* “எனக்கு முத்தமிடப் பிடிப்பதில்லை, முத்தங்களில் தோல்கள் மட்டும் தான் முயங்கிக் கொள்கின்றன” என்று சொல்லியபடி அவன் உதடுகளில் முத்தமிட ஆரம்பித்தான்.
** சூரியக் கதிர்கள் வர விரும்பாத அந்த அனாதை நிலத்தை, இருள், மக்கிப்போன எலும்பு குவியல்களின் வடிவத்தில் போர்த்தியிருந்தது. முற்றிலும் சூனியமான அந்த மண் முழுவதும் சாவின் வாசனை, அசைவற்று உறைந்துபோன காற்றுடன் கலந்து கிடந்தது. அங்கு தான் அவன் வாழ்ந்து வந்தான். அவன் ஒருவன் மட்டுமே எல்லாமுமாய் இருந்தான். அவனே மனிதன். அவனே மிருகம், கடவுள், தாவரம், பறவை, பிணி, காதல், காமம், உணவு எல்லாமுமே..
*** அவனும் அவனைப் போன்றே தனியாளாய் வேறொரு தேசத்தில் வாழ்ந்தான். அவனும், அவனே மனிதன், அவனே மிருகம், கடவுள், தாவரம், பறவை, பிணி, காதல், காமம், உணவு இப்படி எல்லாமே.. ஆனால் சில யுகங்களுக்கு முன்பு அவனின் தேசத்தில் எல்லோருமே இருந்தனர். அவனுக்கு அம்மா இருந்தாள், அப்பன் இருந்தான், காதலி, மிருகங்கள், நோவுக்காரர்கள், அறிவாளிகள், திருடர்கள், கடவுளர்கள், வேசிகள், அங்கவீனர்கள், எல்லோரும் இருந்தனர், அவனுக்கு மொழியும் இருந்தது . பல்லாயிரம் பகல்களுக்கும், பல நூறு இரவுகளுக்கும் முன்பு மற்றவனின் நிலத்திலும் அம்மா இருந்தாள், அப்பன் இருந்தான், காதலி, மிருகங்கள், நோவுக்காரர்கள், அறிவாளிகள், திருடர்கள், கடவுளர்கள், வேசிகள், அங்கவீனர்கள், எல்லோரும் இருந்தனர், அவனுக்கு மொழியும் இருந்தது. அந்த மொழியில் தான் அவன் தினம் தனிமையில் தன்னுடனே பேசிக்கொண்டான்.
**** அந்த நிலம் பல கோடி வருடங்களுக்கு முன் இன்று இருப்பதை போன்றே வெறுமனே தான் இருந்தது. ஒரு நடுச் சாமத்தில் கடலின் உப்புக் காற்றுப் பொங்கி வழிந்து கொண்டிருந்த எரிமலையுடன் கூடியதின் முடிவில் உயிர் நீந்த ஆரம்பித்தது. தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் தோன்றினர், கடவுள்கள் தோன்றினர், சாத்தான்கள் பிறந்தனர். இப்படி வளர்ந்த அந்த தேசத்துக்கு ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுருக்கம் விழுந்த தோல்களையும், சூரியனின் கோடுகள் வரை நீண்டு கிடந்த வெள்ளை தாடியையும் கொண்ட ஒருவன் வந்தான், அவனுடைய முதுகில் ஈசல்களின் சிறகுகள் இருந்தன, பல கோடி ஈசல்களின் சிறகுகள். அவனை வியப்புடன் பார்த்தன, அந்த நிலத்தின் அத்தனை உயிர்களும். அவர்கள் இதுவரை அறிந்திடாத அதிசயம் ஒன்றை, அவன் அவர்களுக்காய் கொண்டு வந்திருந்திருப்பதாக அறிவித்தான். சிகப்பு நிறத்திலான உருண்டை அது. ஒரு வெக்கை தணியும் மாலையில்அங்கிருந்த பல கோடி உயிர்களுக்கும் துளி துளியாய் அந்த உருண்டையான சிவப்பு பழத்தினை பங்கிட்டுக் கொடுத்தான். பாவத்தின் பங்கீடு என்று பின்னைய நாட்களில் சொன்னார்கள். தின்று முடித்த எல்லோர் வாயிலும் எச்சில் வழியத் தொடங்கியது, எல்லோர் வயிற்றிலும் புரு புருவென ஏதோ ஒன்று ஊர்ந்தது. எல்லா உயிர்களுக்குமே அந்தச் சிவப்பான பழம் வேண்டுமென்று தோன்றியது. அந்த அதிசய கிழவனை ஏங்கிப் பார்த்தனர். எக்காளமாய் கொக்கரித்தபடி “உங்களுக்கு இந்த பழம் வேண்டுமென்றால் இதோ இந்த சோழிகளைத் தேடிக் கண்டுபிடித்து என்னிடம் கொடுத்துவிட்டு பழத்தை பெற்றுக்கொள்ளுங்கள்”, என்றவன்..“விரும்பியவர்களுக்கு சோழிகளை சேகரிக்கும் வழியை சொல்லித் தருகிறேன் ” என்று தொடர்ந்தான்.
***** எல்லோருக்கும் சோழிகளின் ரகசியத்தைச் சொல்லியும் தந்தான். அவன் சொன்ன வடக்கு திசையை நோக்கி சோழிகளைத் தேடிய பயணத்தை ஆரம்பித்தன அந்த உயிர்கள். கொஞ்ச நாளில் அவனைப் போன்ற தோற்றம் கொண்ட இருவர் மட்டும், அவன் கேட்ட சோழிகளை அவனிடம் தந்து அவனிடமிருந்து சிவந்த பழத்தை பெற்றனர். பெருமிதக் களிப்பில் அந்தப் பழத்தை தின்ன ஆரம்பித்த அவர்களால் குறிப்பிட அளவு மட்டுமே உண்ண முடிந்தது. சாப்பிட்டு முடித்த சில நேரத்திலெல்லாம் ஒரு வகையான உருவம் கொண்ட மனிதன் குச்சி போன்ற ஏதோவொன்று தொடைகளின் இடையே இருப்பதை உணர்ந்தான். மார்பு பகுதி துக்கி காணப்பட்ட இன்னொரு மனிதனுக்கோ தன் கால்களுக்கு நடுவில் லேசாய் வலிப்பதை போலவும் திரவம் போன்ற ஒன்று வழிவதைப் போலவும் உணர்ந்தான். அந்த வலிக்கு விடைதேடிய இருவரும் இறுதியாய் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தனர். இப்படியாய் ஆரம்பித்த அந்த நிலத்தின் கதை அவனின் நினைவுகளில் இன்னொருவனின் சிறு வயதில் வந்து நின்றது.
****** அம்மாவின் வயிற்றை விட்டு வெளியே வந்தது முதல் வெடி சத்தங்களுடனேயே வாழ பழகிக்கொண்டான் அவன். அவன் பிறப்பதற்கு, ஏன் அவன் அப்பன் பிறப்பதற்கு முன்பிருந்தே அந்த தேசத்தில் அப்படியான வெடி சத்தங்கள் பழகிப் போன ஒன்றாகவே இருந்தது. அவன் பார்த்த பலரும் இரும்பினால் செய்த ஏதோ ஒரு பொருளுடனேயே அலைந்தனர். அந்த தேசத்துக்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வந்த அந்த மாய கிழவன் தான் அந்த பொருள்களுக்கு ஆயுதம் என்று பெயர் சூட்டினானாம். எல்லோரும் பாதி ஆயுளிலே மரித்துப் போகும் சாபத்தை அவர்களின் நிலத்தின் மீது துர்தேவதை ஒருவள் வீசிச் சென்றதின் விளைவாய், அவனின் அம்மா அப்பா சொந்தங்கள் என்று எல்லோரும் அற்ப ஆயுளிலே மாண்டனர். அவர்கள் வைத்திருந்த இரும்பு அவர்களைக் கொலை செய்தது. உரிமைக்கான போர் என்று சொல்லி வளர்க்கப்பட்டான். இவன் சொந்தங்கள் உறவுகள் என்று சொல்லப்பட்ட மனிதர்கள் அனேகம் பேர் கருப்பு நிறத்தில் உடைகள் உடுத்தி தலையில் கவசம், கால்களுக்கு சப்பாத்துகளையும் அணிந்து, அவர்களைத் தாக்கிய பச்சை ஆடைகளையும்,சப்பாத்துக்களையும், கவசங்களையும் அணிந்திருந்த பல லட்சம் பேருடன் போரிட்டனர். போரிட்டுக்கொண்டே இருந்தார்கள். விழுந்து சிதறிய ரவைகளைக் கொண்டு எண்களைப் பழகினான் அவன், எண்கள் கோடிகளைத் தாண்டியும் முடிவின்றிப் பயணித்தன.
******* பச்சை ஆடை மனிதர்கள் கண்ணில் பட்ட எல்லோரையும் கொன்றனர். அவன் அம்மா அவர்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாகி அவர்கள் கைகளில் இருந்த ஆயுதம் அவளின் கால் இடுக்குகளைக் கிழித்து இறந்து போனாள், அப்பனோ ஒரு மரத்தில் கட்டிப்போடப்பட்டு நெற்றியில் அந்த இரும்பு ஆயுதம் வைத்து அழுத்தியபோது குருதி வெளியேறி மாண்டுப்போனான். பச்சை ஆடை மனிதர்கள் ’அரசு’ எனும் பதிலை மீண்டும், மீண்டும் சொன்னார்கள். இப்படியாய் அவனின் சுற்றம் முழுவதும் கொலைகளில் காணாமல் போனார்கள். மிச்சமிருத்த ஒரு சிலர் யுகங்களுக்கு பின்னான பெரும் போரின் 28வது தினத்தில் நிலத்தை வென்றார்கள். அவர்களும் தங்களை ’அரசு’ என்றே சொல்லிக் கொண்டார்கள்..மீண்டும் ஒரு கொலைகளின் கதை வேறு ஒருவனின் கதையாக ஆரம்பித்தது, இப்படியான தொடர் பயணத்தில் இறுதியாய் அவன் மட்டும் தப்பினான். ஆடைகள் கிழிந்து அம்மனமாய் தன் நிலம் முழுவதும் அலைந்த அவனுக்கு இன்னொருவன் பற்றி குறிப்பை இமய சித்தன் ஒருவன் கனவினூடே சொல்லிச் சென்றான், நினைவுகளிலிருந்து விழித்தெழுந்த அவன், அவனும் தன்னைப் போலே கதை உடையவனாய் இருப்பான் என்று தனக்குதானே சொல்லிக் கொண்டான்.
******** இன்னொருவனைத் தேடி அலைந்து, அலைந்து பல யுகங்கள் கழித்து ஒரு நீண்ட கடற்பரப்பில் சடலம் போல மயங்கிக் கிடந்தவனை கண்டுபிடித்தான்.
* “எனக்கு முத்தமிடப் பிடிப்பதில்லை, முத்தங்களில் தோல்கள் மட்டும் தான் முயங்கிக்கொள்கின்றன” என்று சொல்லியபடி அவன் உதடுகளில் முத்தமிட ஆரம்பித்தான்
-எனில்?
Comments
Post a Comment