வரலாற்றின் அனைத்துப் பக்கங்களிலும் குருதிக் கறைகளாய் உறைந்து கிடக்கும் அத்தனை போர்களுக்கும் ஒருமித்த கருத்தியல்கள் சில இருக்கின்றன. போர் ஆண்களுக்கானது. வெற்றி, தோல்வி பேதமின்றி பாதிக்கப்படுபவர்கள் பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும். ஒவ்வொரு போரும் ஆயிரமாயிரம் அங்கவீனர்களை, அனாதைகளை, விதவைகளை, மனநிலை பாதித்தவர்களை, புலம்பெயர்ந்தோரை பரிசளிக்கும். வீரம், விடுதலை, இனமானம் இப்படி ஏதோ ஒரு காரணியை வைத்துப் போர்கள் ஆண்களால் நடத்தப்படுகின்றன. காலந்தோறும் எல்லா அரசுகளும், அதிகாரமையங்களும் போருக்குத் தயாராகவே காத்துக்கிடக்கின்றன. போர்களுக்கான தயார்நிலை, ஆளுமை, வெற்றி இவைகளைக் கொண்டே தேசங்களின் வளர்ச்சியும், பெருமையும், முக்கியத்துவமும் நிர்ணயம் செய்யப்படுகின்றன.போர் ஆண்களைக்காட்டிலும் அதிகாரங்களுக்கானது, அதிலிருக்கும் ஆண்களுக்கானது. போரின் எல்லாக் கட்டமைப்புகளிலும் பெண் முழுமையான பாதிப்புகளுக்கு ஆட்படுகிறாள். போரின் பெயரைச் சொல்லி இதுகாலம் வரை எத்துணைக் கோடி வன்புணர்வுகள் நடந்தேறியிருக்கும். காலமாற்றத்தில் போருக்கான சூழல்கள், தன்மைகள், ஆயுதங்கள், காரணிகள் மாற்றம் பெற்றாலும் போர் நிலைத்து நிற்கவே செய்கிறது. மனிதன் வாழும் ஓர் சின்ன இடுக்கிலும் கூட போர் நடைப்பெறுகிறது. ஆண்கள் தன் சக மனிதர்களின் சதையை, இரத்தத்தைச் சுவைக்கவே ஆசைக்கொள்கின்றனர்.
நாகரிகமடைந்துவிட்டதாக மனிதன் சொல்லிக்கொள்ளும் இறுதி இரு நூற்றாண்டுகளில் உலகம் கண்ட மிகப்பெரிய யுத்தமான இரண்டாம் அகிலயுத்தம் குறித்தான பதிவுகள் புத்தகங்களாய், ஓவியங்களாய், திரைப்படங்களாய், ஆவணங்களாய், புகைப்படங்களாய், செய்திகளாய் எத்தனையோ லட்சம் கிடைக்கப்பெறுகின்றன. இரண்டாம் உலகயுத்தத் திரைப்படங்கள் என்று இணையத்தில் தேடினால் நூற்றுக்கணக்கான படங்கள் பல்வேறு மொழிகளில் கிடைக்கின்றன. அனேக பதிவுகள் நாசிகளின் கொடுமைகள் பற்றியோ, யூதப் படுகொலைகள் பற்றியோ, ஐப்பானின் கொலைவெறித் தாக்குதல்கள் குறித்தோ அல்லது நேசப்படைகளின் வெற்றி வீரக் கதைகள் குறித்தோ பேசுவன.ஆனால் ‘அனொனிமா’ செஞ்சேனையிடம் பெர்லின் வீழ்ந்தப்பின் சிதிலமடைந்து மனித சவங்கள் பரவிக்கிடக்கும் பெர்லின் நகர வீதிகளினுடே நின்றவாறு தோற்றுப்போன தேசத்தில் வாழும் அத்தனை பெண்களின் குரலாக ஒலிக்கிறாள்.
இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ரஷ்ய ராணுவம் பெர்லின் நகருக்குள் நுழையும் 1945 ஜனவரியில் ஒரு மாலைப்பொழுதில் நாட்குறிப்பு ஆரம்பித்து போர் முடிந்து 1945 ஜூலை ஜேர்மனியைப் புனரமைப்பதில் முற்றுப் பெறுகிறது.
அனொனிமாவுக்கு அடையாளமில்லை, அவள் முகமற்றவள், ஆனால் உலகில் வாழும் அத்தனை பெண்களின் முகமாய் காட்சி தருகிறாள். அவள் டொச்லாந்து (ஜெர்மனி) தோல்வி குறித்தோ, நேசப்படைகளின் வெற்றி குறித்தோ பேசவில்லை. பறிபோன தங்கள் வாழ்கையைப் பற்றிப் பேசுகிறாள், சீரழிக்கப்பட்ட தங்கள் உடல் குறித்துக் கதறுகிறாள், காய்ந்துப் போய் உணவுக்குக் கையேந்திக் குமுறுகின்றாள்.
தன்னை வெளிகாட்டாமல் கதை சொல்ல ஆரம்பிக்கும் அவளின் கதை முழுதும் யோனிகள் கிழிந்து கொட்டிக் கொண்டிருக்கும் குருதி சிதறிக்கிடக்கிறது. வெற்றி வீரர்களாய் பெர்லின் வீதிகளில் நுழையும் இரசியர்கள் தேடித் தேடி ஜெர்மனியப் பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்துகின்றனர். செஞ்சேனை வெற்றிக் களிறாய் தோற்றவர்கள் மீது நிற்கிறது. தோற்றவர்கள் வீடுகளிலும், நிலவறைகளிலும் ரொட்டி, உருளைக்கிழங்கு,தண்ணியில்லாமல் பதுங்கிக் கிடக்கின்றனர். அனொனிமா மட்டுமில்லாது அனைத்து மக்களும் தங்களின் இந்நிலைக்கு ஹிட்லரே காரணம் என்கின்றனர். ஒரு இடத்தில எல்லா இரசியர்களும் மோசமில்லை, சில நல்லவர்களும் இருக்கவே செய்கின்றனர் என்கிறாள் அனொனிமா. மேலும், நம் படைகள் லெனின்கிராடில், ஸ்டாலின்கிராடில் என்ன செய்தனவோ அதையே இவான்கள் நமக்கு திருப்பி தருகின்றனர் என்கிறாள்.
இருவர் சந்தித்துக்கொண்டால் “எப்படி இருகிறாய்?” என்று கேட்பதைப் போல இரு ஜெர்மனியப் பெண்கள் சந்தித்துக்கொண்டாலே “எத்தனை முறை?” என்று கேட்கின்றனர் ( எத்தனை முறை வன்புணர்வுக்கு ஆளானாய்?) இரசியர்களிடமிருந்து தப்பிக்க, பெண்கள் எத்துனையோ வழிமுறைகளைக் கடைப்பிடிகின்றனர். வீட்டுப் புகைக்கூடத்தில் மறைந்துக்கிடப்பது, வயாதனவளாய், அழகு குன்றியவளாய் தோற்றம்கொள்வது, மாதவிடாய் இல்லாத சமயங்களிலும் பஞ்சு வைத்தப்படி கிடப்பது, இப்படி எத்தனையோ வழிமுறைகள். அனொனிமாவும் ஓர் வழியை கண்டுப்பிடித்தாள், பல ஓணான்களிடம் தினமும் அகப்படுவதை விட பதவி உயர்ந்த ஓர் ஓணானை வசப்படுதிக்கொண்டால்? அப்படியே செய்தாள் அனொனிமா. அவள் அறிந்த சிறிது இரசிய மொழி அறிவு இதுப்போலான விடயங்களில் அவளுக்குத் துணை நின்றது. அவள் யோசனை அவளின் உணவுத் தேவையையும் ஓரளவு ஈடுகட்டியது. இத்தனை முறைகள் நடந்துவிட்டதால் கரு தரித்து விடப்போகிறாய் மருத்துவரை பார்ப்போம் என்கிறாள் அனொனிமாவுடன் சேர்ந்து வாழும் மத்திய வயது விதவை, விதவையும் வன்புணர்வுகளுக்கு தப்பவில்லை, அவளை முதன் முதலாய் சூறையாடிய இவானுக்கு இருபது வயது கூட இருக்காது. விதவையின் கேள்விக்கு பதில் சொல்லும் அனொனிமா ” பலர் செல்லும் பாதையில் புல்,பூண்டு துளிர்க்காது” என்கிறாள். மேலும், ஓரிடத்தில் ” இதுவே போரில்லா காலத்தில் ஒரு வன்புணர்வு நடந்திருந்தால் எத்தனை விசாரணை, தண்டனை. ஆனால், இப்போது போரெனும் ஒட்டறை சொல்லைக் கொண்டு அனைத்தையும் கடந்து செல்கின்றனர் ஆண்கள்” என்கிறாள். இரசியர்களை காட்டிலும் ஜெர்மன் ஆண்கள் மீதே பெரும் கோபம் கொள்கிறாள். வெற்றியாளர்களாய் இருக்கும் வரை எத்தனை வீரத்தை, பெருமையை இவர்கள் பேசித் திரிந்தனர், இவர்கள் பெண்களைச் சூறையாடும்போது எங்கே போனது இவர்கள் வீரம் என்று கேட்கிறாள். இப்படிப் புத்தகத்தின் அனைத்து வரிகளிலும் தங்களின் துயர்க் கதைகளைச் சொல்லுகிறாள். அவளுக்கு அவள் மீதே வெறுப்பு உண்டாகுகிறது. வாழ்க்கை மீது நம்பிக்கையிழந்து கிடக்கிறாள். அடுத்து என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. சிதிலமடைந்த கட்டிட இடிபாடுகளுடன் குடிநீரின்றி, உணவின்றி இருண்ட வாழ்க்கை வாழும் அனொனிமா உலகில் வாழும் எல்லாப் பெண்களின் குரலாகவும் ஆண்களைப் பார்த்து இப்புத்தகம் முழுதும் கேள்விகளை எழுப்புகிறாள். இப்புத்தகம் போரின் அகோரத்தோடு ஆரம்பித்து, அதே போரின் அகோரத்தோடு முடிகிறது. அதற்குப் பின்னான காலங்களில் பெர்லின் மீள எழுப்பப்பட்டது, ஆண்கள் இழந்த பெருமையை மீட்டனர், தங்களைத் தோற்கடித்தவர்களுடன் உறவு கொண்டாடுகின்றனர். வெற்றி மாந்தர்களாய் உவாவுகின்றனர். ஆனால் போரினால் அனொனிமாக்கள் அடைந்த இழப்புகளை, கொடுமைகளை, கருச்சிதைவுகளை, மனசிதைவுகளை யாரால் அழிக்க முடியம்? போரின் வடு இல்லாத அனொனிமாவை எந்தத் தேசம் திருப்பித்தரும். சாகும் வரை அவளுடனே வரும் மனக் குமுறல்களுக்கு எந்தச் சிந்தாந்தம் மருத்துவம் பார்க்கும்? நாகரிகமடைந்ததாகச் சொல்லித்திரியும் மனித இனம், இப்புத்தகத்தின் முன்னுரையில் தோழர் ஆதவன் தீட்சண்யா சொன்னதைப்போல் தோசையைக் கூட துப்பாகியால் சுடுவதையே புரட்சியென்றும், வீரமென்றும், மக்களாட்சியென்றும் பிதற்றுகிறது.
அடக்குமுறைகளும், அடங்கிப்போவதும், ஆணாதிக்க சிந்தனையும், வீரம், இனம் போன்ற உணர்ச்சி அரசியலும் செழித்து கிடக்கும் ஓர் சூழலில் அனொனிமா மிகமுக்கிய பதிவாய் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மனித வரலாறெங்கும் பரவிக்கிடக்கும் போர் குறித்து பல கேள்விகளை முன்வைக்கிறது. இந்திய தேசியத்தை ராணுவ பெருமைகள், அணு ஆயுதம் மூலம் கட்டமைக்கும் தேசியவாதிகளால் கொண்டாடப்படும் இந்திய ராணுவம் காஷ்மீரில், அசாமில், மணிப்பூரில், சிக்கிமில், அமைதிப்படை எனும் பெயரில் ஈழத்தில் என்று தாங்கள் கால்பதித்த இடமெங்கும் விந்துகளைச் சிந்தியப்படியே திரிகின்றதையும் இப்புத்தகம் சொல்லாமல் சொல்கிறது. குழந்தைப்போராளியை மொழிபெயர்த்த புலம்பெயர்ந்த ஈழத்தவரான சுவிஸ் தேவா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு பூபாளம் புத்தக பண்ணை வெளியிடாக அனொனிமா வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன். A Women in Berlin எனும் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.
“ஆண்கள் போரிட்டுக்கொண்டிருகிறார்கள்
மனிதர்கள் வேறு பாதையில் செல்லவும்…”
-எதிர்
அன்பின் தோழா,
ReplyDeleteஆக்கத்தின் தேவை கருதி thazal எனும் எமது இணையதளத்தில் தங்கள் கட்டுரையைப் மீள்பிரசுரிக்கின்றோம்...
தோழர் தேவா தற்போது இலங்கையில் வசிக்கிறார்... நன்றி
நன்றி தோழர்
ReplyDelete