![]() |
| https://www.setaswall.com/road-autumn-black-white-1440-x-900/ |
புயலும் வெள்ளமும் அனைத்தையும் சிதிலமாக்கிவிட்டுச் சென்ற பிறகான நான்கு ஆண்டுகளில் ஒரு துளித் தண்ணீர்கூட இல்லாமல் வறண்டுபோன நகரத்தின் கோடை, குருவிகளையும் நாய்களையும் எலிகளையும் தவளைகளையும் பல்லிகளையும் மனிதர்களையும் செடிகளையும் மரங்களையும் கொடிகளையும் எரித்துச் சாம்பலாக்கிக் கொண்டிருந்தது.
நான் யாளியின் நகரத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றேன். வில்லியம் ஹட்டனின் அடர் சிவப்பு நிற கப்பல், கடலின் கிழக்கு கரையில் நங்கூறமிட்ட நாளில் யாளி தன் முதல் மூச்சை வெளியேற்றி இருக்கின்றாள், எனும் தகவல் வில்லியம் ஹட்டனின் ஏவலாள் ஹாமில்டன் எழுதிய நகரத்தின் வரலாற்று ஆவனத்தின் முதல் வரியில் கான கிடைக்கின்றது. அவளின் உடல் மீது தான் அந்த நகரம் உருக்கொண்டது. நகரத்தின் உடலும், மனமும் இனைந்தே யாளியின் உருவாக ஐநூறு ஆண்டுகளாய் நிலைத்திருந்திருக்கின்றது. நகரத்தின் வீதிகள் முழுவதை ஆக்கிரமித்திருக்கும் யாளின் ஆன்மா, நகரத்தில் வாழும் உயிர்கள் அனைத்தையும் அவளின் நரம்புகளுடன் இனைத்திருக்கின்றது. யாளியும், அங்கு வாழும் அனைத்து உயிர்களும் இனைந்தே அந்த நகரமாய் இதுநாள் வரை இருந்திருக்கின்றனர். மூப்படைந்த நரம்புகளாய் நகர தெருக்கள் முழுதும் ஊடுறுவியிருந்த தன் கரங்கள் அனைத்தையும், ஹாக்கிங் தெரு நாவிதனின் சவர கத்தியைக் கொண்டு செங்குருதி சொட்டச் சொட்ட வெட்டி முடிச்சவிழ்த்த பின், தன் கறுஞ் சிறகுகளை அகல விரிததபடி யாளி வானில் பறந்து சென்ற நாளிலே அந்த நகரம் மரணிக்க தொடங்கியிருக்க வேண்டும். அந்த நொடியிலேயே பறவைகளும் மீன்களும் எறும்புகளும் பூரான்களும் பாம்புகளும் புழுக்களும் நகரத்தை விட்டு வெளியேறத் தொடங்கியிருந்தை எந்த மனிதர்களும் அறித்திருக்கவில்லை. இந்த சம்பவங்கள் நடக்க ஆரம்பித்த இளவேனிற் கால இரவொன்றில், நூறு ஆண்டுகளுக்கு முன் வில்லியம் ஹட்டனின் வெள்ளை சப்பாத்துக்கள் மணல் நிலத்தில் பதித்த முதல் அடி முழுமையாக அழிந்துப்போய்க் காணாமலும் போயிருந்தது.
யாளி பறந்து சென்ற நாளில், ஊர் முழுதும் எரிந்து போன பிணத்தின் துற்நாற்றம் வீசஆரம்பித்தது., நகரத்தின் மனிதர்கள் விடாமல் பெய்துகொண்டிருந்த புயலுக்கும் மழைக்கும் பயந்துபோனார்கள். தங்கள் வீடுகளுக்குள்ளேயே தஞ்சமடைந்தார்கள். நகரத்தை மழை வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாய் விழுங்குவதை தொலைக்காட்சி பெட்டிகள் அறிவித்தன. அதுகாலம் யார் கண்களுக்கும் அகப்படாமல் வாழ்ந்துக் கொண்டிருந்த யாளியின் சுருங்கிப்போன கிழட்டுக் கரங்கள் பெருமழையில் வீதியெங்கும் அடித்துச் செல்லப்படுவதை நகரத்து மனிதர்கள் பார்த்தார்கள். நதியில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கில் குப்பைகள் அதிகமாய் அடித்து வரப்படுகின்றது என ஒலிபெருக்கியில் அறிவித்தபடி சென்று கொண்டிருந்தார் நகராட்சி ஊழியர். பாலம் பாலமாய் வெடித்து ரத்தம் வழிந்துகொண்டிருந்த யாளியின் பழுப்பு உதடுகளினூடே வெளிவந்த அவளின் ஆங்காரப் பாடல்களுடன் இளம் பக்கீர் ஒருவன் புணர்ந்துகொண்டிருந்த கதைகளை நான் அறிந்தே இருந்தேன்.
அவன் போதை மருந்துகளை விற்றதற்காய் கைது செய்யப்பட்டு நகரத்தின் மேற்கு எல்லையிலிருக்கும் மையச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அந்தச் செய்தியின் மூலமாக அறிந்துகொண்டேன். கைதுகளும், சாவுகளும் நிறம்பிய நகரத்தில் ஒருவனின் கைது செய்தி நம்புவதற்குக் கடினமாக இருக்கவில்லை. இருந்தாலும், அந்தச் செய்தியைத் திரும்பத் திரும்ப வாசித்துப் பார்த்தேன். அவனே தான். எத்தனை முறை பார்த்தாலும் மாறாமலிருந்த அதே நீண்ட முகம்; அந்தப் பனுவல்கள் நடுவே தெரிந்த அவனது பெயர். அதற்கு மேல் அதிலிருக்கும் நபர் அவன்தான் என்பதற்கு ஆதாரம் ஏதும் தேவைப்படவில்லை. முற்றத்தைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த செடிகள் அனைத்தும் காய்ந்து போயிருந்தன, அவை காய்ந்து போனது குறித்து எந்தப் பிரக்ஞையும் அற்றவளாய் அறியாத ஒன்றை யோசித்துக் கொண்டிருந்த மூளைக்கு என்னை ஒப்புக் கொடுத்துவிட்டுப் பழுப்புநிறச் சுவற்றை உற்று நோக்கியபடி அமர்ந்திருந்தேன். அந்த சுவற்றின் ஓரத்திலிருந்த வெடிப்பு ஒன்றை விட்டு வெளியேறிச் செவ்வெறும்புகள் சாரை சாரையாகக் பூமியை நோக்கி கீழே இறங்கிக்கொண்டிருந்தன.
அப்போது நான், பதிப்பகமொன்றில் சமூகவியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் பணி புரிந்துகொண்டிருந்தேன். அடிப்படையில் கோட்பாட்டு இயற்பியல் மாணவியான எனக்கு சமூகவியல் குறித்தான எந்த அறிவியல் புலமையும் இல்லை. இருந்தாலும் பிழை திருத்தம் செய்யவும், பிரதிகளை செழுமைப்படுத்தி வாக்கியங்களைத் திருத்தி எழுதவும் ஆங்கிலம் நன்கு தெரிந்த ஒருவர் அந்த சஞ்சிகைக்கு தேவைப்பட்டிருந்தார். அதன் காரணமாக எனக்கு அந்த வேலை கிடைத்தது. மூன்று வருடங்கள் அங்கு வேலை செய்தேன். வெளியிடப்படும் அனைத்துப் பிரதிகளையும் பிழை திருத்தம் செய்வதும், வாக்கியங்களைத் திருத்தி எழுதுவதும் அலுப்பூட்டும் வேலையாகவே இருந்தது. கடினமான வேலையாக இல்லை என்றாலும் மேக்ஸ்வெபர், எமிலே துர்க்கேம், ஹெர்பட் ஸ்பென்சர் எனும் பெயர்களை திரும்பத் திரும்ப வாசிப்பது பிழைதிருத்தத்ததைக் காட்டிலும் அயர்ச்சியானதாக இருந்தது .
அங்குதான் அவனை முதன்முதலாகப் பார்த்தேன். அலுவலகம் நகரத்தை இரண்டாக பிரித்த, வறண்ட நதிக்கரையில் அமைந்திருக்கும் சிறப்புப் பொருளாதர மண்டலக் கட்டடத்தின் பத்தாவது மாடியிலிருந்தது. இருநூறு பேர் வேலை செய்யும் ஒரு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து ஒன்று அல்லது இரண்டு வாரத்திலேயே அடையாளம் கண்டுகொள்வதற்கான அனைத்துச் சாத்தியப்பாடுகளையும் கொண்டவனாகத்தான் அவனிருந்தான். யாருடனும் அதிகம் பழகாத, உரையாடல்களில் பங்கு கொள்ளாத தனியனாக அவன் இருந்தான். அவனை நான் பார்த்தவரை யாரையும் பார்த்து பெரிதான புன்னகை ஒன்றைக்கூட வெளிப்படுத்தாதவன். அவனது கையில் எப்போதும் ஏதேனுமொரு புத்தகம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். தேநீர் வேளைகளில் அந்தப் புத்தகங்களில் தன்னைப் புதைத்து கொண்டிருப்பதை அலுவலகத்தில் வேலை செய்த அனைவருமே பார்த்திருப்பார்கள்.
தனித்து விடப்பட்டிருப்பதோ, புத்தகங்களை வாசிப்பதோ எந்த அளவிலும் புதுமையானதில்லை என்றாலும், ஒரு நாள் அவன் கார்லோ ரவோலியின் ’காலத்தின் ஒழுங்கமைவு’ புத்தகத்தை வாசித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். கோட்பாட்டு இயற்பியலில் மீது பைத்தியமான எனக்கு கார்லோ ரவொலியினை ஒருவர் வாசிப்பது அதிலும் குறிப்பாக அவரது புதிய வெளியீடு ஒன்றை ஒருவர் வாசிப்பதென்பதே, எனக்கு அவரைப் பின்தொடர்வதற்கு போதுமான ஒன்றாக இருந்தது.
அவனை நான் பின் தொடர்வதற்கான காரணம் முற்றிலும் பெரிதுபடுத்தப்பட்ட அபத்தம் என்று சொல்லப்படுமாயினும், கோட்பாட்டு இயற்பியல் என்பது அதிலும் குறிப்பாக ஈர்ப்பியல் அக்குவக் கோட்பாடு இன்றளவிலும் எனக்கான பலவீனங்களில் ஒன்றாகவே இருக்கிறது. எனவே மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன் அவனை ஒரு இயற்பியல் புத்தகத்தின் காரணமாகப் பின் தொடரந்தேன் என்பது அப்படியேதும் அபத்தமான ஒன்றாக இப்போதும் தெரியவில்லை.
அவனைச் சந்தித்த நாள் முதல் அரளிப் பூவின் வாசம் என்னைச் சூழ்ந்துகொண்டது. அவன் குறித்த நினைவுகள் அதிகமாகும் பொழுதுகளில் அரளியின் மனமும் அதிகரிக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்துக்கு மேல் அரளியின் நறுமணம் அவன் அடையாளமாய் என்னுள் தங்கியது. அவனும், அரளியின் மனமும் ஒருசேர என்னை முழுமையாக ஆக்கிரமித்திருந்தனர். அலுவலகம், வீடு, கழிவறை, சாலைகள், மதுவிடுதிகள், படுக்கை, உடைகள், உள்ளாடைகள், புத்தகங்கள், அறைச் சுவர் ஓவியங்கள், குறிப்பேடுகள், எழுதப் பயன்படுத்திய வெள்ளை காகிதங்கள், கைக்கடிகாரங்கள், செருப்பு என்று அனைத்திலும் அரளியின் வாசனையை நுகர்ந்த அந்தக் காலகட்டத்தில் பகல்களும் இரவுகளும் கனவுகளும் கூட அரளி வாசனையில் முழுமையாக நிரம்பியிருந்தன. அவன் இல்லாமல் போன இந்த மூன்று ஆண்டுகளில் அவனை குறித்து நினைக்கும்போது எல்லாம் கூடவே அரளியின் நறுமனத்தையும் ஒன்று சேர்த்தே உணர்ந்திருக்கிறேன்.
அவனுடன் பேச வேண்டும் என்ற வேட்கை இருந்தாலும், அவன் அவனுடைய காதலியுடன் வாழ்கிறான் என்பதும், என் காதலனும், அவனது மகளும் அவனிடம் பேச வேண்டும் என்பதற்கான முயற்சியைத் தொடந்து இடைமறித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது நான் என் காதலனுடனும், அவனது மகளுடனும் வாழ்ந்து வந்தேன். அவனும் தன் காதலியுடன் கடற்கரைக்கு அருகாமையில் வசித்து வந்தான் எனும் செய்தியை சக பணியாளர் ஒருவர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவனுக்கும் என் மீது ஈர்ப்பு இருக்கவே செய்தது, அதையும்அறிந்தேயிருந்தேன். அவனும் என்னை அவ்வப்போது பார்த்தான், ஆனால் ஒரு முறைகூட புன்முறுவலையேனும் உதிர்த்ததில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் யார் முதலில் பேசுவது எனும் போட்டி முடிவற்று நீண்டு வந்தது. அவன் என்னைப் பார்ப்பதிலும், பதிலுக்கு அவனை நான் பார்ப்பதிலுமே நாட்கள் நகர்ந்தன.
அவன் சில நாட்களாக அலுவலகத்துக்கு வராமலிருந்தான். அவன் இல்லாத, அந்த நாட்களில் சில நொடிகளேனும் அவனை பற்றிய யோசனை வந்து போனது. அப்போதுதான், அவனை பின் தொடர ஆரம்பித்த இரண்டு மாதங்களில் முதன்முதலாய் என் உடலை அவன் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தான். என்னைச் சுற்றிலும் அரளியின் வாசனை முடிவற்றதாய் நிரப்பப்பட்டிருந்து. யாளியின் ஊர், அரளியின் வாசத்தில் நிரம்பியிருப்பதாய் எண்ணினேன். காமம் வாழ்வின் அனைத்துத் தடுப்புகளை தகர்த்தெரிந்து என் உடலை அவனை நோக்கி நகர்த்தியது தகிக்கும் உடலைக் கட்டுப்படுத்த முடியாது தடுமாறினேன்.
அன்றைய தினம் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்ததும், யாருமற்ற வீட்டின் வரவேற்பறையிலிருக்கும் மூங்கில் இருக்கையில் அமர்ந்து உடைகளைக் களைந்தப்பின், கால்களை விரித்துக் யோனி காம்பை இடது கை விரல்களால் வருட ஆரம்பித்தேன். விரல்கள் சீரான விசையில் காம்பை வருடின. காமத்தின் கிரக்கம்; அணுக்கள் சிலிர்த்து உச்சம் கொள்ளத் தொடங்கின. விரல்களைக் யோனி காம்பிலிருந்து விடுவித்து, முகர்ந்தேன். யோனியின் வாசனையை தாண்டி விரல்களிலும் அரளியின் வாசனை வீசியது. மீண்டும் இடது கையை விரிந்திருந்த கால்களுக்கு நடுவே கொண்டுசென்று காம்பினை வருட ஆரம்பித்தேன். உடலும் உயிரும் என்னைவிட்டு வெளியேறித் துகள்களை போல் இலகுவாகப் பேரண்ட வெளியில் அசைந்துகொண்டிருந்தன. என் கட்டுப்பாட்டை மீறி அதிர்ந்த திசுக்களும் நரம்புகளும் ஒவ்வொன்றாக இறுக ஆரம்பித்திருந்தன. கால்களைச் சுவற்றில் அழுத்திப் பதித்தபடி, அடித் தொண்டையில் முனங்க ஆரம்பித்தேன். அவனுடனான முதல் காமம் முடிந்து உடல் தளர்ந்த சோர்ந்து போவதற்கு அடுத்த சில நிமிடங்கள் போதுமானதாக இருந்தது. அதி வேகமான விசையின் வருடல் என் யோனி காம்பில் வலியைத் தோற்றுவித்திருந்தது. கால்களைக் குறுக்கி உறங்கிப் போயிருந்தேன்.
தூமை, அதிகாலையின் தூக்கத்தை முழுவதுமாய் கலைத்துவிட எரிச்சலுடன் விழித்தெழுந்தேன். தொடைகளின் இடுக்கில் ஊர்ந்த ரத்தம் வடக்கு திசையை நோக்கிப் பாய்ந்தோடுவதான கனவை உதறிவிட்டுச் சுவற்றில் சாய்ந்து கால்களைக் குறுக்கி உட்கார்ந்ருந்தேன். தூரத்திலிருந்து கேட்ட, மாநகர ரயில் தடம் அமைக்கும் பணியின் பேரோசைப் பதற்றத்தை உண்டாக்கியது. யாராலும் எளிதில் அர்த்தபடுத்திக்கொள்ள முடியாத நீர் நிலைகளற்று வறண்டுபோன பெருநகரத்தின், இருளடைந்த தெரு ஒன்றில் வடக்கு முனையிலிருக்கும் வீட்டுப் படுக்கையறையில் தனியாக உட்கார்ந்திருப்பதற்கு எந்த காரணங்களும் தேவையானதாக இருக்கவில்லை. மாதவிடாயின் போது முறை தவறாமல் வரும் அந்த நினைவு இப்போதும் வந்தது.
விடுமுறை நாள் ஒன்றின் மதிய பொழுதியில் பாட்டி வீட்டு கொய்யா மரத்தில் விளையாடிக்கொண்டிருந்தது அப்படியே நினைவுகளில் நிற்கின்றது. கால்களின் இடுக்கில் சிறுநீர் வழிவதான உணர்வின் காரணமாக வெட்கி, அவசர அவசரமாக உள்ளாடையைக் களைந்து வழியும் ரத்தத்தைப் பார்த்தபோது நான் மரணிப்பதாய் நினைத்து அதிர்ச்சியில் உறைந்து நின்றேன். அடிவயிற்றில் பரவிய வலி என்னைச் சுருட்டி இறுக்கியது. எங்கிருந்தோ ஓடிவந்த தம்பியிடம் குருதியைக் காட்டிக் கண்ணீருடன் தொடைகளில் ஏற்பட்ட காயம் பற்றிச் சொன்னதும் தம்பி கேட்டான் “மர கெள எதுனா குத்திடுச்சா? ஒழுங்கா விளையாட முடியாதா?” அவன்தான் ஓடிச்சென்று அம்மாவை அழைத்து வந்தான். கண்களில் கண்ணீர் வழிய ஓடிவந்த அம்மா என்னை முழுவதுமாய்க் கட்டித் தழுவிக்கொண்டதின் காரணம் கல்லூரி விடுதியில் பனிமலருடன் சேர்ந்து முதன்முதலாக நீலப்படம் ஒன்றைப் பார்த்தபோதுதான் புரிந்தது.
இன்னும் விடியவில்லை, அழைபேசியைத் தேடி எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்குச் செல்லும் படிகளில் ஏற ஆரம்பித்தேன். அம்மாவாசைக்கு அடுத்த நாளின் ஆகாயத்தில் குமிந்து கிடந்த நட்சத்திரங்கள்; தங்கை இறந்துப்போன நாளின் நினைவுகளை மீட்டெடுத்தன. அவள் புதைக்கப்பட்ட அன்றிரவு, தங்கை எங்கே எனும் கேள்விக்கு ஆகாயத்தை நோக்கிக் கைகளை நீட்டி, அவள் நட்சத்திரங்களாய் மாறிவிட்டாளென்ற சொன்ன அப்பாவின் பதில் அவ்வளவு நம்பிக்கையானதாக இருக்கவில்லை. மனிதர்கள் நட்சத்திரங்களாய் மாறிவிட முடியாது என்பதை நம்பினேன், தனிப்பட்ட காரணங்கள் ஏதுமில்லை என்றாலும் எனது நம்பிக்கையில் உறுதியாகவே இருந்தேன். நட்சத்திரங்கள் குறித்து ஏதும் தெரியாத அன்றைய நாளில்தான் நட்சத்திரங்களை முதன்முதலாக உற்று நோக்க ஆரம்பித்தேன்.
இருண்ட பரப்பெல்லையின் இடது எல்லையிலிருந்து, வலமாக நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தேன். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு.. ” அவனை நான் முதன்முதலாகச் சந்தித்த நிகழ்வின், நிச்சயமான காலம் என்ன?” அவனைச் சந்தித்த தருணத்தை நொடிகளாகவும் அந்த நொடிகளைத் துகள்களாகவும் உடைக்க ஆரம்பித்தேன், அந்த நிகழ்வின் இறுதி அக்குவத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். அந்த நிகழ்வின் மிகச் சரியான நிகழ்காலத்தைக் கண்டுபிடிக்க முயற்சித்தேன் .அப்படியொன்றைக் கணக்கீடுகளையும் கோட்பாடுகளையும் தாண்டி மனிதக் கண்களால் பார்த்துவிட முடியாது என்பதை அறிந்தே இருந்தாலும்கூட, ஒருங்கிணைந்த நிகழ்வின் மூன்று காலங்களையும் தனித்தனியாகப் பிரித்து, மிகச் சரியாக அக்காலத்தின் நிகழ்க்கால அக்குவத்தைக் கண்டிபிடிக்க இருண்ட அதிகாலை வேளையில் முயன்றது குறையானதாகத் தெரியவில்லை அல்லது அப்படியான அக்குவம் ஒன்றை நான் கண்டுபிடித்தாலும், அதற்கான மதிப்பு என்பது அந்த நிகழ்வில் சுழியமாகக்கூட இருக்கபோவதில்லை. இருந்தும் அந்த அக்குவத்தைக் கண்டுபிடிப்பதென்பது அல்லது அந்த நிகழ்வின் தோற்றுவாயைக் கண்டுபிடிப்பதென்பது, என் யோனியின் வலிக்கான மூலத்தையும் அரளியின் நறுமணத்துக்கான மூலத்தையும் கண்டுபிடிப்பதாக இருக்கும்.
எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது - பழக்கம் என்றால் நானாக உருவாக்கிக்கொண்ட ஒன்று. எங்கு சென்றாலும் செல்லும் வழியிலிருக்கும் கண்காணிப்புக் கேமராக்களைப் பார்த்துப் புன்னகைத்தபடி, ஆட்காட்டி விரலையும், நடுவிரலையும் ஆங்கில வீ வடிவில் விரித்து ’பீஸ் ப்ரோ’ என்பேன். கேமராக்களைப் பார்த்து ‘பீஸ் ப்ரோ’ சொல்வது எனது வழக்கமான வேலைகளில் ஒன்று. மிக அரிதான சமயங்களிலே சில கேமராக்களைத் தவற விட்டிருக்கிறேன். என்னை அறிந்த அனைவருமே இந்தச் செய்கையை அறிந்தேயிருந்தனர். யாரென்று தெரியாத மனிதர்கள் தெருவில் கண்காணிப்பு கேமராக்களை பார்த்து ‘பீஸ் ப்ரோ’ என்று சொல்லும்போது குழப்பத்துடனோ பரிதாபத்துடனோ பார்த்தபடி கடந்துசெல்வார்கள். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று பலரும் எனது செயலுக்கான காரணத்தைக் கேட்கும்போது ஏதும் சொல்லாது புன்னகைக்கும் எனக்கு மட்டுமே அதற்கான பதில் ஒவ்வொரு மனிதரின் அந்தரங்கத்திலும் இருக்கின்றது என்பது தெரிந்திருந்தது, என் உடலைத் துளைத்து உற்று நோக்கும் கண்காணிப்பு கேமராக்களுக்கு, அதனூடாக என்னைக் கண்காணிப்பவர்களுக்கும் நான் என்ன கைம்மாறு செய்துவிட முடியும், பீஸ் ப்ரோ சொல்வதைவிட. அவனும் ‘பீஸ் ப்ரோ’ குறித்து அறிந்திருந்தான். அவனுக்கும் அது மிகவும் பிடித்தமானதாகவே இருந்தது. கண்காணிப்பு கேமராக்களைப் பார்த்து ‘பீஸ் ப்ரோ’ சொல்வதை அவன் எப்போதேனும் பார்த்தால், யாருக்கும் தெரியாத நான் மட்டும் புரிந்துக்கொள்ளும்படியான பார்வை ஒன்றைச் செலுத்திவிட்டு என்னைக் கடந்து செல்வான்.
அவன் இன்று அலுவலகம் வந்துவிடுவான் என்று யாரோ ஒருவர் நேற்று சொல்லியது எனக்கு உற்சாகத்தை கொடுத்திருந்து. அதன் காரணமாகவே காலடிகளை மிக வேகமாக அலுவலகத்தை நோக்கி நகர்த்திக்கொண்டிருந்தேன். அரளியின் மணம் எங்கிருந்தோ வந்து என்னை முழுமையாகச் சூழ்ந்துகொண்டது.
அவன்அன்று அலுவலகம் வந்திருந்தான். வழமை போல் தேனீர் கூடத்தில் அவனை பார்த்தேன். தேனீர் அருந்தியபடி எதையோ வாசித்துக்கொண்டிருந்தான். அவன் என்ன வாசிக்கின்றான் என்பதை அறிந்துக்கொள்ள விருப்பமிருக்கவில்லை. அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென்று தலையை நிமிர்த்திச் சுற்றிலும் தேடுவதைப்போல் கண்களை அலையவிட்டபடி என்னை நோக்கித் திரும்பினான். நான் இருப்பதை உறுதி செய்தவன் பிறகு எனக்கும் அவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப்போல், குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அதற்கு பின், அன்று மாலை அலுவலகத்துக்கு எதிரிலிருந்த மதுவிடுதியில் அவனைப் பார்த்தேன். உடன் வேலை செய்யும் பெண் ஒருத்தியுடன் அமர்ந்துகொண்டிருந்தான். அந்த மதுக்கூடத்துக்குள் நுழைந்ததுமே கண்கள் அவனை அடையாளம் கண்டுகொண்டன. அந்தப் பெண்னையும் எனக்குத் தெரியும்தான், தனிப்பட்ட அறிமுகமில்லை; என்றாலும் அலுவலகத்தில் பார்த்திருக்கிறேன். அவள் யாருடனும் அதிகம் பேசாதவள், அவளின் சுருண்ட முடிக்கும் இடது கை முழுவதும் வரையப்பட்டிருக்கும் பச்சைக்கும் ஒரு ரசிகர் படை இருந்தது. அவனைப் போலவே அவளையும் அனைவருமே அறிந்துvவைத்திருந்தனர் அல்லது அவளும் அவனைப் போலவே அடையாளம் காணக்கூடியவளாகவே இருந்தாள். ஆனால் இருவரும் அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதை ஒரு நாளும் நான் பார்த்ததில்லை.
அவர்கள் அமர்ந்திருந்த மேசையிலிருந்து நான்கைந்து மேசைகள் தள்ளி அமர்ந்துகொண்டேன். மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் அவர்களிருவரும், அவர்களின் மேசையும் நிழல் உருவங்களாய் எனக்கு தெரிந்தனர். அந்த மேசையின்மீது இரண்டு பீர் பாட்டில்கள் இருந்தன, வேறு எதுவும் அந்த மேசையில் இருக்கவில்லை. பரிசாரகரை அழைத்து, எதுவும் கலக்காத, ஜாக் டானியல்ஸ் சொன்னேன். நான் ஒரே வகை மதுவகைகளை அருந்துவதை விரும்புபவள். பீர் அல்லது விஸ்கி.குறிப்பாக ஜாக் டானியல் விஸ்கி எனது எப்போதுமான தேர்வு. எப்போதேனும் காசு அதிகமாயிருந்தால் கோனியாக் குடிப்பேன்.
அவனுக்கு நான் வந்தது தெரியவில்லை; என்னைப் பார்த்ததற்கான அடையாளங்களும் அவனிடம் தெரியவில்லை. அவர்கள் இருவரும் தீவிரமாக உரையாடலில் ஈடுப்பட்டிருந்தனர்.
நான் புகைப்பிடிப்பதற்குப் புகைக்கும் அறைக்குச் சென்றேன். புகைத்தபடி, கதவின் கண்ணாடி வழியே தெரிந்த மதுக்கூடத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். மங்கலான விளக்கொளியில் ஏதும் தெரியவில்லை. மஞ்சளும் நீலமும் கலந்த ஒளி ரம்மியமய் இருந்தது. திடீரென்று புகைக்கும் அறையின் கதவினை வெளியிலிருந்து யாரோ திறந்தார்கள், நான் பார்வையை வேறு பக்கம் திருப்புவதற்குள் அந்த உருவம் உள்ளே நுழைந்தது. எந்த ஆச்சரியமும் இல்லாமல் அவன்தான். மனம் படபடத்தது. என்னைப் பார்த்தவன் ஒரு நொடி தடுக்கி நின்றான். பதற்றமான முகத்துடன் அப்படியே வெளியே சென்றான். இவன் ஏன் என்னைப் பார்த்தவுடன் வெளியே செல்கிறான் என்று யோசிப்பதற்குள், இயல்பான பாவனையுடன் மீண்டும் உள்ளே வந்து அறையின் ஓரத்துக்குச் சென்று புகைக்க ஆரம்பித்தான். நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன் ஆனால் அவன் சுவரில் இருந்த விளக்கை பார்த்தபடி புகைத்துக் கொண்டிருந்தான் . இன்று அவன் எப்படியும் என்னுடன் பேசிவிடுவான் என்று எதிர்பார்த்தேன். குறைந்தபட்சம் தீப்பெட்டியாவது கேட்பான் என்று நினைத்தேன், ஆனால் ஏதும் நடக்கவில்லை. அவன் மிக இயல்பாக என்னை யாரென்றே அறியாதவன் போல் புகைத்துக் கொண்டிருந்தான். புகைத்து முடித்ததும் நான் ஏதும் சொல்லாது அந்த அறையை விட்டு வெளியேறினேன்.
மனம் குழம்பித் தத்தளித்தது. அவன் ஏன் என்னுடன் பேசுவதற்கான அத்தனை வாய்ப்புகள் இருந்தும் பேசவில்லை? என்னை ஒரு வேளை அவனுக்குப் பிடிக்கவில்லையோ அல்லது வேறு என்னவாக இருக்கும்? மிகவும் பதற்றமாக இருந்தது, உடலில் ஊசிகள் குத்துவதைப் போலவும், இதயம் வெளியெறி விழுந்துவிடுவதைப் போல் உணர்ந்தேன்., குளிருட்டப்பட்ட அறையிலும் எனக்கு வியர்த்தது. என் மீதே எனக்குச் சந்தேகம் வந்தது, நான் பொதுவாக யாருடன் பேச வேண்டும் என்றாலும் எந்தத் தயக்கமும் இல்லாமல் முதலில் பேசிவிடுபவள். ஆனால் இவனுடன் பேச மட்டும் ஏன் இவ்வுளவு தூரம் தயங்குகிறேன். கடந்து வந்திருக்கும் இரண்டு, மூன்று காதல்களில் கூட நான்தான் காதலை முதலில் தெரிவித்தேன், இவன்மீது ஈப்பைத் தாண்டி வேறு எதுவுமில்லை. பிறகெதற்கு அவனைப் பார்த்துத் தயங்குகிறேன்? குழப்பத்துடனும் கேள்விகளுடனும் அடுத்த குவளைக்குச் சொன்னேன். அவன் அவளுடனான உரையாடலைத் தொடந்துகொண்டிருந்தான்.
அன்று இரவு உறக்கம் வரவில்லை, மதுவிடுதியிலிருந்து நேராக வீட்டுக்குச் சென்றேன். வீட்டிலிருக்கும் இருவரிடமும் பேசாது நேராகப் படுக்கையில் விழுந்தேன். நான் குடித்திருப்பதை அறிந்த என் காதலன் என்னை முத்தமிடுவதற்கு அருகில் வந்தான் – அவனுக்கு மது வீச்சத்துடனிருக்கும் உதடுகளில் முத்தமிடுவதென்பது பிடித்தமான ஒன்று. அருகில் வந்தவனைப் பார்த்துத் தூக்கம் வருக்கிறது என்று சொல்லித் திரும்பிப் படுத்துக்கொண்டேன். அவன் குழப்பத்துடன் அறையை விட்டு வெளியேறினான். இரவு முழுவதும் மனம் ஏமாற்றத்துடன் தவித்துக்கொண்டிருந்தது. அதிகாலை நான்கு மணிக்கு மேல்தான் உறக்கம் வந்தது.
அந்தக் கனவிலிருந்து நான் விழித்தெழுந்தபோது, சூரிய ஒளி என்மீது படந்திருந்தது. என்னைச் சுற்றிலும் அரளியின் வாசத்தை நுகர்ந்தேன். உடல் வியர்த்துப் போய் இரண்டு மூன்று நிமிடங்கள் என இருப்பை உறுதிசெய்ய முயற்சித்தேன். வீட்டில் இருவரும் இருக்கவில்லை -காதலன் வேலைக்கும், அவனின் மகள் பள்ளிக்கும் சென்றுவிட்டிருந்தனர். குவளையிலிருந்த தண்ணீரைப் பருகிவிட்டு, அந்தக் கனவைத் திரும்ப ஒரு முறை மனதில் காட்சிகளாய் ஓடவிட்டேன் –
"அனேக ஆண்டுகளுக்குப் பின்னான காலை ஒன்றில் பனிக்கட்டிகள் போர்த்திய மலைச் சிகரங்களினூடே வெளியேறிய சூரியக் கதிர்கள் நிறம்பிய ஆயிரம் வருடங்களுக்கு முன்னான நிலம் ஒன்றில் அவன் நடந்து சூரியனின் ஒளியில் நீலமும் தங்கமும் கலந்த நிறத்தில் கண்களைக் கூச் செய்யும்படி ஒளிர்ந் எல்லைகளற்று நீண்டிருந்ந்த ஒரு ஏரியினை நெருங்கினான்; அது சுருங்கி அவனைக் கடிப்பதற்காய் பாய்ந்துவரும் செந்நிறப் புரவியாக உருமாறியது. அவனது தலை மயிர்கள் அனைத்தும் வெள்ளையாகிக் கூன் விழுந்து, ஒட்டிப்போன கன்னங்களையும் வயிறையும் கொண்ட மூதுவனாய் மாறிப்போய் புரவியிடமிருந்து தப்பிக்கும் பொருட்டு தடுமாறி அடிகளை எடுத்து வைத்து ஓட முயற்சித்துக்கொண்டிருந்த அவனை, விடாமல் துரத்திப் பாய்ந்தது புரவி. இடது கால் பாதத்தை அது கவ்விய நொடியில் கல் தடுக்கிக் கினற்றில் விழுந்தான்., பாசிகள் நிரம்பிய அந்தப் பச்சை கிணற்றின் ஆழத்திலிருந்த ஊற்றின் வழியாக வெளியேறி, மனிதர்களும் விலங்குகளும் செடி கொடிகளும் அலைபேசிகளும் தொலைக்காட்சிகளும், அனைத்தும் ஊதா நிறமாக இருந்த ஓர் உலகத்துக்குள் அவன் நுழைந்தான். அங்கிருந்த எல்லோரும் நட்சத்திரங்களாய் உயிர்பெற்ற நேரத்தில் இவனும் நட்சதிரமாய் உருக்கொண்டு வானில் மிதந்துகொண்டிருந்தான். அப்போது கண்ணுக்கு முன்னே தெரிந்த பெரிய பெரிய லாரிகளிலிருந்து கொட்டிய பணத்தை எடுக்கும் பொருட்டு விரைந்தோடி, அங்கிருந்த பெண் பிணம் ஒன்றைக் கண்டு பயந்து நடுங்கியப்படி கீழே குதிக்க முற்பட்டவன், மேகங்களில் மோதி மழைத் துளியாய் மாறி கடற்கரை ஒன்றில் ஒதுங்கியபோது, கறுப்பு பூட்ஸுகளையும், காக்கி ஆடைகளையும் தரித்திருந்த இருவர் கொலைக் குற்றத்துக்காய் அவனைக் கைது செய்து இழுத்துச் சென்றபோது வீதியில் இருந்தவர்கள் துப்பிய குருதியின் எச்சில், அவனை முழுவதுமாய் நனைத்திருந்தது."
அந்தக் கனவினூடாக நான் எதையும் அறிந்துகொள்ளவில்லை, அல்லது அப்படி எதையும் தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. நினைவுகளில் முழுமையாகத் தங்கிவிடுகிற ஒரு சில கனவுகளில் அதுவும் ஒன்று அவ்வளவுதான். ஆனால், அந்தக் கனவில் அவன் விரட்டப்படுகிறான், அவன் ஓடிக்கொண்டே இருக்கிறான் என்பதும், அது அவன்தான் என்பதும் தெளிவாகப் புரிந்தது.
அவனுக்கு எனக்குமிடையே இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கும் செப்பிடு வித்தையை யோசித்துப் பார்த்தேன். இருவராலும் நிறத்தப்படாத, இருவரும் நிறுத்த விரும்பாத அந்த வித்தையின் கதவுகள் பூட்டப்பட்டே இருந்தன. அந்தக் கதவினுள் என்ன இருக்கும் அல்லது அதைத் திறந்து பார்த்துவிட வேண்டும் எனும் ஆர்வம் எங்கள் இருவருக்குமே இருக்கவில்லை. அது திறக்கப்படுமாயின், அந்த நொடியே இது அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும். அந்தத் திறப்புக்குப் பின், அங்கு ஏதுமிருக்கப் போவதில்லை - காதலைப் போல், கடவுளை போல். உராய்வுகள் இருக்கும் வரை மட்டுமே அக்குவங்களின் இயக்கமிருக்கும், அப்படியான உராய்வுகளின் வெளிப்பாடே இந்தப் பேரண்டத்தின் அத்தனை இருப்புகளும் எனும் அக்குவ ஈர்ப்பியலை, எங்களுக்குப் பொறுத்திப் பார்க்க முயற்சித்தேன், வெறுமையான புன்னகை மட்டுமே எஞ்சியிருந்தது.
இந்த ஊடாட்டங்கள் இடைவிடாது ஒரு வருடம் தொடர்ந்தது. நானும் அவனும் ஒருவரையொருவர் பார்ப்பதிலும், யார் முதலில் பேசுவது எனும் போட்டியிலும் நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தோம். ஒரு நாள் அவனிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது, அலுவலகத்திலிருக்கும் அனைவருக்கும் அனுப்பியிருந்தான். அவன் வேலையிலிருந்து விலகுவது குறித்தான செய்தி அது. அன்றுதான் அவனது கடைசி நாள், இனி அவனை நான் பார்க்கப் போவதில்லை, அவன் இனி நினைவுகளின் ஆழத்துக்குள் சென்று புதைந்துவிடப் போகிறான். யாரென்றே தெரியாது. ஒரு நாள்கூடப் பேசாத வெறும் பார்வைகள் மூலம் மட்டுமே அறிந்துகொண்ட அவன் முழுமையாக யாரோவாகப் போகிறான். ஒரு சமயம் அவனை எங்கேனும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கலாம் அல்லது சந்திக்காமலே போகவும் கூடும். மனம் கனமாக இருந்தது, அழுது விடுவேன் என்று தோன்றியது. எழுந்து கழிவறையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அந்த நாளிலிருந்துதான் அரளியின் வாசம் என்னைவிட்டு வெளியேற தொடங்கியிருந்தது.
நான் எப்படி அமர்ந்திருந்தேனோ அப்படியே, பழுப்பு நிறச் சுவற்றை உற்று நோக்கியபடி அமர்ந்திருந்தேன். எனது அங்க நிலையில் சிறு மாறுதலும் இருக்கவில்லை. சுவரில் இருந்த சந்தின் வழியே வெளியேறிய எறும்புகள் முழுமையாக அந்த வழித்தடத்தைக் கடந்து முடிந்திருந்தன, சுவரில் எறும்புகள் இருந்ததற்கான எந்த அடையாளமும் இருக்கவில்லை.
மையச் சிறைச்சாலை நகரத்தின் மேற்கு எல்லையில், மனிதர்களால் எளிதில் எட்டிவிட முடியாத தூரத்தில் இருந்தது. மனிதர்கள், பெருவெடிப்பின் நிகழ்வெல்லை வரை சென்று சேர்ந்திருந்தாலும் கூட அதிகாரங்களின் எல்லைகள் தீண்ட முடியாத தூரத்திலே இருக்கின்றன. அதிகாலை ஆறு மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி, எட்டு மணிக்குச் சிறைக் கூடத்தின் வாசலுக்கு வந்து நின்றேன். திட்டுத் திட்டாகச் சிவப்பு நிறம் பூசப்பட்டிருந்த, பதினைந்து அடிக்கும் குறையாத சிறைக்கூடத்தின் சுவர்கள் இன்னும் வில்லியம் ஹட்டனின் காலனிய மிச்சங்களைத் தாங்கியிருந்தன. குறுகலான வரவேற்புக் கூடத்தின் இடது புறத்தில் அனுமதிப் படிவம் வாங்குவதற்காக் காத்திருந்த நீண்ட வரிசையில் என்னையும் இனைத்துக்கொண்டேன். எனக்கு முன் நின்றிருந்த மனிதர்களை எண்ணிப் பார்த்தேன்; ஐம்பத்து நான்கு பேர். அனுமதிப் படிவத்தைச் சிறை காவலர்கள் ஒன்பது மணிக்கு தான் கொடுக்க தொடங்குவார்கள், எப்படியும் பத்து மணிக்குள் சிறை வளாகத்துக்குள் சென்று விட முடியும். பிறகு அடுத்த ஒரு மணி நேரத்தில் அவனைச் சந்தித்துவிட முடியும், ஒரு மணிக்கு வீட்டுக்கு கிளம்பிவிடலாம் . அவனைப் பார்த்ததும் எப்படிப் பேச வேண்டும், முகம், கண்கள் எப்படி எல்லாம் வைத்திருக்க வேண்டும் என்று வீட்டில் கண்ணாடி முன் ஒத்திகை பார்த்தேனோ அதை மீண்டும் ஒரு முறை திருப்பி மனதிற்குள் ஓடவிட்டேன்.
மனம் படபடப்பாய் இருந்தது, அவனைப் பார்க்கப் போகிறேன் என்பதைத் தாண்டிச் சிறைக்குள் இருக்கிறேன் எனும் உணர்வே எனக்கு அச்சத்தை உண்டாக்கியது. தலைக்கு மேல், நான்கு மின் விசிறிகள் துருப்பிடித்த உராய்வுச் சத்ததுடன் இயங்கிக்கொண்டிருந்தன. என்னைச் சுற்றிலும் மனிதக் குரல்கள். அவை கணக்கிட முடியாத ஒலி அளவுகளில் ஒலித்தன - சப்தமான உரையாடல்கள், சிரிப்புகள், குழந்தைகளின் பசி அழுகை, கோபத்தின் குரல்கள், கிசுகிசுப்புகள், சூனியத்தின் அமைதி என்று அனைத்தும் என்னை சூழ்ந்திருந்தது. ஒன்பது மணிக்குக் காவலர்கள் வந்தனர், ஒவ்வொருவராகக் காவலர்களிடம் அடையாள அட்டையைச் சமர்ப்பித்தபின், அவர்கள் அதைச் சரிபார்த்துக் கணினியில் பதிவு செய்தார்கள். உடனடியாக எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அனுமதிப் படிவத்தைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். நான் காவலர்களைச் சென்று சேரும்போது மணி பதினொன்றைக் கடந்திருந்தது. அனுமதிப் படிவத்தை வாங்கிக்கொண்டு, அடுத்த அறையிலிருந்த காவலர்களிடம் எனது அலைபேசியியையும் பையையும் கொடுத்துவிட்டுச் சோதனை அறைக்குள் நுழைந்தேன். எனக்கு முன், பின் என்று வந்தவர்கள் அனைவரும் கையில் பண், பிஸ்கெட் என்று சாப்பிடும் பொருட்களை காகிதப் பைகளில் வைத்திருந்தனர். நான் ஏதுமில்லாமல் வெறும் கையுடன் சோதனை அறைக்குள் சென்றேன். அடைகளுக்குள் கைகளை விட்டு என்னை முழுமையாகச் சோதித்த பெண் காவலர், போ என்பதைப் போல் தலையாட்டினார்.
அங்கிருந்து சில அடிகள் நடந்து, ஐரோப்பிய காலக் கட்டடக் கலையின் மிச்சமான அந்தக் காத்திருப்பு அறையில் வந்தமர்ந்தேன். அந்த அறையில் பத்து இருபது பேர் அமர்வதற்கென்று சில இருக்கைகள் இருந்தன. எந்த இருக்கையும் காலியாக இல்லை. குடிநீர் தொட்டிக்கு அருகில் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்தேன். நூறு பேர் வரை நிற்ககூடிய அந்த அறையில் இருநூறுக்கும் அதிகமானவர்கள் நெருக்கிக்கொண்டு அமர்ந்திருந்தோம், பலர் நின்றிருந்தனர். அடுத்து என்ன செய்வது என்று தெரியாது அப்படியே அமர்ந்திருந்தேன். சில நிமிடங்கள் கழித்து, காவலர் ஒருவர் வந்து தன் கையிலிருந்த காகிதங்களை பார்த்துச் சில பெயர்களை அறிவித்துச் சென்றார், அவரைத் தொடர்ந்து அங்கிருக்கும் சிலர் ஓடினர். காவலர் வருவதும், பெயர்களை அறிவிப்பதும் அவருக்குப் பின்னால் மனிதர்கள் ஓடுவதும் பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை தவறாமல் சடங்கு போல் நடந்தது. நானும் அவனின் பெயரை அந்தக் காவலர் அறிவிப்பதற்காய் காத்திருந்தேன்.
அந்தச் சிறைக்கூடம், மலிவு விலைக் காகித விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட, நடிக்கத் தெரியாத நடிகர்கள் நடிக்கும் மேடை நாடகத்தைப் போல் செயற்கையாக இயங்கிககொண்டிருந்தது. அதன் அதிகார எல்லைக்கோடுகள் எனது புரிதலின் பரப்பெல்லைகளைக் கடந்திருந்தன. இந்த அமைப்பின் கீழ் எந்த மனிதர்களை வேண்டுமென்றாலும் குற்றவாளிகள் ஆக முடியும். குற்றம் செய்வதாய் அடையாளப்படுத்தப்படுபவர்கள், குற்றத்தைத் தடுப்பதற்கான வேலையில் இருப்பவர்கள், இந்த அமைப்பை உருவாக்கியவர்கள், அதை எதிர்ப்பவர்கள் என்று அனைவரையும் சிறை அமைப்புக்குள் கொண்டுவந்து விட முடியும். அதற்கான அத்தனை அதிகாரங்களையும் சிறையின் வடிவம் கொண்டிருக்கின்றது. இதோ இங்கு அமர்ந்திருக்கும் நானே கூட அடுத்த நொடி எனக்கு எதிரே இருக்கும் சிறையின் மதில் சுவர்களுக்குள் நிரந்தரமாக அடைத்துவைக்கப்பட முடியும், அந்த யோசனையே பயத்தைத் தோற்றுவித்தது. வடிவமற்ற இந்த அதிகார அமைப்பின் மூலத்தைத் தேடித் தோல்வியடைந்தேன். அன்று ஒருநாள் அதிகாலை மொட்டை மாடியில் நின்றபடி காலத்தின் அக்குவத்தைத் தேடியதற்கும், இந்தச் சிறைக்கூடத்தின் காத்திருப்பு அறையில் அமர்ந்தபடி இந்த அமைப்பின் அதிகார வடிவத்தின் ஆன்மாவைத் தேடுவதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை. கோட்பாட்டு இயற்பியலாளர் ஒருத்தி, ஐராப்பிய மையவாத மெய்யியலாளரைப் போல் அமைப்பு முறைகளை உடைத்து அதன் அடித்தளத்தைத் தேடியது எனக்குச் சிரிப்பை வரவழைக்கிறது. எனக்கு அருகில் அமர்ந்திருந்த ஆண் ஒருவர், ஐம்பது வயது இருக்ககூடும் – “ஒரு மணி ஆச்சு, இன்னைக்கு நாடகம் அவ்ளோதான்” என்றார். நான் அவரை பார்த்துச் சிரித்தேன்.
"யாரு?" என்றார்
என்ன பதில் சொல்வது என்று தெரியாது, ”ப்ரண்டு” என்றேன்
"என்ன கேசு?"
"கஞ்சா"
"ம்ம்... என் மகன், நாயீ மருமவள கொன்னுட்டான். நான் லோ, லோனு அலையிறேன்."
"எந்தெ ஊரு?"
"காஞ்சிபுரத்துக்கு பக்கத்துல"
அதற்குமேல் நான் ஏதும் பேசவில்லை.
அடுத்த முறை காவலர் வந்து பெயர்களை அறிவித்துக்கொண்டிருந்தபோது, ஒரு பெயரை கேட்டதும் துள்ளியெழுந்து அந்த அறையின் கதவுக்கருகில் சென்றார் அந்த மனிதர்.
அவன் பெயரை அந்த காவலர் அறிவிப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்தேன்.
நான் யாரிடமும் சொல்லிவிட்டு வரவில்லை, என்னைத் தேடுவதற்கென்று இப்போது யாரும் இல்லை என்றாலும் – காதலனைப் பிரிந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன, யாரேனும் என்னைத் தொடர்புகொண்டிருந்தால் என்று யோசித்தேன். பிறகு அவனைப் பார்க்கும் ப்போது என் மனநிலை எப்படியிருக்கும் என்று யோசிப்பதில் தடுமாறிப் போனேன். மீண்டும் ஒரு முறை அவனிடம் என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று மனதிற்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டேன். கோடையின் வெப்பமும் வியர்வையின் மனமும் மது வாசமும் புகையிலை நாற்றமும் அந்த அறை முழுவதிலும் பரவியிருந்தது. மூன்று மணிக்கு அந்தக் காவலர் அவன் பெயரை அறிவித்தார். நான் வேகமாக எழுந்து அறைக் கதவருகில் சென்று நின்றேன். என்னை உள்ளே செல்லுமாறு கையால் சைகை செய்தார். நாவறண்டிருந்தது, அருகிலிருந்தவரிடம் இருந்த தண்ணீர்க் குடுவையை வாங்கி ஒரு மிடறு பருகிவிட்டுக் கைதிகளைச் சந்திக்கும் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அரளியின் மனம் என்னைச் சூழ்ந்துககொண்டது.
குறுகலான அந்த வழித்தடம் நீண்ட கான்கிரீட் குகையைப் போல் காட்சியளித்தது. அதன் வழியாக நடந்து சந்திப்புக் கூடத்தினுள் வந்து நின்றேன். அந்த அறை, கம்பி வேலியால் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. வேலியின் மறுபுறம் தாழ்ந்த விளக்கொளியில் கைதிகள் நின்றிருந்தனர். கைதிகளைச் சந்திக்க வந்திருந்தவர்கள் எனது பக்கத்தில் நின்றிருந்தனர். கம்பி வேலிக்கு நடுவிலிருந்த மூன்று, நான்கு அடி அகண்ட இடைவெளியில் காவலர்கள் இருவர் நடந்தபடி அங்கு நடப்பவைகளைக் கண்காணித்துக்கொண்டிருந்தனர். அவன் அந்த அறையின் மூலையில் நின்றிருந்தான் – அவன் எப்போதும் மூலைகளையே தேர்ந்தெடுக்கிறான். அவனுக்கு எதிரே சென்று நின்றேன். தாடியற்ற அவனை நான் உடனடியாகக் கண்டுக்கொண்டது எனக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது, நான் அவனை தாடி இல்லாமல் பார்த்ததே இல்லை. நீண்ட தாடி இல்லாத அவனைக் கற்பனைகூடச் செய்ததில்லை. அவன் என்னை உற்று நோக்கினான், உடனே அடையாளம் தெரிந்துகொண்டான். ஏதும் பேசாது கண்களை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான். நானும் ஏதும் பேசாது அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். நீலநிற டீசர்ட் ஒன்றை அணிந்திருந்தான். தாடி இல்லாத முகம் சுருங்கியிருந்தது. தலை மயிர் முழுமையாக நரைத்திருந்தது. என்னைப் பார்க்காது வேறு எங்கோ பார்த்த அவன் கண்கள் எப்போதும் போல் அலைந்துகொண்டிருந்தன. யாரோ ஒருவனாக் காட்சியளித்தாலும், அந்த அலையும் கண்களும், இடது புருவத்தில் இருக்கும் வெட்டுத் தழும்பும் அவனை அடையாளம் காட்டின. நான் தயார் செய்து வைத்திருந்த வாக்கியங்களை மறந்து விட்டிருந்தேன், எனது ஒத்திகைகள் எந்தப் பயனையும் கொடுக்கவில்லை. ஏதும் பேசாது அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அரளியின் வாசம் என்னை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. பத்து நிமிடங்கள் கழித்துக் காவலர் ஒருவர் வந்து நேரம் முடிந்தை அறிவித்தார். அவன் என்னைப் பார்த்தான், நான் ஏதும் சொல்லாது விடைபெற எத்தனித்தேன். முதன் முறையாக அவனுடன் பேசினேன் “ஏதேனும் உதவி தேவைப்படுகின்றதா” என்றேன். ஏதும் சொல்லாத அவன் சாப்பிடும் பொருள் ஏதேனும் வாங்கிச் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்கிறேனா என்று கண்களில் ஆர்வம் பொங்கக் கேட்டான். நான் ஏதும் சொல்லாது அந்த அறையை விட்டு வெளியேறினேன் -அரளியின் மனம் என்னைத் தொடந்து வந்துகொண்டிருந்தது.

Comments
Post a Comment