Skip to main content

புன்னகைக்கும் புத்தன் - மாபெரும் சனநாயகத்தின் சர்வதேச அரசியல் கொள்கைகள்



        நாங்கள் குசால் நகரை அடைந்த அந்த தினத்தில் தான் இந்திய சனநாயகம் தனது 67வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தது. கருனாடகத்தின் வீதிகள் எங்கும் மூவர்ண கொடிகள் பட்டொளி வீச காட்சியளித்தன.”பாரத் மாத்தா கி ஜே” குடகு மலைகளின் சிகரங்களில் எதிரொலித்து கொண்டிருந்தது. குசால் நகர் மைசூரிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில், குடகு மலைகளின் அடிவரத்தில் இருக்கும் ஒரு மலை ஊர். அங்கிருந்து தான் தங்க கோவிலுக்கு போக வேண்டும், சிறு பிள்ளைகள் கூட ”கோல்டன் டெம்பல்” என்று கேட்டால் வழி சொல்கிறார்கள். ஆட்டோவில் 5-6 கிலோமீட்டர் பயணம்…பைலாகுப்பே எனும் கிராமத்தை அடைகிறோம். நாம்ட்ரோலிங் மடத்தின் (Namdroling Monastery) பிரமாண்ட நுலைவாயில் என்னையும், தோழியையும் புன்னகையுடன் வரவேற்றது. அதுதான்"கோல்டன்டெம்பல் " என்று சொல்லப்படும் புத்த கோவிலின் வாசல்.கோவிலாக மட்டும் இல்லாமல் பௌதத்தை போதிக்கும் கல்வி நிலையாமாகவும் இருக்கிறது என்பதை உள்ளே சென்றவுடனே உனர்ந்தோம்..ஒரு தத்துவதை எப்படி கற்பிக்க முடியும் எனும் என் கேள்விக்கு, மதத்தை கற்பிக்க முடியும் என்று பதில் சொன்னபடியே கைகளை பற்றினார் தோழி. திரும்பி பார்க்கும் இடமெல்லாம் பிக்குகளால் நிறம்பி இருந்தது அந்த இடம்.சிவப்பு ஆடைகளும், முழுதும் மழித்த தலையுமாய் எங்கும் “புத்தம், சரணம், கச்சாமி”.இந்திய தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடும்விதமாக அனைவருக்கும் இனிப்புகளை கொடுத்து கொண்டிருந்தார்கள் இரண்டு பிக்குகள் (அநேகமாய் அவர்கள் இந்தியர்களாய் இருக்க வேண்டும்) எங்களுக்கும் புன்னகையுடன் இனிப்புகளை வழங்கினார்கள். மிக நீண்ட அந்த மடம்ஒரு அதிசயம் போல் விரிந்துக்கொண்டே சென்றது, இறுதியாய் நாங்கள் புத்தர் புன்னகையுடன் அமர்ந்திருந்த கோவிலினுள் சென்றோம். மிக விசாலமான மண்டபம்.60 அடி உயரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் எப்போதுமான புன்னகையுடன் அமர்ந்திருந்தார். அருகில் புத்தரை காட்டிலும் உயரம் சிறிது குறைந்தவர்களாய் இரு வேறு கடவுளர்கள் இருதார்கள் (பத்மசாம்பவா, புத்த அமிதாசு) புத்தனை தவிர, பௌத்ததில் வேறு கடவுள்களை அறியாத எனக்கு எல்லாம் புதிதாக இருந்தது. கோவில் சுவர்கள் எங்கும் சிறுதெய்வங்களின் படங்கள், மண்டை ஓடுகளும், ரத்தமும் அந்தபடங்களில் நிரம்பியிருந்தன.அனேக தெய்வங்கள் கொலைவெறியுடனே இருந்தார்கள், கேள்விகளுடன் தோழியை பார்த்தேன்.எப்போதுமான புன்னகையுடன் பௌத்த தத்துவம் வேறு, பௌத்த மதம் வேறு என்றார்.

      சிறிதுநேரத்திற்கெல்லாம் பூசை ஆரம்பித்தது, 200-300 இளம்பிக்குகள்அந்த மண்டபத்தை ஒரு சில நொடிகளில் நிரப்பினார்கள், புத்தரின் பிரமாண்ட சிலைக்கு முன்னேஅமர்ந்த அவர்கள் திபெத்ய மொழியில் தெய்வ பாசுரங்களை படிக்கஆரம்பித்தார்கள் (அவர்கள் படித்தது திபெத்யமொழிஎன்பதும், அவர்கள்அனைவரும், புத்தமதத்தை பயிலும் மாணவர்கள் என்பதும் ஒரு பிக்கு சொல்லி அறிந்தோம்), அந்த கோவில் முழுதும் புத்தனின் நாமம் ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரே ஒரு சிறுவன் மட்டும் பூசையில் கலந்துக் கொள்ளாமல் கடவுளை விழுந்து, விழுந்து கும்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் செய்தது பள்ளியில் நான் உக்கி போட்டதை நினைவுபடுத்தியது, கால்கள் ஒரு நிமிடம் கடுமையான வலியில் துடித்துஅமிழ்ந்தன.அவன்தொடர்ந்துஅவ்வாறே செய்துக்கொண்டிருந்தான், அவனையே கவனித்துக் கொண்டிருந்த தோழி இங்குமா இத்தகைய கொடூர தண்டனைகள் என்றார் அதிர்ச்சியுடன். ஆம், அவன் தனக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றிக் கொண்டிருந்தான்.இளம்பிக்குகள் ஒழுங்காய் பாசுரங்களை பாடுகிரார்களா என்பதைகண் காணிக்கும் விதமாய் சற்றேவயது கூடிய 3-4 பிக்குகள் வரிசைகளில் நடந்தபடி நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர்.அங்கு ஒரு கல்வி நிலையத்துக்கான அத்துணை கூறுகளும் வெளிப்படையாக தெரிந்தன.வழக்கம் போலான கடைசி வரிசை மாணவர்கள் வருவோரை, போவரை பார்த்தபடியும் கிண்டல் செய்தவண்ணமும், பெண்களை ரசித்துக் கொண்டும் அமர்ந்திருந்தனர்.சிலர் தங்கள் முன்னிருந்த புத்தக பலகைக்கு அடியில்அலைபேசிகளில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். நானும் தோழியும் கடைசிவரிசையில் இருந்த 3பிக்குகளிலே நிலைத்து இருந்தோம். பள்ளிப் பருவ நினைவுகள் மனதில் அலைமோதியது. கடைசி வரிசையர்களே ஒரு அமைப்பை, அதன் அமைபியலை கேள்வி கேட்கவும், உடைக்கவும் துணிகின்றனர் என்றேன். ஆம் என்று புன்னகைத்தார் தோழி. புத்தனின் புன்னகை என்றேன், மனிதனின் புன்னகை என்றுஅதே புன்னகையுடன் பதில் தந்தார். சிறிது நேரம் கோவிலில் கழித்துவிட்டு வெளியே வந்தோம். நாங்கள் விட்டு சென்ற காலணிகளை பொருக்கி அதற்கான இடத்தில் வைத்துக் கொண்டிருந்தான் ஒரு இந்திய சிறுவன். அந்த காட்சி மனதில் ஈட்டியாய் குத்தியது, அவன் எந்த சலனமும் இல்லாமல் 4 ரூபாய் வாடகை வாங்கிக் கொண்டு எங்களிடம் காலணிகளை திருப்பி கொடுத்தான். அவன் அங்கு காலணிகளை பராமரிக்கும் வேலையை செய்கிறான் என்பது புரிந்தது. வயது கூடிய, அதிகாரமிக்கவராய் காட்சியளித்த சில பிக்குகள் மட்டும் கோவிலினுள் காலணிகளுடன் உலாவினார்கள் (அடிடாசுக்களும், பூமாக்களும்பளபளத்தன), அனைவருக்கும் அதே அதிகாரத்தை புத்தன் வழங்கியிருக்கலாம், எல்லோர் காலணிகளையும் சுமக்கும் ஒரு பரதன் வேறு வேலையை செய்திருப்பான் என்று தோன்றியது. கனத்த மௌனத்துடன் பெரும் மதில் சுவர்காளால் பாதுகாக்கப்பட்ட அந்த பௌத்த விகாரையை விட்டு வெளியேவந்தோம்.

கோவிலின் வாசலில் இருந்த அநேக கடைகளில் திபெத்தியர்களை காண முடிந்தது. அவர்களால் நடத்தப்பட்டும் கடைகள் அவை. துக்கடைகள், திபெதிய உணவுகளை விற்கும் சில உணவகங்கள் என்று நிறைந்திருந்தது அந்த இடம். மடத்தின் எதிர் புறத்தில் மடத்துக்கு சொந்தமான பெரிய மருத்துவமனை இருந்ததையும் பார்த்தோம். கடைகளை பாப் மார்லியும், சே குவேராக்களும், திபெத் விடுதலையை குறிக்கும் வாசகங்கள் நிரம்பிய டிசர்ட்க்களும் தொங்கி கொன்டிருந்தன. எல்லோர் மனதிலும் விடுதலைக்கான குரல் நிரம்பிகிடந்ததை உணரும் போதே மகிழ்ச்சியாய் இருந்தது. இருவரும் வழி தெரியாத ஒரு பாதையில் நடக்க ஆரம்பித்தோம், வயல்வெளிகள் நிரம்பியஅந்த சாலை ஒரு ஓவியமாய் நீண்டுக் கொண்டிருந்தது.

சில திபெத்திய குழந்தைகள் பள்ளியில் இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு கைகளில் கொடிகளுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள், ஆட்டோக்கள் புத்த பிக்குகளை தாங்கியபடி வேகமாய் சென்றுக் கொண்டிருந்தன, சில இந்தியர்கள் பைக்குகளிலும், ஆட்டோக்களிலும், நடந்தும் சென்றுக் கொண்டிருந்தனர். நாங்கள் சில தூர நடைபயணத்துக்கு பிறகு ஒரு கல்லில் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம். எங்கள் பின்னே கண்ணனுக்கு எட்டும் தூரம் வரை சோள வயல்கள், நடுவில் ஒரு ஒரு ஒற்றை மரம். வான்கோவின் ஓவியம் ஒன்று நினவுக்கு வந்தது. வெகுநேரம் மௌனமாய் நான் அந்த வயல் வெளியை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். குழந்தையான அந்த புத்த பிக்கு எங்களை கடந்து புன்னகையுடன் கடந்து செல்லும்போது, தோழி என்னை அழைத்து அந்த குழந்தையை பார்க்க சொன்னார். நான் சுயம் மீண்டு அந்த சிறுவனை பார்த்தேன், நான் அது வரை பார்த்து கொண்டிருந்த வயல் வெளிகளின் அழகையும் மிஞ்சுவதாய் இருந்தது அவன் புன்னகை. அதே நேரம் ஏது மறியா பாலகனான அவன் தரித்திருந்த பிக்குவின் கோலம் ஒரு வித வலியை கொடுத்தது, அவன் எங்களை கடந்து சென்றுக் கொண்டிருந்தான். நாங்கள் அவனை பார்த்தபடியே அமர்ந்திருந்தோம். அவன் எதற்காய் இந்த வயதில் புத்த பிக்குவாய் மற்றபட்டான், அவன் அறியாமல் அவனை இந்த நிலைக்கு தள்ளியது எது? யசோதரையின் இரவுகளை முத்தங்களால் நிரப்பிய சித்தார்த்தன் தானே புத்தனானான், அவன் பெயரில் இந்த குழந்தை மட்டும் ஏன் இந்த சூனியமான வாழ்வை தரிக்க வேண்டும்? என்று விரக்தியுடன் பேசி கொண்டிருந்தார் தோழி. நான் அமைதியாய் இருந்தேன், வெறுமை மட்டுமே மிஞ்சியிருந்தது

மீண்டும் நடக்க ஆரம்பித்தோம், இன்னொரு மடம் கண்களில் தெரிந்தது, பெண்கள் தங்கி புத்த மதத்தை கற்கும் மடாலையமது. அனுமதிப்பார்களா எனும் தயக்கத்துடனே உள்ளே சென்றோம். தோழி, அங்கு இருந்த பெண் பிக்குகளுடன் இங்லிஷில் பேசினார். அவர்களுக்கு ஆங்கிலம் புரியவில்லை கன்னடம் அல்லது இந்தியில் பேச சொன்னார்கள்.எங்களுக்கு தமிழ், ஆங்கிலம் தவிர வேறு மொழிகள் தெரியாது என்றோம். எங்களை சைகையாலே அமர சொன்னார்கள், உள்ளே சென்ற ஒரு பிக்கு வரும்போது இரண்டு தேனீர் குவளைகளுடன் திரும்பினார்.அற்புதமான அந்த தேனீரை குடித்துக்கொண்டிருக்கும் போதே அழகு எனும் வார்த்தைக்கு இலக்கணமாய் இருந்த அந்த இளம் பிக்கு எங்கள் முன் இருந்த இருக்கையில் புன்னகையுடன் அமர்ந்தார். நாங்கள் சிறிது நேரம் உங்களுடன் பேச வேண்டும், உங்கள் வாழ்க்கை முறைகள் குறித்து சொல்ல முடியுமா…உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமெனில்…என்று இழுத்தார் தோழி. முற்றிலுமாய மழிக்கப்பட்ட தலையை கொண்டிருந்த முகம் வெட்கத்தில் சிவந்துப் போனது.நாங்கள் பத்திரிக்கையாளர்கள் என்று தவறாக புரிந்துக்கொண்டுள்ளார் என்பதை உணர்ந்த தோழி நாங்கள் செய்தியாளர்கள் இல்லை என்பதை விலகினார்.அப்படியெனில் நீங்கள் மாணவர்களா என்ற அவரின் கேள்வி என்னுள் ஒருவித ரசாயன கிளர்ச்சியையும், ஆனந்தத்தையும் ஏற்படுத்தியது. தாடி நரைத்து போன 27 வயதுகாரனை மாணவன் என்று ஒரு அழகிய இளம் பெண் சொன்னால் எப்படி இருக்கும். என் உணர்வுகள் தோழிக்கு புரிந்திருக்க கூடும் என்னை பார்த்து கின்டலான புன்னகையை உதிர்த்தார்.

அந்த அழகிய இளம் பிக்கு பேச ஆரம்பித்தார்....

பிக்கு: நான் சோனம், பூட்டானை சேர்ந்தவள், பௌத்த மதத்தை படிக்க இங்கு வந்து தங்கி இருக்கிறேன்.

நான்: இங்கு யாருக்கும் ஆங்கிலம் தெரியாத போது உங்களுக்கு எப்படி தெரிகிறது ?

சோனம்: பூட்டானில் பள்ளியில் படிக்கும் போது கற்றது,ஆனால் எப்படி பேசுகிறேன் என்று தெரியவில்லை

நான்: என்னை விட அருமையான ஆங்கிலம் பெசுகின்றிர்கள் என்றேன்.மீண்டும் சிவப்பான அந்த முகத்தில் வெட்கம் ஒரு முல்லை கொடியைப் போன்று படர்ந்தது.

தோழி: இங்கு கோவில்களில் நிறைய கடவுள் படங்கள் இருகின்றதே

சோனம்: ஆம், புத்தரை தவிர்த்து பல கடவுள்கள் உண்டு. அவர்கள் குறித்தும் அவர்களை வணங்கும் முறைகள் குறித்துமே படிக்கிறோம்

தோழி: புத்தரின் தத்துவங்கள் ?

சோனம்: அவைகளும் தான்.

நான்: எப்போது படிப்பை முடிப்பீர்கள் ? ஊருக்கு எப்போது போவீர்கள் ?

சோனம்: ஊருக்கு 2-3 வருடங்களுக்கு ஒரு முறை போய் வருவேன். படிப்பை18 வயதில் முடிப்பேன், படிப்பு நிறைவடைந்தவுடன் ஊருக்கு போய்விடுவேன்.

தோழி: அங்கு போய் என்ன செய்வீர்கள்?

சோனம்: புத்த மதத்தை போதிக்கும் ஆசிரியர் ஆவேன்

தோழி: நீங்கள் இந்த மடலாயத்தை விட்டு வெளியே போய் வர அனுமதி இருக்கிறதா?

சோனம்: இல்லை, ஆனால் தெரியாமல் போய்வரலாம்.

தோழி: இது வேறு கோவில், தங்க கோவில் வேறு கோவிலா ?

சோனம்: அது ஆண்களுக்கானது, இது எங்களுடையது

தோழி: அவர்கள் வெளியே போய் வருவதை பார்த்தோமே?

சோனம்: அவர்கள் ஆண்கள்.…..

நான்: சோனத்தை என் கேமிராவினால் படம் பிடிக்க ஆரம்பித்திருந்தேன், ஒவ்வொரு படத்திலும் அந்த தேவதை புத்தனை காட்டிலும் அழகாய் இருந்தாள்.

தோழி: நீங்களாய் விரும்பி இங்கு வந்தீர்களா?

சோனம்: ஆம்

தோழி: இங்கிருக்கும் குழந்தைகள்

சோனம் : அவர்களின் பெற்றோர்கள் இங்கு கொண்டு வந்து விடுவார்கள்

அதற்குள் சோனத்துக்கு வகுப்பு மணி அடித்ததால் எங்களிடமிருந்து நன்றி கூறி விடைப்பெற்றாள்.நாங்கள் சிறிது நேரம் அந்த கோவிலை பார்த்து விட்டு கிளம்பினோம். அந்த பாதை எங்களை ஒரு ஊருக்கு கூட்டிச் சென்றது. பல வீடுகள் ஒன்று போலவே இருந்தன.சில மாடிவீடுகள் மட்டும் புதிதாய் கட்டப்பட்டு இருந்தன.நான் சென்னை நகரத்தில் 8000 ரூபாய் வாடகையில் இருக்கும் ஒரு படுக்கை அறை வசதிக்கொண்ட வீட்டை விட பெரிய வீடுகள் அவை. எல்லா வீடுகளிலும் புத்த மதத்தை குறிக்கும் பல வர்ண கொடிகள், திபெத் மொழி வாசகங்களுடன் பட்டொளிவீசின. பெரும்பான்மையான வீடுகளின் முன் உணவு நிலையங்களை பார்க்க முடிந்தது, அனேகம் பேர் உணவு தொழிலையே செய்கிறார்கள் என்பது புரிந்தது. தங்க கோவில் ஒரு பிரபலமான சுற்றுலாதளம் என்பதால் நல்ல வருமானமே வரும். நாங்களும் ஒரு உணவு கூடதத்தினுள் சென்று சில திபெத்திய உணவுகளை வேண்டினோம், மிக அற்புதமாய் இருந்தது.வீதியில் திபெத்திய இளவட்டங்கள் இரண்டு சக்கர வாகங்களில் சீறிக்கொண்டிருந்தார்கள்.ஒரு மிடறு பழச்சாறு பீரும், திபெத்திய கோழி கறியும் சுவையாகவே இருந்தது.மதிய உணவை முடித்துவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தோம், நல்ல திருப்தியான உணவின் காரணமாய் தூக்கம் கண்களில் நடனமாடியது.ஊரினை விட்டு வெளியேறி இன்னொரு பாதையில் நடக்க ஆரம்பித்தோம்.

     இது வெளிநாட்டவர்கள் வாழும் பகுதி, திபெத்தியர்கள், இந்தியர்கள் தவிர்த்து இந்த பகுதிக்குள் மற்ற நாட்டவர்கள் நுழைய இந்திய அரசின் அனுமதி வேண்டும் எனும் அந்த பலகை கண்களில் பட்டது. அதற்கு அருகிலே வேறு ஒரு பச்சை நிற பலகை, காணமல் போன (சீன அரசால் கடத்தப்பட்ட) பஞ்சலாமாவை மீட்பது குறித்து திபெத்திய பெண்கள் கூட்டமைப்பு வெயிட்டிருக்கும் அறிக்கை அந்த பலகையில் இருந்தது. "உலகின் இளம் அரசியல் கைதி" எனும் வாசகம் இதையத்தை நெருடியது. எல்லா போராட்டங்களிலும், போர்களிலும் மிக அதிகப்படியான துயர்களுக்கு குழந்தைகளும், பெண்களுமே ஆளாகுகிறார்கள் என்று அனோனிமா அவள் புத்தகத்தில் சொன்னது நினைவுக்கு வந்தது. வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம், அத்தனை நேரம் கழித்து தான் நாங்கள் இதுவரை சுற்றி பார்த்தது திபெத்திய அகதிகள் முகாம் என்பது உரைத்தது. ஒரு மக்களின் விடுதலைக்காய், அவர்களுக்கு ஆதரவாய் இந்திய சனநாயகம் செய்யும் உதவிகளை பார்க்கும் போது மகிழ்ச்சியாய் இருந்தது. இவ்வுளவு செய்வார்கள் என்பது வியப்பை கொடுக்க தவறவில்லை. திபெத் மக்களின் விடுதலை நிச்சயம் ஒரு நாள் கிட்டும் , போராட்டம் வெற்றி பெரும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். அதே நேரம் இந்த பிரதி இந்த இடத்தில தான் துவக்கம் கொள்கிறது.....

     தமிழ் நாட்டில் இருக்கும் ஈழத்து அகதி முகாம்களின் அவலமான வாழ்வு நிலையும் அங்கு இருக்கும் மனிதர்கள் ஒன்னுக்கு போவதற்கு கூட பதிவேட்டில் கையப்பம் போட்டுவிட்டு தான் போக வேண்டும் எனும் அதித சட்ட நெறிகளாலும், எப்படியாவது தமிழக முகாம்களை விட்டு தப்பி ஆஸ்த்ரேலியா போக ஈழத்துஅகதிகள்மேற்கொள்ளும் மரணதுக்கு சிறிதும் இடைவெளியற்ற கடற் பயணங்களாலும், சிங்கள ராணுவத்தால் தினம் தினம் படுகொலை செய்யப்பட்டும் சொந்த நாட்டிலே அரசுகளின் கவனிப்பற்ற அகதிவாழ்வை வாழ சபிக்கப்பட்ட தமிழக மீனவர்களாலும், இங்கிருக்கும் அகதி மக்களை வெகு இலகுவாய் மறந்துவிட்டு உணர்ச்சி பொங்க பேசப்படும் ஈழம்குறித்தானவெற்று வீர வசனங்களாலும், ஈழத் தமிழர்கள் என்றாலே கவிழிறக்கம் அல்லது தீவிரவாதிகள் எனும் பார்வைகாளாலும், பல லட்ச மக்களின் மரணங்களை வைத்து பொறுக்க முயலும் ஓட்டு அரசியல்கலாளும், கொலைகாரர்களுக்கு இந்திய சனநாயகம் கொடுக்கும் சிவப்பு கம்பள வரவேற்புகளாலும், புத்தனின் புன்னகைக்குள் கள்ளத்தனமாய் மறைந்து கிடக்கும் ஒரு சனநாயகத்தின் சர்வேதேச அரசியல் கொள்கைகளாலும், இதையெல்லாம் வெகு சுலபமாய் மறந்து கடக்கும் என்னாலும், உங்களாலும் இந்த கட்டுரை இங்கிருத்து ஆரம்பிக்கிறது….ஏற்கனவே பல நூறு முறை எழுதப்படுவிட்ட, இங்கு எழுதப்படாத தமிழக அகதிகதைகள் முழுதும் ரத்தத்தாலும், சதைபிண்டங்களாலும், கொலைகளாலும் நிரம்பி கிடக்கும். அந்தபாதை முழுதும் ஓநாய்களின் நாற்றத்தில் நிரம்பி இருக்கிறது....

இந்த பிரதியின் அடுத்த பகுதியை செந்தூரன் விரைவில் பதிவிடுவார்

-பூவரசி

Comments

Popular posts from this blog

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்: வெறுப்பை ஜனநாயகப்படுத்தும் அழகியல்!

0. பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்: “நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது” 1. மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போ...

In the most health-obsessed society ever, all is not well*: On Trauma

1 Philosopher Byung-Chul Han's essay Neuronal Power begins with the following lines: " Every age has its signature afflictions. Thus, a bacterial age existed; at the latest, it ended with the discovery of antibiotics. Despite widespread fear of an influenza epidemic, we are not living in a viral age. Thanks to immunological technology, we have already left it behind. From a pathological standpoint, the incipient twenty-first century is determined neither by bacteria nor by viruses, but by neurons ". Modern integrative body mind science defies Byung-Chul Han’s statement, that it is reductive to define human suffering solely in terms of ailments. However, we are living in an era, where production relations dictate nearly everything about human existence, in this specific context Byung-Chul Han’s statement—that the majority of human society is afflicted by mental or neuronal issues—serves as a foundational lens to understand contemporary humans and their struggles. In today’...

படுகொலைக்கு முன்னான சில மணி நேரங்கள்

    ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன் , எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை . அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட   நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன் , ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல் . கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை . உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை , இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை . அதே நேரம் ஒளியற்று , ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது , சூடான மழைத் துளியை போல் . மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது ... அம்மாவின் முலை காம்புகள் , விபத்தொன்றில் மரணித்த நன்பன் , தேர் திருவிழா , அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள் , அவளின் முதல் முத்தம் , இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம் , கல்லூரியின் விடுதி அறை , முதல் காமத்தின் வெள்ளை இரவு ... இப்படி சொல்லி ம...