Skip to main content

துரோகியின் கதையில் இரண்டு அத்தியாயங்கள்





                                                                                          01

    துரோகியாக வாழ்வது என்பது மிகவும் இலகுவான ஒன்றாகவே இருக்கிறது. தினசரி நிகழ்வுகளில் பெரிய வித்தியாசங்கள் ஏதுமில்லை, எப்போதும் போல்தான் சுழல்கிறது என் உலகம். ஆனால் ரட்சிப்பவர்கள் இல்லாமல், தியாகிகள் இல்லாமல், புனிதர்கள் இல்லாமல் வாழ்வது மிகவும் அற்புதமாக இருக்கிறது என்றே சொல்வேன். சொல்லப்போனால் ஒரு துரோகியின் வாழ்வில் ஒரு மணித்துளியிலும் துரோகம் நிரம்பியிருக்கவில்லை . . மனிதத்தாலும், காதலாலும், அன்பாலும், முத்தங்களாலும், மதுவாலும் நிரம்பிக் கிடக்கிறது என் உலகம். நான் துரோகத்தின் அடையாளத்துடன் வாழவே பெரிதும் விரும்புகிறேன். கல்வாரி மலைகளில் துரோகத்தின் சிலுவையை சுமந்தபடி அலைந்து கொண்டிருந்த அவன், தான் அறிந்த துரோகி ஒருவனைப் பற்றி கேள்விக்கான பதிலொன்றை அப்படிதான் சொல்ல ஆரம்பித்தான்.

இது ஒரு துரோகியை பற்றிய உரையாடல் எனவே இந்த துரோகிக்கு ஒரு பெயர் கண்டிப்பாக வேண்டும். நான் ஏற்கனவே பல பெயர்களால் அழைக்கப்படுகிறேன். மனிதர்கள் தேவையில்லாத உலகில் துரோகிகளும், அவர்கள் பெயர்களும் நிச்சயம் தேவைப்படுவதால் நீங்கள் ஏதோ ஒரு பெயரில் என்னை அழைக்கலாம். நான் துரோகி இல்லை என்று நிரூபிக்க எனக்கு விருப்பமில்லை, காரணம் ‘சலித்துவிட்டது’. யுகங்களாய், அயனங்களாய், பருவங்களாய், ஓரைகளாய் பாடித் திரிந்த பாடல்கள் முழுவதிலும் துரோகத்தின் வீச்சம் நிரம்பியிருப்பதாய் அவர்கள் சொன்னதை அவன் நம்ப ஆரம்பித்ததின் சலிப்பு அது. ஊழிகளுக்கு முன்னான ஆரம்ப நாட்களில் துரோகியாய் இருப்பது கொஞ்சம் கடினமானதாகவும், மன உளைச்சல் நிரம்பிய ஒன்றாகவுமே இருந்தது. ஆனால் சாக, சாக எல்லாம் பழகிவிடுகிறது : )



                                                                                         02

ஒரு கிழட்டு தேசாந்திரியின் கிழிந்துபோன பைக்குள் ஒளிந்தபடிதான் அவன் தன் தேசத்தை விட்டு அன்று வெளியேறினான். அப்படித்தான் பலரும் வெளியேறியிருக்க வேண்டும், சோறு தேடலின் வெளியேறுதல் அது. காடு மலைகளை கடந்த அந்த தேசாந்திரி நீண்ட ரயில் பயணத்தின் முடிவில் ஒரு பெரும் நகரத்தை அடைகிறான். மனிதத் தலைகளால் நிரம்பி சுவாசிக்கவும் வழியற்ற அந்த ஊரின் உயிர்நாடி வரை நீண்டிருந்த கான்கிரிட் கோபுரங்களின் நிழல்கள், மங்கிய விளக்குகளின் ஒளியில் வீதிகளில் படர்ந்திருந்தன. ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிய கிழவனின் பையை விட்டு வெளியே வந்த அவன் சுவாசிக்க சிறிது நேரமானது. அவனைப் போலவே சோறு தேடலின் பொருட்டு பரதேசம் வந்த பலரின் முகங்களை அவனால் அடையாளம் காண முடிந்தது. மாமன், சித்தி, பெரியப்பன், சில தூரத்து சொந்தங்கள், பழைய காதலி, காதலியின் கனவன் இப்படி பலரை பார்க்க முடிந்தது. எந்த முகங்களிளும் ஒரு துளி சலனம் கூட இல்லை, அவன் முகத்தை போன்றதான ஒரு வரண்ட மௌனம் மட்டும் அவர்கள் முகங்களிலும் நிலைகொண்டிருந்தது. தேசாந்திரி அவனைக் கடந்து போய்க் கொண்டிருந்தான். மங்கிய விளக்கு ஒளிகளில் நகரம் முழுதும் வியாபித்திருந்த கான்கிரிட் கட்டிடங்களை பார்த்தபடி அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள், அந்த நடையில் சோறு கிடைத்துவிடும் எனும் நம்பிக்கையின் காலடித் தடங்கள் படிந்து கிடந்தன.

நகரத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் பெரும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவனைப் போல் பல நூறு பேரிடம் திட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று சொன்ன உயர் அதிகாரியின் வார்த்தைகளை பலரும் வரிசையில் நின்றபடி கேட்டுக் கொண்டிருந்தனர். வரிசையின் இறுதியில் நின்றிருந்த மாமனையும், காதலியின் கனவனையும் அடையாளம் கண்டுக்கொண்ட அவன் அவர்களை காணாதது போல் திரும்பிக்கொண்டான், அவர்களும் அவனைப் பார்த்திருக்க கூடும். இலைகளைத் தேடி வெக்கை தகித்த பாலைவனத்தை கடந்து வந்த ஆட்டுக் குட்டிகளுக்கான சொற்கள் அவை. ஆடுகள் சொற்களை புசிக்க தொடங்கியிருந்ததை பார்த்த அதிகாரிக்கு நிச்சயம் உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்கியிருக்கும் காரணம் புசிக்கப்படுவது அவனின் சொற்கள். அந்த மாபெரும் வளர்ச்சி திட்டம் அந்த நகரத்தில் தான் உலகிலேயே முதன் முதலாய் அறிமுகப்படுத்தப்படுகிறது. சாத்தானின் கட்டை விரலை போல் பல ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு நீண்டு வளர்ந்திருந்த நகரத்தின் போக்குவரத்து நெரிசலை சமன் செய்யும் பொருட்டான கப்பல் போக்குவரத்து திட்டம் அது. 24 மணி நேரமும் வேலை செய்யும், கேள்விகள் கேட்காத ரத்தமும், சதையும் கொண்ட நூற்றுக்கணக்கான இயந்திரங்கள் அவர்களின் மாபெரும் திட்டத்துக்கு தேவைப்பட்டார்கள். அப்படியானவர்கள் தான் அந்த நீண்ட வரிசையில் நின்றபடி அதிகாரியின் சொற்களில் சோற்றின் கனவுகளை விதைத்துக் கொண்டிருந்தார்கள். ராப்பகலாய் ராட்சச குழிகள் தோண்டப் பட்டுக்கொண்டிருந்தன, அந்த ஊரின் சனங்கள் முழுவதையும் போட்டு மூடுமளவு பெரிதாகவும், பூமிப் பந்தின் அடுத்த கோடியினை பார்க்கும் அளவு ஆழமானதாகவும் அந்த குழிகள் இருந்தன. அப்படித்தான் ஒரு நாள் குழியை தோண்டிக் கொண்டிருக்கும் போது பூமியின் மறுகோடி கடற்கரையில் நின்றிருந்த குறி சொல்லும் அழகியை அவன் காண நேர்ந்தது. இவனின் கருத்த மேனியில் மெய்மறந்த அவள் குழிக்குள்ளே அவனுடன் கூடினாள், கலவிக்கு கூலியாய் அவனுக்கு குறி சொல்லிச் சென்றாள். அவள் சொன்ன குறியின் சொற்கள் மரணத்தின் வாசனையை தாங்கி நின்றன.

சுவாசிக்கவும் நேரமில்லாத வேலை, சில சமயம் அவன் சுவாசிக்கவே மறந்துவிட்டான் என்று தான் சொல்ல வேண்டும், நகரின் மாபெரும் வளர்ச்சிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அவனைப் போலானவர்களுக்கு காற்று தேவையற்றது என்று சொல்லிச் சென்றான் அதிகாரியின் உயர் அதிகாரி ஒருவன். ஒரு நாள் மண் வெட்டும் இயந்திரத்தின் இரும்புப் பற்களுக்குத் தன் கைகளை கொடுத்துவிட்டு குருதி வழியும் பாதிக் கையுடன் கதறியபடி ஓடி வந்த தன் சகா ஒருவனின் துண்டான கையை வெறித்துப் பார்த்தபடியே மண்ணை அள்ளிக்கொண்டிருந்தான். அவனின் உடலை விட்டு வெளியேறிய ரத்தம் மழைத்துளிகளைப் போல் மண்ணில் வழிந்தோடிக் கொண்டிருந்தது. குருதியின் வீச்சம் அவன் அள்ளி வீசிய மண் முழுவதிலும் அப்படியே அப்பியிருந்தது. அடுத்த நாள் லாவெண்டர் மலரின் மனம் அந்த இடமெங்கும் நிரம்பியிருக்க காலியாகிப்போன செண்ட் டப்பி ஒன்றை வீசி எறிந்துவிட்டு புன்னகையுடன் இவனை கடந்து சென்றான் அதிகாரி. அவன் ஊத்தை நாசிகளுக்கு அது மலரின் மணம் என்பதே தெரியவில்லை காரணம் அது எலிக்கறியின் நாற்றத்துடன் இல்லை. ஒற்றைக் கையுடன் பிச்சைப் பாத்திரங்களை ஏந்தியபடி ரயில் நிலையத்தின் வாசலில் திரிந்து கொண்டிருந்த சகாவை அவன் சில மாதங்கள் கழித்துக் காண நேர்ந்தது. அப்போது சோற்றுக்கான பணம் கிட்டிய மகிழ்ச்சியில் குடும்பத்தைக் காண்பதற்காக நெரிசல் மிகுந்த வரிசையில் ரயிலுக்காய் காத்துக்கிடந்தான் அவன்.

யாருக்கும் கேட்காத நீலியின் ஒப்பாரிக்கு நடுவே அவனின் இரத்தம் தோய்ந்த உடலில் இருக்கும் ரவைகளின் எண்ணிக்கையை ஒரு குழந்தை கணக்கு பாடம் படிப்பதான தோரணையில் எண்ணிக்கொண்டிருந்தனர் இரண்டு காவலர்கள், அவர்களின் ஆடைகளில் அவன் குருதியின் தடம் ஓநாயின் நாவினைப் போல் நீண்டு படிந்து கிடந்தது. இருள் படர்ந்து பரவியிருந்த நடுச்சாம வேளையில் அந்த இடமே திருவிழாக் கூடம் போல் திடீரென்று கலை கட்டியிருந்தது. ஒரு விதமான மகிழ்ச்சியான சூழல் அங்கு நிலவியதை அவனால் உணர முடிந்தது. அவன் உடல் முழுதும் சில்லிட்டுவிட்டது, இன்னும் சிறிது நேரத்தில் அது விரைத்து விடக்கூடும், பிறகு தூக்குவது கூட பெரும் சிரமமானதாய் மாறிவிடும். அமரர் ஊர்திக்கோ அல்லது ஆம்புலன்சுக்கோ, ஏதோ ஒன்றுக்காய் எல்லோரும் காத்திருந்தார்கள். அவன் உடலின் அருகில் இன்னும் ஐந்து விரைத்த உடல்கள் படுத்துக்கிடந்தன. தன் உடலில் பதிந்து கிடந்த தோட்டாக்களை, காவலர்களைப் போல் அவனும் பொறுமையாக கணக்கிட ஆரம்பித்த நொடியில் தான் அவன் உலகை விட்டு இல்லாமல் போனது புரிந்தது. காவல்துறை உயரதிகாரிகள், தலைமை அமைச்சர், சில அரசுத் தலைமை அதிகாரிகள், கூட்டம் கூட்டமாய் மக்கள், நூற்றுக்கணக்கில் காவலர்கள் என நெரிசலுக்கு நடுவே அவனுக்கு எதுவும் புரியவே இல்லை, அவன் உயிருடன் இல்லை என்பதை தவிர்த்து. தன் உயிர் எப்படிப் பிரிந்தது என்பதை கேட்க முயற்சித்து சோர்ந்து போனான். அவன் குரல் யாருக்கும் கேட்கவே இல்லை, அவனுக்கும் நீலியின் அழுகைக் குரல் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் அவன் உடலையும் மற்ற ஐந்து உடல்களையும் விதவிதமாய் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள், அவனும் படத்துக்கு புன்னகையுடன் காட்சியளிக்க முயன்று தோல்வியுற்றான். படங்கள் எல்லாவற்றிலும் ரத்தம் உறைந்து போயிருந்த முகமே காட்சியாக பதிந்திருந்தது. மக்கள் வெடிகளை கொளுத்தி தங்கள் ஆனந்தத்தை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள். இவனையும் சேர்த்து ஆறு பேரின் படங்களும் தொலைக்காட்சி பெட்டிகளை நிரப்ப ஆரம்பித்தது. பிறக்கப்போகும் அவனது குழந்தை, மனைவி, மகள், அம்மா என்று எல்லோரும் அவன் மூளை ரேகைகளை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள், அப்போதுதான் சில்லிட்டுபோன அவன் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். வண்டி மருத்துவமனையை நோக்கி சீறிப்பாய்ந்தது.

இனி மருத்துவமனை போய் என்ன பயன் அதான் இறந்து விட்டேனே. நான் இறந்து விட்டேன், நான் கொலை செய்யப்பட்டுள்ளேன் என்பதை உணர முடிகிறது ஆனால் ஏன்? யார்? அவனில் கேள்விகள் நெரிஞ்சி முட்களாய் பூத்துக்கொண்டிருந்தன. யாருக்கும் எந்த கெடுதலும் செய்ததில்லையே ஒரு வேளை வேலையில் தவறேதும் செய்திருப்போமோ, அதனால் அதிகாரி கோபப்பட்டு சுட்டிருப்பானோ ஆனால் ஏன் 6 பேரை சுட வேண்டும்? என்னை மட்டும் அல்லவா சுட்டிருக்க வேண்டும்? அவர்களும் என்னைப் போல் தவறு செய்தவர்களோ? வேலையில் ஒழுங்கில்லை எனில் தண்டித்தது சரி தானே என தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டான்.இருள் நகரத்தில் அடையத் தொடங்கியது, அவனின் உடல் குளுமையான பெட்டி ஒன்றில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. மிகக் கடுமையான குளிராக இருந்தது ஒரு கம்பளி இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் ஒரு பிணத்துக்கு யார் கம்பளி போத்துவார்கள் அமைதியாக படுத்துக்கிடந்தேன். மீண்டும் கேள்விகள் என்னை சூழ ஆரம்பித்தன. சாகடிக்கப்படதான் நான் இங்கு இந்த நகரத்துக்கு வந்தேனோ, ஒரு வேளை சோறு தின்றது மிகப்பெரிய குற்றமா? இருக்கும் நான் இதுநாள் வரை நிம்மதியாக ஒரு வேளை உணவை கூட சாப்பிட்டது இல்லை தானே, இப்போது சாப்பிடுகிறேன் அது தவறாக தான் இருக்கும். இல்லை அந்த ஒற்றை கையனின் சாபமோ?குறி சொல்லும் அழகியுடன் முயங்கியதை யாரேனும் பார்த்திருப்பார்களோ?அதனால் நான் கொலை செய்யப்பட்டுள்ளேனோ? அவள் தான் அப்போதே சொன்னாளே. இல்லை துப்பாக்கிக்கு உயிர் வந்து அதுவாக என்னை சுட்டு விட்டதோ? கேள்விகளின் அடர்த்தி தாங்காமல் அவனுக்கு மூச்சு முட்டியது. பிண ஆய்வுக்கூறு நிபுணன் அவன் உடலை கிழிக்க ஆரம்பித்திருந்தான். அவன் வலி தாங்க முடியாமல் அலற ஆரம்பித்தான் அவன் குரல் யாருக்கும் கேட்கவில்லை, நீலியின் அழுகை மட்டும் அவனுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது.

                                       21வது நூற்றாண்டில் ஒட்டப்பட்ட ஒரு சுவரொட்டியின் மாதிரி:

Comments

Popular posts from this blog

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்: வெறுப்பை ஜனநாயகப்படுத்தும் அழகியல்!

0. பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்: “நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது” 1. மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போ...

In the most health-obsessed society ever, all is not well*: On Trauma

1 Philosopher Byung-Chul Han's essay Neuronal Power begins with the following lines: " Every age has its signature afflictions. Thus, a bacterial age existed; at the latest, it ended with the discovery of antibiotics. Despite widespread fear of an influenza epidemic, we are not living in a viral age. Thanks to immunological technology, we have already left it behind. From a pathological standpoint, the incipient twenty-first century is determined neither by bacteria nor by viruses, but by neurons ". Modern integrative body mind science defies Byung-Chul Han’s statement, that it is reductive to define human suffering solely in terms of ailments. However, we are living in an era, where production relations dictate nearly everything about human existence, in this specific context Byung-Chul Han’s statement—that the majority of human society is afflicted by mental or neuronal issues—serves as a foundational lens to understand contemporary humans and their struggles. In today’...

படுகொலைக்கு முன்னான சில மணி நேரங்கள்

    ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன் , எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை . அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட   நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன் , ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல் . கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை . உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை , இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை . அதே நேரம் ஒளியற்று , ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது , சூடான மழைத் துளியை போல் . மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது ... அம்மாவின் முலை காம்புகள் , விபத்தொன்றில் மரணித்த நன்பன் , தேர் திருவிழா , அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள் , அவளின் முதல் முத்தம் , இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம் , கல்லூரியின் விடுதி அறை , முதல் காமத்தின் வெள்ளை இரவு ... இப்படி சொல்லி ம...