Skip to main content

இணையதளங்களின் அரசியல் - இளவேனில், லிவின் அனுஷ்யன்



              தொழில்நுட்ப வளர்ச்சியின் பெரும் கொடையான இணையம் மனிதனுக்கு கிட்டிய அதித சக்தி மட்டுமல்ல, இன்றைய மானிட இருப்பின் அச்சாணியாக இருக்கிறது. முதலாளிகளால் உருவாக்கப்பட்ட மிகப்பெரும் சுதந்திர வெளி என்பது தான் இணையத்தின் மாபெரும் நகை முரண்.இன்று சமூகத்தின் இயங்கியலில் மனிதனோடு பின்னிப் பிணைந்திருக்கும் அம்சங்களில் ஒன்று இணையம். அது சமூக வளைத்தளங்கள் , வணிகத் தளங்கள், மெய்நிகர் உலகம்(virtual world), தேடல் பொறிகள், வரைபடங்கள், வழிகாட்டிகள் என மனித செயல்பாடுகளின் அத்தனை வேகத்திலும் ஊடுருவியாகிவிட்டது. நினைவிலி மனம் இருக்கும் இடம் மனிதனின் மூளை என்பதின் இடத்தை பெயர்த்தெடுத்து இணையத்துக்குள் பொருத்தி வைத்துவிட்டதான காலத்தில் வாழ்கிறோம். இணையம் தரும் வசதிகளோடு சேர்ந்த உளவியல் சிக்கல்கள், சமூகத்தின் பொதுத்தன்னைமையில் அல்லது பழக்கவழக்கங்களில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள், நவீன மனதின் சிதைவுகள் பற்றி ஆராயப்பட வேண்டிய தேவை இதில் உள்ளது. சமூகவியலில் எண்ணியல் சமூகவியல்( Digital sociology). தனியொரு பிரிவாக மாறியுள்ளது.

          தனி மனிதர்களின் உளவியலைப் பற்றி அரசுகள் மற்றும் மத நிறுவனங்கள் அரசு மற்றும் மதங்கள் தோன்றிய காலம் முதல் கவலை கொண்டுள்ள நிலையே காணப்படுகிறது. தன்னால் கட்டபட்ட சமூக உளவியலுக்கு ஒவ்வாத தனி மனிதர்களையோ குழுக்களையோ அழித்துக் கொண்டே வந்திருக்கிறது. மனிதனை அழித்தலோடு மட்டும் அது நின்று விடுவதில்லை. அதன் பலத்தை பிரயோகிவித்து வரலாறு நெடுக மனிதர்கள் கூட்டங்களுக்காக கூடுதலை அனுமதியாததும், புத்தகங்கள் தடைசெய்யப்படுதலும் நூலகங்கள் எரிக்கப்படுதலும் பத்திரிக்கைகள் தணிக்கை செய்யப்படுதலும், தான் விரும்பிய அல்லது நம்புகிற பரப்புரைகளை மக்களிடம் சேர்த்தலும் நடந்து கொண்டு தான் வந்திருக்கிறது. கால மாற்றத்தில் பெளதிக தன்மை கொண்டவைகளை மாற்றி இன்று நுண்புலத் தன்மை கொண்ட வெளியை, ஊடகத்தை பயன்படுத்துமாறு காலம் பரிமாண வளர்ச்சி மாற்றமடைந்திருக்கிறது. அதனூடே மனிதனும் சேர்ந்து இயங்கியாதல் வேண்டும். நவீன மனிதன் துறவு மேற்கொள்ள விரும்பும் மனிதன் காடுகளுக்கு சென்று ஐம்புலன்களையும் அடக்கியாள வேண்டியதில்லை(காடே இல்லை என்பது வேறு விடயம்). இணையத்தை பயன்படுத்தாமல் இருத்தலும் துறவு நிலையும் வேறுவேறானவைகள் இல்லை.

       ஒரு எழுத்தாளன் எழுத பேனாவும் ஒரு வெள்ளை தாளும் போதும் என்பது போல் கள்ள சந்தையில் 5000 ரூபாய்க்கு கிடைக்கும் தமிழக அரசின் மடி கணினியும், 100 ரூபாய்க்கு கிடைக்கும் இணைய தொடர்பும் போதும் யாரும் எதையும் பேசலாம். அச்சு ஊடகங்களுக்கும், காட்சி ஊடகங்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலான "தணிக்கை" இணையத்துக்கு கிடையாது. ஆனால் இந்த நம்பிக்கைகளும், உண்மைகளும் எப்போதோ பழைய கதையாகிவிட்டது. இணையத்தின்அசூர வளர்ச்சியை காட்டிலும் வேகமாய் அரசுகள் இணையத்தை தணிக்கை செய்யும் வழி முறைகளில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இணையம் பொதுவெளியில் எல்லா மனிதருக்காகவும் பொதுவெளியில் வைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினாலும் உண்மையது இல்லை. உதாரணமாக இந்தியாவில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள் அது பன்னாட்டு நிறுவனமாக இருந்தாலும் உள் நாட்டு நிறுவனமாக இருந்தாலும் அதன் அலுவலகங்களில் தனிப்பட்ட மின்னஞ்சல்களையோ, முகநூல் உள்ளிட்ட சமூக வளைத்தளங்களையோ, வணிகத் தளங்களையோ உங்களால் பயன்படுத்த இயலாது. அதை பயன்படுத்த முற்படும்போது உங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்ற திரையே உங்கள் கண்முன் வந்து நிற்கும். இது அலுவலகச் சூழச் மத்தியில் ஏற்றுக் கொள்வது சரியே என்றாலும் அதைப் போல் அரசு உள் நுழைந்து மக்கள் எதைப் பயன்படுத்த வேண்டும் பார்க்க வேண்டும் என்று தீர்மானிக்குமானால் அங்கே சிக்கல் நுழைகிறது. இந்திய திருநாட்டின் தலைவர்கள் இணையத்தை தணிக்கையின் கீழ் கொண்டுவருவதில் வெகு தீவிரமாய் இருக்கிறார்கள். காரணம் நம் தேசத்தில் நடக்கும் அதிகப்படியான உண்மைகளை (கொடுடரமான உண்மைகளை) இணையங்கள் விடாமல் பேசுகின்றன. நாட்டின் பிரதமாரானாலும், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தாலும் கேள்விகள் நேரடியாக கேட்டகப்படுகின்றன, கேள்விகளுக்கு பதில் இல்லாமல் அல்லது உண்மைகளை சொல்ல முடியாமல் சனநாயகம் என்றும், தேச பாதுகாப்பு என்றும் சொல்லி கேள்விக்கேட்டவர்களின் குரல்களை முடக்குவதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கான ஆயுதம் தான் தணிக்கை. ரிலையன்ஸ் நிறுவனத்தின் சர்வர்களில் இருந்து எடுக்கப்பட்ட (திருடப்பட்ட) தகவல்கள் இந்தியாவில் 577 இணைய தளங்கள் பல்வேறு காரணங்களுகாய் முடக்கப்பட்டு இருக்கும் உண்மையை சொல்கிறது.

          இணைய தணிக்கை என்பது சற்றே சவாலானது கூடவும் மற்ற ஊடகத் துறைகளை விடவும் சிக்கலானது. ஒரு நாட்டில் ஒரு இணைய தளத்தில் உள்ள செய்திக்காக அந்த இணைய தளத்தையே அரசு தடை செய்யலாம். ஆனால் அந்தச் செய்தியை தாங்கிய வேறொரு இணைய தளம் தடை செய்யப்படாமல் இருக்கும் பட்சத்தில் எமகாதகர்கள் அதைக் கண்டுபிடித்து செய்தியை தெரிந்து கொள்ள இயலும். இதைத் தடுப்பதற்காகவே வேறொரு தணிக்கை முறை உள்ளது. அது உள்ளடக்க வடிகட்டுதல்(content filtering). உதாரணமாக நீங்கள் porn என்று தேடினால் உங்களால் அது சார்ந்த இணைய தளத்தை உள் நுழைய முடிந்தாலும் உங்கள் தேடல் சேர்ந்த எதையும் பார்க்க இயலாமல் செய்ய இயலும். இந்த வடிகட்டுதல் மற்றும் தணிக்கை முறைகளைத் தனியென செய்வதற்கே தனியார் மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன.

           கார்கில் போர் நடந்த சமயத்தில் பாகிஸ்தான் நாளேடான தவானின் இணையத்தை முடக்கியது இந்திய அரசு. 2003ஆம் ஆண்டு கின்ஹுன் (Kynhun) எனும் யாகு குழு ஒன்றை தடை செய்தார்கள், அதற்கு சொல்லப்பட்ட காரணம் தொடங்கி தணிக்கையும், தடைகளும் இன்று 577 எனும் எண்ணையும் தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது. சமிபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சவுக்கு இணையதளம் மீது இடைகால தடையை விதித்திருக்கிறது. நீதிபதியால் சொல்லப்படும் காரணம் சவுக்கு தளம் அரசின் உயர் மட்டத்தில் இருக்கும் IAS, IPS அதிகாரிகள் மீதும், நீதிபதிகள் மீதும் அபாண்டமான பொய்களை பரப்புவதால் தடை செய்வதாக சொல்கிறது நீதிமன்றம். பொய்களை பரப்புவதால் தடை என்று சொன்னால் இங்கு இயங்கும் அத்தனை உடக வெளிகளுமே தடை செய்யப்பட வேண்டியது தான். காரணம் உலகமே பொய்களில் தான் வாழ்கிறது. தனி தெலுங்கானா சரி தவறு என்பதைத் தாண்டி அதன் மசோதாவை நிறைவேற்ற சில நிமிடங்கள் நாடாளுமன்ற தொலைக்காட்சி ஒளிபரப்பை தடை செய்த ஆட்சியாளர்களின் தேசத்தில் இதுப்போலான தடைகள் அதிர்ச்சியையோ ஆச்சரியத்தையோ தராது என்பது தான் நிசம்.

         இணையத் தணிக்கை அல்லது வடிகட்டுதல் முறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. எல்லைகளற்ற ஊடகவியாளாளர்கள் வருடா வருடம் இணைய எதிர்ப்பு நாடுகள் மற்றும் கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகள் பட்டியலை வெளியிடுகின்றது. கண்காணிக்கப் பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் இந்தியா, இலங்கை, ஃப்ரான்சு, ஆஸ்திரேலியா, ரஸ்யா தென் கொரியா மற்றும் சில நாடுகள் இருக்கின்றன. எதிர்ப்பு நாடுகளின் பட்டியலில் முக்கியமானவை சீனா, க்யூபா, வியட்நாம், வடகொரியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் இவை தவிர்த்த ஏழு நாடுகள். இதில் குறிப்பிடப்பட வேண்டிய செய்தி சவுதி அரேபியா தவிர்த்த மற்ற பிற நாடுகளில் இருக்கும் ஒற்றுமை அமெரிக்க எதிர்ப்பு. சவுதி அரேபியா, ஈரான் தவிர்த்த மற்ற நாடுகள் எல்லாம் கம்யூனிச அரசைக் கொண்ட நாடுகள். இணையத் தணிக்கையில் சீனா மிகவும் காத்திரமாகச் செயல்படுகிறது.

        தடைகள், தணிக்கை என்பதைத் தாண்டி அடுத்த கட்டத்துக்கும் நகர்ந்து விட்டன அரசுகள். இந்தியாவில் நடந்த சம்பவங்களில் முதன்மையானது, பால் தாக்ரே இறந்த அன்று அவர் கட்சியினர் நடத்திய களேபரத்தில் கோபமுற்று, அந்த கோபத்தை முக நூலில் பதித்த ஒரு பெண்ணும், அந்த பதிவுக்கு விருப்பம் தெரிவித்த மற்றொரு பெண்ணும் பதிவிட்ட சில மணி நெரங்களிலே கைது செய்யப்பட்டார்கள். சின்மயிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதால் ஒருவர் கைது செய்யப்பட்டதும் நினைவில் இருக்கலாம். சின்மயி ட்வீட் செய்த “தமிழக மீனவர்கள் மீன்களைக் கொல்கிறார்கள், சிங்களப் படை மீனவர்களைக் கொல்கிறது. இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை” என்பது அச்சு ஊடகங்களால் மறைக்கப்பட்டது. Cartoon against Corruption எனும் தளத்தில் இந்தியாவில் நடக்கும் பெரும் ஊழல்களுக்கு எதிராய் கார்டூன் வரைந்த அசீம் திரிவேதி கைது செய்யப்பட்டது நாம் பார்த்த நேரடி உண்மை. இப்படி எங்கும் உண்மைகளை மக்களிடம் கசியவிடாமல் இருப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் சிறப்பாகவே செய்கிறார்கள் என்பதன் அடையாளம் தான் மேல் சொன்ன சில சம்பவங்கள். சமீபத்தில் தான் அ.தி.மு.க வின் இணைய தளத்தை முடக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார். மனித உரிமைப் போராளிகளின் இணைய தள செயல்பாட்டால் இதைப் போல் பல்வேறு காரணங்களுக்காக பல நாடுகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இணையத்தைப் பார்த்து அரசுகள் அஞ்சுவதே காரணம்.

       எல்லைகளற்ற ஊடகவியாளாளர்கள் மறக்கப்பட்ட இணைய எதிர்ப்பு சார்ந்த நாடும் ஒன்றும் இருக்கிறது. ’இணைய எதிர்ப்பு’ வரையறையை தணிக்கையோடு மட்டும் நிறுத்தாமல் நாடுகள் இணையத்தை தவறாகப் பயன்படுத்துகிற முறைமையையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் அதில் முதன்மையாக இருக்கவேண்டிய நாடு அமெரிக்கா. இன்று உலகையே தன் பார்வைக்குள் கைப்பிடிக்குள் இணைய வளையால் சிக்க வைத்திருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் வீட்டிற்கு புலப்படாத நுண்வெளி காமிராவை பொருத்தியிருக்கிறது. அது வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் ஆனாலும் சரி, வளராத நாட்டின் சாதாரணக் குடிமகன் ஆனாலும் சரி. எல்லோரின் தரவுகளையும்(Data) தகவல்தளமாக(Database) அது திரட்டி வைத்திருக்கிறது.

         இன்று உலகெங்கும் படர்ந்திருக்கும் இணைய வலையின் தோற்றம் மிக முக்கியமானது. அது நம்மை அமெரிக்காவிடம் அழைத்துச் செல்லும். அமெரிக்க ராணுவப் பயன்பாட்டில் தோன்றி உலகம் முழுதும் பரந்து விரிந்த மாயவலை. இந்த மாயவலையின் கொடூரப் பிடியை கண்ணுக்குப் புலப்படுத்தியவர்களில் முக்கியமானவர்களில் இருவர் ஜூலியன் அசாஞ்சே( Julian asange) மற்றும் ஸ்னொடென்(Snowden).

         ஜூலியன் அசாஞ்சே “ உலகில் மலைக்கவைக்கிற உளவு இயந்திரம் என்று ஒன்று இருக்குமானால் அது முகநூல் தான்” என்கிறார். ”உலகின் மிக விரிவான தகவல்தளமாக முகநூல் இருக்கிறது. அதில் உங்கள் ’பெயர், முகவரி, உறவுகள், நண்பர்கள்’ உங்கள் தொடர்புகள் எல்லாவற்றையும் அமெரிக்க உளவுத்துறையால் பார்வை இட இயலும். முகநூல், கூகிள், யாகூ போன்ற மிகபெரிய தகவல் தொடர்பு நிறுவனங்கள் அமெரிக்க உளவுப்பிரிவால் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் இடைமுகத்தோடே(interface) தயாரிக்கப்பட்டு இருக்கின்றது” என்கிறார். மேலும் ”நீங்கள் ஒரு நண்பரை உங்கள் முகப்புத்தகத்தில் கூட்டும் போது அமெரிக்க உளவுத்துறைக்கு நீங்களே சேவை செய்து கொடுக்கிறீர்கள் “ என்கிறார்.

         விக்கிலீக்ஸினுடைய எச்சரிக்கை இன்னும் பயம் கொள்ளச் செய்யும். இவற்றோடு உங்களை உளவு பார்ப்பது நின்று விடவில்லை. உங்கள் கையில் இருக்கும் வினைத்திறன்மிக்க தொலைபேசியும் உங்களை உளவு பார்க்கும் ஊடகமே. பெரும்பான்மையான தொலைபேசி தயாரிப்பாளர்களால் உங்கள் தொலைபேசியை கண்காணிக்கவும் உரையாடல்களை பதிவு செய்து கொள்ளவும் இயலும். உங்கள் தெரியாமலோ அல்லது விருப்பம் இல்லாமலோ அவர்களால் உங்கள் தொலைபேசி மீதான செயல்பாட்டை எடுத்துக் கொள்ள இயலும்.

         இன்று தங்கள் கையில் பெருமையின் சின்னமாக வைத்திருக்கும் ஐபோன்(iPhone), ப்ளாக்பெரி(Blackberry), ஜிமெயில்(Gmail) பயன்படுத்துபவர்களென்றால நீங்கள் சிக்கிவிட்டீர்கள் என்று அர்த்தம். உண்மையில் உளவுபார்ப்பவர்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கான மிகப்பெரிய கண்காணிப்பு பொறிகளை அவற்றிற்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். ட்ரோஜான்(Trojan) என்ற மென்பொருள் உள்ளது அது கணினியில் இருக்கும் வைரஸை போன்றது. அது தன்னைத் தானெ திரும்ப வெளிப்படுத்திக் கொள்ளாது தீங்கு விளைவிக்கும் நிரலைக் கொண்டது. நீங்கள் ஒரு இணையதளத்திற்குள் நுழைந்தாலோ அல்லது ஒருவர் மின்னஞ்சலை அனுப்பினால் போதும், உங்கள் தொலைபேசி ட்ரோஜானால் அபகரிக்கப்பட்டுவிடும். தொலைபேசி செயல்படாத நேரத்தில் அறையில் நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை ஒட்டுக் கேட்க முடியும். இந்த எச்சரிக்கைக்குப் பிறகும் நம்மால் முன்போல் வாழ முடியாது.

        அதைப் போலவே அமெரிக்காவின் பெயர்போன முன்னணி உளவு நிறுவனமான சி.ஐ.ஏ(central intellingence agency) வேலைப் பார்த்தவரும் என்.எஸ்.ஏ(National Security Ageny) ஒப்பந்தக்காரராக பணியாற்றிய ஸ்னோடென் வெளியிட்ட தகவல்கள் ஏராளம். ஸ்னோடென் வெளியிட்ட ரகசியங்களை பார்க்கும் போது எவ்வாறு நெறிமுறைபடுத்தப்பட்ட கண்ணி ஒன்றை உலக நாடுகளுக்கெல்லாம் பின்னி வைத்திருக்கிறது என்பதை வெளிச்சமாக்குகிறது. நட்பு நாடுகள் நட்பல்லாத என்று எதுவும் இல்லை. எல்லாவற்றையும் அது கண்காணிக்கிறது. உளவு பார்த்தலில் இருக்கும் நாடுகளுக்குள்ளான புரிந்துணர்வுகளையும் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்தலையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. ஐந்து கண்கள்(அமெரிக்கா, யு.கே, கனடா, ஆஸ்திரேலியா, நீயூசிலாந்து) என்று சொல்லப்படுகின்ற நாடுகளின் வேவு பார்த்த தகவல்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இணைய வேவு பார்க்கும் திட்டங்களாக ப்ரிஸ்ம்(PRISM), எக்ஸ்கீஸ்கோர்(Xkeyscore), டெம்போரா(Tempora) வெளிவந்தவை. ஒவ்வொன்றையும் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதிக் கொண்டே போகலாம். ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தொலைபேசி உரையாடல்களையும் விடவில்லை. அமெரிக்க நட்பு நாடு என்று அறியப்படுகின்ற இஸ்ரேலிய பிரதமரையும் வேவு பார்த்திருக்கிறார்கள். இது எல்லாவற்றிற்கும் நாட்டின் இறையாண்மையும் தேச பாதுகாப்புக்குமென சப்பை காரணம் கட்டுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பிரேசிலின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ’பெட்ரோப்ராஸ்’ நிறுவனமும் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது. ‘யூனிச்செப்’(Unicef) நிறுவனம் கூட அதற்கு தப்பவில்லை. இதையெல்லாம் ஏன் செய்கிறார்கள் என்கிற பதிலை ஸ்னோடென் பிரேசில் மக்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் “இத்தகைய வேலைத்திட்டங்கள் எல்லாம் தீவிரவாத்தை பற்றியது அல்ல. அவை பொருளாதாரத்தை வேவுபார்த்தல், சமூகத்தை கட்டுப்படுத்தல் மற்றும் ராஜீய உறவுகளை கணக்கிடுதல். அவை அதிகாரத்தை சார்ந்தது” என்கிறார்.

      உளவு பார்த்தல் என்பது ஒரு புறம் இருக்க, நம்முடைய தரவுகளால் நமது சந்தை மதிப்பை தீர்மானிக்க இயலும். நாம் விரும்பும் சந்தை நுகர்வுப் பொருளை அவைகளால் எளிதில் இனம் காண முடியும். இன்று இ.பே(e-bay), ஃப்ளிப்கார்ட்(flipkart), ஒ.எல்.எக்ஸ்(OLX), க்விக்கர்(QUICKR), மிந்தரா(myntra) போன்ற வணிகத்தளங்களின் வளர்ச்சி அபரிவிதமானவை. நம்மையும் சந்தைப் பொருளாக மாற்றும் உத்தி நம்மையறியாமலே நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் தேடல் பொறிகளில் கொடுக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் இணையத் தர நிர்ணயங்கள் பெரும் கார்ப்பரேட்களால் நிச்சயிப்படுவதில்லை என்பதற்கு இங்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை. இங்கு ஸ்னோடெனின் மற்றொரு கூற்றும் கவனிக்கத்தக்கது ”நாம் சுதந்திரமான மக்களின் சிந்தனைகள் தொடர்புகள் உரையாடல்களை இடையூறு செய்வதை நாம் எதிர்க்காவிட்டால். சிந்திக்கிற சமூகத்தின் அடித்தளத்தை நாம் இழந்து விடுவோம்”

"அவர்கள் நம் மௌனத்தைத் தான் பெரிதும் விரும்புகிறார்கள். மௌனம் என்பதைத் தாண்டி நாம் ஊமையாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள். நம் நாவும், குரல் வலையும் அவர்களின் கழிவறைக்கு இருக்கும் மதிப்பிலும் குறைவானவை என்பதைத் தான் அவர்கள் நிறுவ முற்படுகிறார்கள். அவர்களுக்கு "ஆம்" சொல்பவர்கள் மட்டுமே தேவை. உன் குரலும் என் குரலும் தனித்தோ ஒன்று சேர்ந்தோ உயிர் பெறும் தருணத்தில் அவர்களின் கொடூரச் சப்பாத்து கால்கள் நம் குரல் வலைகளை நசுக்கி அழிக்க முயல்கின்றன. அதிகாரத்தின் கொடூர நகங்களால் நம் நாவுகளை கிழித்தெறியத் தயங்குவதில்லை அவர்கள். அவர்களின் துப்பாக்கி முனைகள் எப்போதும் நம் தொண்டையை நோக்கியே இருக்கின்றன. இருந்தும் விடாமல் நம்பிக்கையின் நீட்சியாய் கிடைக்கும் வழிகளில் எல்லாம் நம் குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன".

தீராநதி


Comments

Popular posts from this blog

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்: வெறுப்பை ஜனநாயகப்படுத்தும் அழகியல்!

0. பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்: “நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது” 1. மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போ...

In the most health-obsessed society ever, all is not well*: On Trauma

1 Philosopher Byung-Chul Han's essay Neuronal Power begins with the following lines: " Every age has its signature afflictions. Thus, a bacterial age existed; at the latest, it ended with the discovery of antibiotics. Despite widespread fear of an influenza epidemic, we are not living in a viral age. Thanks to immunological technology, we have already left it behind. From a pathological standpoint, the incipient twenty-first century is determined neither by bacteria nor by viruses, but by neurons ". Modern integrative body mind science defies Byung-Chul Han’s statement, that it is reductive to define human suffering solely in terms of ailments. However, we are living in an era, where production relations dictate nearly everything about human existence, in this specific context Byung-Chul Han’s statement—that the majority of human society is afflicted by mental or neuronal issues—serves as a foundational lens to understand contemporary humans and their struggles. In today’...

படுகொலைக்கு முன்னான சில மணி நேரங்கள்

    ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன் , எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை . அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட   நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன் , ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல் . கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை . உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை , இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை . அதே நேரம் ஒளியற்று , ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது , சூடான மழைத் துளியை போல் . மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது ... அம்மாவின் முலை காம்புகள் , விபத்தொன்றில் மரணித்த நன்பன் , தேர் திருவிழா , அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள் , அவளின் முதல் முத்தம் , இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம் , கல்லூரியின் விடுதி அறை , முதல் காமத்தின் வெள்ளை இரவு ... இப்படி சொல்லி ம...