கசக்கி வீசியெறியப்பட்ட, ஒரு கிழிந்துப்போன இரவின் சிதறல்களில் அழைந்துக் கொண்டிருக்கும் வார்த்தைகளை ஒன்று திரட்டி இப்பிரதி உருவம் கொள்கிறது…..அதிரூபன் உலகை காக்க புறப்பட்ட ஏழாவது நாளில் ஆரம்பித்த அந்த கதை 2007 ஆம் வருடம் மார்ச் திங்கள் ஆறாவது நாளில், சூரியன் அஸ்தமித்து 4 மணி நேரங்கள் கடந்த ஒரு இரவில் தொடைகளின் இடுக்குகளில் வழிந்துக்கொண்டிருக்கும் அவளின் குருதியில் நிலைக்கொண்டது. ஓநாயின் முனங்களுடன் யாரென்றே தெரியாதா அவளின் ஆன்மாவை புசித்த களைப்பின் எச்சங்கள் உதிரும் முன்னே, அடியாழத்தில் மிச்சம் கிடக்கும் அவளின் சுயத்தை, குறிகளைச் சுற்றி நீண்டு கிடக்கும் தன் நகங்களை கொண்டு கீற ஆரம்பித்தான் அவன். வழியும் கண்ணீரின் ஓசை புலப்படாது அழுதுக்கொண்டிருந்தாள் அவள். பிள்ளை பருவத்தில் பன மரத்தடியில் பனங்காய் சுட்டுக்கொண்டிருந்த போது அடி வயிற்றில் எழுந்த பெரும் வலியாலும், கால்களின் இடுக்கில் ஏற்பட்ட பிசுபிசுப்பிலும் பயந்துப் போய் அம்மாவிடம் ஓடிய போது ‘குத்த வைத்து’ அம்மா சொன்ன வார்த்தைகள் அவள் காதுகளில் இப்போதும் ’ஓ’வென்று பாய்ந்துக் கொன்டிருந்தது. அவள் அமைதியாக படுத்திருந்தாள். அவனின் நகங்கள் ஒரு ஆரஞ்சு சுழையை உறிப்பதான லாவகத்துடன் அவளை துண்டு துண்டாய் பீய்த்துக் கொண்டிருந்தன. அந்த நொடியில் அவளின் எண்ணங்கள் ’அவளுடனான’ பொழுதுகளின் வெளிச்சத்தில் அழைந்துக்கொண்டிருந்தது. ஒடிசலான அவளின் கருத்த தேகம், எதற்கும் அசட்டை செய்யாத அவளின் சுபாவம், தேவதையின் ஸ்பரிசத்தோடு உதடுகளை காதல் கொள்ள செய்த அவளின் காமம் வழியும் முத்தங்கள், வெக்கையில் வழிந்தோடும் வியர்வையின் பிசுபிசுப்பில் ஒட்டிக் கிடக்கும் உடல்கள், காதல் பொங்கி வழிந்த நாட்கள்….வெட்டப்பட்ட காட்சிகளாய் நினைவுகளில் நீந்திக்கொண்டிருந்தாள்.
அவன் இன்னும் அவள் மீது படுத்துக்கிடந்தான், உயிருடன் இருக்கும் ஒரு சவத்துடனான களவி அது. கசங்கிப்போன புத்தாடைகளின் கிழியும் சப்தத்தில் எரிச்சலுற்று அவளை விடுவித்தவன், மேழும் கிழும் வாங்கிய பெருமூச்சினை சீர் செய்ய கட்டிலின் ஓரமாய் சாய்ந்தான். அவளின் அம்மா அவளுக்கு சூட்டி அனுப்பிய மல்லிகையின் மனம் இன்னும் அந்த அறையில் பரவி கிடந்தாலும், அவன் குறியின் நாற்றம் கருமை நிறைந்த அந்த அறையை மேலும் அடர்த்தியாக்கியது மட்டுமில்லாது அவளின் மூச்சையும் அடைத்துக் கொண்டிருந்தது. தலையில் இருந்த அவன் "கொம்பு", அடிவானத்தின் சிவப்பு நிறத்தை தொடுவதாய் நீண்டு இருந்தது. கணவன் கொம்பு அது! ஆம் கனவனின் கொம்பு அது. சடங்குகளின் அற்புத கீர்த்திகளும், மஞ்சள் , சிவப்பு, பச்சை வர்ணங்களிலான அரிதாரங்களும் அவன் கொம்பை அலங்கரித்தன. கணவனின் கொம்பை அழகுடனும், வீரத்துடனும், திமிருடனும் பரம்பொருள் செதுக்கியிருப்பதாய் யாரோ ஒரு சைவ பாதிரி சொன்னதாய் அவன் சொல்லிக் கொண்டான்.. அந்த வார்த்தைகள், அவன் அடிமனதில் ஊறிப்போன அந்த வார்த்தைகள் இந்த பிரதிகளினுடே ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. அந்த கொம்பு தான் அவளை விலைக்கு வாங்கியதற்கான அடையாள அட்டை என்றும் நம்பினான்….தலையில் மாட்டப்பட்ட அடையாள அட்டை. அவன் அப்பன் அவன் அம்மாவின் சுயத்தை இதே போலான ஒரு அடையாள அட்டையுடனே சிதைதான்.அப்படியான ஒரு சமயத்திலே அப்பனின் நீண்ட வால் ஒட்டுன்னி அம்மாவின் சினையை உடைத்து இவன் உருவானான். அந்த நீண்ட இரவு ஒரு வழியாக 12 மனி நேரங்களுக்கு பின் விடிந்தது… அவளுக்கு மட்டுமே தெரிந்திருந்தது விடிந்தது பகல் மட்டுமே என்று. காலையின் வெளிச்சம் படர ஆரம்பித்த அந்த நொடிகளில் இருளின் கொழுத்த பூனை அடிவானத்தில் மறைந்தோடியது.
ஆல விருட்சத்தின் வேர்கொடிகள் பூமியுடன் பினைந்து கிடப்பதை போன்று அவர்கள் இருவருமே ஆலமும், பூமியுமாய் பினைந்துக் கிடந்த நாட்கள், வேனிற் வெயிலின் வெதுவெதுப்பாய் களிந்த நேசத்தின் காலம் அது. கல்லூரியின் அத்தனை வாசல்களுக்கும், மரம் செடிக்கொடிகளுக்கும், விடுதி சுவர்களுக்கும், விளையாட்டு திடல்களுக்கும் மட்டுமே தெரிந்த அவர்களின் காதல். மூன்று வருடங்களின் காதல், முடிந்துப்போனதாய் நம்பினாலும் என்றுமே முடியாததாய் மனதில் நிறம்பி கிடக்கும் முதல் காதல். யாரும் இல்லாத ஒரு பொழுதில் அவள் காதுகளை, அவள் வருடி முத்தமிட்ட நொடிகளில் செங்காந்தலின் நறுமனத்துடன் அது மலர்வதை அவர்கள் பார்த்தார்கள். ஏவா ஆதமுக்கு முன் காதலித்த ஏவாவின் மையல் அது. ஜெருசலமும், காசியும் ஏழுக்கடல்களுக்கும், 36 நதிகளுக்கும் அடியில் கண்டுபிடிக்காத மணல் திட்டுகளாய் இருந்த கிருத யுகத்துக்கு முன்னான காதல் அவர்களினது. கடவுளர்களும், புனிதர்களும் புரிந்துகொள்ள இயலாத காதல். காதலர் தினத்தின் நடு சாமத்தில் பெருவிரலின் நுனியில் அவள் கொடுத்த முத்தத்தின் ஈரம் இன்னும் அப்படியே படிந்து கிடக்கிறது. ’அவளும் என்னை போல் தானே பழைய கதைகளை யோசித்து கொண்டிருப்பாள். அவள் மூளையின் மடிப்புகள் முழுவதிலும் நான் நிறைந்திருப்பேன் தானே?’..கேள்விகள் அவளுக்குள்ளே அடங்கிப்போயின. முதன் முதலாய் அவள், சிறிதானதாகவும், பலுப்பு நிறத்திலுமிருந்த இவளின் மார்புகளில் முத்தமிட்ட நொடியில், இருவரின் தொடைகளுக்கு நடுவிலும் ஆகய கங்கையின் வெள்ளமாய் வழிந்தோடிய காதல் நீரின் துவர்ப்பு சுவை இன்னும் நாவில் பதிந்து கிடக்கிறது. மூன்று ஆண்டுகளின் முடிவில் பிரியப்போகும் துயரில் தகித்த இரவுகள் இன்னும் அவர்கள் இருவரின் கன்னீரால் நிரம்பி நீளுகிறது.. என்றுமே முடிவடையா துயரத்தின் நாட்கள். எத்தனை துயரமான சூழலில் அந்த கடைசி முத்தம் அமைந்தது, கடைசி முத்தம் என்றே அறிந்த கடைசி முத்தம். லட்சக்கனக்கான நொடிகளும் நிமிடங்களும் கடந்து விட்ட வாழ்வில் அவளிடம் கொடுக்காமல் விட்ட பல நூறு காதல் கடிதங்களும், அன்பும் அப்படியே இதயத்தின் அடியாழத்தில் அவளுக்காய் காத்துக்கிடக்கின்றன. ஒரு சிறு காகித துண்டில் அவள் எழுதிய முதல் காதல் கடிதம் இன்னும் பசுமையாக இருக்கிறது… ’உன்னிடமிருந்து ஒரு பரிசு வேண்டும். அந்த பரிசு ஒரு பொருளாகவோ, ஒரு உயிராகவோ, உருவம் கொண்டதாகவோ இருக்க கூடாது..அதையும் தாண்டிய பரிசு..உன்னால் மட்டுமே கொடுக்க முடியுமான பரிசு அது’. பாரசிக நாடோடி ஒருவன் யாருக்கும் தெரியாமல் கிளியோபாட்ராவுக்கு எழுதிய வரலாற்றின் கண்களுக்கு புலனாகாமல் தப்பித்த காதல் கடிதத்தின் உயிர் பல நூறாண்டுகள் பெரும் மழையிலும், வெக்கயிலும் பயணித்து ஒரு நன்பகல் வேளையில் அவளின் சிறு காகிதத்தில் கூடு புகுந்ததாய் அந்த பெயரற்ற நாடோடி சொல்லித் திரிந்தான்.. அவளின் வார்த்தைகளுக்கு பதில் புரியாமல் திரிந்த நாட்களை நினைத்தால் நகைப்பாக இருக்கிறது. “நீ என்ன சொல்ற? என்ன கிப்ட் அது? சத்தியமா தெரியல” எனும் என் கேள்விக்கு காதல் ததும்பும் புன்னகையுடன் காதுகளை, அவள் வருடி முத்தமிட்ட நொடிகளில் செங்காந்தலின் நறுமனத்துடன் அது மலர்வதை அவர்கள் இருவருமே பார்த்தார்கள். செங்காந்தலின் நறுமனம் இப்போதும் அவள் மீது வீசிக்கொண்டே இருக்கிறது, அவளுக்கு மட்டுமே தெரிந்த காதலின் வாசம்.
நான் எதற்கு வாழ்கிறேன்? வாழ்தலின் பொருள் என்ன? யார் யார் ஆசைகளுக்கும், விருப்பங்களுக்கும் நான் வாழ்கிறேன்?. அப்படியெனில் எனக்கான வாழ்க்கை எது? நான் உயிருடன் இருக்கிறேன் என்பதையே என்னால் இப்போதெல்லாம் நம்ப முடிவதில்லை. துண்டு துண்டாய் வெட்டப்பட்ட ஒரு உடலுடன் வாழ்வது பெரும் சிரமமானதாய் இருக்கிறது. சீல் ஒழுக்கும் கைகளையும், நாய்கள் தன் நாக்குகளால் நக்கி செல்லும் புண்களை கொண்ட கால்களையும் தூக்கி கொண்டு, பல வருடங்களுக்கு முன் அந்த இரவில் அவன் கிழித்து தூக்கி வீசிய அழுகிய இதயத்தை தேடிக்கொண்டு இந்த நகரின் வீதிகளில் திரிகிறேன். இதில் வீங்கிய வயிறுடன் அலைதல் என்பது இன்னும் கொடுரமானதாகவே இருக்கிறது. என் வயிறு குழியில் இடமிருந்த ஒற்றை காரனத்துக்காய் பரிசுத்த ஆவியின் பெயரில் ஆசை தீர தன் எச்சிலை கொண்டு நிறப்பினான் அவன். ஒரு புத்தம் புதிய கண்னாடி கோப்பையினை பெரும் சுவை கொண்ட திராட்சை சாராயத்தை கொண்டு நிறப்புதல் என்று எக்காளமாய் சிரித்தது அவன் மனம். பெரிய பந்தினைப் போல் புடைத்திருந்த தன் வயிறுடன் அவள் ’சரனம், கச்சாமி’ என்று சொல்லிய அதே நொடியில் கீழை தேசம் ஒன்றில் சிறுவன் ஒருவனின் கால்கள் இரண்டும் வெடிகளின் வேகத்தில் தூரத்தில் இருந்த பனைகளுக்கு அப்பால் போய் விழுந்ததை அவள் அறியவில்லை. எப்படியாவது தன் சுமையை ஆண்டவர் பிறை நாளின் மூன்றாவது பூசையின் முடிவில் இறக்கி வைத்துவிடுவார் எனும் நம்பிக்கையில் அமைதியாய் சுலோகத்தை சொல்லி முடித்து, அழுகிய தன் இதயத்துக்கான தேடலை தொடர்ந்தாள்.
அவளக்கு, அவளுடன் எப்படியாவது பேசிவிட வேண்டும் எனும் வேட்கை கிழட்டு ஆமையின் நிதானத்துடன் சில நாட்களாய் துரத்திக் கொண்டிருக்கிறது. ஒரு தீவாந்திர தனிமையின் ஆசை அது. ஏன், எப்படி, எங்கு என்று எதற்கும் பதில்களில் இல்லாமலும், வயிற்றின் சுமையை எப்போது வெழியே தூக்கி வீசுவோம் எனும் ஏக்கத்துடனும் அவளுக்கான கடிதத்தை அவள் எழுத ஆரம்பித்தாள்…
என் ஆசை எச்சில் தேவதையே,
இப்படி அழைக்கலாம் தானே உன்னை, நீ எதையும் மறந்திருக்க மாட்டாய் என்று தெரியும். இருந்தும் ஒரு வித பயம் காலத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒடுங்கி கிடக்கும் ஒருவளின் அச்சம். எதற்கு வாழ்கிறோம் என்பதே தெரியாத..வாழ்கிறேன் என்பதற்கான எந்த சமிஞைகளும் இல்லாத ஒருவளாய் தான் உனக்கு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். நாம் இருவரும் சந்தித்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. கல்லூரியின் வாழ்வின் கடைசி நாள் தான் நம் காதலுக்கான கடைசி இரவாகவும் இருந்தது. நமக்கான கடைசி நாள், கடைசி காதல், கடைசி களவி. நம்மின் அந்த கடைசி களவியை என்னால் இன்று வரை மறக்கமுடியவில்லை நம் முதல் களவியைப் போன்றே. நம் பிரிதல் துயரின் பொருட்டு எத்தனை மூர்கமான காதல் அது. உன்னை மீண்டும் சந்திக்க பேராவலுடான் காத்திருக்கிறேன். நீ எங்கு இருக்கிறாய்? என்ன செய்கிறாய்? எப்படி இருக்கிறாய்? இந்த கேள்விகள் எப்போதும் நிலைத்து நிற்கிறது என்னுள். வாழ்க்கை முழுதும் கேள்விகளால் நிறம்பி கிடக்கிறது…சிதைந்துப்போன நம் காதலின் கேள்விகள் அது. ஒருவரிடமாவது நம் காதலை பற்றி சொல்லிவிடும் பேராசை கொள்கிறேன் எப்போது. ஆனால் என்னவென்று சொல்வது, ராதிகாவும் நானும் காதலித்தோம் என்று சொன்னால் யார் ஏற்பார்கள்?
எனக்கு திருமனமாகிவிட்டது, நடந்து 1 வருடம் இருக்கும். இப்போது வயிறு பொங்கியவளாய் காட்சியளிக்கிறேன். உன்மையில் சொல்ல போனால் என் கறுப்பை பெரும் சுமையாகவே இருக்கிறது. இந்த சனியன் பிடித்த வயிறு எப்போது சமநிலையை மீண்டும் அடையும் என்று காத்துக் கிடக்கிறேன். எனக்கு குழந்தை மீதோ, தாய்மை மீதோ எந்த ஆசைகளும் இல்லை. பிறக்க போகும் அந்த உயிர் பிறக்காமல் இருந்தால் நல்லதே. பாவம் அதுவாவது இந்த உலகத்தை விட்டு தப்பிக்கட்டும். நீ சொல்வது தான் நினைவுக்கு வருகிறது…”தாய்மை! ஒரு பாவப்பட்ட செயல்”.. எவனோ ஒருவனின் வெறிக்கு நாம் வலிகளை சுமந்து வாழ்கிறோம். இதை எல்லாம் வெளியே சொல்ல முடியவில்லை அதுனால் தான் உனக்கு கடிதமாக எழுதுகிறேன். வேறு யாரிடமும் சொல்ல முடியாத சொற்கள். கனவன் என்று ஒருவன் இருக்கிறான், அவனுக்கு நான் படுக்கையில் மட்டுமே தேவைப்படுகிறேன். என் அம்மாவும், அப்பாவும், ஒன்று சேர்ந்து என்னை நிறந்தர பாலியல் தொழிலாளியாய் அவனிடம் ஒப்படைத்துவிட்டனர். அவர்கள் கனவு நிறைவேறிவிட்டது, கைநிறைய சம்பாதிக்கும் மருமகன், சாராயம் கூட குடிக்காத மருமகன் J சிரிப்பாய் இருகிறது, மகள் ஒரு குடிகாரி என்பதை அறியாத பெற்றோர்கள். கடைசியாக மது அருந்தியது கூட உன்னுடன் தான், நம் கடைசி நாளில்.. உன் எச்சிலை துப்பி கொடுத்த மது, என் எச்சில் தேவதையின் எச்சிலால் நிறம்பிய மது. எச்சில் ததும்ப உடல் முழுதும் நீ கொடுக்கும் முத்தங்கள் இப்போதும் என்னுள் அப்படியே பதிந்து இருக்கிறது. நாம் அழைந்து திரிந்த நகரத்து வீதிகள், சினிமாக்கள், சாப்பிட்ட உணவுக் கூடங்கள்…இதை எல்லாம் எப்போதாவது நினைத்து பார்ப்பாயா? என் நினைவு உன்னுள் அப்படியே இருக்கிறது தான். உன் கருவாச்சியை நீ மறக்கவில்லை தானே? உன் நினைவுகள் எப்போதும் என்னுடனே இருக்கிறது, என் கனவன் என்னுடன் களவி கொள்ளும் நேரத்திலும் நீ தான் இருக்கிறாய். நம் காதல் தான் இருக்கிறது.
இன்னும் உன்னிடம் சொல்ல நிறைய இருக்கிறது,ஏதேதோ இருக்கிறது. சொல்ல ஒரு யுகம் வேண்டும்…உன்னை என்னால் மறக்க முடியவில்லை என்பதையும், நான் உயிருடன் இருக்கிறேன் என்பதற்கே ஒற்றை அடையாளமாய் உன் நியாபகம் எப்போதும் என்னுடனே அலைகின்றன என்பதையும் சொல்லி, அனுப்ப விரும்பினாலும் உனக்கு அனுப்பவே முடியாத இந்த கடிதத்தை முடிக்கிறேன் என் ஆசை எச்சில் காதலியே.
வித்யா.
Comments
Post a Comment