Skip to main content

அங்கிள் சாம்'க்கு மண்ட்டோ கடிதங்கள்: நூலினை முன்வைத்து

அன்புள்ள அங்கிள்,

எப்போதும் போல் கடவுளின் அனைத்து ஆசிகளையும் பெற்று மிக நலமாக இருப்பீர்கள் என்று தெரியும். கடவுளால் இரட்சிக்கப்பட்ட ஒரே ஒருவரான நீங்கள் என்றுமே நலமாக தானே இருக்க முடியும். நலமா என்று கேள்வியை கேட்கும் நான் நிச்சயம் முட்டாளாக தான் இருக்க முடியும். நான் உங்களின் இன்றையநாள் சகோதரனின் மகன், என்னை கண்டிப்பாய் உங்களுக்கு தெரியாது ஆனால் இந்த உலகையே இரட்சிக்கும் உங்களை எனக்கு நன்கு தெரியும், உங்களை தெரியாது என்று சொன்னால் தான் அது அபத்தமாய் இருக்கும். அங்கிள் நான் என் மீதே பெருமை பட்டுக்கொள்ள பல காரணங்கள் இருக்கின்றன. உங்களின் 500 ஆண்டுகள் குருதி கரை படிந்த வரலாற்றை அறிந்தவன் என்பதற்காகவே நான் பெருமை படவேண்டும். நீங்கள் கொன்ற முதல் சிவபிந்திய உயிரில் ஆரம்பித்தது உலகை பாதுகாப்பதற்கான உங்களின் செயல் திட்டங்கள். இன்று வரை லத்தின் அமெரிக்கா, ஆப்ரிக்கா, வியட்நாம், ஈராக், ஆப்கன், ஜப்பான் என்று உலகம் முழுதும் உங்களின் பாதுகாப்பு செயல்பாடுகள் செவ்வனே இருக்கிறது என்பதை நான் பெருமையுடன் பட்டியலிடுகிறேன். நீங்கள் அதிபுத்திசாலி, இசுலாமியர்கள் உங்கள் கொள்கைகளுக்கு எதிராக சுய உரிமைகளை கோருகிறார்கள் என்பதை அறிந்தவுடன் அவர்களை ஒட்டுமொத்தமாய் தீவிராவாதி என்று முத்திரை குத்தும் திறன் உங்களின் இன்றைய சகோதரனான இந்தியாவுக்கு கூட இல்லை, நாங்களே உங்களிடமிருந்து கடன் வாங்கிய பதம் தான் தீவிரவாதி. அப்படி பட்ட சகோதரனின் மகனான நான் இந்த அடையாள படுத்தலுகாகவே உங்களுக்கு நன்றிகளை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அங்கிள் என்னுடைய இந்த கடிதம் உங்களுக்கு விந்தையாய் தோன்றலாம். உங்களின் முன்னால் சகோதரனின் மகனான "சாதத் ஹசன் மண்ட்டோ" உங்களுக்கு எழுதிய பழைய கடிதங்களை படிக்க வாய்த்தது அதன் பொருட்டே இந்த கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன். அந்த குடிகாரன், பைத்தியக்காரன், ஆபாச எழுத்தாளன் நாகரிகம் இல்லாமல், நீங்களே அவர்களுக்கு சோறு போட்டவர் எனும் நன்றிக்கடன் இல்லாமல் உங்களை கீழ்மை படுத்தி எழுதியிருக்கிறான். அவன் உங்களின் ஆங்கில படங்களில் வரும் சூனியகாரர்கள் போன்றவன் நீங்கள் உலகை பாதுகாக்க செய்யும் அருமை செயல்களை முன்கூட்டியே எழுதும் வல்லமை கொண்டவனாய் இருந்திருக்கிறான். ஆனால் நீங்கள் அவனை அறிந்திருக்கும் வாய்ப்பில்லை அவனை நீங்கள் கண்டிப்பாய் தெரிந்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே இதை எழுதுகிறேன். அவன் எத்தகைய துரோகியாய் இருந்திருக்கிறான், இப்படியான துரோகிகளை நீங்கள் அடையாளம் காண வேண்டுமென்பதற்காகவே எழுதுகிறேன். நீங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று எனக்கு தெரியும் இருந்தும் உங்களின் உன்மை விசுவாசியான நான் உங்களுக்கு சொல்லவேண்டும் அது என் கடமை.

அங்கிள், உங்களின் தோழன் "ஜான்புல்" 60 ஆண்டுகளுக்கு முன் செய்த அபார செயலால் ரத்த சகதியில் உதித்த தேசமான பாகிஸ்தானை தாய் நாடாய் கொண்ட மண்ட்டோ, உங்களின் இன்றைய சகோதரனான இந்தியாவில் இருக்கும் அம்ரிஸ்தரில் பிறந்து, தேசங்களின் பிரிவினையில் இசுலாமியானாய் பிறந்ததால் பாகிஸ்தான் குடிமாகனாகப்பட்டான். இதில் என்ன தவறு இருக்கிறது அங்கிள், உங்கள் தோழன் ஜான்புல்லும் உங்களை போல் நீதி நெறி தவறாதவன், மனிதயினத்தை இரட்சிக்க தேவனால் உங்களுக்கு முன் முதலில் அனுப்பப்பட்டவன்( இதற்காய் நீங்கள் தேவன் மீது போர்தொடுக்கவே வேண்டும், தேவன் இருக்கும் பட்சத்தில்) அவன் எப்படி தவறு செய்திருக்க முடியும் எத்துனை கோடி உயிர்களை கொன்றேனும் நாம் சட்டத்தை, மதத்தை, தேசத்தை காப்பாற்ற வேண்டும் என்பது தானே நியாயம் அதை எப்படி மண்ட்டோ எள்ளி நகையாடலாம். அவனுக்கு மட்டுமா அவல நகைச்சுவை (black humour) தெரியும், உங்களின் சிறந்த அடிமையான நான் எழுதுகிறேன் அவனுக்கு எதிர்வினை. நமக்கு மனிதத்தை காட்டிலும் மனி(பணம்) முக்கியமில்லையா. நீங்கள் ஒரு முக்கிய விடயத்தை உலகிற்கு அறிவிக்கவேண்டுமென்று தாழ்மையுடன் வேண்டுகிறேன். இதுகாலம் உங்களின் அழகிய தோல் சப்பாத்துக்களை நாவால் சுத்தப்படுதியவர்களிலே நாங்கள் தான் சிறந்த நாக்குகளை உடையவர்கள் எனும் அங்கீகாரத்தை நீங்கள் தரவேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் நான் தேச அடையாளங்களை விரும்பவே இல்லை என்றாலும் என்மீது திணிக்கப்பட்ட தேசிய அடையாளத்தை நினைத்து மெய்சிலிர்த்து போவேன்.

அங்கிள், அந்த முட்டாள் மண்ட்டோ உங்களுக்கு 9 கடிதங்களை அறுபது ஆண்டுகளுக்கு முன் எழுதியிருக்கிறான். அத்துணையும் நயவஞ்சக சொல்லாடல்களால் உருவம் பெற்றவை, துரோகம் நிறைந்தவை. உங்களிடம் வாங்கித்தின்ற கோதுமைகளுக்கு நன்றியுடன் இல்லையென்றாலும் பரவாயில்லை நீங்கள் பரிசளித்த ஆயுதங்களுக்காய் அவன் உங்களை போற்றி பாடியிருக்க வேண்டாமா? அந்த மூடனுக்கு அறிவில்லை நாங்களாக இருந்தால் போற்றி பாடுவதிலே உங்களை குளிரவைத்திருப்போம், இப்போது நாங்கள் செய்வதை அன்று மண்ட்டோ செய்யவில்லை எத்துனை அபத்தம். அதே போல் நீங்கள் உலக நலனுக்காய் தயாரிக்கும் ஹைட்ரஜன் குண்டுகளை கிண்டல் செய்கிறான். நீங்கள் இதுகாலம் தயாரித்த குண்டுகளும் ஆயுதங்களும் எத்துனை தேசங்களின் பசியினை போக்கியிருகிறது. சோமாலியாவில், உகண்டாவில் இன்னும் பல ஆப்ரிக்க தேசங்களில் ஏன் இந்தியாவில் வறுமையை போக்கியவர் நீங்களும் உங்கள் ஆயுதங்களும் தானே. டாடாவும், ரிலையன்சும் பசி பட்டினி என்று வாடியவர்கள் தானே உங்களின் முயற்சியால் இன்று மூன்று வேலையும் ஓபராய் நட்சத்திர விடுதியில் சாப்பிடுகிறார்கள் பாவம். ஆனால் இந்த பொருளாதார நிபுணர்களும், மக்கள் தொகை கணக்கு எடுப்போரும் இன்னும் 40 கோடி மக்கள் ஒரு வேலை உணவு கூட இல்லாமல் வாழ்வதாய் பொய் கணக்கு சொல்லுகின்றனர். நீங்கள் எங்களுக்கு பரிசளித்த ஆயுதங்கள் மீது சத்தியம் செய்து சொல்கிறேன் நாங்கள் தினமும் 32 ரூபாயில் அணைத்து வசதிகளையும் பெற்று வாழ்கின்றோம். உங்களுக்கு விந்தையாக இருக்கலாம் அது எப்படி அரை டாலர் மதிப்பில் ஓர் மனிதன் தன் ஒரு நாள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியம் என்று. இந்த கேள்வி என்னிலும் எழவே செய்கிறது. நீங்கள் இந்த கேள்விக்கான பதிலை மான்டக் சிங் அலுவாலியாவிடம் கேட்டீர்கள் எனில் கண்டிப்பாய் அவர் உங்களுக்கு விளக்குவார். எங்கள் கேள்விகளுக்கு அவரும் சரி உங்களின் உண்மை விசுவாசியான மன்மோகனும் சரி மௌனத்தையே பதிலாய் தருகின்றனர். நீங்கள் கேட்டால் கண்டிப்பாய் பதில் சொல்லுவர் அந்த அற்புதமான, அதிசயமான பதிலை கண்டிப்பாய் எனக்கு தெரியப்படுத்துங்கள். நான் அந்த ஆபாச எழுத்தாளன் மண்ட்டோ உங்களைப்பற்றி தரைகுறைவாய் எழுதியதை சொல்லாமல் எங்கள் கதையை பேசி உங்கள் நேரத்தை வீணடிக்கிறேன்.

அங்கிள், மண்ட்டோ எழுதியிருக்கிறான் நீங்கள் இசுலாமியர்கள் மீது அதிக பாசம் காட்டி அவர்களை சகோதரர்களாய் பாவிக்கின்றிர்கள் என்று, அது இறந்த காலம். நீங்கள் இந்துவாய் மாறி இந்தியா மீதான சகோதர பாசத்தை வெளிக்காட்டவேண்டும் (எங்கள் தலைவர்கள் இந்தியா ஆட்சி மதமில்லா தேசம் என்று சொல்லும் வார்த்தைகள் பொய்யென்று உங்களுக்கு தெரியும்). ஆனால் ஓர் ஐயம் நீங்கள் என்ன சாதிக்குள் வருவீர்கள். நீங்கள் கடவுளால் இரட்சிகப்பட்டவர் அல்லவா எனவே நீங்கள் நிச்சயம் உயர் குலமே, பூசை புனஸ்காரங்களை எங்கள் தலைவர்கள் உங்களுக்கு சொல்லித் தருவார்கள். எங்களில் சில தலைவர்கள் இருக்கிறார்கள் பேச்சுக்கு முண்ணூறு தரம் "பெரியார்" எனும் உதவாக்கரை கிழவனை பற்றி பேசுவார்கள். அவனும் மண்ட்டோவை போலான பைத்தியக்காரன் சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு, சமுக புரட்சி, பெண் விடுதலை போன்ற வெட்டி பேச்சுக்களை பேசிதிர்ந்தவன். அந்த சில பல தலைவர்கள் அவன் பெயரை சொல்லி பிழைத்தாலும் பூசை, புனஸ்காரங்களில் மிக உண்மையாய் இருப்பார்கள், உங்களுக்கு அவர்களை தெரியும் என்று நம்புகிறேன். அவர்களும் உங்களை போன்ற சமுக சேவகர்கள். என் விருப்பமெல்லாம் நீங்கள் மண்ட்டோவின் கூற்றினை பொய்யாக்க வேண்டும்,உங்களின் இசுலாமிய எதிர்ப்பினை பதிவுசெய்ய வேண்டும். இதுமட்டுமா அவன் ஏதோ உங்களிடம் உங்களை புகழ்ந்து எழுத 300 ரூபாய் கேட்டு விட்டானாம் அதுனால் உங்களை புகழ அவனுக்கு மட்டுமே உரிமையிருப்பதாய் சொல்லி அவன் எழுத்து திறனால் உங்களை அவமானபடுத்துகிறான். நீங்கள் காசு கொடுக்காமலே உங்களை புகழ நாங்கள் இருக்கிறோம், நீவிர் எம் தலைவன், எம் கடவுள், எம் உயிர்.

அங்கிள், நீங்கள் அறிவீர்களா, நாங்கள் அதிகாலை கண்விழித்தது முதல் உறங்கபோவது வரை பயன்படுத்துவது எல்லாமே உங்கள் பொருட்கள் தான். பற்பசை, சோப்பு, ஷாம்பூ, உப்பு, தண்ணீர்(எடுப்பது என்னவோ எங்களின் மண்ணிலிருந்து குடுவையும் பெயரும் உங்களுடையது, இதை சொன்னதற்காய் என்னை மன்னியுங்கள்) குளிர்பானங்கள், மாத்திரைகள், ஆடைகள், காலணிகள், ஜட்டிகள், நிரோத்துக்கள், மது, காப்பி இப்படி எல்லாமே உங்கள் பொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறேன், பயன்படுத்துகிறோம். நீங்கள் உங்கள் சேவையை அரிசி, காய்கறிகள், பழங்கள் என்று அனைத்திலும் விரிவு படுத்தவேண்டும். ஏற்கனவே உங்கள் சகோதரர்களான ரிலையன்சும், பிக் பசாரும் அந்த மக்கள் சேவையை தொடங்கி விட்டார்கள். இருந்தாலும் உங்களை போல் வருமா? ஏழை வியாபாரிகள் எப்படி போனால் நமக்கு என்ன, நமக்கு நம் சேவை முக்கியம். அந்த முட்டாள் மண்ட்டோ எனவோ அவன் மட்டுமே ஆங்கில படங்களை பார்ப்பதை போல் எழுதியிருக்கிறான். நாங்கள் உங்கள் ஹாலிவுட்டின் தீவிர விசிறிகள் எங்களை காட்டிலும் அவர்கள் உங்களின் மிகப்பெரிய வியாபார தளமா என்ன. ஒன்றுக்கும் உதவாத ஆங்கில படங்களையே இங்கிலிஸ் படம் எனும் ஒரு காரணத்துக்காய் பல முறை பார்த்திருக்கிறோம். இன்னும் சொல்ல போனால் அந்த படங்கள் உங்கள் ஊரிலே ஓடியிருக்காது. என்னவோ அவனுக்கு மட்டுமே எல்லாம் தெரிந்தது போல எலிசபத் டைலர், ரீட்டா ஹேவோர்த் என்கிறான். நாங்கள் பார்க்காதா ஏஞ்சலினா ஜூலியா, டாம் குருஸா. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அந்த கேடுகெட்ட சாப்ளினை நாங்கள் வெறும் கோமாளியாக மட்டுமே பார்க்கிறோம். அதே போல் இந்த பாப் மார்லி எனும் ஒரு கஞ்சா பாடகன் இருந்தானே அவனையும் நாங்கள் கஞ்சா குடிக்க மட்டுமே பயன்படுத்துவோம் எனவே உங்களூரில் உங்களால் துரோகி பட்டம் கொடுகப்பட்டவர்களும், நிரகரிகப்பட்டவர்களையும் நாங்களும் நிச்சயம் நிராகரிப்போம், நிராகரித்துவிட்டோம் என்று முழுமையாய் நம்பலாம். உங்கள் படைப்பாளிகள் மிகவும் புத்திசாலிகள் ( உங்கள் பிள்ளைகள் உங்களைப்போல் தானே இருப்பர்) என்று நாங்கள் உங்களின் சகோதரர்களாய் ஆனோமோ அன்றே உங்கள் படங்களில் நல்லவர்களாய் உலகை காப்பதற்கு உதவி செய்பவர்களாய் மாறினோம் என்ன ஒரு பாக்கியம், வேறு யாருக்கு இந்த அறிய பேறு கிட்டும். நாங்கள் ரஷ்யாவின் கையால்களாய், உங்களின் எதிரிகளாய் பழைய ஜேம்ஸ் பான்ட் படங்களில் காண்பிக்கப்பட்டது எங்களின் பெரும் சோகமே, இனியும் இந்த தவறு நடக்காது என்பதை நான் உறுதியாய் சொல்லுகிறேன். அந்த மண்ட்டோவுக்கு எத்துனை தலைகனம் இருந்தால் அவன் " பாத்திங் பியுட்டியை" கிண்டல் செய்வான். நான் நண்பர்கள் அழைத்து சென்றதின் பேரில் "மிசன் இம்பாசிபிள்" எனும் படத்தை பார்க்க நேர்ந்தது எத்துனை அற்புதமான படம் பார்த்தவர்கள் என்னை போன்று பாக்கியவான்கள். எங்களூரில் சில பேர் ஏதோ ஈரான் படம், ஸ்பானிய படம், இத்தாலி படம் என்று பேசுகிறார்கள் கேட்டால் உலக சினிமா என்கிறார்கள். உலகமே அமெரிக்கா எனும்போது உலக சினிமாவும் ஹாலிவுடாக மட்டுமே இருக்கமுடியும், அதிலும் ஆஸ்கர் சொல்லவே வேண்டாம் ஆஸ்கர் படங்களை தவிர உலகின் சிறந்த சினிமாக்கள் வேறு இல்லை என்பதை நான் சொல்லியேயாக வேண்டும். எங்களூரில் உலக நாயகன் ஒருவர் இருக்கிறார் அவரும் நான்கு வயதிலிருந்து ஆஸ்கரை வாங்கிவிடும் முனைப்பில் இருக்கிறார் எனவே தயவு கூர்ந்து அவருக்கு அந்த விருதினை வழங்கும்படி வேண்டுகிறேன்.

அங்கிள், எனக்கு என்னமோ மண்ட்டோ ஒரு கம்யூனிஸ்ட் என்று தான் தோன்றுகிறது. அவன் தன்னை கம்யூனிஸ்ட் இல்லை என்று சொன்னாலும் உங்களுக்கு எதிரான அவனின் செயல்பாடுகள் வெகு தீவிராமாய் இருந்திருகிறது. ஆனால் அதே வேகத்தில் அவன் உங்கள் எதிரியான ரஸ்யாவையும் எதிர்க்கிறான். சரியான மூளை அழுகியாவன் யார் பக்கமும் நில்லாமல் வாழ்ந்திருக்கிறான். ஆனால் உங்களுக்கு எங்களிடம் அந்த பயம் வேண்டாம் நீங்கள் என்ன சேவையை செய்ய நினைக்கின்றீர்களோ அதை எங்களின் கம்யூனிஸ்ட் கட்சிகளே செய்துவிடுகின்றன (சிங்கூர், கூடங்குளம் சாட்சிகள்). மண்ட்டோ சொன்ன பாகிஸ்தான் மர்க்ஸ்சியர்களை போன்ற எதிரிகள் நாங்கள் இல்லை. எங்களுக்கு பேச மட்டுமே மார்க்ஸ்சும், ஏங்கெல்சும் வேண்டும். எனவே எங்களை கண்டு
எதற்காகவும் யோசிக்கவேண்டாம். நாங்கள் என்றுமே உங்களின் விசுவாசமான அடிமைகள்.

அங்கிள், சாதத் ஹசன் மண்ட்டோ உங்களை பற்றி நிறையவே எழுதியிருகின்றான். நீங்கள் நிச்சயம் அவற்றை படிக்கவும். அதுனால் உண்டாகும் வன்மம் அப்பாவி இஸ்லாமியர்களை கொலை செய்ய உதவும். நீங்கள் ஆயுதம் தந்து ரஷ்யாவுக்கு எதிராய் உருவாக்கியவர்கள் இன்று உங்களையே எதிர்ப்பது துரோகமில்லையா. நீங்கள் வேண்டும் இடத்தில எல்லாம் அவர்கள் மண்ணில் துளைப்போட்டு எண்ணையை உறிஞ்சலாம் அதை எதிர்த்து கேள்விகேட்க அவர்கள் யார் ? அவர்கள் நாடு என்றால் உங்களை எதிர்க்கலாமா? என்ன ஒரு பாவ செயல். அவர்களை கொன்று ஒழிக்கவே வேண்டும் இல்லையெனில் பிறகு எண்ணை வளம் அவர்கள் கைகளுக்கு சென்று விடும். அதை எந்துணை இனபடுகொளைகளை செய்தேனும் தடுக்கவேண்டும். எப்போதும் உங்களின் அணைத்து புனித செயல்பாடுகளுக்கும் எங்களின் ஆதரவு இருக்கும். நாங்கள் வேண்டுவதெல்லாம் உங்களின் பூட்சை நக்கும் முழு உரிமை. இந்த பாக்கியத்தை எங்களுக்கு அருள்வீர்கள் என்று நம்புகிறேன்.

சரி அங்கிள், உங்கள் பொன்னான நேரத்தை இந்த கடிதத்தை படிப்பதில் வீண் செய்யவேண்டாம்.உங்களுக்கு பல வேலைகள் இருக்கும் இன்னும் எத்துனை தேசங்களை கழுவில் ஏற்றவேண்டும் எனவே நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் ஆனால் நேரம் கிட்டும்போது மண்ட்டோ உங்களுக்கு எழுதிய கடிதங்களை நிச்சயம் படியுங்கள். மேலும் இந்த கடிதத்தில் அதிகப்படியாய் இருக்கும் "அங்கிள்" எனும் வார்த்தை உங்கள்மீதான என் அளவுகடந்த அன்பினை வெளிப்படுத்தும். எனவே அந்த அன்பின் காரணமாய் அதற்கு ஈடாய் இரண்டு விஸ்கி பாட்டில்களை அனுப்புமாறு வேண்டுகிறேன் (ஜாக் டேனியல்ஸ் என்றால் மிகவும் சந்தோசம்).

அங்கிள் சாம், இந்த கடிதத்தை எங்கள் ஊரில் யாரேனும் படிக்க நேர்ந்தால் நீங்கள் யாரென்று தெரியாமல் போகலாம் அதுனால் நீங்களே பிரபஞ்சத்தில் இருக்கும் அத்துணை தேவன்களாலும் ஆசிர்வதிக்கப்பட்ட, சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்கா என்பதையும், ஜான்புல் உங்கள் உயிர் தோழன் பிரித்தானியா என்பதையும் பதிவுசெய்கிறேன்.

இப்படிக்கு,
உங்கள் இன்றைய உண்மை சகோதரனின் மகன் என்று முத்திரை குத்தப்பட்ட
இளவேனில்

அங்கிள் சாம்'க்கு மண்ட்டோ கடிதங்கள் - சாதத் ஹசன் மண்ட்டோ
தமிழாக்கம்: ராமாநுஜம்

-பூவரசி

Comments

Popular posts from this blog

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்: வெறுப்பை ஜனநாயகப்படுத்தும் அழகியல்!

0. பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்: “நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது” 1. மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போ...

In the most health-obsessed society ever, all is not well*: On Trauma

1 Philosopher Byung-Chul Han's essay Neuronal Power begins with the following lines: " Every age has its signature afflictions. Thus, a bacterial age existed; at the latest, it ended with the discovery of antibiotics. Despite widespread fear of an influenza epidemic, we are not living in a viral age. Thanks to immunological technology, we have already left it behind. From a pathological standpoint, the incipient twenty-first century is determined neither by bacteria nor by viruses, but by neurons ". Modern integrative body mind science defies Byung-Chul Han’s statement, that it is reductive to define human suffering solely in terms of ailments. However, we are living in an era, where production relations dictate nearly everything about human existence, in this specific context Byung-Chul Han’s statement—that the majority of human society is afflicted by mental or neuronal issues—serves as a foundational lens to understand contemporary humans and their struggles. In today’...

படுகொலைக்கு முன்னான சில மணி நேரங்கள்

    ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன் , எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை . அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட   நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன் , ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல் . கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை . உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை , இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை . அதே நேரம் ஒளியற்று , ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது , சூடான மழைத் துளியை போல் . மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது ... அம்மாவின் முலை காம்புகள் , விபத்தொன்றில் மரணித்த நன்பன் , தேர் திருவிழா , அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள் , அவளின் முதல் முத்தம் , இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம் , கல்லூரியின் விடுதி அறை , முதல் காமத்தின் வெள்ளை இரவு ... இப்படி சொல்லி ம...