1
யாருமே இல்லாத அந்த ஒற்றை அறையில் நான் மட்டுமே இரண்டு வருடங்களாய் வாழ்ந்து வருகிறேன். ஆஸ்பெஸ்தாஸ் அட்டையும், உதிருந்து போன சுண்ணாம்பு சுவரும், பேருக்கு ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறியும், சிலந்தி அட்டடைகளும் என் அறையின் அடையாளங்கள்.யாருமில்லாத இந்த அறை எப்போதும் வெட்கை சூழ்ந்தே இருக்கிறது, மழை நாட்களிலும் வெட்கை வெளியே செல்ல மறுக்கிறது, நானும் அதனுடன் சேர்ந்து வாழ பழகிவிட்டேன். இப்போதெல்லாம் குளிர்ச்சியை மனமும், உடலும் விரும்புவதேயில்லை, எங்காவது குளிருட்டப்பட்ட கட்டிடங்களுக்குள் நுழையும்போதெல்லாம் என்னுடல் அன்னியப்பட்டு உதறுகிறது. நான் ஏற்கனவே சொன்னதைப்போல் இந்த அறைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போது ஒரு கால் சென்டரில் வேலை செய்துக்கொண்டிருந்தேன். எட்டாயிரம் ரூபாய் சம்பளம், மூனு வருடங்கள் அங்கு வேலை செய்தேன். ஆறாயிரம் சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்தேன் பிறகு படிப்படியாய் சம்பளம் எட்டாயிரத்தை தொட்டது. உங்களுக்கு திடிரென்று கேள்வி தோன்றலாம் நான் பொய் சொல்லவதாய் கூட தோன்றலாம் ஆனால் அது தான் நிஜம் நான் ஆறாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து அதிகபட்சமாய் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு எட்டாயிரம் சம்பளம் வாங்கினேன். நீங்கள் உங்கள் மாமன் செத்துப்போன செய்தி கேட்டு அவசரமாய் ஊருக்கு கிளம்பிக்கொண்டிருக்கும் வேளையோ, அல்லது உங்கள் காதலனுக்கு முத்தமிட்டுக்கொண்டிருக்கும் நேரத்திலோ, கடும் பசியிலோ, சிறுநீர் அவசரத்திலோ, கடும் கோபத்திலோ அல்லது சோர்விலோ இருக்கும் போது அடையாளம் தெரியாதா எண்ணிலிருந்து வரும் தொலைபேசி அழைப்பின் மறுமுனையில் அரை குறை ஆங்கிலத்திலும் தமிழிலும் "சார் நாங்க பாங்க்ல இருந்து போன் பண்ணுறோம் கிரெடிட் கார்ட் வாங்கிகோங்க சார், உங்களுக்கு பெர்சனல் லோன் தரோம் மேடம்" எனும் குரலுக்கு பதிலாய் உலகின் அத்துணை கோபத்தையும் கடும் சொற்களாய் ஒன்று சேர்ந்து அதை தீயாய் கொட்டிவிட்டு, காத்திருக்காமல் அழைப்பை துண்டிப்பீர்களே, அந்த மறு முனை குரல்கள் எங்கிருந்து வரும் தெரியுமா?? அப்படியான ஒரு குரலின் சொந்தக்காரன் நானும் தான். கெட்ட வார்த்தைகளில் முகமறியா மனிதர்களிடம் வசவு வாங்கவே சம்பளம் வாங்கும் அடிமைகளில் ஒருவனாக இருந்தேன். எத்துனை வசவுகளை காசுக்காய் வாங்கிருக்கேன் தெரியுமா, என் அம்மா எத்துனை முறை தேவடியாவாய் பேசப்பட்டாள் அறிவீர்களா நீங்கள். ஏன் நீங்களும் கூட சில சமயம் என்னை "தேவடியா மகனே வைடா போனை" என்று சொல்லியிருக்கலாம். இல்லை நாங்கள் அன்பார்லிமன்டறி வார்த்தைகளை பேசாதவர் எனில் ஆங்கிலத்தில் பக்-ஆப் (fuck- off) என்று சொல்லி வைத்திருக்கலாம், அப்படி வைத்திருந்தால் கோடி நன்றிகள் உங்களுக்கு, காரணம் தொண்ணூறு சதவித ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. என்னமோ நான் வேலை பார்க்கும் கம்பெனியின் முதலாளியையே சாடுவதை போல் எங்களை வசவுகளால் கொல்லுவீர்கள், ஆனால் என்றுமே உங்கள் சொற்கள் நீங்கள் பேசியவர்களை போய்சேர்ந்ததில்லை. நாங்களும் உங்களை போலான மனிதர்களே என்று நீங்கள் எப்போதாவது எண்ணியதுண்டா ? ஆனால் பாவம் நீங்களும் தான், பல சமயம் நீங்கள் எங்களின் குரல்களுக்கு மயங்கிவிடுகிரீர்கள், அதன் காரணமாய் வாழ்க்கை முழுதும் கடன்காரர்கள் எனும் அடையாளத்தை தாங்குகின்றிர்கள், அது உங்களின் சமுக அந்தஸ்தாகவும் மாறிவிடுகிறது. உங்களின் கடன் அட்டையை வைத்து உங்களால் எத்துனை தூரம் கடனுக்கு பொருட்கள் வாங்க முடியுமோ அத்துணை தூரம் சமுக அந்தஸ்து உள்ளவர் நீங்கள், அப்படி தான் எங்கள் நிறுவனங்கள் டீவியில் விளம்பரம் செய்வார்கள், அவர்கள் சொல்லித்தரும் பொய்களை உங்களிடம் சொல்லத்தான் உங்களுக்கு தொலைபேசி செய்து உங்களிடமிருந்து வசவுகளை பெறுவோம்.
இப்படி நீங்களும், மற்றவர்களும் என் அம்மாவை தேவடியாள் ஆக்கியதற்கும், நான் உங்களை ஏமாற்றியதுக்கும் சம்பளம் வாங்கினேன். ஒரு நாள் காரணமே இல்லாமல் வேலையை விட்டுவிட்டேன். இது நடந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டது அதன் பிறகு வேறு வேலைகளுக்கு போகவில்லை,தேடவுமில்லை, யாரும் வேலை கொடுக்கவுமில்லை எனக்கு போக மனமுமில்லை. இதன் காரணமாய் கையில் பணமில்லை கடந்த நான்கு மாதங்களாய் நானிருக்கும் இந்த அறைக்கு வாடகை கூட தரவில்லை, வீட்டு முதலாளி நல்ல மனுஷி என்னை பொறுத்துக் கொள்கிறார்,வாடகை பற்றி கேட்பதேயில்லை.வீட்டு முதலாளியின் மகன் ஒரு கணிபொறி நிறுவனத்தில் மாதம் எண்பதாயிரம் சம்பளம் வாங்குகிறான், அவனிடம் எனக்கு வேலை பெற்று தரும்படி ஒரு முறை சிபாரிசு செய்தாள் முதலாளி அம்மாள், அவனோ என் படிப்புக்கு அவர்கள் நிறுவனத்தில் வேலை கிடைக்காது என்று சொல்லிவிட்டான். அவன் என்ன சொல்வது, எனக்கே தெரியும் நான் படித்த இளங்கலை அரசியல் படிப்புக்கு எப்படி கணினி நிறுவனத்தில் வேலை கிடைக்கும் ஆனால் என்ன செய்ய எண்பதாயிரம் ரூபாய் சம்பாதிப்பவன் சொன்னால் தான் உண்மை என்கிறார்கள். அவன் மகன் அதிகம் சம்பளம் வாங்குவதால் நான் தரும் இரண்டாயிரம் வாடகை அவளுக்கு பெரிதாய் இல்லாமல் இருக்கலாம், அவள் இன்னும் ஐந்து மாதங்கள் கூட வாடகை கேட்க மாட்டாள் காரணம் நான் தந்த இருபத்தி ஐந்தாயிரம் முன்பணம் அவளிடம் இருக்கிறது, என் வாடகை முழுதும் அதில் கழித்துக்கொள்வாள் என்று எண்ணுகிறேன். நான் இப்போதெல்லாம் இந்த அறையை விட்டு அதிகம் வெளியே செல்வதில்லை காரணம் வெளியே சென்றால் வீதியெங்கும் நிறைந்து நிற்கும் உணவகங்கள் என்னை ஈர்க்கும், டீ குடிக்கவே காசில்லாதவன் சோறை நோக்கி ஆசைப்படுதல் அபத்தமே. உங்களுக்கு ஒரு கேள்வி உண்டாகலாம் இவன் ஏன் வேறு வேலைக்கு போகவில்லை போயிருந்தால் இப்படி பஞ்ச பாட்டு பாட தேவையிருக்காதே ? எனக்கும் இந்த கேள்வி தோன்றுகிறது, ஏன் நான் வேலைக்கு போகவில்லை, வேறு ஒரு வேலைக்கு போயிருக்கலாமே, ஒரு நாலாயிரம் சம்பளத்துக்கு கூடவா வேலை கிட்டியிருக்காது ? எனக்கு வேலை செய்ய விருப்பமில்லை, விருப்பமில்லாமைக்கு குறிப்பிட்ட காரணங்கள் ஏதுமில்லை. எப்படியும் ஒரு வேளை சோறு கிட்டிவிடிகிறது, இந்த நகரத்துக்குள் எங்காவது ஒரு மூளையில் அன்னதானம் போடவே செய்கிறார்கள், என்னை போன்ற மனிதர்களின் பசியை போக்கவே வீதி தோறும் அம்மன் அவதாரமெடுத்து காத்துகிடக்கிறாள்.அவ்வபோது ஒரு நண்பனோ தோழியோ தேவதூதர்களாய் காட்சி தந்து மது வாங்கி கொடுத்துவிடுகின்றனர், உணவையும், சாராயத்தையும் தாண்டி எனக்கு பெரிதான தேவைகள் ஒன்றுமில்லை. அவ்வபோது வாழ்க்கையை எப்படி வாழப்போகிறோம் எனும் அச்சம் கலந்த யோசனை வரும். இத்துணை காலம் யோசித்தா வாழ்ந்தோம் இப்போது யோசிக்க என்று அச்சத்தை துரத்த முயற்சிப்பேன், இருந்தும் மிகுதியான நேரங்களில் பயம் பெரும் பூதமாய் அழுத்திக்கொண்டிருகிறது.
வெளியே பலமாய் மழை பொழிந்துக்கொண்டிருகிறது நீண்ட நாட்கள் கழித்து இந்த நகரம் தன் அழுக்குகளை கழுவிக்கொள்ளும் வாய்ப்பினை பெற்றிருகிறது. மழை வலுத்துக்கொண்டே இருக்கிறது வழக்கம் போல் வெறுமை அறையெங்கும் பரவிக்கிடக்கிறது. அழுக்கேறிய எனது போர்வையை போர்த்தியப்படி மழையை வேடிக்கை பார்கிறேன், ஆனந்தியின் நினைவு வருகிறது. ஏன் எனக்கு இப்போது ஆனந்தியின் நினைவு வரவேண்டும்? அவளை நினைக்க காரணங்கள் வேண்டுமா என்ன, இந்த மழை போதுமே அவள் நினைவுகளில் மூழ்க. ஆனந்தி - நிறமற்று சுழன்றுக்கொண்டிருந்த என் வாழ்கையை வண்ணங்களால் அழகுற செய்த தூரிகை (இதை விட மொக்கையான வர்ணனைகளை காதலுக்கு மட்டுமே கொடுக்க முடியும்). என் கல்லூரி தோழி, எங்கள் காதலை பேச கல்லூரி வாழ்க்கைக்கு செல்ல வேண்டும். நீங்கள் தான் எத்துனை காதலை சந்தித்திருபபீர்கள், கடந்து வந்திருப்பீர்கள், கேள்விபட்டிருபீர்கள், படித்திருப்பீர்கள் அதே போலான ஒரு காதல் தான் எங்களுடையதும், வாழ்க்கை எப்போதும் மனிதர்களை பிரிப்பதை போல் எங்களையும் பிரித்து விட்டது. ஆனந்தி ஐரோப்பிய நகரம் ஒன்றில் வாழ்ந்து வருகிறாள்.எத்துனையோ காதலை கடந்து வந்தாலும் இன்னும் ஆனந்தியின் காதல் அப்படியே என் அடிமனதில் படிந்து கிடக்கிறது. எல்லா மனிதர்களும் நம் வாழ்கையில் ஒரு சிலரிடம் மீண்டும் குழந்தையாக ஆசைப்படுவோம், அப்படியாய் நான் ஆசைப்பட வெகு சிலரில் முதலாமனவள் ஆனந்தி . எப்போதும் அதிகமாய் அழைப்பு வராமல் என்னைப்போலான தனிமையிலே வாழ்ந்துவரும் என் அலைபேசி ஒருநாள் திடீரென்று அலறியது, இதற்கு முன் பார்த்திராத எண்.
"வணக்கம், யார் பேசுறிங்க?"என்றேன் மறுமுனை, "முகிலன்" என்றது.
ஆனந்தி?! என்றேன். இன்னும் நினைவு நியாபகம் வைத்துள்ளாயா? என்றாள்,
"குழந்தையாய் இருக்கும் போது அம்மாவின் கைகளை பற்றி நடைப்பழகியது அடிமனதை விட்டு நீங்குமா என்ன?" என்றேன். மறுமுனையில் மௌனம்.
பின் பேச்சு சிறிது நேரம் நீண்டது, பேருக்கு மூன்றாம் மனிதர்களுடன் பேசுவதைபோலான நலம் விசாரிப்புகள், இன்னும் பல,பல சடங்குக்கான பேச்சு. கொஞ்ச நேரம் கழித்து வேறு ஒருநாள் பேசுகிறேன் என்று வைத்துவிட்டாள். அந்தே அழைப்பே அவள் வெளிநாட்டில் வாழ்கிறாள் என்பதை அறிவித்தது. அவள் அழைத்த தொலைபேசி எண்: +33 6714545689. முன்பொரு சமயம் அவளின் பிறந்தநாளை மறந்துவிட்டேன், காதலியின் பிறந்தநாளை கூட நினைவில் கொள்ளாத நீ என்ன ஜன்மம் என்றாள், எண்களில் வாழ்கையை அடைக்க விரும்பாதவன் என்றேன்.ஒரு வருடத்துக்கு முன் அவள் அழைத்த என்னை உங்களுக்கு மனப்பாடமாய் இன்று சொல்கிறேன்,அதுதானே வாழ்க்கை.
2
அவர்களால் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளின் ஆன்மாக்கள் ஓட்காவின் பளீர் வெண்மை நிறத்தில் மிகப் பெரிதான கண்ணாடி குடுவைக்குள் மிதந்துக்கொண்டிருப்பதை அவனால் பார்க்க முடிகிறது. ஆகாயத்தை காட்டிலும் பெரிதான அந்த குடுவை பெரும் அச்சமூட்டுவதாய் இருக்கிறது. பளபளப்பான கருமை நிற கோட்டினையையும், அழகு மிளிரும் கருப்பு சப்பாத்துக்களையும், வெகு சீராய் கத்தரித்த தலைமுடியையும், உதடுகளில் மாறாத புன்னகையையும் கொண்டிருந்த சில மனிதர்கள், லாவகமாய் குடுவையின் மூடியினை திறந்து அவனின் மீது அக் குழந்தைகளின் ஆன்மாக்களை பூச ஆரம்பித்தார்கள். ரோஜாவின் நறுமனமாய் கமழ்ந்த ஆன்மாக்கள், வலுவலுப்பாய் கோந்தைப்போன்று அவர்களின் கைகளில் படிந்திருந்தன. அவனின் உயிர் வழி சிறிது சிறிதாய் நெரிக்கப்படுவதை உனர்கிரான், ஒரே ஒரு துளி தண்ணீர் கிடைத்தால் போதும், தான் உயிர் பிழைத்துக்கொள்வோம் என்று தோன்றுகிறது. ஒரு ஒவியத்துக்கு இறுதி பூச்சு கொடுப்பதை பொன்ற தோறனையில் அவர்கள் ஆன்மாக்களை அவன் மீது தடவிக்கொண்டிறுந்தார்கள். மானுட ரத்ததில் செய்யப்பட்ட சிவப்பு கற்களை அவன் மீது அவர்கள் அடுக்க ஆரம்பித்தார்கள், அவன் மரனத்தின் முக்கால் பாகத்தை கடந்திருந்தான். இன்னும் சில நொடிகள்...சில நொடிகளில் அவனின் மூச்சு நின்றுவிடும் என்று அவனுக்கு தெரியும்.தனக்கு மேலே ஆகாயம் பகலும், இருளும் இல்லத நிலையில் சூரியனையும் நிலவையும் ஒர் கோட்டில் நிறுத்தியிருந்தது. எல்லாம் சூன்யமான அந்த நொடிப் பொழுதினை விட்டு வெளியேற எத்துனை முயன்றும் அவனால் முடியவில்லை. மரனத்துக்கும் வாழ்வுக்கும் இடைப்பட்ட அந்த நொடி.... அவர்கள் பூசிக்கொண்டிருக்கும் ஆன்மாக்களின் ஏகாந்த நறுமனம் அவனது காமத்தை தூண்டி விடுகிறது. அவன் அவனையே புணர ஆரம்பிக்கின்றான், அவன் அவனுக்கு கொடுத்த முத்தங்கள்..ஒரு முடிவற்ற யுகமாய் விரிந்துக்கொண்டே செல்கின்றன. புன்னகை மனிதர்கள் தங்கள் பணியின் இறுதிகட்டத்துக்கு வந்திருந்தார்கள். ஆம் அவன் மரனிக்கப்போகிறான். அவனின் அன்மாவால் நிர்ம்பப்போகும் அந்த புதிய கன்னாடி குடுவை அவனை பருகப்போகும் பெரும் வேட்கையுடன் தயாராக இருக்கின்றது. பளபளப்பான அந்த புதிய குடுவை தேவதைகளின் ஒளிமிகுந்த கண்களை போன்று ஒளிவீசியது (அவன் முன் ஒரு கனம் தோழியின் ஒளிப்பொறுந்திய கண்கள் தோன்றி மறைந்தன) சிறு வயதில் அவன் கண்ட கனவுகளில் கடிக்க துரத்திய நாயின் அகோர பற்களையும் கொண்டு அவனுக்காய் காத்துக்கிடந்தது.
தொடர்ந்து வந்த தாயின் தொலைபேசி அழைப்பு அவனை மரனத்திடமிருந்து மீட்டது, தூக்கம் களைந்த கண்களுடன் அம்மவுடன் பேச ஆரம்பித்தான்.
“இப்ப எதுக்கு லப, லபனு இத்துன தடவ போன் பன்னுற? சும்மா, உக்காந்து தின்னையவா தேச்சுகிட்டு இருக்கேன்”
மறுமுனையில் அழுகையும், பதட்டமுமாய் அம்மா அந்த விடயத்தை அவனுக்கு சொல்ல ஆரம்பிதாள்....
எங்கள் ஊர் வழியாக செல்லும் நெடுஞ்சாலையை நான்கு வழி பாதையாக மாற்றும் புதிய திட்டத்தை அரசு ஆரம்பித்துள்ளது. அதற்காய் ரோட்டின் இருபுறமும் இருக்கும் இடங்களை (அரசின் குறிப்புபடி: ஆக்கிரமிப்புகளை) இடித்துதள்ளி கையகப்படுத்தும் பணியை தொடங்கிவிட்டார்கள். ஏற்கனவே சாலையின் இருப்புறங்களிலும் இருந்த புளியன் விருட்சங்களை மனிதர்களைப் போன்றான இரண்டு கைகளையும், சாத்தானின் உருவமாகவும் இருந்த ராட்சத இயந்திரங்கள் மன்னோடு சாய்த்துவிட்டன. என் தாத்தா குப்பன் சிறுவனாக இருந்தபோது நடப்பட்ட இந்த விருட்சங்கள் வேறோடு சாய்ந்து கிடப்பதையும், அவை கட்டைகளாகி எங்கோ பெயர் தெரியா ஊர்களில் கொள்ளியாய் மாறிப்போகும் காட்சிகள் என் முன் ஒடிக்கொண்டிருக்கின்றன. நாங்கள் வாழ்ந்து வந்த எங்களின் சிறிய ஓட்டு வீடு நெடுஞ்சாலையின் ஓரத்திலே இருக்கின்றது...இந்த கதையின் மீதியை நீங்கள் இதுகாலம் யூகித்துக்கொண்டிருக்ககூடும். ஆம் நீங்கள் யூகித்ததைப்போன்றே எங்கள் வீட்டின் பாதி இடம் புறம்போக்கு நிலமாம், அடுத்த வாரம் வரை வீட்டை காலி செய்ய அவகாசம் கொடுத்திருக்கின்றார்கள். குப்பனும் அவன் கிழத்தி சின்னதாயும் கூடி பெற்றெடுத்த ராசனும் அவன் மனைவி ருக்குவும் கூடி ஒரு முன்பனி இரவின் நடுசாமத்தில் பிறந்த நானும் என்று 3 தலைமுறைகளை பார்த்த வீடு இன்னும் சில தினங்களில் மரனத்தின் வாசலுக்குள் செல்லப்போகிறது. இடிந்த சுவர்கள் மட்டுமே அங்கு ஒரு வீடு இருந்தது என்பதற்கான அடையாளமாய் மிச்சமிறுக்கும்.
வீட்டின் முன் ஆசையோடு வளர்த்த தென்னைமரமும், வாழைகளும் இல்லாமல் போய்விடும். விளையாட்டு களிப்பில் அடிப்படுகையில் மருந்தாய் அள்ளி பூசிய மண், இன்னும் சில பொழுதுகளில் தார் மூடி மரித்து கிடக்கும்.வெயில் காலங்களில் பெரும்மழைக்காய் ஏங்கிகிடக்கும் வேளைகளில் கண்ணீர் துளியைப்போல் மேகக்கூட்டங்கள் 2-3 துளிகளை சிந்திச்செல்லும் நேரத்தில் ஏகாந்தமாய் நுகர்ந்த மண்வாசத்தின் மீதும், அள்ளி தின்ற ஈர நிலத்தின் மீதும் இனி கார்களும், பஸ்களும் பவனி வரும். பல நூறு மனிதர்கள் தினம், தினம் அந்த இடத்தை கடந்து போவார்கள். அங்கு ஒரு வீடு இருந்ததோ, அந்த வீட்டில் சின்னதாயும், ருக்குவும் பிள்ளைகள் பெற்றதோ, நான் அள்ளி தின்ற மழை மண்ணோ, ஆசையாய் வளர்த்த தென்னை மரமோ, ஆயிரம் ஆயிரம் பயணிகளுக்கு நிழல் தந்த புளியன் விருட்சங்களோ அவர்களுக்கு தெரியாது. அவர்களால் பார்க்க முடிந்தது எல்லாம் வெப்பம் தகிக்கும் நீண்ட கறும் தார் சாலைகள் மட்டுமே. அவற்றின் அடியில் புதையூண்டு கிடக்கும் 3 தலைமுறையின் வாழ்க்கையும் வறலாறும் கானாமல் போய்விட்டிருக்கும். வாழ்க்கையின் வேகத்தில் பயணிகள் வறலாற்றின் பிணங்களை மிதித்து விட்டு சென்றுக் கொண்டிருப்பதை என்னால் மனக்கண்களில் கான் முடிகிறது.
நான்கு வழி சாலைகள் எத்துனை அற்புதமான பெயர், என் ஊரிலிருந்து நான் வாழும் இந்த பெருநகருக்கு வரும்போதெல்லாம் வானியம்பாடியில் தொடங்கும் அலுக்கள், குலுக்கள் இல்லா சொகுசு பயணம். ஒரு தேவதையின் கருமை நிற வளவளப்பான தோல்களுக்கு ஒப்பான அழகுடனே இருந்தன இந்த சாலைகள் (எல்லாம் என் நிலம் பறிக்கப்படும் செய்தி காதில் விழும் வரை மட்டுமே). நான் வாழும் மாபெரும் தேசத்தின் வளர்ச்சியின் குறியிடு அல்லவா இந்த தார் சாலைகள்.நான் பயணித்த நான்கு வழி சாலைகளில் எத்துனை வரலாற்று பிணங்களை மிதித்து வந்திருப்பேன். எத்துனை நூறு புளியன் மரங்கள் கானாமல் போயிருக்கும். எத்துனை ஆயிரம் “நான்”கள் பிறந்திருப்பார்கள் நான் கடந்து சென்ற தார் சாலைகளுக்கு அடியில். குற்றவுனற்வு தீபிளம்பாய் மன்ம் முழுதும் பறவத்தொடங்கியது, கடும் காய்ச்சல் கண்டவனாய் உடல் நடுங்கியது, முகம் முழுதும் வியர்வையின் துளிகள். உலகதை விடுத்து வெகு தூரத்தில் தனித்துவிடப் பட்டிருந்தேன்.
தொலைபேசியின் மறுமுனையில், அம்மாவின் கூப்பாடு என் சுயத்தை மீட்டு கொடுத்தது. அந்த ஊருக்கும் எனக்குமான ஒரே தொடர்பு முடியவிருக்கும் நிசம் மனதில் பெரும் வலியை கொடுக்கிறது, மனம் பேதளிதவனாய், நீர் வழியும் கண்களுடன் அம்மாவுக்கு பதில் பேசத்தெரியாது மௌனமாய் இருந்தேன். அழுகையும், விசும்பல்களும் அடங்கிப்போய் ஒரு சில நிமிடங்கள் எங்களின் உரையாடலில் கனத்த மௌனம் நிளவியது. தெளிந்தவளாய் அழுகையால் உடைந்திருந்த குரலை சரி செய்தப்படி அம்மா சொன்னாள் “ நானும் உன்கிட்டயே மெட்ராஸுக்கே வந்துரேன், இந்த ஊருல இன்னும் என்ன கெடக்குது”
Comments
Post a Comment