நான் அப்போது உயர்நிலைக்கல்வி படித்துக்கொண்டிருந்தேன். நம் கல்வி முறை எல்லா மாணவர்களுக்கு தரும் அதே துயரங்களை, வலிகளை எனக்கும் அள்ளி வழங்கிக்கொண்டிருந்தது. மதிப்பெண்கள், பொறியியல் கல்வி எனும் சாத்தான்கள் என்னை துரத்தியவாறே இருந்தன. பள்ளிக்கு போகும், படிக்கும் ஆர்வம் இல்லாமல் படித்துக்கொண்டிருந்தேன், கடும் மனசோர்வாலும் பாதிக்கப்பட்டிருந்தேன், ஒருநாள் உடல்சோர்வு காரணமாய் வீட்டில் மயங்கி விழுந்தேன். அம்மாவும், அப்பாவும் பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு என்னை அழைத்து சென்றார்கள். அவர்களின் பயம் என் மனதில் அப்படியே பதிந்து விட்டது. சில நாள் கழித்து மயங்கி கிடப்பதை போன்று நடித்தேன், அன்றும் பெற்றோர்களின் கண்களில் அதே அச்சம் தெரிந்தது. என் திட்டம் வேலை செய்தது, தொடர்ந்து மயங்கி விழ ஆரம்பித்தேன். அதுவும் எல்லாம் திட்டம் போட்டு செய்தேன். நான் நடிக்கிறேன் என்பதை அவர்கள் கண்டுபிடிக்க முடியதப்படி அவர்கள் நினைத்து பார்க்க முடியாத இடங்களில் விழுந்து கிடப்பேன். மலக் காடு, வயல்வெளி, வீட்டு வாசல் என்று தொடர்ந்தது என் திட்டம். என் அம்மாவும், அப்பாவும் எத்தனையோ மருத்துவமனைகள் அழைத்து சென்றார்கள் எல்லா மருத்துவர்களும் எனக்கு எந்த நோயும் இல்லை எனும் பதிலையே சொன்னார்கள். எனக்கு மாட்டிவிடுவோமோ எனும் அச்சம் தொடர்ந்தது, இருந்தும் என் பெற்றோர்களுக்கு கடவுள் மீதும், சோசியம் மீதும் இருந்த நம்பிக்கை எனது துணை செய்தது. நானும் கடவுள் நம்பிக்கை உடையவனாகவே இருந்தேன். என் பெற்றோர் என் உயிரை காப்பாற்றும் படி வேண்ட, நானோ என் பொய்கள் உடையதப்படி இருக்க வேண்டுவேன். ஒரு நாள் உறவினர் ஒருவரின் சொல்படி குறி சொல்லும் ஒரு கிழவியிடம் என்ன அம்மா அழைத்து சென்றார். கிழவியோ என்னை உற்று நோக்கிவிட்டு பாதி வெட்டிய எலுமிச்சம் பழத்தை கடிக்க சொன்னார், நானும் கடித்தேன் இனிக்கிறதா என்றார், நான் இல்லை என்றேன். உடனே பழத்தின் மீது குங்குமம் தூவி சுவைக்க சொன்னார், மீண்டும் இனிக்கிறதா என்றார், நான் மீண்டும் இல்லை என்றேன். நன்றாக சொல், இனிப்பாக இருகிறதா இல்லையா என்று கத்தினார். நான் எங்கு இனிக்கவில்லை என்று சொன்னால் நான் நலமாக இருக்கிறேன் என்று சொல்லிவிடுவாரோ என்று நினைத்து ஆம் என்றேன். பிறகு என்னை சுற்றி, சுற்றி வந்து எதோ மந்திரங்களை சொன்னார். நான் பிசாசுவை பார்த்து பயந்து விட்டதாகவும் தொடர்ந்து இரண்டு வாரம் வந்து பாடம் போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் சொன்னார். நான் பெரிதும் மகிழ்ந்தேன். அடுத்த இரண்டு வாரங்களுக்கு பள்ளிக்கு போக தேவையில்லை. பாடங்கள் போட்டும் எதுவும் நடக்கவில்லை. மனிதனின் நடிப்பை எப்படி மாந்தரிகம் நிறுத்தும். என்னை வேறு வேறு மாந்திரவாதிகளிடம் அழைத்துப் போனார்கள் எல்லோரும் எனக்கு பேய் பிடித்துவிட்டது என்றார்கள். பல வகை மந்திரங்களை செய்தார்கள் எதுவும் நடக்கவில்லை. பள்ளியின் வருடம் முடியும் நாட்கள் நெருங்கியது. அப்பா இந்த வருடம் பள்ளிக்கு போகவேண்டாம் அடுத்த வருடம் மீண்டும் புதிதாய் படித்துக்கொள்ளலாம் என்றார். எனக்கு ஒரே மகிழ்ச்சி. அம்மாவுக்கு பழனி முருகன் மீது கடும் பக்தி, அதுனால் என்னை பழனிக்கு அழைத்து சென்றால் நான் நலம் பெற்றுவிடுவேன் என்று நம்பினாள். என்னை பழனிக்கு அழைத்து சென்றாள். நானும் அதன் பிறகு சிலகாலம் பள்ளிக்கு போக தேவையில்லை என்பதால் கோவிலுக்கு சென்று வந்தபின் நடிக்கவில்லை. ஆனால் தினமும் கடுமையான பூசைகளை முருகனுக்கு செய்துவந்தேன் (எல்லாம் நாடகம்). பிறகு மீண்டும் அதே வகுப்பில் சேர்ந்து படித்தேன்,வழக்கம் போல் படிப்பு மூளைக்குள் செல்ல மறுத்தது. என் நண்பன் அவனைபார்த்து எழுத்து அனுமதித்த தயவால் நான் பொது தேர்வில் தேறி கல்லூரிக்கு சென்றேன். அம்மா முருகன் தான் என்னை பாஸ் பண்ண செய்ததாக நம்பினாள், அப்படி என்னை காப்பாற்றிய அந்த கடவுள் என் நண்பன் 'பிரபு'. இந்த சுய அனுபவம் கடவுளை விட்டு என்னை வெகுதூரம் அழைத்து சென்றது. பெரியாரியத்தின் தாக்கம், மார்க்சிய அனுபவம் (இன்னும் மார்க்சியத்தின் ஆரம்பநிலை மாணவனே நான்), இலக்கிய அனுபவம் இப்படி பல விடயங்கள் என் அடையாளங்கள் அனைத்தையும் துறக்க செய்து மனிதத்தை நோக்கியான தேடலை அதிகரித்துக்கொண்டே இருக்க செய்கின்றன. நான் மனிதனாக முயற்சி செய்துக்கொண்டே இருக்கிறேன். என்னுடைய இந்த பயணத்தில் பெரும்பாலும் கடவுள்களை சந்தித்துக்கொண்டே வருகிறேன். ஒவ்வொரு தினமும் ஏதோ ஒரு மனித கடவுள் என்னை இரட்சித்துக்கொண்டே இருக்கிறார்.
கடவுள் குறித்தும், சமயம் குறித்தும் நாம் வெறும் வறட்டு வாதங்களை கொண்டு பேசிவிட முடியாது அல்லது கடவுளையும், மதத்தையும் கடந்துவிடமுடியது. இந்த பிரபஞ்சத்தின் உண்மைகள் விளங்கும் வரை மனிதனுக்கு கடவுள்களின் தேவை இருந்துக்கொண்டே இருக்கும். அறியாமை குறித்தான பயம் கடவுள்களை உற்பத்தி செய்கிறது. சூனியத்தை விட்டு மனிதன் வெளியேறி தான், தனது எனும் தன்மைக்கும் அடையாளப்படுத்தல் எனும் நிலைக்கும் வர ஆரம்பித்தது முதல் கடவுளும் மனிதனின் சிந்தனையிளிருந்து வெளிவர ஆரம்பித்தார், கூடவே சாத்தான்களும் வந்தார்கள், அடுத்து சமயங்கள் வந்தன, மதங்கள் உருவாகின, கடவுளின் பெயரில் அதிகாரமும் அடக்குமுறைகளும் தோன்றின, மனிதம் மாண்டது. நான் பெரியாரிய பார்வையைக் கொண்டே கடவுளையும், சமயத்தையும் அனுகுபவனாகவே இருந்தாலும் அதிலிருக்கும் போதாமை என்னால் நன்கு உணரமுடிகிறது. பெரியார் சொன்னதை போல் நாம் அவரிலே நிற்காமல் அவரை கடந்து போகவேண்டும் எனும் மிக முக்கிய பயணம் நம்முன் இருக்கிறது. இங்கு தான் ஞானி அவர்களின் சமயம் குறித்தும், மதம் குறித்துமான ஆய்வுகள் பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றன. கடவுள்களுக்குள் நின்றே கடவுள்களை எதிர்க்க முடியும் எனும் அவர் கருத்தின் ஆழம் விளங்குகிறது. அதுனால் பெரியாரியம் ஒன்றும் இல்லாதது என்று நான் நிச்சயம் சொல்ல மாட்டேன். பிராணப் 'முகர்ஜி'க்களும், மன்மோகன்'சிங்'குகளும், அச்சுதானந்தன்'நாயர்'களும் ஆளும் ஒரு தேசத்தில் ஜெயலலிதா 'ஐயர்' ஆட்சி செய்யாமைக்கு காரணம் பெரியாரியத்தின் தாக்கம் இல்லாமல் வேறு என்னவென்று சொல்லிவிட முடியும் (ஏதோ சாதி தமிழகத்தை விட்டு முழுமையாய் அழிந்துவிட்டது என்று சொல்வதாய் கொள்ள வேண்டாம், இத்துணை தூரம் நடந்த மாற்றத்துக்கு காரணம் என்ன,யார் என்பது முக்கியம்) ஆனால் தருமபுரியும், பரமக்குடியும் தொடர்ந்து நடக்கும் சூழலில் பெரியாரை தாண்டிய பார்வை நமக்கு பெரிதும் தேவைப்படுகிறது. இதையே ஞானியின் ஆய்வுகள் பேசுகின்றன.
தன் சுயஅனுபவங்கள்,சமயங்கள் குறித்து தான் அறிந்ததவை, படித்தவை என்று அனைத்தையும் ஆராய்கிறார்ஞானி. அந்த வகையில் "கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை?" , "நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்" என்ற இந்த இரண்டு புத்தகங்களும் முக்கிய ஆய்வு படைப்புகளாய் இருக்கின்றன. கடவுள் என்பது மனிதன் தன் தேவைகளுக்கு படைத்த ஒரு "கருத்தாக்கமே" எனும் வாதத்தை தொடர்ந்து முன்வைக்கிறார். கடவுள்களும், சமயங்களும் கருத்தாக்கமாய் உருப்பெறும் பொழுது அவை மனிதத்தை குறித்தும், அன்பு குறித்துமே பேசுபவையாக இருந்திருக்க வேண்டும் காலப்போக்கில் மதத்தை சுற்றி அதிகாரமும், ப்ரோகிதமும் வளர்ந்து கடவுளையும், சமயங்களையும் தனக்குள், தன் தேவைகளுக்கு பயன்படுத்தும் சூழலில் கடவுளும், சமயமும் மனித குலத்துக்கு எதிராய் செயல்பட ஆரம்பிகின்றனர். அதிகாரமையங்களும், ப்ரோகிதரர்களும் தங்களை காத்துக்கொள்ளவும், தங்கள் அதிகாரத்தை காக்கவும் மனிதனின் அறியாமையை கடவுள்களின் பின்பமாய் முன்னிறுத்தி கடவுளின் இருப்பை உறுதிப்படுத்திக்கொண்டே வருகிறார்கள் என்பதை நடைமுறை எடுத்துக்காட்டுகளை கொண்டு நாம் உணரலாம். மார்க்சியம் ஏங்கல்சும், மார்க்ஸ்சும் உருவாகிய மனிதத்தின், விடுதலையின் கருத்தாக்கம் அனால் மார்க்சியவாதிகள் என்று சொல்லிக்கொண்டு அதன் ப்ரோகிதரர்களாய் மாறி மார்க்சிய கோட்பாடுகள் மீது தங்கள் அதிகாரங்களை நிறுவுவது நடந்துக்கொண்டு தான் இருக்கிறது, மேற்கு வங்கம் சிங்கூரிலும், கூடங்குளத்திலும் நடந்ததும், நடப்பதும் நாம் அறிந்ததே. இதே வேலையை தான் பெரியாரை சொல்லியும் நடந்துக்கொண்டிருக்கிறது. வேறு ஒரு சாராரோ மார்க்சையும், பெரியாரையும் புனிதங்களின் பின்பமாக்கி அவர்களின் கருத்துக்களை மறந்து அல்லது சமகாலத்தில் பொருத்தி செயல்படாமல் வறட்டுகொட்பாடுகளுகுள் முடங்கி போகிறார்கள். இதேதான் கடவுள் இல்லை என்று சொன்ன புத்தருக்கும் நேர்ந்தது அவரே கடவுளாக்கப்பட்டார் அவரின் பெயரை சொல்லியே பல லட்சம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இப்படி கடவுள் குறித்தும், சமயம் குறித்துமான ஞானியின் கருத்துக்கள் சமகாலத்தின் தேவைகளுக்கான கருத்துகளாய், ஆய்வுகளாய் இருக்கின்றன
இந்து மதம், கிருத்துவம், இசுலாம், புத்தம் என்று பல சமயங்களின் கருத்துகளை, கொள்கைகளை ஆய்வுசெய்து அக்கருத்துகள் எந்த அடிப்படையில் தோன்றின, அவைகள் எங்கு மனித குலத்துக்கு எதிராய் செயல்பட தொடங்குகின்றன என்பதை குறித்தும் சொல்கிறார். இந்து மதம் குறித்து சொல்லும் ஞானி நம் காலத்தில் இந்துமதம் அரசியலாக மாற்றப்பட்டுள்ளது என்பதையும், இந்து மதம் எப்போதும் ஒரே வடிவில் இருந்ததில்லை என்பதையும், சாதியம், தனியுடமை, அரசு அதிகாரம் ஆகியவற்றை விலக்கி பார்த்தால் மிச்சம் இந்து சமயத்தில் என்ன இருக்கும் என்பதையும் சொல்கிறார் . இக்கேள்விகள்எல்லா மதங்களுக்கும் பொதுவானதே, இந்து சமயம் இந்துதுவமாய் மாறியதே இதற்கெல்லாம் காரணம் என்கிறார் ஞானி ஆனால் என்னால் அப்படி ஏற்கமுடியவில்லை காரணம் இந்து சமயமே இந்துத்துவம் தான். ஒரு வெள்ளை கிருத்துவ பாதிரியார் தன் மதத்தை வளர்க்கும் காரணம் கொண்டேனும் ஒரு ஆப்ரிக்கனை தொடுவான் ஆனால் இந்து சமயத்தில் குருமார்கள் தான் தீண்டாமையை முன்னிருத்துகிறார்கள் நான் அறிந்த வரை கடவுள் முன்னும் மனிதன் சரிசமமாக இருக்கமுடியாத ஒரே சமயம் இந்து சமயம் மட்டுமே.
கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை எனும் நூலில் இந்துமதம், கீதை, நீட்சே, காந்தி, ஓசோ என்று தொடர்ந்து ஆராய்கிறார் அவர்களின் கருத்துகளை உடைத்து அதனுள் உடுருவி சென்று அதன் ஆழங்களை பேசுகிறார். மனிதம் அல்லது அன்பு என்று சொல்லப்படும் நிலைக்கு ஒத்த கருத்துகளை ஏற்றுக்கொள்கிறார். இதை 'யாராக இருந்தால், என்ன கருத்தாக்கமாக இருந்தாலும், அடிப்படை 'மனிதம்' அது மேலோங்கி நிற்குமாயின் எல்லா சிந்தனைகளும் ஏற்றுக்கொள்ள கூடியதே. ஆனால் ஒரு சித்தாந்தத்தை வறட்டு தனமாய் தூக்கி பிடிக்கும் நிலையில் மனிதம் நிச்சயம் சாகும் அது அதிகாரமாய் மாறும் என்று கொள்ளலாம்’. இந்த நூலில் இருக்கும் காலத்திலும் இடத்திலும் கடவுள் எனும் பிரதியும், இந்து மதம் குறித்தான பிரதியும் மிகவும் முக்கிய ஒன்றாய் கருதுகிறேன். அதே போல் கிருத்துவம் குறித்தான உரையாடலில் விடுதலை இறையியல் குறித்து பேசுகிறார், எல்லா சமயங்களிலும் இருக்கும் விடுதலை இறையியல் குறித்தும் அவைஎப்படி மத அதிகாரங்களால் முடக்கப்பட்டன என்பதையும் சொல்கிறார். நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும் என்னுள் பெரும் தாக்கத்தை விளைவித்திருகிறது அதன் பொருட்டே இந்த வாசிப்பின் எழுத்து பிரதிக்கு நானும் கடவுளும் இருபத்தைந்து ஆண்டுகளும் என்று தலைப்பிட்டேன். இந்த புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகள் ஒத்த கருத்துக்கள் எதிர்மறை கருத்துக்கள் என்று இரண்டடையும் ஒன்று சேர்ந்து பிரப்பிகின்றன. இவர் கடவுள் இருக்கிறது என்கிறாரா? எனும் கேள்வி எழாமல் இல்லை. இதை ஞானியே இந்த கட்டுரைகள் இப்படியான ஒரு கேள்வியை தனக்கு எதிராய் எழுப்பும் என்றும், எழுப்புகிறது என்றும் எழுதுகிறார். இப்பிரதியை படித்து முடித்தவுடன் முன் எழுந்த கேள்வி மறைந்து கடவுள் குறித்தும், மதம் குறித்துமான கருத்தாக்கம் பற்றிய நம் அறியாமைகுறித்தான கேள்வி மேலோங்குகிறது. பிரபஞ்சம் குறித்தான புதிர் நம்மை அதன் நோக்கிய தேடல்களுக்கு இட்டு செல்கிறது அதுவே கடவுளையும் உருவாக்குகிறது, உடைக்கிறது அதனுள் சென்று உண்மையை தேடுகிறது. இறுதியான சூனியத்தை உணரும் வரை மனிதனின் தேடல் நீண்டுக்கொண்டே இருக்கும் எனும் உண்மை வாசகனால் உணரமுடிகிறது. இப் பிரபஞ்சத்தின் சூனியமானதுஇனம், தேசம், மதம் என்று அனைத்தையும் கடந்த இயற்கை நிலை, ஏதுமில்லா நிலை. மனித குலம் தானாகவே கற்பித்துக்கொண்ட உலக படைப்புகளிலே உயர்ந்தது மனித இனம் எனும் அகந்தை அற்ற நிலை. கடவுளை சார்ந்து உருவான சோசியம், ஆவிகள், சடங்குகள் குறித்தும் நீள்கிறது இவரது ஆய்வுகள். இவற்றை எப்படி அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாதோ அதே போல் நிராகரிக்கவும் முடியாது என்கிறார். ஆம் எதையும் அப்படியே ஏற்பது என்பதும் நிராகரிப்பது என்பதும் சரியான முடிவாகிவிடாது, எந்த ஒரு செயல் குறித்துமான ஆய்வுகளே அந்த விடயத்தை தகர்க்க ஏதுவாய் அமையும் என்பதையும் முன்வைகிறது.
இது கடவுள் மற்றும் சமயம் பற்றிய ஞானி அவர்களின் படைப்புகள் குறித்து ஒரு தனி மனிதனின் மேலோட்டமான புரிதலே. ஒரு ஆரம்ப நிலை வாசகனாகவே நான் வாசிப்பை எப்போதும் மேற்கொள்கிறேன் அதனுடே வாழ்வை பார்க்கிறேன், இந்த பார்வையே எனக்கு பல புதிர்களை உடைக்க உதவுகின்றன, அதன் அடிப்படையிலே இந்த பிரதியை எழுதினேன். இதை நீங்களும் இப்படியே தான் புரியவேண்டும் என்பதில்லை. எப்படி புரிந்துக்கொள்ள வேண்டும், பார்க்க வேண்டும் என்பது வாசிப்பவர் சார்ந்தது.ஒரு படைப்பாளி என்பவர் தன் படைப்பு முழுதும் தானே நிரம்பி நிற்காமல் படிக்கும் வாசகருக்கு தரப்படும் இடமே படைப்பாளிக்கும், படைப்புகுமான முக்கியத்துவத்தைநிறுவுகிறது. இதைஞானியின் பிரதிகள் தொடர்ந்து செய்கின்றன. அதேசமயம் அவருக்குள்ளான மார்க்சியவாதி தொடர்ந்து வாழ்கையை, வாழ்வின் விடயங்களை ஆய்வுக்குள்ளாக்குகிறார்அவற்றையே வாசிப்பவருடன் எழுத்தில் பகிர்ந்துக்கொள்கிறார். இந்த ஆய்வுகள் மனிதனுக்கும்இந்த அண்டத்துக்குமான உறவையும், மனித இருப்பையும் புரிந்துக்கொள்ளவும் அதனுள்ளான கடவுள்பற்றிய புரிதல்களையும் முன்வைக்கின்றன.
Comments
Post a Comment