உனக்காய் வரையப்படுகின்ற முதல் கடிதம். என் முதல் காதல் கடிதமும் கூட. மிகுதியான தருணங்களில் இதுவே இறுதியாய் அமைந்துப்போக விருப்பம். எத்தனையோ காதல்களை கடந்து வந்திருந்தாலும் எழுத ஆசைப்பட்ட முதல் கடிதம். நீ எதிர்ப்பார்க்கா கடிதமும் கூட. படித்தால் அதிசயத்துப்போவாய் எனும் நம்பிக்கை என்னுள். நம்பிக்கை தானே, பொய்த்துப்போகலாம் தவறில்லை.வாழ்க்கையால் அடிமையாக்கப்பட்டு பெயர்களாலும், உறவுநிலைகளாலும் சிதைந்துப் போன ஒருவனின் காதலியாய் கிடைக்கப் பெற்ற உனக்கு என்னால் எம்மாதிரியான கடிதம் எழுத முடியும்.இழந்துப்போன காதலிக்காய் இன்றும் ஆண்டிஸ் மலைத்தொடர்களில் சுற்றித் திரியும் நெருடாவின் சோக வரிகளோ, ஜென்னிக்கோ ஹெலன் டெமூத் அம்மையாருக்கோ பேராசான் மார்க்ஸ் எழுதிய கடிதங்களோ, இல்லை நீ செல்லம்மாவோ நான் பாரதியோயன்று, உனக்காய் உலகின் தலைசிறந்த காதல் வரிகளை எழுத. பால் விலை இரண்டு ரூபாய் ஏறிப்போனதைப் பற்றியோ, சொகுசு பேருந்து எனும் பெயரில் பல மடங்குஏறிப் போன சென்னை பேருந்துகளின் கட்டணம் குறித்தோ, இன்னும் நிரந்திர வேலை கிட்டா என் அடிமை வாழ்வைப் பற்றியோ, இந்த வருடமேனும் சம்பளம் உயருமா எனும் விடைத்தெரியா ஏக்கத்தைப் பற்றியோ எழுத முடியும் என்னால்.
உனக்கு தோன்றலாம் இவனுக்கு தமிழ் சினிமா நாயகர்களை போல் காதல் கடிதங்கள் எழுத தெரியாதாவென்று? ஒருவேளை எனக்கும் நாலுக் கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து, காதலிக்க அசினோ, சிம்ரனோ கிட்டி, எனக்கும் வைரமுத்தோ, வாலியோ வரிகள் எழுதிருந்தாலோ, நானும் காதல் ரசங்களை பாடியிருப்பேன். என் கிறுக்கல்கள் எனதானதால் என் உண்மைகளை மட்டுமே பேசுகின்றன.காதலியே உன் எதிர்பார்ப்புகள் தவறில்லை. நான் உன்னிடமோ நீ என்னிடமோ உலகின் மிக சிறந்த காதல் கடிதங்களை எதிர்பார்க்கலாம் தவறில்லை. எதிர்பார்ப்புக்களால் நிரப்பபட்டது தானே வாழ்க்கை. ஆனால் நிசங்கள் வேறுவகையான பதில்களை மட்டுமே தருகின்றன.எது எப்படி இருப்பினும் உயிரினங்களிலேயே உயர்ந்த பெண்மை எனும் மிக சிறப்பை கொண்டவளே, உன்னோடு கைபிடித்து குழந்தையாய் கடற்கரை நடை பழகிய நாட்கள், எனக்கான உன்கண்ணீர் துளிகள், உனக்கான என் கண்ணீர், என் கிறுக்கல்களின் முதல் விமர்சனங்கள், உன் கோபங்கள், வீரம், மனிதம் என எத்தனையோ நினைத்தாலும் இறுதியில் சிந்தைகள் மின்சார கட்டண உயர்விலோ, சன் டிவியில் டீலா நோ டீலா பார்பதிலோ முடிந்துப்போகின்றது. என்னால் வேறென்ன செய்ய முடியும், எழுத முடியும்.
என் கனவுகளை அதிகமாய் நிறைப்பவளே. நிசங்கள் வேறுப் பலரால் நிரப்பப்படுகின்றது. அம்மா, அக்கா, நண்பர்கள், நடைபாதை வணிகர்கள், பிச்சைக்காரர்கள், மாற்றுத் திறன்கொண்டோர், திருநங்கைகள், என்னை தங்கள் பக்கமே சாய்த்து வைத்திருக்கும் அழகான அலுவலக தோழிகள் என்று பலரால் நிரப்பப்படுகின்றது. உன் எண்ணங்கள் சில வேலை மட்டுமே வந்துப்போகும் உண்மையை கூரினால் நீ என்ன எண்ணுவாய்? இதுப் போன்ற சங்கடங்களை போக்கவே பொய் படைக்கப்பட்டுள்ளது. உன்னை ஒரு நிமிடம் கூட நினைக்காமல் இல்லை என்னும் பொய்யை சொல்லலாம். அனால் நான் உன் மயிருக்குள் என் நாசி வைத்து உன் வாசம் தேடும் வேளையோ, என் இதழ்கள் உன் இதழ்களோடு உறவாடும் வேளையோ இல்லை, பொய் சொல்லி காதல் புரிய. உன் நினைவுகள் மிகுதியாய் இல்லாததால் உன்னை மறத்தல் எனும் பொருளில்லை. உன் நினைவுகள் சில நொடியேனும் வந்துப் போயினும் அதற்க்கான காரணிகளை நீ அறிந்தால் புரியும் உன் பதிவுகள் என்னுள் எத்துனை ஆழமானவை என்று. கடற்கரையில் நான் நடந்து சென்ற நம் கால்தடங்களின் தேடலிலோ, ஒன்றே பயணித்த ரயில் பெட்டிகள் தரும் நினைவுகளோ, மெலினா படம் பார்க்கும் தருணங்களிலோ, டெரிடாவின் வரிகளிலோ நீ ஒரு கணம் வந்துப் போகின்றாய் நீ.
சராசரி வாழ்விலும், என் உலகிலும் தத்தளித்து கரைசேர தெரியா என் வாழ்வின் பயணத்தில் சக பயணியாய் வந்தமைக்கு என் நன்றிகள் தோழியே.....
உன் நினைவுகள் சில நொடியேனும் வந்துப் போயினும் அதற்க்கான காரணிகளை நீ அறிந்தால் புரியும் உன் பதிவுகள் என்னுள் எத்துனை ஆழமானவை என்று. கடற்கரையில் நான் நடந்து சென்ற நம் கால்தடங்களின் தேடலிலோ, ஒன்றே பயந்த ரயில் பெட்டிகள் தரும் நினைவுகளோ, மெலினா படம் பார்க்கும் தருணங்களிலோ, டெரிடாவின் வரிகளிலோ நீ ஒரு கணம் வந்துப் போகின்றாய் நீ.
ReplyDeleteசராசரி வாழ்விலும், என் உலகிலும் தத்தளித்து கரைசேர தெரியா என் வாழ்வின் பயணத்தில் சக பயணியாய் வந்தமைக்கு என் நன்றிகள் தோழியே.....
நல்ல காதல் கடிதம் அண்ணா
nandri charles...
ReplyDeleteFantastic...
ReplyDelete