமிடப் பிடிப்பதில்லை, முத்தங்களில் தோல்கள் மட்டும் தான் முயங்கிக் கொள்கின்றன” என்று சொல்லியபடி அவன் உதடுகளில் முத்தமிட ஆரம்பித்தான். * * சூரியக் கதிர்கள் வர விரும்பாத அந்த அனாதை நிலத்தை, இருள், மக்கிப்போன எலும்பு குவியல்களின் வடிவத்தில் போர்த்தியிருந்தது. முற்றிலும் சூனியமான அந்த மண் முழுவதும் சாவின் வாசனை, அசைவற்று உறைந்துபோன காற்றுடன் கலந்து கிடந்தது. அங்கு தான் அவன் வாழ்ந்து வந்தான். அவன் ஒருவன் மட்டுமே எல்லாமுமாய் இருந்தான். அவனே மனிதன். அவனே மிருகம், கடவுள், தாவரம், பறவை, பிணி, காதல், காமம், உணவு எல்லாமுமே.. * * * அவனும் அவனைப் போன்றே தனியாளாய் வேறொரு தேசத்தில் வாழ்ந்தான். அவனும், அவனே மனிதன், அவனே மிருகம், கடவுள், தாவரம், பறவை, பிணி, காதல், காமம், உணவு இப்படி எல்லாமே.. ஆனால் சில யுகங்களுக்கு முன்பு அவனின் தேசத்தில் எல்லோருமே இருந்தனர். அவனுக்கு அம்மா இருந்தாள், அப்பன் இருந்தான், காதலி, மிருகங்கள், நோவுக்காரர்கள், அறிவாளிகள், திருடர்கள், கடவுளர்கள், வேசிகள், அங்கவீனர்கள், எல்லோரும் இருந்தனர், அவனுக்கு மொழியும் இருந்தது . பல்லாயிரம் பகல்களுக்...