Skip to main content

ரஸ்கோல்நிகோவ்


   கோதுமை கதிர்கள் நிரம்பிய வயல்வெளிகளுக்கு அடியில் சவபெட்டியினுள் இதுகாலம்உறங்கிகொண்டிருந்த ரஸ்கோல்நிகோவ் சவப்பெட்டியை விட்டு வெளியேவந்து சற்று தொலைவிலிருந்த பீட்டர்ஸ்பெர்க் நகரினை நோக்கி நடக்க ஆரம்பித்தான். பாதை நகரை நோக்கி விரிந்துக்கொண்டிருந்தது.சூரியன் என்றுமில்லாத அதிசியமாய் மேற்கு திசையில் உதித்துக்கொண்டிருந்தது. ஆர்வமும், பதட்டமும் ஒன்றுசேர்ந்து அவனின் கால்கள் நடுங்கின. பீட்டர்ஸ்பெர்க் நகரை அடைந்தவனுக்கு நகரம் அடையாளம் தெரியவில்லை அனைத்தும் மாற்றம்கண்டிருந்தது, தான்தோன்றியாய் வீதிகளில் எதையோ தொலைத்துவிட்டு தேடுபவனைப் போல் தேடிக்கொண்டிருந்தான். அந்த வீதியின் ஓரத்தில் இருந்த மர இருக்கையில் அமர்ந்தவன் கண்களை மூடி பழைய நினைவுகளில் பயணிக்க ஆரம்பித்தான்.

    சில மணிநேரம் கழித்து கண்விழித்த ரஸ்கோல்நிகோவ் தான் தேட வேண்டிய மனிதர்களை மனதில் வரிசைப்படுத்திக்கொண்டான். சோனியா, தன் தங்கை துனியா, நண்பன் ரஸ்மிகின், தன் முன்னால் காதலி நடால்யா, தான் கொலைசெய்த அல்யோனா இவானோவ்னா, மர்மெலாதோவ்.... முடிவு வந்தவனாய் வீதியில் இறங்கினான், அவன் எண்ணம் முழுவதும் தான் கொலைசெய்த அல்யோனா இவானோவ்னாவை சந்திகவேண்டுமென்பதாகவே இருந்தது.கொலை - அதிதமான, கிளர்ச்சியான வார்த்தை, பெரும் காமத்தின் கிளர்ச்சியை காட்டிலும் சுவையானது கொலை. தன் கைகளில் படிந்து கிடந்த அல்யோனா இவானோவின் ரத்தம் நினைவுக்கு வந்தது, கைகளை நுகர்ந்தான் அவள் குருதியின் வீச்சம் கைகளில் அப்படியே படிந்து கிடந்தது. பீட்டர்ஸ்பெர்க் முழுதும் தேடியும் அவனால் யாரையும் சந்திக்க முடியவில்லை அவன் வாழ்ந்த நகரமாய் பீட்டர்ஸ்பெர்க் இருக்கவில்லை, அவன் பார்த்த வாழ்க்கை அங்கு இல்லை எல்லாமே மாறிபோயிருந்தது, நகரின் மையயிடங்களில் குறுந்தாடி தரித்த மனிதன் ஒருவரின் சிலை காணப்பட்டதை கண்டு வியந்தவன் அந்த சிலைகளின் அடியில் லெனின் என்று ருஷ்ய எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருபதையும் கண்டான். அந்த குறுந்தாடி மனிதரின் பெயரில் இந்த நகரம் லெனின்கிரிட் என்று அழைக்கப்பட்டதையோ, இந்த நகரம் உலகின் மாபெரும் புரட்சிக்கு அடித்தளமாய் இருந்ததையோ ரஸ்கோல்நிகோவ் அறிந்திருக்கவில்லை. அவனின் கண்களுக்கு புதிர் நிறைந்து காணப்பட்ட நகரினை இருள் கவ்வத்தொடங்கியதுமே அவன் மனதில் மரணத்தின் பயம் தோன்ற ஆரம்பித்தது. மரணமடைந்த மனிதனுக்கும் மரணத்தின் பயம் இருக்கவே செய்கிறது. வேகவேகமாய் தன் சவக்குழியிருந்த மயானம் நோக்கி நடக்க ஆரம்பித்தான். பீட்டர்ஸ்பெர்க் எனும் லெனின்கிரிட் எனும் பீட்டர்ஸ்பெர்க் அவன் பின்னணியில் மறைந்துக்கொண்டிருந்தது.

       மீண்டும் சவக்குழியை அடைந்தவன், தன் குழிக்கு பக்கத்தில் இருந்த சமாதி ஒன்றில் கிழிந்து அழுக்கேறிய கோட்டினை அணிந்த வயது முதிர்ந்த கிழவர் ஒருவர் கைகளில் ஓட்கா கோப்பையுடன் அமர்ந்திருப்பதினை கண்டான்.அவரையே இமைக்காமல் பார்துக்கொண்டிருந்தவனுக்கு அவர் கண்களில் வழிந்த கருணை அவரை அடையாளம் காட்டியது, அவரினை நோக்கி ஓடினான். "என் ஸ்ருஷ்டிகர்த்தாவே இத்துணை நாட்களாய் உன்னையே தேடிகொண்டிருந்தேன், குருதிக்கொண்டு எழுத்தால் என்னை புனிதமாக்கியவனே, உன் நரைத்த தாடியின் ஸ்பரிசத்தில் நான் மனிதம் கொண்டேன், இருந்தும் உன்னை கொல்லவே இத்துணை நாள் காத்துக்கிடந்தேன். உன்னை கொன்று உன் குருதியில் என் தாகத்தினை தீர்க்க எண்ணுகிறேன். எங்கே சோனியா, எங்கே என் அன்புத் தங்கை துனியா என்னால் கொல்லபட்ட அல்யோனா இவானோவ்னா எங்கே, அவள் சவக்குழி எங்கே ? எல்லோரையும் என்னை விடுத்தது எங்கே மறைத்து வைத்துள்ளாய். கறைப்படிந்த கூர்மையான எனது பற்கள் உன் குரல்வளையை கடிக்க ஆசைப்படுகின்றன, நான் உருவாகிய உன் மனமாகிய மூளையினை ருசித்து பருக ஆசை, இதோ அல்யோனா இவானோவ்னாவை கொலைபுரிந்தபோது நடுங்கியதைப் போல் இப்போது என் கைகள் நடுங்குகின்றன பார்த்தாயா, உன்னை கொலை செய்ய துடிக்கின்றன என் கைகள். நீசெய்த புனிதம் என்னை படைத்தது, பாவமும் என்னை படைத்ததுவே. காற்று வீசாத வறண்ட கொடிய நரகத்தில் என்னை ஸ்ருஷ்டித்தவனே உன்னை புசித்து மீண்டும் புனிதம் கொள்ள ஆசைப்படுகிறேன்.... உன்னுள் புதைந்து இருக்கும் கொடூரங்கள் நான், உன் கொலை ஆசையை என்னுடே நிறைவேற்றினாய். உன்னுளிருந்த மனநோயினை என் உருவில் படைத்தாய்..உன் கனவுகளை என் கனவுகளாக்கினாய், உன் வறுமையை என் மீது திணித்தாய், உன் இயலாமைகளை என் மீது திணித்தாய்.ஆனால் என் முழு தோற்றம் உன்னைப்போல் மட்டுமல்ல, இப்புவியில் வாழும் எல்லோர் முகமும் என் முகமாய் இருக்கிறது. இப்புவி மனநோயாளிகளால் நிரம்பியுள்ளது நீயும் அதிலொருவன். உனக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேற்றுமை நீ உன் மனப்பிறழ்வை உணர்ந்தவன், என் வடிவில் அதனை வெளிபடுத்திவிட்டாய்.. எதற்காய் இத்துணையும் செய்தாய்? என்னை குற்றவாளி தலத்தில் நிறுத்தி நீ புனிதம் பெறவா?

      என் ஆசானே சோனியா எங்கே, என் காதல் எங்கே " இந்த கதை இங்குடன் முடிகிறது" என்று என் காதலுக்கு ஏன் முற்றுப்புள்ளி வைத்தாய். என் காதல் பாதாள உலகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒற்றை படகென எனக்குள் இருப்பதை நீ அறிவாயா? என்னைபோலே சோனியாவிடமும் கதலிருக்குமா இன்னும் ? நீ அதனை அறிவாயா ? எந்த துரதேசத்தில் இருந்தாலும் நான் சோனியாவினை சந்திக்கவேண்டும். இதுகாலம் என்னுளிருந்த அன்பினை அவள் மீது தூவவேண்டும், அவளுக்கு என் நினைவு மங்காமல் இருக்குமா என்னை அடையாளம் கண்டுக்கொள்வாளா? உன்னிடம் உயிர் பிச்சை கேட்கிறேன் என்னை மீண்டும் ரட்சித்துஉயிர்பித்து தாருங்கள், எனக்கு வாழ ஆசை.....அல்யோனா இவானோவ்னாவை சந்திக்கவேண்டும் அவள் காலில் விழுந்து பாவ மன்னிப்பு கோரவேண்டும். எதற்கு பாவ மன்னிப்பு? மனிதர்களை துன்புறுத்திய அவள் கொள்ளப்படவேண்டியவளே.


      சோனியாவின் கைகளை மீண்டும் பற்றி முத்தமிடவேண்டும். அந்த ஒரு முத்தம்.. ஒரே ஒரு முத்தம் ஒரு கோடி யுகத்தின் காதலை சொல்லும். என் கேள்விகளுக்கு பதில் தெரியவில்லையா கிழவனே இல்லை ஒரு பைத்தியக்காரனின் புலம்பல்களை கேட்கமனமில்லையா? தனி மனித வாழ்வியலுக்கு புனித தன்மை புகுத்த நீ யார்? என் சோனியாவை வேசியாக்கி பார்க்க ஏன் ஆசைக்கொண்டாய். இல்லை அவளை தேவதையாக நீ யார் ? அவளை பெற்றெடுத்த ஒரே காரணத்துக்காய் உன் முடிவுகளை அவள் மீது திணித்த கொடூரமானவனே..இருந்தும் உன்னை மன்னிக்கிறேன் கிழவனே அன்பு மிகுந்த சோனியா என் வாழ்வில் வந்த காரணத்தால்...

       நீ மிகப்பெரிய குடிகாரன். நானும் தான், நம் இருவரின் முகமாய் மர்மெலாதோவ் இருந்தான். வா, இருவரும் மது அருந்துவோம், வோட்காவின் சுவை என் நாவில் பட்டு பல நூறாண்டுகள் ஆகிவிட்டது. மதுசாலைகளின் நாற்றத்தை மீண்டும் சுவாசிக்க ஆவல் கொள்கிறேன் மீண்டும் மர்மெலாதோவ் போன்ற ஒருவனை மதுவிடுதியில் சந்திக்க வேண்டும், அது நீயாகவும் இருக்கலாம் இரட்சகனே. குப்பையேறிய என் ஒண்டி அறையினை காணவேண்டும் அங்கு ஒரு எலி வாழ்ந்தது அது உனக்கு தெரியாது. என் நண்பனாய் சிறிதுக்காலம் என்னுடன் வாழ்ந்தது, ஒரு துர்நாளில் வீட்டுக்கார முதலாளி அதனை கொன்றுவிட்டாள், இக்கதையினை நீயறிய வாய்ப்பில்லை. நீ ரட்சகர் எனவே வழிதவறிய ஆடுகளின் கதைகள் மட்டுமே உனக்கு தெரியும், எலிகளின் கதைகள் தெரிய வாய்ப்பில்லை, உனக்கு நேரமும் இல்லை. எளியவர்களை பற்றி யோசிக்க இரட்சகர்களுக்கு நேரம் இருப்பது இல்லை தானே. நான் வலி தவறிய ஆடு என்று நீயே முடிவு செய்துக்கொண்டாய், ஒரே ஒரு கொலை எப்படி ஒரு மனிதனை ஆடாக மாற்றும்? ஒரு மனிதன் எப்படி ஆடாக முடியும் இல்லை ஒரு ஆடு எப்படி மனிதனாக முடியும். உலக நாடகத்தில் அவர் அவரின் கதைகளில் அவர் அவர் மாந்தர்கள் தானே.

         குரல் நடுங்க, உடல்வெளிறிபோய் கிடந்த ராஸ்கோல்நிகோவ் இதுகாலம் புதையுண்டுக்கிடந்த தன் மனதினை, படைத்தவன் முன் திறந்துக்கொண்டிருந்தான்.
அவன் பேச்சுக்களை பொறுமையுடன் இதுநேரம் செவிகொடுத்து கேட்டுக்கொண்டிருந்த தஸ்தாயெவ்ஸ்கி புன்னகையுடன் அவன் தலைமுடியினை கோதியவாறே அவன் கேள்விகளுக்கு அதில் சொல்ல ஆரம்பித்தார்........அவர் கண்கள் முன்புபோலவே கருணையால் நிரம்பியிருந்தது.................................................

           தஸ்தாயெவ்ஸ்கி சொன்ன பதில் எதுவுமே அவனின் செவிகளில் விழவில்லை, விழுந்தாலும் அதனை ஏற்கும் மனநிலையிலும் அவனில்லை. கருணை மிகுந்த அந்த கண்கள் கொடூரமாய் சிவந்திருந்ததது, ஆத்திரத்தில் ராஸ்கோல்நிகோவ் கழுத்தில் தன் கத்தியினை செலுத்தினார்....ஆனால் இது ஒரு புதிய கதையின் தொடக்கம் மட்டுமே, இதுவரை சொல்லிவந்த கதை இந்த இடத்தில முடிவடைந்துவிட்டது

Comments

Popular posts from this blog

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்: வெறுப்பை ஜனநாயகப்படுத்தும் அழகியல்!

0. பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்: “நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது” 1. மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போ...

In the most health-obsessed society ever, all is not well*: On Trauma

1 Philosopher Byung-Chul Han's essay Neuronal Power begins with the following lines: " Every age has its signature afflictions. Thus, a bacterial age existed; at the latest, it ended with the discovery of antibiotics. Despite widespread fear of an influenza epidemic, we are not living in a viral age. Thanks to immunological technology, we have already left it behind. From a pathological standpoint, the incipient twenty-first century is determined neither by bacteria nor by viruses, but by neurons ". Modern integrative body mind science defies Byung-Chul Han’s statement, that it is reductive to define human suffering solely in terms of ailments. However, we are living in an era, where production relations dictate nearly everything about human existence, in this specific context Byung-Chul Han’s statement—that the majority of human society is afflicted by mental or neuronal issues—serves as a foundational lens to understand contemporary humans and their struggles. In today’...

படுகொலைக்கு முன்னான சில மணி நேரங்கள்

    ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன் , எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை . அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட   நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன் , ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல் . கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை . உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை , இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை . அதே நேரம் ஒளியற்று , ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது , சூடான மழைத் துளியை போல் . மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது ... அம்மாவின் முலை காம்புகள் , விபத்தொன்றில் மரணித்த நன்பன் , தேர் திருவிழா , அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள் , அவளின் முதல் முத்தம் , இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம் , கல்லூரியின் விடுதி அறை , முதல் காமத்தின் வெள்ளை இரவு ... இப்படி சொல்லி ம...