Skip to main content

மீசை என்பது வெறும் மயிர் – சந்திப்பு, நேர்காணல், நாவல் சுருக்கம்



அன்புக்குரிய பீம்தாஸ்,

     உங்கள் புத்தகத்தை படித்து முடித்த அடுத்த சில நிமிடங்களில், உங்களுடன் பல விடயங்களை பகிர்ந்துக்கொள்ள தன்னெழுச்சியாக எழுதப்படும் இக்கடிதம் பேச வந்ததை பேசாமல், உங்களின் சந்திப்பு குறித்தோ, நேர்காணல் குறித்தோ, நாவலின் சுருக்கம் குறித்தோ பேசுவதாக அமைந்தால் அதை நீங்கள் ஆதவனிடம் தான் கேட்க வேண்டும். பால்டிக் கடலின் மத்தியில் அமைந்திருக்கும் மனிதர்களால் கைவிடபட்ட அந்த தீவுக்கு இந்த கடிதம் வருமென்றும் அப்படி வரும் இந்த கடிதத்தை கார்ட்னர் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார் எனும் நம்பிக்கையிலும் எழுதுகிறேன்.

     காவி வண்ணத்திலான தீபகற்ப தேசத்தின் தென் திசையிலிருக்கும் நெருக்கடியான பெருநகரத்தின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 2வது தளத்தில் இருந்தப்படி இந்த கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கும் நான் ஒரு பச்சை தமிழன் என்பதை உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பச்சை தமிழ் குருதிக்கான ஆதாரத்தை அப்பலோ மருத்துவமனை ‘பச்சை இனகுருதி’ ஆய்வின் முடிவில் எனக்கு வழங்கியது என்பதையும் சொல்லிக்கொண்டு, இந்த தகுதியையும் தூய்மையையும் அடிப்படையாக கொண்டு உங்களுக்கு ‘துரோகி’ பட்டத்தை சூட்டுகிறேன். இனி நீங்கள் ‘துரோகி’ நந்த ஜோதி பீம்தாஸ் என்றே என்னால் விளிக்கப்படுவீர்கள். ஒரு தமிழனாகிய நீங்கள் ‘மூன்று போர் வென்ற இளம் பொறை’ என்றோ ‘தமிழ் தங்க திருமகன்’ என்றோ ‘இளவேனில்’ என்றோ பெயரை வைத்துக் கொள்ளாமல் ‘நந்த ஜோதி பீம் தாஸ்’ எனும் வடகத்திய பெயரில் எழுதும் உங்களை தமிழ் துரோகி என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?

     நீங்கள் எழுதியது நாவல் என்று யாரேனும் உங்களிடம் சொன்னால் அது இலக்கியம் தெரியாத ஒரு அறிவிளியின் சொற்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு அவ் வார்த்தைகளை புறம் தள்ளுங்கள். நாவல் என்பது மோட்சத்தின் 30வது தினத்தில் தேவியின் கரங்களில் வழியும் புனித தீர்த்தத்தின் வார்த்தைகள்... ஏதோ நீங்கள் நினைப்பதை போன்று போகிற போக்கில் எழுதிவிட்டு போவதில்லை. அப்படியான மகத்துவத்தை எழுவதாக நினைத்துக்கொண்டு, வெற்று சொற்களின் கோர்வைக்கு ’மீசை என்பது வெறும் மயிர்’ என்று பெயர் வைப்பது எதன் அடிப்படையில் நியாயம்? மேலும் இப்படி ஒரு அபத்தமான பெயரை வைத்து மீசை எனும் ஆண் மேன்மையை, வீரத்தின் அடையாளத்தை எள்ளி நகையாடும் மனிதனை துரோகி என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல? பீம்தாஸ் நீங்கள் சங்க-புறங்களை படித்திருந்தால் உங்களுக்கு மீசை பற்றிய பெருமை தெரிந்திருக்கும்...அதன் மகத்துவம் புரிந்திருக்கும்.. குறைந்தபட்சம் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைபடத்தை பார்த்திருக்கலாம். இப்படியான அடிப்படை கூறுகள் எதையுமே தெரியாத, பார்க்காத நீங்கள் மீசையை மயிர் என்று சொல்வது பெரிய அபத்தம் இல்லை தான்.. ஒரு துரோகியிடம் வேறு எதை எதிர்பார்க்க.

     சுத்த ரத்தத்தில் அழுகும் தொப்புள் கொடி எனும் அபத்த பிரதியை எழுதி மக்களின் தூய்மை நினைப்பில் அழுக்கு குப்பைகளை கொட்ட நினைக்கும் உங்களை என்னவென்று சொல்வது பீம்தாஸ்? தூய்மை என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? கலாச்சாரம் என்றால் என்ன தெரியுமா? எந்த ஆனவத்தில் 2000 வருடம் கலாச்சார பெருமை மிக்க ஒரு தெய்வீக பூமியையும் அதன் மனிமகுடமான சாதியை கேள்வி கேட்பீர்கள்? சாதி என்றால் என்ன தெரியுமா? அதன் புனிதம் தெரியுமா உங்களுக்கு? சாதி டஃபட்லேண்டின் ஆதி சொத்தென்று மனு சொன்னது தெரியாதா? ஹார்வி ப்ளூம் சந்தித்த நாய்தன்களும், மனிநாய்களும் என்னவென்று தெரியுமா உங்களுக்கு.. அது தான் தூய்மை...இன புனிதம்... இப்படியான பெரும் கதைகளை கேட்டேனும் இனி திருந்துங்கள் மிஸ்டர் தாஸ். உங்களுக்கு என்ன தைரியம் இருந்தால் சந்தனம் கதையில் நீங்கள் அங்கிள் சாமை கிண்டல் செய்திருப்பீர்கள், ஆம்! சாம் அங்கிள் தெளிப்பது பச்சை மலமாகவே இருந்தாலும், அது அங்கிளின் மலம்..சுவையாகதானே இருக்கும்..சந்தனத்தின் சுவை! இப்படியான கட்டுக்கதைகளை கொண்டு எங்களின் விசுவாசத்தை திசை திருப்பிவிட முடியும் என்று மட்டும் நம்பி விடாதீர்கள்... அங்கிள் சாமின் பளபளக்கும் சப்பாத்துக்களின் தூய்மை சொல்லும் எங்கள் விசுவாசத்தின் மேன்மையை. உங்களை போன்ற தேசபற்று இல்லாத துரோகிகளால் தான் தேசத்தின் ‘வளர்ச்சி’ கெடுகிறது... ராதா சொன்னதை போல்... ஊருக்கு ஒரு லீடர், ஆளுக்கு ஒரு கொள்கை, அவனவனுக்கு ஒரு டசன் பட்னி பட்டாளம். முதலில் எங்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் 70- 80 கோடி பிச்சைக்காரர்களை துரத்தினால் போதும்...நாங்கள் வல்லரசு தான். அங்கிள் சாமின் கருனை பார்வை எங்கள் மீது இருக்கும்போது நாங்கள் எதற்கு பயப்பட வேண்டும்? உங்களை போல் அங்கிள் சாமினை கிண்டல் செய்து திரிந்த குடிகார எழுத்தாளன் மண்ட்டோ என்ன ஆனான் என்பது உங்களுக்கு தெரியும் தானே...அவனே இந்த துணை கண்டத்தின் மாபெரும் எழுத்தாளன் ஆனான் என்று நீங்கள் பதில் சொன்னால் அது அங்கிள் சாமின் அவை குறிப்புகளில் இருந்து நீக்கப்படும் என்பதை சொல்லிக்கொள்கிறேன் திரு நந்த ஜோதி பீம் தாஸ்.

     இலங்கையை பற்றி இத்தனை தட்டையாக யாரும் பேசியது இல்லை என்றே நினைக்கிறேன். உங்கள் செவ்வியின் மொத்தமும் இலங்கை பற்றி பேசும் நீங்கள் துவக்கை பற்றியோ, கிபீர்களை பற்றியோ, வீரம் பற்றியோ பேசாமல்.. இலங்கையில் இருந்து ஒரு Red Tea நாவலை எழுத முற்பட்டிருக்கிறீர்கள். ஆண்மை புடைக்க, மீசை துடிக்க ஒரு செவ்வியை கொடுத்திருக்க வேண்டாமா? பால்டிக் கடலின் ஏதோ ஒரு முனையில் இருக்கும் உங்களுக்கு அப்படியெல்லாம் பேச தெரிய வாய்ப்பில்லை தான், அதுமட்டுமல்லாது முதலிலே சொன்னதை போல் ஒரு துரோகியிடம் அப்படி எதிர்பார்ப்பது நகை முரன் தானே. மலையகம் பற்றிய உங்கள் கதைகள் அழுப்பூட்டுகின்றன.. நிசங்கள் பல நேரங்களில் அயர்ச்சியானவை தானே.

     கடைசியாக இதை உங்களிடம் சொல்லவே வேண்டும்....மருத்துவ நாவிதம் பற்றி நீங்கள் எழுதியது எனக்கு முனுசாமி குறித்த நினைவுகளை ஏனோ மீட்டெடுத்து தொலைக்கிறது. நீங்கள் சொன்னது உண்மை என்று தான் நினைக்கிறேன். முனுசாமியை போல் சுழுக்கெடுக்கும் கொம்பன் எவரும் இல்லை என்பதை சொல்லியே ஆகவேண்டும். (உங்களுடன் கடைசியாக ஒரே ஒரு விடையத்துடனாவது ஒத்துப்போக முடிகிறது பெருமகிழ்ச்சியே, மார்க்வெஸ்சும், போர்ஹேவும் மகிழ்வார்களாக) முனுசாமியை உங்களுக்கும் தெரிய வாய்பிருக்கிறது மிஸ்டர் தாஸ், அலமேலுபுரமும் அ.பள்ளிபட்டியும் 3 மைல் தூரம் தானே.

     அனொனிமாவுக்கு நீங்கள் எழுதிய முன்னுரையின் வரிகளுடன் என் கடித்தை முடிக்க விரும்புகிறேன் ‘துரோகி’ நந்த ஜோதி பீம் தாஸ், “ஆண்கள் மீசை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள், மனிதர்கள் வேறுபாதையில் செல்லவும்”

அன்புடன்,
இளவேனில்

Comments

Popular posts from this blog

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்: வெறுப்பை ஜனநாயகப்படுத்தும் அழகியல்!

0. பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்: “நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது” 1. மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போ...

In the most health-obsessed society ever, all is not well*: On Trauma

1 Philosopher Byung-Chul Han's essay Neuronal Power begins with the following lines: " Every age has its signature afflictions. Thus, a bacterial age existed; at the latest, it ended with the discovery of antibiotics. Despite widespread fear of an influenza epidemic, we are not living in a viral age. Thanks to immunological technology, we have already left it behind. From a pathological standpoint, the incipient twenty-first century is determined neither by bacteria nor by viruses, but by neurons ". Modern integrative body mind science defies Byung-Chul Han’s statement, that it is reductive to define human suffering solely in terms of ailments. However, we are living in an era, where production relations dictate nearly everything about human existence, in this specific context Byung-Chul Han’s statement—that the majority of human society is afflicted by mental or neuronal issues—serves as a foundational lens to understand contemporary humans and their struggles. In today’...

படுகொலைக்கு முன்னான சில மணி நேரங்கள்

    ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன் , எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை . அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட   நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன் , ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல் . கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை . உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை , இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை . அதே நேரம் ஒளியற்று , ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது , சூடான மழைத் துளியை போல் . மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது ... அம்மாவின் முலை காம்புகள் , விபத்தொன்றில் மரணித்த நன்பன் , தேர் திருவிழா , அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள் , அவளின் முதல் முத்தம் , இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம் , கல்லூரியின் விடுதி அறை , முதல் காமத்தின் வெள்ளை இரவு ... இப்படி சொல்லி ம...