Skip to main content

கொம்புக்காரன்


நாள்: 18/04/1993

          மழை விடாமல் அடித்துக்கொண்டிருந்தது, மணி அதிகாலை நான்கு இருக்கும். எங்கும் கும்மிருட்டு பெருமழையாதலால் சுற்றிலும் ஆள் அரவமில்லை, இல்லையெனில் பால் கறக்கவாவது ஒருவர் இருவர் போவதும் வருவதுமாக இருப்பர். கொம்புக்காரன் எங்களை ஒரு மரத்தில் கட்டிவிட்டு அருகிலிருந்த பழைய கொட்டாயில் ஒதுங்கி நின்றுக் கொண்டிருந்தான். விடியும் முன் புதன் சந்தையை அடைந்துவிட வேண்டும், மழையின் வேகத்தை பார்த்தால் விடிந்தாலும் விடாது போல்தான் இருக்கிறது. மழை சிறிது ஓய்ந்தால் கூட போதும் அவன் தலையில் எதையாவது போர்த்திக்கொண்டு எங்களை விரட்ட ஆரம்பித்துவிடுவான் . அவன் பாவம் என்னை செய்வான் ஒழுங்காய் சரியான நேரத்துக்கு எங்களை கொண்டுப்போய் சேர்த்தாலே கூலி கொடுக்க வியாபாரி மூக்கால் அழுவான், இதில் தாமதமாய் போனால் ? மேலும் சீக்கிரம் போனால் தானே நல்ல விலைக்கு எங்களை விற்க முடியும். மழை இன்னும் விட்ட பாடில்லை அடிவானம் வெளுக்க தொடங்கியிருந்தது. கொம்புக்காரன் எங்கிருந்தோ கிடைத்த சவ்வு காகிதத்தை தலையில் மாட்டியபடி எங்களை மரத்திலிருந்து அவிழ்த்து நடக்க ஆரம்பித்தான். நேற்று இரவு முதல் இவனுடன் நடந்துக்கொண்டிருக்கிரேன், நடையை ஆரம்பிதாலே எம்ஜியார் பாட்டுக்கள் அவன் குரல் வலையை விட்டு தானாக வெளிவர ஆரம்பித்துவிடுகிறது.

“ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் யாரும் இல்லை....நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன்.... ஹோய், ஹோய்...ட்ட்ரா...ட்ட்ரா...வாழ்வதில்லை........

      குடையை பிடித்தபடி தன் நிலத்தை நோக்கி நடந்து போய்கொண்டிருந்த தவுடு கவுண்டனையும் தலையில் கோணியை போர்த்தியபடி அவன் பின்னே போய்க்கொண்டிருந்த ஆள்காரன் மாரி சக்கிலியையும் கடந்து வேகவேகமாய் நாங்கள் சந்தையை நோக்கி நடந்துக்கொண்டிருந்தோம். கொம்புக்காரன் அவசரத்தில் எங்களை விரடிக்கொண்டிருந்தான். ஒரு மணினேரம் கடந்திருக்கும் எருமியாம்பட்டியை தாண்டியிருந்தோம் இன்னும் சில தூரத்தில் புதன் சந்தை வந்துவிடும். எவன் வீட்டுக்கு போகப்போகிரேனோ. அடிமடியில் ரத்தம் வரும்வரை பாலை கரக்காமல் இருந்தால் சரி. தவிடு, புன்னாக்கு, தீவனமெல்லாம் கிடைக்கவேனும் சாமி காஞ்ச புல்லையே போட்டு நாக்க சாகடிக்கபோறாங்க கருமம்பிடிச்சவனுங்க. சிறிது நேரத்தில் புதன் சந்தையை அடந்திருந்தோம். எல்லா வியாபாரிகளைப் போலவே அந்த வியாபாரியும் கொம்புக்காரனை திட்டிக்கொண்டிருந்தான்.

“படவா, தாயோளி எப்ப டா வர நீ? தொரை வருவாருனு ரோட்டையே பாத்துனுகீனுமா? பைத்தியகாரபயலே”

“இல்ல சாமி வழில ஒரே மழ, அத்தான் சீக்கிரமா வரமுடியல” தலையை சொரிந்தப்படி ஒருமாதிரி வாயை கோனி சொன்னான் கொம்புக்காரன்.

”காசு கெடைக்குர திமிரு, இருடா இன்னைக்கி எப்படி காசு வாங்குறனு பார்க்கிரேன்” என்று சொல்லியவாறு எங்களை விலை கேட்க வந்த ஒரு வெள்ளை உடை மனிதனை பார்த்து வாங்க ஐயா என்று குழைந்தபடி சென்றான் வியாபாரி. கொம்புக்காரனை அப்போது தான் வெளிச்சத்தில் பார்த்தேன். பரட்டை தாடி, சிக்கேறிய தலை மயிர், அழுக்கு லுங்கி, மேலே கிழிந்த பனியன். புலியன் மரத்தை வெறித்து பார்த்தப்படி எதையோ பேசிக்கொண்டிருந்தான் ஒருவேளை வியாபாரியை கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டிருப்பான்.


சாயங்காலம் வரை அவன் அங்கேயே கிடக்கவேண்டும், இந்த மாடுகள் எல்லாம் விற்ற பின் எல்லா கனக்குகளும் வரவு பார்த்து முடிந்தவுடன் தான் இவனுக்கு கூலி கிடைக்கும், இன்று நிச்சயம் கம்மியாகதான் தருவான் வியாபாரி கேட்டால் தாமதமாய் வந்தாய் என்பான். கடும் பசி - காசு கிடைத்தவுடன் வேடியம்மா கடையில் 4-5 இட்டிலி திங்கவேண்டும் அப்படியே ஒரு டீயும் என்று யோசித்தான் கொம்புக்காரன். அவன் பெயர் என்னவென்று அவனுக்கு இதுனாள் வரை தெரியாது எல்லோரும் பைத்தியம் என்பார்கள் மாடுபிடிக்கும் தொழிலை செய்ய தொடங்கியபின் கொம்புக்காரன் என்றோ அல்லது எப்போதும் போல் பைத்தியக்காரன் என்றோ அழைக்கிறார்கள். அவனுக்கு அதைபற்றி எந்த அக்கறையும் இல்லை. சோற்றுக்கு வழியிருப்பவர்களுக்கு தானே பெயர் குறித்தான கவலைகள் எல்லாம். இன்னும் அந்த புளியன் விருட்சத்தை வெறித்தப்படியே இருந்தான்..தூரத்திலேயே அவனின் குரல் சப்தமாய் கேட்டது

“இங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு.... ஹ! ஹ! ஹா!....நீ சிரிக்கும் பொன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு....ஓ ஓ ஓ.... நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி.......”

அவன் மனம் சர்பத்தின் நீண்ட உடலைப் போல் வளைந்து, நெளிந்து நியாபக இடுக்கின் அடியாளத்தில் பயணித்துக்கொண்டிருந்தது. வயிற்றுப்போக்கில் ஒரு மாதம் அரூர் ஆஸ்பத்திரியில் படுத்துக்கிடந்து மரணமடந்த அக்காள் தேவகியின் வெளிர்ந்த முகம் பழைய ஒவியமாய் சிதைந்து ஓடுகிறது. அப்பனால் குடிபோதையில் கொல்லப்பட்ட அம்மாவின், மரித்த உடலில் விரைத்த வெடிப்புகளின் இடுக்குகளில் வெளியேறிக்கொண்டிருந்த மானுட பெருநாற்றம் அவன் சுவாசத்தை தினறடித்து கொண்டிருந்தது. அவனையறியாமல் பெரும் குரலெடுத்து கதறுகிறான்...அந்த அழுகையின் ஒலி அவனிலே அடங்கி அவன் மூளையின் இருண்ட கதவுகளை உடைத்து அவன் நினைவுகளை புசித்துக் கொண்டிருக்கிறது. அவனின் பெரும் கதறல் சுற்றி படுத்திருந்த யாருக்கும் கேட்கவேயில்லை. தன் நினைவுகள் தின்னப்பட்டுக்கொண்டிருப்பதை அவனால் அமைதியாக பார்க்க மட்டுமே முடிந்தது.

அவனை போலவே பல கொம்புகாரர்கள் அங்கிருந்தார்கள். யாருக்கும் இன்னும் கூலி பைசல் செய்யப்படவில்லை மாலை வரை காத்துகிடக்க தான் வேண்டும். அந்த பெரிய புளிய மரத்தை சுற்றி கதைகளும், விளையாட்டுக்களும் அரங்கேறிக்கொண்டிருந்தது. இவன் யார் பேசுவதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை தனியாக மரத்தை பார்த்து பாடிக்கொண்டிருந்தான். ரவிப்பிரியாவில் ஓடிக்கொண்டிருக்கும் ரஜினி படத்தை பற்றி இரண்டு கொம்புக்காரர்கள் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அதை கேட்கும் ஆர்வத்தில் அவனும் அவர்களுடன் இணைந்துக்கொண்டான். இவர்கள் எல்லாம் எப்படி கொம்புக்காரர்கள் ஆனார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. ஏதோ ஒரு பொழுதில் ஒரு வியாபாரி காசு கொடுக்கிறேன் என்று சொல்லியிதை கேட்டு மாட்டின் மூக்கனாங்கயிறை பிடித்தவர்கள் இவர்கள். வரலாறில்லாமல் பிறந்து மரிக்கும் பல கோடி உயிர்களில் இவர்களும் அங்கம். பால்காரர், மருத்துவர், பொறியாளர், திருடர் என்பதை போன்ற எந்த ஒரு தொழிற்பெயர் அடையாளமும் இல்லாத மனிதர்கள் இவர்கள். கொம்புகாரன் என்பதுக்கூட அந்த ஊரின் வழக்கத்தில் அழைக்கப்படும் பெயர். மணி மலை ஐந்து, புளியன் விருட்சத்தின் அடியில் தூங்கிக்கொண்டிருந்தவனை அதட்டி எழுப்பினான் வியாபாரி. பதறிப்போய் எழுந்தவன் வியாபாரியை பார்த்து வாய் கோனியப்படி இளித்தான்.


“இப்பவே என்ன தூக்கம் வேண்டிருக்கு நாயே, வேலையா செய்யலனாலும் சொகமா தூங்கு..... இந்தா உங்காசு 15 ரூபா”


நினைத்தப்படி 10ரூபாயை பிடித்துக்கொண்டு தான் கூலி கொடுத்தான் . எதும் சொல்லாமல் வாங்கிக்கொண்டு ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தான் கொம்புக்காரன். பசி குடலை உருவியது. நாளை அவன் மோலையானூர் போக வேண்டும் அங்கிருந்து சில உருப்படிகளை பிடித்துக்கொண்டு பேளூர் சந்தைக்கு போகவேண்டும். அவனின் யோசனை முழுதும் வேடியம்மா இட்டிலி மீதே இருந்தது, நாளைய பாடு நாளைக்கு. தின்னு முடித்ததும் போகும் வாழியில் ரவிப்பிரியாவில் ஓடும் ரஜினி படத்தை பார்த்துவிட வேண்டும், அப்புறம் கானியம்மா கோவில் வாசலில் தூக்கம்.

ரஜினிப்படம் ரஜினி படம் மாதிரியே இல்லை...ரஜினி அடிவாங்கிகொண்டே இருக்கிறார். என்ன எலவு படமோ ரஜினி அடிவாங்கனா அது படமா? பார்க்கபிடிக்காமல் பாதியில் வெளியே வந்தான் கொம்புக்காரன். இனி என்ன செய்வது கானியம்மா கோவிலை நோக்கி நடக்க ஆரம்பிதான். அவன் மனம் புதர் பக்கம் லாயித்திருந்தது. இன்னேரம் பிச்சை எடுத்து முடித்துவிட்டு கோவிலுக்கு வந்திருப்பாள் அவள், புதர் பக்கம் ஒதுங்கினால் தேவைலாம் என்று தோன்றியது அவனுக்கு. அவன் எதிர்பார்த்ததுபோலவே அவள் அங்கிருந்தாள் அவளை பார்த்து பல்லிளித்தான். ”அரிச்சாதா என் நெனப்பு வரும் நாய்க்கு” என்று சொல்லியபடி புதரினை நோக்கி நடக்க ஆரம்பிதாள், ஒளி மங்கிய குண்டுபல்ப் வெளிச்சத்தில் அவளின் ஒடுங்கிய பின்புறம் அழுக்கு ஆடைகளை சுற்றியவாறு தெரிந்தது. இருட்டின் அடர்த்தியில் இருவரின் முனங்கள் சப்தமும் யாருக்கும் கெட்கவே இல்லை. கோவிலுக்குளிருந்த கானியம்மாளுக்கு கூட.

கோவிலின் முற்றதில் தலை வைத்து படுத்திருந்தான் அவன், அவள் தூரத்தில் உரங்க்கொண்டிருந்தாள். அவனுக்கு தூக்கம் பிடிப்படவில்லை வானம் கருமையாக இருந்தது மழை வரலாம். கொம்புக்காரனுக்கு பாட வேண்டும் போலிருந்தது. மாலை பார்த்த ரஜினி படம் நினைவுக்கு வந்தது. அதில் நாயகியுடன் ரஜினி ஆடி பாடிய அந்த பாட்டை போலவே பாடி ஆட வேண்டும் என்று தோன்றியது அவளை எழுப்ப எத்தனித்தான் ஏனோ எழுப்பவில்லை. என்ன பாட்டு அது ஓடம்பு முழுசும் எண்ணைய தேச்சுகிட்டு ரஜினியும் அவளும் எப்படி ஆடினார்கள். தாடி சிலிர்த்து நின்றது. அவனை ரஜினியாக உருவகப்படுத்திக்கொண்டான். அவளின் நினைவிலே உறங்கிப்போனான்.


நாள் 12/02/2013 திங்கட்கிழமை பிரபல நாளிதழின் தருமபுரி மாவட்ட செய்திகள் பக்கதில் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய ஒரு செய்தி:

பாப்பிரெட்டிப்பட்டி டிச 02 - பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அலமேலுபுரத்துக்கு அருகே மாடுகளை சந்தைக்கு ஏற்றி சென்ற மினிலாரி மோதி இருவர் பலி. பலியானவர்களில் ஒருவர் வயதான ஆண் என்றும், மற்றொறுவர் 50 வயது மதிக்கதக்க பெண் என்றும் பள்ளிப்பட்டி காவல் நிலைய துனை ஆய்வாளர் தகவல். ஆள் பெயர், மற்ற அடையாளங்கள் தெரியவில்லை.


தூரத்தில் எம்ஜியார் இன்னும் பாடிக்கொண்டே இருந்தார்......


ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதனாலே

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை...........................

Comments

  1. Kombukaaran. nan pala kombukararkalai paarthathu undu. Eni sandhika pogum kombukaran ilavenil in kombukarargalaga erupargal.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்: வெறுப்பை ஜனநாயகப்படுத்தும் அழகியல்!

0. பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்: “நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது” 1. மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போ...

In the most health-obsessed society ever, all is not well*: On Trauma

1 Philosopher Byung-Chul Han's essay Neuronal Power begins with the following lines: " Every age has its signature afflictions. Thus, a bacterial age existed; at the latest, it ended with the discovery of antibiotics. Despite widespread fear of an influenza epidemic, we are not living in a viral age. Thanks to immunological technology, we have already left it behind. From a pathological standpoint, the incipient twenty-first century is determined neither by bacteria nor by viruses, but by neurons ". Modern integrative body mind science defies Byung-Chul Han’s statement, that it is reductive to define human suffering solely in terms of ailments. However, we are living in an era, where production relations dictate nearly everything about human existence, in this specific context Byung-Chul Han’s statement—that the majority of human society is afflicted by mental or neuronal issues—serves as a foundational lens to understand contemporary humans and their struggles. In today’...

படுகொலைக்கு முன்னான சில மணி நேரங்கள்

    ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன் , எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை . அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட   நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன் , ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல் . கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை . உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை , இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை . அதே நேரம் ஒளியற்று , ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது , சூடான மழைத் துளியை போல் . மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது ... அம்மாவின் முலை காம்புகள் , விபத்தொன்றில் மரணித்த நன்பன் , தேர் திருவிழா , அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள் , அவளின் முதல் முத்தம் , இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம் , கல்லூரியின் விடுதி அறை , முதல் காமத்தின் வெள்ளை இரவு ... இப்படி சொல்லி ம...