Skip to main content

கேத்தரின் டிசோசாவுக்கு அவன் எழுதிய ஆயிரம் பக்க கடிதம்

கேத்தரின் டிசோசாவை நேரில் சந்திப்பதற்கான அவனது திட்டம் எதிர்பார்க்காத மிக மோசமான ஒரு முடிவை கொடுத்திருந்தாலும், அவளை சந்திக்க வேண்டியதின் காரணங்களை யாரும் படிப்பதற்கு முன்பே கரையான்களுக்கு இரையாகியிறுந்த, ஆயிரம் பக்கங்களில் பதுக்கி வைத்திருந்தான். ஒரு சமயம் அந்த ஆயிரம் பக்கங்களும் கிடைக்கப்பெற்றிருந்தால் அவனின் மரணமும் எந்த ஒரு முக்கியத்துவத்தையும் பெற்றிருக்காமல் போயிருக்கக்கூடும்.

அவளை சந்திக்கவேண்டி அவன் எடுத்த முடிவை பலரும் விமர்சிக்ககூடும்  அபத்தத்தின் உச்சம் என்று சொல்க்கூடும் தெளிவான சித்தனை இருக்கும் எவரும் செய்ய துணியாத செயல் என்றும் நினைக்கக்கூடும். ஆனால் இந்த விமர்சனங்கள் எவற்றுக்கும் இப்போது அர்த்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

அன்று நடந்த அந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஓர் நொடி விடாது அந்த நாளின் வாசனை உட்பட அனைத்தையும் நினைவில் வைத்திருக்கிறேன். எரிந்த புத்தகக் கடைகளில் இருந்து வெளியேறிய கரிய நிற புகை நிறம்பிய இருண்ட வானத்தின் கீழ் அது நடந்தது. நகரத்திலிருந்து இருபத்தி ஏழு மைல்கள் தொலைவில் அமைந்துள்ள குப்பைக் மலைக்கு நீண்ட பழைய லேலண்ட் லாரியில் கொண்டு செல்லப்பட்ட எழுபத்தொன்பது பிணங்களில் அவனும் ஒருவனாக இருந்தான்.

கேத்தரின் டிசோசா என்ற பெயரை அவன் என்னிடம் முதன்முதலாக சொன்னதும், என்னுள் அதிகபடியான உற்சாகம் உருவானது, அதன் பிறகு அவன் பேசிய அனைத்து வார்த்தைகளும் வெப்பமண்டல நிலத்தின் அதிகாலை மூடுபனி போல மங்கலாக என்னை கடந்து சென்றன. கேத்தரின் மற்றும் டிசோசா என்ற பெயர்களுக்கிடையேயான தொடர்பை புரிந்துகொள்ள மனம் ஆர்வத்துடன் துடித்தது - கிரேக்கத்தின் அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து உருவான ஒரு பிரெஞ்சு பெண்ணியப் பெயருக்கும், போர்த்துகீசிய குடியரசின் வடக்கிலிருக்கும் சௌஸா நதிக்கரையில் தோன்றிய குடும்ப பெயருக்கும் இருக்கும் அசாதாரண தொடர்பை அறிந்துக்கொள்ளும் வேட்கை என்னுள் பெருகிக்கொண்டே வந்தது. அந்த நாளில் தான் எனது இந்த வேட்கையை ஹிப்போகாம்பஸின் ஆழமான திசுக்களில் சேமித்து வைத்தேன், அவளை நேரில் சந்திக்கும் ஏதோ ஒருநாள் அவளிடம் அவள் பெயர் குறித்த எனது வேட்கையை வெளிப்படுத்துவேன், அவள் பெயரின் தோற்றம் குறித்து கேத்தரின் டிசோசாவிடம் கேட்க பதுக்கி வைத்திருந்த எனது ஆர்வத்தை நினைவு கூர்வேன்.

அவனின் காலம் உறைத்துபோன கடைசி நிமிடங்களில், கேத்தரின் எனக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்தாள். ஆனால் எனது மூளையின் அடுக்குகளில் நான் பதுக்கி வைத்த அவளின் பெயர் குறித்த எனது கேள்விகளை மீட்டு வார்த்தைகளாக கொண்டு வர மறந்து விட்டிருந்தேன். எங்களை சுற்றியிருந்த இறுக்கமான சூழல் என் மூளை அணுக்கள் வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்திருந்த அனைத்து நினைவுகளையும் மறக்ககடித்திருந்தது. பெரிய, சாம்பல் நிற குளிர் கண்ணாடிக்கு பின்னால் அவளுடைய சிறிய முகம் எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாது, அசைவுகளற்று மதியநேர தூக்கத்திலிருந்து பயத்துடன் விழித்தெழும் உலர்ந்த முகம் போல இறுகியிருந்தது. அவள் அப்போது என்னை அல்லது வேறு யாரையாவது பார்த்துக் கொண்டிருந்தாளா, என்று தீர்க்கமாக சொல்ல முடியவில்லை. ஒருவேளை அவள் அணிந்திருந்த பெரிய கண்ணாடி அவள் கண்களை என்பார்வையில் இருந்து தடுத்திருக்ககூடும். ஒரு கொலையாளியின் துல்லியமான திட்டத்தைப் போல, தன் கண்கள் மற்றவர் கண்களை சந்திப்பதை அவள் தவிர்த்தாள் என்று எனக்குத் தோன்றியது.

நான் அவள் குறித்து கற்பனையில் உருவாக்கி வைத்திருந்த வடிவத்தில் சிறிதளவும் மாற்றமில்லாமல்  அவள் இருந்தது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. வெறும் பெயரை வைத்து எந்த ஒரு மனிதரின் உருவத்தையும் கற்பனை செய்வது என்னால் முடியாத ஒரு காரியம், வடிவங்களை புரிந்து கொள்வதில் இருந்த சிக்கல் உருவங்களை கற்பனை செய்வதில் எப்போதும் தடையாக இருந்திருக்கின்றது. வட்டத்துக்கும், சதுரத்துக்கும், செவ்வகத்துக்குமான வேறுபாடுகளை புரிந்துகொள்வதே என்னில் இயலாத ஒன்று, இதில் சிக்கலான மனித உருவங்களை கற்பனை செய்தல் என்பது யோசித்து பார்க்க முடியாதது. இந்த சிக்கலை தாண்டி, என்னால் துல்லியமாக கேத்தரின் உருவத்தை கற்பனை செய்ய முடிந்தது ஆச்சரியமாக இருந்தது.

நீள் வடிவத்திலான அவளின் பழுப்பு நிற முகம் அடர்த்தியான அமைதியிலிருந்தது. சன்னமான மூக்கும், தடித்த உதடுகளும் அவளின் முகத்தை இன்னும் இருக்கமானதாக காட்டின. கண்ணாடி மறைத்த கண்களை என்னால் உறுதி செய்யமுடியவில்லை. நான் கற்பனை செய்தபடி, வேப்பங் கொட்டையின் வடிவத்தில் இருக்கும் அவளின் நீலநிற கண்கள் வழமைக்கு மாறான அமைதியையும் கொண்டதாக இருக்ககூடும். ஒட்டி வெட்டிய தலை மயிர்களுக்கு, நீல சாயம் பூசியிருந்தாள். கழுத்தின் இடதுபுறத்தில் தலைகீழலான நட்சத்திரத்தையும், அரைவட்ட நிலவையும் பச்சை குத்தியிருந்தாள். ஒல்லியானதும், உயரமானதுமான அவளின் தேகம் ஒரு ரசியத்தை சுமந்து கொண்டிருப்பதாக அந்த நொடியில் நான் நம்பினேன். அவளை இதற்கு முன் சந்தித்திருப்பதாக உள்ளுணர்வு கூறியது, அதன் காரணமாகவே அவளின் உருவத்தை என்னால் கற்பனை செய்திருக்க முடிந்திருக்கின்றது என்று நினைத்தேன்.

அவளைச் சந்திக்க விரும்பிய அவன், ஊமத்தை வாசம் வீசிய அந்த நாளின் முதல் விமானத்தில் பயணிப்பான். அன்றிரவு அவன் அவளைச் சந்திப்பான், நகரத்தின் கடைசி பயணிகள் குறுகலான தங்கள் குடியிருப்புகளுக்குள் சென்று பதுங்கியபின், அவள் அவனை மது விடுதிகளும், பழைய புத்தக கடைகளும் நிரம்பிய நகரத்தின் வெறிச்சோடிய புறநகர்ப் பகுதிக்கு அழைத்துச் செல்வாள். 

அடர்சிவப்பு வர்ண ஆடையை அணிந்திருந்த நடுத்தர வயதுடைய பணிப்பெண் அவனிடம் சாப்பிட அல்லது குடிக்க ஏதாவது வேண்டுமா என்று கேட்டாள் - குறைந்த கட்டண விமானங்களில் அருந்துவதற்கான குளிர்ந்த குடிநீருக்கும் கூட காசு கொடுக்க வேண்டி இருக்கும், அவன் எதுவும் பேசவில்லை. அவள் அவனின் முகத்துக்கு அருகில் அவள் முகத்தை நெருக்கமாக கொண்டு வந்து அவனை உற்று நோக்கினாள், அவனிடமிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை. அவள் ஏதும் சொல்லாது தனது உணவு வண்டியுடன் அடுத்த இருக்கைகளுக்கு நகர்ந்தாள்.

மேகங்களை தவிர வேறு எதுவும் இல்லாத 35000 அடி உயரத்தில், அவன் மனம் கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் எதிர் காலத்திற்கும் இடையில் ஊசலாடி கொண்டிருந்தது. நினைவுகளின் ஒளி கற்றைகள், முடிவற்று நிரம்பியிருக்கும் வாழ்வின் அனேக நினைவுகளுக்கும் அவனை இட்டுச் செல்கின்றன. தலை மீது அதிக எடையுடன் அழுத்தும் நினைவுகளிலிருந்து தப்பிக்க,  நீல மையினால் வெண்மை நீக்கம் செய்யப்பட்ட, அவளுக்காக எழுதிய எழுத்துக்கள் நிரம்பிய அந்த ஆயிரம் பக்க கடிதத்தை படிக்க நினைத்தான். ஒரு நாள் கடற்கரையின் நெரிசலுக்கு மத்தியில் எல்ஜே சொன்னதை அவன் திடீரென்று நினைவு கூர்ந்தான், “சில அப்பாவி எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் அனைத்தும் தானாகவே செவ்வியல் நிலையை அடைந்து விடுகின்றன என்று நம்புகிறார்கள் - வெளியீட்டாளர்களும் அந்த குப்பைகளை, பக்கங்களை நிரப்பவும், நட்பினை பாதுகாக்க வேண்டியும் வெளியிடுகிறார்கள். அதனால், அந்த அப்பாவிகளும் தாங்கள் எழுதும் எந்த பிரதிகளையும் ஒரு முறை வாசித்து பார்ப்பதுகூட இல்லை". எல்ஜே அந்த கத்தியை அவன் மீது தான் சுழற்றினாள் என்பது அவனுக்கு தெரியும், ஆனால் அவன் அங்கு எந்த உரையாடலும் நடக்காததை போல் கடலை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் தனது கைப்பையில் வைத்திருந்த அந்த காகிதங்களை தீண்டவில்லை. ஏதாவது செய்ய விரும்பிய அவன் அனைக்கப்பட்டிருந்த அலைபேசியின் கருப்பு நிற திரையினை தொட்டு பார்த்துவிட்டு அதை தனது காக்கி கால்சட்டையின் இடது பாக்கெட்டில் வைத்தபடி மேகங்களைத் தவிர வேறு எதையும் பிரதிபலிக்காத சன்னல்கள் வழியாக எதையோ தேட ஆரம்பித்தான். அந்த சன்னல்கள் ஒரு வேளை சொர்கத்துக்கு போகும் நுழைவாயிலாக இருக்கக்கூடும் என்று யோசித்த நொடியில் காற்றின் விசை தாங்காது விமானம் குலுங்கி அடங்கியது.

அவர்கள் இருவரும் விக்டோரிய கால வேலைப்பாடுகள் கொண்ட நூறாண்டுகள் பழமையான கட்டிடங்களுக்கு இடையில் எலி வளை போன்று கட்டப்பட்ட புதிய ஊதா வர்ண கட்டிடம் ஒன்றிலிருந்த சிறிய மது விடுதிக்கு செல்வார்கள். அவன் ஒரு குவளை பீரையும், அவள் விஸ்கியையும் வாங்குவார்கள். அந்த அறை முழுவதிலும் எதிரொலித்த எமினதின் ஆரம்பகால பாடல் ஒன்றை கேட்பார்கள். ஆனால் அவன் அவளை எதற்காக பார்க்க வந்தான் என்பதை அவளிடம் கூறினானா இல்லையா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. அவர்கள் இருவரும் மூன்றாவது குவளை மதுவை அருந்தும் போது, ஒலிபெருக்கிகளிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த அதிக சத்தமான இசையினை தாண்டி வன்முறையின் ஓசையினை கேட்பார்கள்.

அவனும், கேத்தரினும் அங்கு மது அருந்திக்கொண்டிருந்த மீதி இரண்டு பேரும் மதுசாலையின் முதலாளியும் கூடத்தை விட்டு வெளியே வந்து அவர்கள் முன் வன்மமும், குழப்பமும், வெறுப்பும் நிறைந்திருந்த அந்த நகரத்தின் காட்டு மிராண்டிதனத்தை பார்ப்பார்கள். ஆயிரம் வருடங்களுக்கு அல்லது அதற்கு முன்னர் வாழ்ந்ததாகக் கூறப்படும் தெய்வத்தை போற்றி மந்திரங்களை உறக்க கத்தியபடி பதின்ம வயதில் இருந்த அந்த இளைஞர் கும்பல் கைகளில் வாள்களையும், துப்பாக்கிகளையும், தடிகளையும், கொடிகளையும் ஏந்தியப்படி அவர்களை கடந்து செல்வார்கள். அந்த கும்பலின் சோர்வை தணிக்கும் பொருட்டு காவலர்கள் பழரசங்களையும், தண்ணீரையும் சுமந்து செல்வார்கள். நகர் முழுவதையும் ஆக்கிரமித்திருந்த மந்திரங்களின் ஒலி அவன் உட்பட எழுபத்தி ஒன்பது பேரை அன்று இரவு கொல்லும்.

அசைவற்ற இறுகிப்போன அவளின் முகத்தில், அந்த பழுப்பு உதடுகளில் மட்டும் சோகத்தின் வடுக்களை நான் பார்த்தேன், அந்த சோகத்தில் வன்முறையின் எச்சங்களும் இருக்க செய்தன. அவளிடம் பேசவேண்டி அவளருகில் சென்று நின்றேன். என்னை நோக்கி ஏறிட்டு பார்த்தவள் ஏதும் சொல்லாது தலையை குனிந்து கொண்டாள். நான் அவளை பார்த்து சிரிக்க முயற்சித்தேன் ஆனால் அவள் தலை நிமிராமல் தனது காலணிகளை பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தாள். சாம்பல் நிற கான்வாஸ் அவள் கால்களுக்கு பொருத்தமானதாக இருந்தது, அல்லது அப்படி எனக்கு தோன்றியது. உன் மீது எந்த தவறும் இல்லை, அவன் வாழ்க்கையின் விதி சில காலத்துக்கு முன்பே எழுதப்பட்டுவிட்டது என்றேன். விடுக்கென்று என்னை ஏறிட்டு பாத்தவளின் கண்களில் ஆத்திரம் நிரம்பி இருந்தது. அவன் கொலை செய்ப்பப்பட்டான், அவர்கள் அவனை கொன்று விட்டார்கள் என்று கத்தினாள்.

வெறிபிடித்தவர்களாய் தெருக்களில் அலைந்து கொண்டிருந்த அந்த இளைஞர்கள், அங்கிருந்த அத்தனை புத்தக கடைகளையும் கொளுத்துவார்கள். புத்தகங்களின் எரியும் நெடி பல்லாயிரம் மைல்கள் தூரத்தில் இருந்த அதிபரின் பளிங்கு மாளிகை வரை செல்லும், காகிதங்களின் எறியும் வாசனையில் அதிபர் கிறங்கிப்போககூடும். எரியும் காகிதங்களே அனைத்து புத்துயிர்ப்புகளையும் ஆசிர்வதிக்கின்றன எனும் உண்மை மட்டும் அந்த நகரம் கடந்து வந்த பல அதிபர்களை போல், மேன்மைமிக்க அதிபருக்கும் தெரிந்திருக்காது. எரியும் காகித மலைகளை பார்த்து, மனிதர்களுக்கு அடுத்ததாக அதிகமாக எரிக்கப்பட்டவை காகிதங்களாக தான் இருக்ககூடும் என்பாள், அதற்கு அவர்களுக்கு அருகில் இருந்த மற்றொரு பெண் ஆம் சிந்திக்கும் எதுவும் சாம்பல்களாக சபிக்கப்பட்டிருக்கின்றன என்பாள்.

அந்த கும்பல், கண்களில் பட்ட அனைவரையும் தாக்குவார்கள். தங்களுக்கு வேண்டிய மனிதர்களை தேர்ந்தெடுத்து துப்பாக்கி சுட கற்றுக்கொள்வார்கள் - ஒரு சிலர் பெண்களை, ஒரு சிலர் திருநர்களை, ஒரு சிலர் குழந்தைகளை தேர்ந்தெப்பார்கள், கைகளில் இருந்த நீண்ட வாள்களை கொண்டு மனித தலைகளை வெட்ட பழகுவார்கள். அதில் ஒருவன் தன்னிடமிருந்த தங்க கத்தியினை கொண்டு முப்பது வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவனின் அடர்ந்த தாடியை மழிக்க முயசித்து, கத்தி வழுக்கி அந்த இளைஞனின் குரல்வலை அறுத்து குருதி பீச்சி வெளியேறி அந்த இளைஞன் துடித்து மரித்த கதையை அடுத்த நாளின் குடி விருந்தில் பெருமையுடன் சொல்வான், அதற்கு அவனுடன் மது அருந்திக் கொண்டிருக்கும் அனைவரும் ஒருசேர கைகொட்டி சிரிப்பார்கள். காலை செய்தித்தாள்களில் கலவரம் குறித்தும், குப்பை மலையில் குவிந்து கிடக்கும் மனித உடல்கள் குறித்தும் படத்துடன் தலைப்பு செய்திகள் வெளியாகும். செய்தி தொலைக்காட்சிகள் சாம்பலான காகித குவியல்களின் படங்களையும், வீதிகள் முழுவதும் வழிந்தோடிய குருதியின் காட்சிகளையும் இடைவிடாது ஒளிபரப்புவார்கள். கலவரத்தின் பதட்டம் நகரத்தின் அனைத்து எல்லைகளையும் ஆக்கிரமித்திருக்கும்.

நானும் அவளும் இன்னும் பலரும் நகரத்தின் மையத்திலிருந்த அரசு மருத்துவமனையின் சவகிடங்கின் முன் காத்திருந்தோம். அவள் ஏதும் பேசாது அமைதியாக இருந்தாள். நானும் ஏதேனும் பேச முயற்சித்து வார்த்தைகளேதும் சிக்காது தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருந்தேன். பல நிமிடங்கள் யோசனைக்கு பின் நீ பார்த்தாயா? என்றேன், என்னை உற்று பார்த்தவள், அவனின் குடல், மலவாய் வழியாக சரிந்து விழுவதை இந்த இரண்டு கண்களால் பார்த்தேன் என்றாள். நான் உறைந்துபோய் நின்றேன். எங்களுக்கு எதிரே இருந்த நோயாளிகள் கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் நடந்துக்கொண்டிருந்தன, புதிய படுக்கைகளையும் , மருத்துவ உபகரணங்களையும் கூலி தொழிளார்கள் வரிசையாக அந்த கட்டிடத்துக்குள் எடுத்து சென்றார்கள். நகரத்துக்குள் புதிதாக வந்திருக்கும் தொற்றுக்கு அந்த மருத்துவமனை தயாராகிக் கொண்டிருந்தது. மருத்துவமனை சுவர்களில் ஆங்காங்கே நோய் தோற்று குறித்த விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருந்தது.

அவன் சவத்தின் மிச்சத்தை அவர்கள் இரண்டு நாட்கள் கழித்து 6x4 அளவிலான தங்க நகைகளை வைக்க பயன்படுத்தும் அரக்கு நிறத்திலான  பட்டினால் செய்யப்பட்ட பெட்டி ஒன்றில் கொடுப்பார்கள். நான், அவள் உட்பட யாருமே திறந்து பார்க்காத அந்த சிறிய பெட்டிக்குள் அவனின் தாடி மயிர்கள் மட்டுமே இருக்கும்.

அவளும் நானும் சவகிடங்குக்கும் காவல் நிலையத்துக்கு அவளின் அறைக்கும் இடைவிடாது அலைதுக்கொண்டிருந்தோம். அந்த இரண்டு நாட்களும் நான் அவளுடன் தான் இருந்தேன். அவள் இடைவிடாது சிகரெட் புகைத்துக்கொண்டே இருந்தாள், அவளின் அறை முழுவதும் புகையிலையின் வாசம் நிரம்பியிருந்தது. இரண்டாம் நாள், அவன் நினைவுகளை சுற்றி அழைத்துக் கொண்டிருக்கும் மனதை திசை திருப்ப வழி தெரியாது, அவள் எத்தனை சிகரெட் புகைக்கிறாள் என்று தொடர்ந்து எண்ணிக் கொண்டிருந்தேன் - அவள் அந்த ஒரு நாளில் முப்பத்தைந்து சிகரெட்களை புகைத்திருந்தாள்.

நகரத்தின் தென்கிழக்கு பகுதியிலிருந்த பழைய முகலாய தெரு ஒன்றில் தான் அவள் வசித்து வந்தாள். மூன்றாம் மாடியில் இருந்த அந்த ஒற்றை அறையில் இரண்டு பேர் ஒன்றாக இருப்பது சற்றே சிரமமானதாக தான் இருந்தது. மனித உடல்கள் மீது எனக்கு எப்போதும் ஒருவித இருந்துக்கொண்டே இருக்கிறது. அந்த குறுகிய அறையில் அவள் உடலை தீண்டாது அமர்வது கூட இயலாத ஒன்றாக இருந்தது மேலும் இரண்டு நாட்களும் நாங்கள் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை. எங்கள் இருவருக்கும் பேச இருந்தது எல்லாம் அவனை குறித்தான நினைவுகள் மட்டுமே ஆனால் ஏதோ ஒரு வகையில் நாங்கள் இருவருமே அது குறித்து பேசாமல் தவிர்த்தோம். எங்கள் மௌனத்தாலும் அவளின் சிகரெட் புகையினாலும் நிரம்பி இருந்த அந்த அறையின் சுமை என்னை அழுத்துவதாய் இருந்தது. அவள் உடலை தீண்டிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் அந்த அறையில் நிரம்பியிருந்த அவன் நினைவுகளும் உறக்கத்தை மறக்க செய்திருந்தன. கண்ணாடியில் தெரிந்த, இரண்டு நாட்கள் தூங்காது வீங்கி போயிருந்த முகம் தமிழ் நடிகர் ஒருவரின் சாயலில் இருந்தது.

நான் அந்த நகரத்தை விட்டு வெளியேறி ஒருவருடம் கழித்து கேத்தரின் அவளது வீட்டில் சவமாக கிடந்தாள். அதிகப்படியான மார்பைன் அவளது ரத்தத்தில் இருந்ததின் விளைவாக அவள் சுயநினைவிழந்து மரணித்திருக்கிறாள் என்று அவளின் பிரேத பரிசோதனை அறிக்கை எழுதப்பட்டிருந்தது. அவள் மரணம் குறித்து யார் மீதும் சந்தேகம் இல்லாததாலும், அந்த ஒடுங்கிய அறையில் கண்டெடுக்கப்பட்ட ஊசியும், காலியான மருந்து புட்டியும் அவள் மரணத்தை தற்கொலை என்று சொல்லி வழக்கை முடித்து வைக்க காவல்துறைக்கு போதுமானதாக இருந்தது.

அவளை நான் முதலும் கடைசியுமாக அவன் சவமாக கிடந்த அன்று அல்லது அரக்கு நிற பட்டு துணியில் செய்யப்பட பெட்டி கிடைக்கப்பெற்ற அன்று தான் சந்தித்திருந்தேன். அதற்கு பிறகு அவள் குறித்த எந்த தகவல்களும் எனக்கு கிடைக்கவில்லை. அவள் சமூக ஊடகங்களிலும் இல்லாமல் போய்விட்டாள். அந்த நாளுக்கு பின் அவளின் அலைபேசியும் அணைக்கப்பட்டிருந்தது. அவள் குறித்த எந்த தகவல்களும் இணையத்தில் இல்லாமல் போனது ஆச்சரியமானதாக இருந்தது. ஒரு தேர்ந்தெடுத்த குற்றவாளியை போல் அவள் தன் தடையங்கள் அனைத்தையும் அழித்திருக்ககூடும் - யார் கண்களையும் சந்திப்பதை தவிர்க்க வேண்டி திட்டமிட்டு அவள் குளிர் கண்ணாடி அணிந்திருந்ததாய் நான் மருத்துவமனையில் யோசித்தது எனது நினைவுக்கு வந்தது.

அவள் மரண செய்தி கிடைக்கபெற்ற நாளிலிருந்து அவளின் வாழ்க்கை குறித்து அறியும் முயற்சியில் இறங்கினேன. அவனும் அவளும் முதன் முதலில் சந்தித்துக் கொண்ட நிகழ்விலிருந்து அவனின் படுகொலை வரை அனைத்தையும் மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டிருந்தேன். அவன் அவளுக்காக எழுதிய அந்த ஆயிரம் பக்க கடிதத்தில் அவன் என்ன எழுதியிருப்பான் என்று இடைவிடாது சிந்தித்துக் கொண்டேருந்தேன். அவனின் படுகொலையே கேத்தரினின் தற்கொலைக்கான காரணம் என்பதை மனம் நம்ப மறுத்தது. அதற்கு ஏதும் தனியான காரனம் ஏதும் இல்லை என்றாலும் நான் அவ்வாறே சிந்தித்தேன். பித்து பிடித்தவனை போல் இரவும் பகலும் அவர்கள் இருவர் குறித்தும் யாருமே படிக்காத அந்த கடிதம் குறித்தும் யோசித்துக்கொண்டே இருந்தேன். நோய் தொற்றுக்கு பின்னான உலகம் அதன் இயல்பில் வழமைக்கு திரும்பி கொண்டிருந்தது. முககவசம் இல்லாத மனிதர்களை சாலைகளில் காண முடிந்தது, முககவசமற்ற அந்த முகங்களில் உயிருடன் இருத்தலின் ஆனந்தம் நிறைந்திருந்தது. இது எதிலும் பங்கேற்க்க முடியாமல் இருவர் குறித்தான நினைவுகளில் மூழ்கி இருந்தேன். அவனின் முகத்தை காட்டிலும், நீளமான கேத்தரினின் முகம் இடைவிடாது என்னை துரத்திக்கொண்டே இருந்தது. இவை அனைத்துக்கும் மத்தியில் தொலைவான இருவேறு நிலங்களிலிருந்து ஒட்டி உருவான அவளின் பெயர் குறித்து மறந்து போயிருந்தேன்

யாருக்கும் தெரியாமல் கேத்தரின் வளர்த்த பூச்செடி:

அவனின் மிச்சமாய் அவர்கள் கொடுத்த பட்டினால் செய்யப்பட்ட பொட்டியை அவள் புதைக்கவில்லை. அவள் மட்டுமே பெட்டிக்குள் இருந்த அவனின் தாடி மயிர்களை பார்த்தாள். அடர்த்தியான கரிய மயிர்கள் குவியலாய் தங்கம் வைக்க பயன்படும் அந்த அரக்கு வர்ண பெட்டிக்குள் இருந்தது. யாருக்கும் தெரியாமல் அந்த பெட்டியை அவளின் அறையில் மறைத்து வைத்த கேத்தரின், சில தினங்கள் கழித்து அந்த பெட்டியை நகரினை இரண்டாக பிரிக்கும் அந்த நகரம் உருவான நதியின் கரையில் இருந்து எடுத்து வந்த மண் கொண்டு நிறப்பினாள். பின்பு மயிர்களை அந்த மண்ணில் புதைத்து தண்ணீர் விட்டாள். அறையை விட்டு எங்கும் செல்லாமல் காலையும் மாலையும் அந்த பெட்டியில் இருக்கும் மண் மூடிய மயிர்களுக்கு தண்ணீர் ஊற்றினாள். மீதி நேரங்களில் அந்த பெட்டியை பார்த்தபடி படுத்து கிடந்தாள்.

கொள்ளை நோய் நகரை ஆக்கிரமிக்க தொடங்கியிருந்தது. சாரை சாரையாக மக்கள் மருத்துவமனைகளை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். தொற்று கிருமி, நோயுடன் பஞ்சத்தையும் சேர்த்தே நகரத்துக்கு கொண்டு வந்திருந்தது. வீடு இல்லாதவர்களும், பிச்சைகாரர்களும், அனாதைகளும், ரோகிகளும் சாப்பிட சோறும், குடிக்க நீரும் இல்லாது மாண்டனர். மனிதர்கள் இல்லாமல் வெறிச்சோடி இருந்த நரத்தின் வீதிகள் பிணிக்கு செத்தவர்களை காட்டிலும் பசியில் மரித்து வீழ்ந்த மனிதர்களின் சவங்களால் நிரம்பி இருந்தன. படுகொலை செய்யபட்டு குப்பை மலையில் வீசப்பட்ட எழுபத்தி ஒன்பது உயிர்களின் சாவுடன், மரணம் அந்த நகரத்தில் நிரந்திரமாக குடி கொண்டது. மரணத்தின் கணக்குகள் தொலைக்காட்சி திரைகளில் இடைவிடாது ஒளிர்ந்துக்கொண்டே இருந்தது.

கேத்தரின் தன் அறையை விட்டு வெளியே செல்வதையே மறந்து விட்டிருந்தாள். நகரம் பிணியால் அழுகிக் கொண்டிருப்பதை அவள் அறிந்திருக்கவில்லை. அவள் அந்த பெட்டியில் வேறு எதையோ எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் காத்திருந்தாள். நாட்கள் செல்ல செல்ல பதட்டம் நிரம்பிய அவளின் காத்திருப்பு நீண்டுக்கொண்டே சென்றது. பவுர்ணமிக்கு அடுத்த நாளின் அதிகாலையில் அவள் அதை கண்டாள். அந்த பெட்டியின் மேலே கரிய நிறத்தில் சிறிதான இரண்டு இலைகளுடன் கூடிய செடி ஒன்று தென்பட்டது. அதற்காக தான் காத்திருந்தவளை போல் துள்ளி எழுந்து அந்த பெட்டியின் அருகில் சென்று அந்த பெட்டியினை திருப்பி திருப்பி பார்த்தாள். அந்த கரிய நிற செடி எந்த சலனமுமின்றி அதன் போக்கில் அசையாது இருந்தது. அன்றிலிருந்து இன்னும் அதிகமாக அவள் அந்த பெட்டியின் முன் காத்திருக்க தொடங்கினாள்.

அடுத்த மூன்று மாதங்களில், நோய் நகரத்தை முழுமையாக புரட்டி போட்டிருந்தது. அறுபதாயிரம் பேர் நோய்க்கும், இரண்டு லட்சம் பேர் பட்டினியாலும் மரணித்திருந்தார்கள். வீதியில் இருந்த பிணங்களின் சதைகளை உண்டு மனிதர்கள் பசியினை விரட்ட முயன்று செத்துக்கொண்டு இருந்தார்கள். அவள் மட்டும் இது எதுவும் தெரியாது வளர்ந்துக் கொண்டிருந்த அந்த கரிய செடியை பார்த்தபடி பொழுதுகளை கழித்துக் கொண்டிருந்தாள்.

அதற்கடுத்தான பொழுதுகள் எப்படி கழிந்தன என்பது நகரத்தில் வாழந்த யாருக்கும் தெரியவில்லை. மரணம் நாட்களையும் கணக்குகளையும் காணாமல் ஆக்கியிருந்தது. யாரும் எதிர்பார்க்காத ஒருநாளில் அந்த கொள்ளை நோய் நகரரில் இருந்து காணாமல் போயிருந்தது. அந்த நோய் எப்படி காணாமல் போனது என்று யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. மரணங்களிலிருந்து மீண்ட நகரம் அடுத்த சில நாட்களில் வழமைக்கு திரும்ப ஆரம்பித்தது. நகரம் நோயிலிருந்து முழுமையாக மீண்டு தன் இயல்புக்கு திரும்ப ஆரம்பித்து ஒரு மாதம் கழித்து கேத்தரின் பெட்டியில் வளர்ந்த அந்த கரிய செடியில் பூத்திருந்த ஊதா நிற பூ ஒன்றினை கண்டாள், அதே நாளில் அவளின் பிணமும் கண்டெடுக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்: வெறுப்பை ஜனநாயகப்படுத்தும் அழகியல்!

0. பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்: “நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது” 1. மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போ...

In the most health-obsessed society ever, all is not well*: On Trauma

1 Philosopher Byung-Chul Han's essay Neuronal Power begins with the following lines: " Every age has its signature afflictions. Thus, a bacterial age existed; at the latest, it ended with the discovery of antibiotics. Despite widespread fear of an influenza epidemic, we are not living in a viral age. Thanks to immunological technology, we have already left it behind. From a pathological standpoint, the incipient twenty-first century is determined neither by bacteria nor by viruses, but by neurons ". Modern integrative body mind science defies Byung-Chul Han’s statement, that it is reductive to define human suffering solely in terms of ailments. However, we are living in an era, where production relations dictate nearly everything about human existence, in this specific context Byung-Chul Han’s statement—that the majority of human society is afflicted by mental or neuronal issues—serves as a foundational lens to understand contemporary humans and their struggles. In today’...

படுகொலைக்கு முன்னான சில மணி நேரங்கள்

    ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன் , எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை . அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட   நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன் , ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல் . கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை . உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை , இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை . அதே நேரம் ஒளியற்று , ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது , சூடான மழைத் துளியை போல் . மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது ... அம்மாவின் முலை காம்புகள் , விபத்தொன்றில் மரணித்த நன்பன் , தேர் திருவிழா , அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள் , அவளின் முதல் முத்தம் , இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம் , கல்லூரியின் விடுதி அறை , முதல் காமத்தின் வெள்ளை இரவு ... இப்படி சொல்லி ம...