அன்புள்ள அப்பா,
நிச்சயம் இந்த கடிதத்தை நீங்கள் எதிர்பார்த்திருக்கமாட்டீர்கள், அதே போல் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுவேன் என்று கனவிலும் எண்ணியதில்லை. இக்கடிதம் தான்தோன்றியாய் எழுதப்பட்டதே ஆயினும், சொல்ல தெரியாத ஒரு பெரும் உனர்ச்சியின் விளைவால் வெளிப்படுகிறது . அதித உணர்வில் வெளிப்படும் இந்த கடிதம் அன்பினாலும், பாசத்தாலும் நிரம்பியது என்று என்னும்படி அமைந்திருந்தால், இங்கு வெளிபட்டிருக்கும் வார்த்தைகள் அனைத்தும் உலகின் மாபெரும் நடிப்பு கலையை உங்கள் முன் வெளிப்படுத்துகின்றன என்றே அர்த்தம். அன்பு, பாசம் போன்ற சொற்கள் தானே மானுட படைப்பிலே அதிக புனைவு நிரம்பியவை, கடவுளை காட்டிலும் அற்புத புனைவுகள் இவை. இருந்தும் மனிதன் வாழ புனைவுகள் எப்போதும் தேவைப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. நீங்கள் இந்த கடிதத்தை படிப்பீர்கள் எனும் நம்பிக்கையில் நான் எழுதவில்லை, ஒரு தேசாந்தரியிடம் இதை எதிர்பார்ப்பது அபத்தமான விடயம் தான். உங்களால் அதிகம் நேசிக்கப்பட்ட, அதே நேரம் உங்களை பெரிதும் நேசிக்காத உங்கள் மகன் தான் இந்த கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னுடன் இருக்கும் போது சொல்லப்படாத, உங்களுடன் பேச விரும்பாத வார்த்தைகளை தான் இப்போது இந்த பிரதியாய் எழுதிக்கொண்டிருக்கிறேன். எப்போதும் நம்முடன் இருப்பவர்களின் இருப்பை உணராத வாழ்க்கையை வாழ சபிகப்படவர்கள் தானே நாம். இதோ தினம் தினம் என்னுடனே இருக்கும் அம்மாவை பற்றி எழுத என்னிடம் எதுவுமே இல்லை, ஆனால் எங்களை பல வருடங்களுக்கு முன்பே பிரிந்து விட்ட உங்களுக்கு எழுத பலவும் இருக்கிறது என்னிடம்.
அம்மாவின் முட்டையின் விருப்பத்தாலும், உங்களின் உயிரியாலும் ஓர் முன்பனிகாலத்தின் நடு சாமத்தில் இந்த உலகத்தை நான் சந்தித்தேன். நான் அப்படி இந்த உலகை சந்தித்த முதல் நொடியின் ஆனந்தத்தை நீங்கள் எப்போதும் பகிர்ந்ததே இல்லை. எந்த ஒரு பிறந்த நாளையும் கூட பெரிதாய் சட்டை செய்தது கிடையாது நீங்கள். சின்ன வயதில் இதுகுறித்து, பெரும் கோபம் கொள்வேன், ஆனால் இயற்கை சக்தியின் மறுஉருவாக்கமே பிறப்பும் இறப்பும் என்பது தெரிய வந்த நாள் முதல் உங்கள் மீதான் அந்த கோபம் இல்லாமல் போய்விட்டது என்பதை உங்களிடம் சொல்லித்தான் ஆகவேண்டும். மரணத்தில் துன்பம் கொள்ள ஏதுமில்லாதது போல், பிறப்பில் மகிழ்ச்சி அடைய ஏதுமே இல்லை தானே.
நீங்கள் எங்களை விட்டும் போன பின் அம்மா இன்று வரை உங்கள் மீதான வெறுப்பிலும், கோபத்திலும் இருக்கிறாள். அவள் கோபம் நியாமானதே, பாவம் பிறந்தது முதல் சோற்றுக்கும், துணிக்கும் அடுத்தவர்களையே நம்பி கிடக்கும் அவளால் என்ன செய்துவிட முடியும். நானும் உங்களை வெறுக்கவே செய்தேன். என் நண்பர்களின் தந்தைகளுடன் உங்களை ஒப்பிட்டு மனதிலே கோடி முறை திட்டி தீர்த்தேன். எல்லாம் அம்மா தற்கொலை செய்துக்கொள்ள விஷம் வாங்கிவர சொன்ன அந்த நொடி வரை தான். என் கண் முன்னே அந்த மாத்திரைகள் எங்கள் மூவரையும் (அம்மா, அக்கா, நான்) கொல்லும் ஆசையுடன் காத்துக்கிடந்தன. அந்த ஒரு நொடி, ஒரே நொடி நான் அதை தூக்கி வீசி இருக்கவிட்டால் இந்த கடிதத்தை 26 வயதில் உங்களுக்கு எழுத நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன். அப்போது தான் வாழ்க்கை பிறப்புக்கும், மரணத்துக்கும் இடைப்பட்ட ஏதுமில்லா பயணம் என்பது என் அடிமனதில் பதிந்து போயிருக்க வேண்டும். பிறப்பும், இறப்பும் இயற்கை சக்தியின் பரிமாண மாற்றமே எனும் போது அதற்குள் வாழ்வை அடைத்துவிடுதல் முற்றிலும் நியாயமற்றதே.
உங்களுக்கு தெரியுமா, நீங்கள் 3-4 வருடங்கள் வாழ்ந்த அதே பெருநகரத்தில் தான் நானும் வாழ்கிறேன். உங்களுக்கு பிடிக்காத இந்த நகரம் எனக்கு மிகவும் பிடித்தாய் இருக்கிறது. உங்களைப் போன்றான பெரும் வாழ்வை நான் வாழவில்லை, நில புலன்களுடன் இருக்கவில்லை எனவே எனக்கு சோறு போடும் இந்த நகரத்தை விட்டு நான் எங்கும் போகவில்லை. எத்தனையோ கோடி மனிதர்களுக்கு சோறு போட்ட இந்த அதிசய நகரம் எனக்கும், அம்மாவுக்கும் சோறு போடுகிறது. தனிமைகளில் வாரி அணைத்துக்கொள்ள வில்லை என்றாலும், என்னை எப்போதும் இந்த ஊர் கைவிட்டதில்லை. நீங்கள் படித்த பச்சையப்பன் கல்லூரி, நீங்கள் சுற்றி திரிந்த பாரிஸ் கார்னர், திருவல்லிக்கேணி என்று எல்லா இடங்களும், நீங்கள் எனக்கு இந்த நகரம் குறித்து சொன்ன கதைகளை மீண்டும் மீண்டும் உயிர்பித்து தருகின்றன. அவற்றை கடக்கும் போது உங்கள் கதைகளுடனே கடக்கிறேன்.
என்னால் எழுதப்பட்டு ( எழுதிய ஒரே காரனத்தால் நான் எழுதியது என்று பேசினால் அது முற்றிலும் முட்டாள் தனமே. நான் இந்த எழுத்துகளையும் அதன் வடிவத்தையும் யாரிடமிருந்தோ கற்றுக்கொண்டேன், எனக்கு கற்றுக்கொடுத்தவர் வேறு யாரிடமிருந்தோ கற்றுக்கொண்டார் நான் எழுதிய, எழுதும் எழுத்துக்கள் என்னிலிருந்து உருவாகவில்லை. எனவே என்னிடமிருந்து வெளிப்படும் கோடுகளையும் , நிறங்களையும் என்னுடையது என்று பேசுவது மிகைப்படுத்தப்பட்ட நகைச்சுவையே. இங்கு 'நான்' குறித்த தத்துவ சொல்லாடல்கள் இடையுறாத போராட்டங்களை நடத்திக்கொண்டே இருக்கின்றன. 'நான்' என்ற உருவகம் பெரும் விந்தையான ஒன்றாகவே இருக்கிறது ஒரு காலம் உடலாக இருக்கும் நான் வேறொரு சமயம் மனமாக இருக்கிறது. மனம் எப்போதும் உடலைப் போல் தனியாக செயல்படுவதில்லை. உடலை சார்ந்தே மனம் சிந்திக்கிறது என்றும் கொள்ளலாம். எனவே என்னிலிருந்து பிறக்கும் சொற்கள் உடல் ஒவ்வாமையால் வெளியேறும் வாந்தியை போன்றது என்றே கொள்ளமுடிகிறது.) என்னால் மட்டுமே படிக்கப்பட்டு, என்னாலே குப்பைதொட்டிக்கு அனுப்பப்பட்ட பழைய பிரதி (??) ஒன்றில் உங்களை பற்றிய நினைவுகளை பின்வருமாறு பகிர்ந்திருந்தேன்:
ரத்த வெள்ளத்தில் கிடந்த என் அப்பாவை ஒற்றை ஆளாய் தூக்கிக்கொண்டு அரூர் ஆஸ்பித்திரிக்கு போனதும், அந்த நடுசாமத்தில் என் அப்பாவை தூக்கி செல்ல உதவிய அந்த பெயர் தெரியா லாரி ஓட்டுனரும் நியாபகத்துக்கு வரும்போதெல்லாம் குருதியின் வாடை பலமாய் வீசுகிறது. அப்பாவின் நினைவு இன்றும் என்னை துரத்திக்கொண்டே இருக்கிறது......
இன்று அவர் என்னுடன் இல்லை ஆனால் என் முகமும், தாடியும் அவர் சாயலிலே இருக்கிறது.சவரம் செய்ய முகத்தில் சோப்பு போடும்போதெல்லாம் சின்ன வயதில் அப்பா சவரம் செய்யும் போது என் முகத்தில் தடவிவிட்ட சோப்பு நுரைகள் நினைவுக்கு வருகின்றன, அப்பாவுக்காய் எப்போதும் ஏங்கி நிற்கிறேன். அப்பா என் நினைவுகளை விட்டு வெளிவரும் சமயங்களில் ஒருவித குற்றஉணர்வு என்னை வதைக்கிறது......
தாடியை சவர கத்தியால் வருடும் ஒவ்வொரு முறையும் அந்த கத்தியின் கூர் முனைகளிலிருந்து உங்கள் நினைவுகள் மீண்டெழுந்து வலியையும், குற்றஉணர்வையும் ஒரு சேர தருகின்றன. எப்போதும் தாடியை எடுக்கும் திராணியற்று தோற்றுப்போகிறேன். உங்களுக்கு ஒரு ஒற்றுமை தெரியுமா?! தாத்தனும் தாடியுடனே இருந்தார், நீங்களும் தாடியுடனே இருப்பீர்கள், நானும் தாடிக்காரன் எனும் அடையாளத்துடனே உலாவுகிறேன். தாடி இல்லாத என்னை என் காதலிக்கு கூட அடையாளம் தெரியாது என்பது தான் நகைப்பின் உச்சம். ஆம் தந்தையே, நான் அற்புதமான மனிதர்களையே வாழ்க்கை முழுதும் கடந்து வந்திருக்கிறேன். பெரும் காதலுடனே என்னை அவர்கள் எதிர்கொண்டார்கள். இதோ இதை எழுதும் இந்த தருணத்தில் ஒரு ஓவியமாய் என்னுடன் அமர்ந்திருக்கும் இந்த குட்டி தேவதை ஒரு யுகத்தின் காதலுடனே என்னை அனைத்துக்கொண்டிருக்கிறாள். அவளின் காதல் முன் என் ஆன்மா தவம் கிடக்கவே செய்கிறது.துயரங்களில் என் கண்ணீரை துடைக்க எப்போது ஒரு உதடு காத்துக்கொண்டே இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்தால் மகிழ்ச்சி கொள்வீர்கள் என்றே நம்புகிறேன். மகிழ்ச்சி...என்ன ஒரு அபத்தமான் சொல்லாடல்! ஒரு பயணியிடம் மகிழ்ச்சி குறித்தும் வாழ்வின் துன்பம் குறித்தும் மகன் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் பேசுவது எத்துனை முரணானது.
ஒரு நாள், வீட்டில் கிடந்த குப்பைகளை கிளறிய போது அந்த புகைப்படங்கள் கண்களில் தென்பட்டன. பங்காளி சண்டையில் அடித்து உடைக்கப்பட்ட நம் வீடு. நீங்கள் பிறந்து வாழ்ந்த, நானும் பிறந்து வாழ்ந்த அந்த வீட்டின் சிதிலங்கள் உங்கள் ரத்தத்தால் நிரம்பியிருக்கும் புகைப்படங்கள். வழக்கின் சாட்சிகாய் எடுக்கப்பட்ட படங்கள் முழுதும் உங்கள் குருதி நிரம்பி கிடக்கிறது. அந்த புகைபடத்தில் ஒன்று முற்றிலுமாய் சிதைக்கப்பட்ட நம் வீட்டு கதவினை தங்கி நின்றது. அந்த கதவில் கீராவின் மாந்தர்களை போல் நானும், அக்காவும் கதவு பஸ் ஓட்டியது இன்னும் நியாபக இடுக்குகளில் பதிந்தே இருக்கிறது. அந்த குப்பைகளை மேலும் கிளறிய போது அந்த வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்களும் கிடைக்கப்பெற்றன, அவைகளுடன் நீங்கள் பல வருடங்களாய் பயன்படுத்திய கை கடிகாரமும் கிட்டியது. கோபத்தில் வழக்கின் காகிதங்களை எரித்து விட்டேன். மிச்சமிருப்பது அந்த புகைப்படங்களும், உங்கள் வாட்சும் தான். ஒரு நாள் நண்பரிடம், எனக்கு இருப்பிடம் மீது எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை, நான் சோறு திங்கவும், தூங்கவும், கலவி கொள்ளவும் ஒரு இடம். அவ்வுளவுதான் அதன் தேவை என்றேன் (வீடு இல்லாமலே இந்த தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும் எனும் நிசம் மறைக்கப்பட்டு) ஆம், நான் பிறந்து 13 வருடங்கள் வாழ்ந்த ஒரு வீட்டின் நினைவுகள் சண்டைகளாலும், ரத்ததாலும், மானுட சதைகளாலும் நிரம்பி இருப்பின் வேறு என்ன எதிர்பார்புகளை கொள்ள முடியும்.
அப்பா உங்கள் மகளுக்கு திருமணம் நடந்து விட்டது, ஒரு மகன் இருக்கிறான். காதல் திருமணம். இந்த சமுகத்தில் காதலிப்பவர்கள் சந்திக்கும் அணைத்து அநிதிகளையும், துயரங்களையும் சந்தித்த பின்னே, இப்போது தன் காதலனுடன் வாழ்கிறாள். எங்கோ வெகு தொலைவில் அதிகாலை பனியில், காதலனின் மார்பில் முகத்தை புதைத்து குருத்வாரக்களின் பாடல்களுடன் அவள் பொழுது புலர்ந்து மறைகிறது. இதோ அவளின் ஒரு வயது மகன் என் அருகில் பஷீரின் 'பால்யகால சகியை' உச்சி முகர்ந்து ஒவ்வொரு தாளாக சுவைத்து கிழித்துக்கொண்டிருக்கிறான். ஒரு படைப்பை இவ்வுளவு தூரம் ஆழமாய் ரசித்து படித்தவர் வேறு யாரும் இருக்க முடியாது, குழந்தைகளால் மட்டுமே முடியும் ஒன்று இந்த அதிதமான படித்தல். படித்தல் என்று சொல்லும் போது தான், நீங்கள் தினமணியை வைத்துக்கொண்டு எனக்கு அ, ஆ சொல்லித்தந்தது நினைவுக்கு வருகிறது. நான் a, b,c க்கு முன் அ, ஆ கற்றுக்கொண்டது உங்களால் தான் (நான் இங்கு ஒரு துளியேனும் பெருமை படவில்லை, மகிழ்ச்சி தான் கொள்கிறேன் ஒரு மொழியை கற்பதில் பயன்படுத்துவதில், கையப்பமிடுவதில் என்ன பெருமை இருந்துவிட முடியும் அதுவும் தாய் மொழியாக இருக்கும் போது, தாய் மொழியை அணைத்து பயன்பாட்டுக்கும் கொள்வது தானே தானே மானுட இயல்பு).
உங்களுக்கும் எனக்கும் அப்பா மகன் பேச்சுக்கள் எப்போதுமே நடந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் யாருடனுமே அதிகம் உறவு ரீதியான உரையாடல்களை மேற்கொண்டு நான் பார்த்ததே இல்லை, அம்மாவுடன் கூட. உங்கள் தனிமைகளை நீங்கள் நேசித்தீர்கள், நீங்களாகவே இருக்க ஆசைப்பட்டீர்கள் ஆனால் யாரும் உங்களை அப்படி இருக்க விடவில்லை என்பதே இத்தனை வருடங்கள் கடந்து தான் புரிகிறது.
உங்களுக்கு இன்னும் சொல்ல என்னிடம் நிறைய, நிறைய கதைகள் இருக்கின்றன. லட்சம் வார்த்தைகளும், ஆயிரம் காதல்களும் மீதம் இருக்கின்றன. அவைகளை எல்லாம் மீண்டும் எப்போதாவது உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றும் நாளில் எழுதுகிறேன். நீங்கள் இல்லாத துயரில் நான் வாழ்வை வெறுத்துவிட்டேன் என்றோ, நாட்கள் நரகமாய் கடக்கின்றன என்றோ, தினமும் உங்கள் நினைவுகளில் தான் மூழ்கி கிடக்கிறேன் என்றோ கவித்துவமான பொய்களை சொல்ல விரும்பவில்லை. நீங்கள் இல்லாத இந்த வாழ்க்கை அம்மாவாலும், நண்பர்களாலும், காதலினாலும் அற்புதமாவகவே இருக்கிறது. ஆனால், எப்போதாவது உங்கள் நினைவுகள் உயிர்பெறவே செய்கின்றன. அப்போதெல்லாம் நீங்கள் எங்களுடனே இருந்திருக்கலாம் என்று தோன்றும். இருப்பு குறித்தான ஏக்கத்தில் செத்து மடிவது தானே மனித நாட்கள்.
ஆம்! என்னிடம் எனக்கே கடைசியாய் ஒரு கேள்வி எழுகிறது. இந்த கடிதத்தை யாருக்கு அனுப்புவது ? எந்த விலாசத்துக்கு அனுப்புவது ? நீங்கள் உயிருடன் தான் இருக்கிறீர்களா என்பதே தெரியாத போது என்ன செய்வது இந்த கடிதத்தை?
முத்தங்களுடன்,
மகன்
lovely!! no words...
ReplyDeleteNaked truth
ReplyDelete