Skip to main content

நடனத்தின் மிச்ச சொற்கள்!


ஒரு வாட்சப் உரையாடல்:



 முன் கதை: 

நீயும் நானும் கடைசியாக சந்தித்த அந்த நீண்ட இரவின் நீட்சியாக இப்பயணம் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றது. அந்த இரவில் தான் உன் இசையின் மூச்சு காற்றில் நான் கரைந்துக் கொண்டிருந்தேன், உன் பாடல்களில் படிந்து கிடந்த விடுதலையின் வேட்கை இன்று வரை எனக்கு இனம்தெரியாத அச்சத்தையே கொடுத்து கொண்டிருக்கின்றது. குருட்டு பூனையாய் பதுங்கி கிடக்கும் ஆன்மாவினை உயிர்பித்து அதனுள் விடுதலையின் மோகத்தை தூண்டிவிட  எத்தனிக்கும் உனது வரிகளை விட்டு தூரம் ஓடிவிட எத்தனை முயன்றும் முடியாமல் பெருமூச்சுடன் உன் இசையினையே சுற்றி சுற்றி வருகின்றேன். அன்றைய இரவில் வெயில் தகிக்கும் பாலையின் மூர்கமாய் வழிந்து சிதறிய என் காமம், நரம்புகள் வழியே கீழிறங்கி வீதியில் அலைந்துக் கொண்டிருந்ததை இப்போதும் நினைவுபடுத்திக்கொள்ள முடிகின்றது.....நீ ஏதும் அறியாதவள் போல் மொட்டைமாடி சுவரில் சாய்ந்துக் கொண்டு கிட்டார் வாசித்துக் கொண்டிருந்தாய். நம்மை சுற்றிலும் இருளையும் உன் இசையையும் தவிர வேறெதுவுமிருக்கவில்லை. கருமையான உன் உதடுகளின் ஓரத்தில் புகைந்துக் கொண்டிருந்த சிகரெட்டின் மழைத்துளி அளவேயான ஒளியின் சிதறலில் வெளிப்பட்ட, உன் கண் மையின் மிச்சங்களை நான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்

  ஒரு தற்கொலை குறிப்பின் சில வரிகள்:  

         நான் தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன் மாதங்கி...முதல் வரியை எழுதிய பின், இமைக்காமல் அதையே உற்று நோக்கிக் கொண்டிருந்தேன் . ‘நான்’ ‘தற்கொலை’ ‘செய்துக்கொள்ள’ ‘போகிறேன்’ ‘மாதங்கி’... தனித்தனியாக பிரித்து, படித்து பார்த்தேன்.... தனித்த வார்த்தைகளுக்கான பொருளினை புரிந்துக்கொள்ள முயற்சித்தேன்...ஒவ்வொன்றும் திசை முறிந்து  பயணித்துக் கொண்டிருந்தன...ஒவ்வொரு சொல்லின் ஒவ்வொரு எழுத்தையும் இடம் மாற்றி பார்த்தேன்.. வார்த்தைகள் அப்படியே கிடந்தன.... சொற்களை அழிக்க முற்பட்டேன்...சொல்ல அதற்கு மேல் ஏதும் இருக்க இல்லை...அந்த வாக்கியத்தில் எல்லாமும் அடங்கியிருந்தது...மின்னஞ்சல் அனுப்பபடவில்லை. நிசப்தம் மூடிய உனது வீட்டை விட்டு வெளியேறி ஆள் அரவமற்ற வீதியில் நடக்க ஆரம்பித்தேன்.  

உப்பு நிலத்தின் வாசம்:

             ரயிலின் இருபக்கங்களிலும், பௌர்னமிக்கு இரண்டு நாட்கள் முன்னதான திங்களின்  ஒளியில் பளிங்கு வெண்மையான உப்பு பாலைவனம் எழுதப்படாத காகிதத்தின் விரிப்பாய் அந்த பெருநிலத்தை மூடிக்கிடக்கின்றது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை உப்பின் வாசத்தை தவிர வேறெதுவும் இருக்கவில்லை, மலைகள், செடி கொடிகள், உயிரினங்கள் என்று ஏதுமற்ற சூன்யமான வெள்ளை நிலத்தினை கிழித்துக்கொண்டு அந்த ரயில் தெற்கு திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது. ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் எனக்கென்று ஒதுக்கப்பட்ட படுக்கையில் படுத்தபடி இந்த 17 நாட்களையும் நினைவுபடுத்த முயற்சித்துக் கொண்டிருந்தேன், நினைவுபடுத்திக்கொள்ள என்னிடம் ஒரு கவிதை கூட இருக்கவில்லை. ஆனால் என்னை தொடர்ந்துக்கொண்டிருக்கும் கருமையான அந்த கண்களை பற்றி உன்னிடம் சொல்லிதான் ஆக வேண்டும். எனக்கு எதிரே அமர்ந்திருந்தஆம்வேகாரர் தன் பக்கதில் இருந்த இளம் பெண் ஒருவருடன் ஆம்வே பொருட்கள் பற்றி பேச ஆரம்பித்ததிலிருந்தே எனக்கு இப்படியான ஒரு உணர்வு இருந்துக்கொண்டு இருக்கின்றது, மிக தீவிரமாக, இரண்டு கண்கள் என்னை பின் தொடர்வதான பின்பம் இப்போது வரை துரத்திக்கொண்டே இருக்கின்றது. நானும் முடிந்தமட்டில், சுற்றிலுமிருந்த அத்தனை கண்களையும் கூர்ந்து நோக்கிவிட்டேன் ஆனால் அவர்கள் யாரும் என்னை பார்ப்பதான உணர்வு ஏற்படவில்லை. என்னை உற்று நோக்கிக்கொண்டிருக்கும் அந்த கருமையான கண்கள் மஞ்சள் நிறத்திலான முகத்தினுடையதாக இருக்க வேண்டும் என்று என் ஆழ்மனம் சொல்லிக்கொண்டே இருக்கின்றது ஆனால் மஞ்சள் முகம் என்பதற்கான புரிதலை என்னால் உள்வாங்கவே முடியவில்லை.

 தூக்கம் பிடிபடாமல் படுக்கையை விட்டிறங்கி, கதவின் பக்கம்போய் நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். நிலவின் வெளிச்சத்தில், பனிகட்டிகள் அடுக்கிவைக்கபட்டதாய் தோன்றிய அந்த உப்பு பூமி முடிவற்று விரிந்துகொண்டே சென்றது. உணர்வுகளற்றதாய் நேர்கோட்டில் உறைந்துபோய், அதிசயமான அந்த நிலபரப்பை பார்த்துக்கொண்டே வந்தன என் கண்கள். இப்படியான ஒரு நிலத்தை நான் இதுவரை பார்த்ததேயில்லை, இது நிஜம் என்பதை கூட என்னால் உணர முடியவில்லை, ஏதோ ஒரு பழைய கனவின் தொடர்சியாக தான் இந்த நிலபரப்பை காண்கிறேன். எல்லாமும் சூன்யமான ஏதுமற்ற இந்த வெளி எத்தனை மகத்துவமானதாய் இருக்கின்றது. உப்பு படிந்த நிலம்,  பாலை மண் புழுதி பறக்கும் வரண்டுப்போன பூமியிலிருந்து வந்த எனக்கு இது ஆச்சரியமானதாக தான் இருக்கும். அப்படியே இந்த உப்பு மண்னை அள்ளி அள்ளி தின்ன வேண்டும் என்று பேராசையாக இருக்கின்றது- தூரத்தில் இருந்து பார்க்கும் வரை எல்லாமே அழகு தானே அசைவற்று உப்பு நிலத்தினுடனான ஓட்டத்தில்  இருந்த என்னை அவரின் குரல்,  தேவையேயில்லாமல் தடுத்து நிறுத்தியது.

ஆம்வேகாரருடனான உரையாடல்:

 “என்ன பாஸ்! தூக்கம் வரலையா

ம்ம்ம், அப்படி தான் நினக்கிறேன்..ங்ங்

நீங்க என்ன செய்யுறீங்க, ரிசர்ச்சா”?

இல்லை, ஏதும் செய்யல. சும்மா இருக்கேன்..ங்ங்”    
  
சும்மா!!??

ஆமா, சும்மா தான் இருக்கேன்.

படிப்பு, வேல??

அதை எல்லாம் தெரிஞ்சி நீங்க என்ன செய்ய போறீங்க..ங்ங் 

சும்மா கேட்டேன்! உங்க தாடிய பார்த்ததும் நீங்க ஏதோ பெருசா செய்யுறீங்கனு 
நினைச்சிட்டேன்.

ஹா, ஹா! பொதுவா தீவிரவாதினு தானே யோசிப்பிங்க... இப்போ என்ன வித்யாசமா?..ங்ங்

....அதிர்ச்சியும், குழப்புமும் ஒருசேர என்னை நோக்கினார். நான் சின்ன புன்னகையுடன் அவரின் முகமாற்றத்தை எதிர்கொண்டேன். அவர் என்னுடன் பேச பேச என்னை பார்த்துக் கொண்டிருக்கும் கண்களை பற்றிய தன்ணுனர்வு என்னை மீண்டும் ஆக்ரமிக்க ஆரம்பித்த்து. சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், கையில் இருக்கும் ஆப்பிளை  நீட்டியபடி சாப்பிடுங்கள் என்றார்.

இல்லை, நீங்க சாப்பிடுங்க...ங்ங்

அவர் முகம் ஒருவிதமாய் மாறி, இயல்படைவதை என்னால் கவனிக்கமுடிகின்றதுநான் பேசும் ஒவ்வொரு வரியுடனும் வெளிவரும்ங்ங்எனும் ஓசை அவருக்கு ஒரு வித இடையூறாக இருக்காலாம். அது தான் அவர் முகத்தில் வெளிப்படுகின்றது என்று நினைக்கின்றேன். ஆனால் நான் பேச ஆரம்பித்தது முதல் என்னையே அறியாமல் இணைந்துவிட்ட எனது பேச்சின் எச்சமது, இதை எல்லாம் அவரிடம் விளக்கி சொல்ல எனக்கு விருப்பம் இருக்கவில்லை. சொற்களும், பேசுவதும் எப்போதுமே சோம்பல் தரும் வேலையாக தான் இருக்கின்றது

 ”என்ன ஆப்பிள் ஜீ, இப்போ எல்லாம் எல்லாத்துலையும் விசம் தான் இருக்கு, பொறக்குற குழந்தை குடிக்கிற தாய் பால் கூட விசம்னு லேட்டஸ்ட் ரிசர்ச் சொல்லுது

ம்ம்...

இருக்கிறதுலேயே சுத்தமான தாய் பால் விசம்னா எதை தான் மனுசன் சாப்பிடுறது

ம்ம்..

எங்க கம்பெனில ஒரு பிராடக்ட் இருக்கு, பிள்ளைகளுக்கு சத்து தரும் பவுடர், எந்த கெமிக்கல்ஸும் இல்ல, ஆர்கானிக் பிராடக்ட்

ம்ம்..

நான் ஒரு தனியார் கெம்பெனில மானேஜரா இருக்கே, கூடவே ஆம்வே பிசினஸும் செய்யுறேன். ஆம்வே, நல்ல வருமானம் தர தொழில், என்ன கொஞ்சம் அலையனும். முதல 10 பேர சேக்கிறது தான் கஸ்டம் அப்புறம் காசு தன்னால வரும். எதுனாலும் சும்மா கிடைக்குங்களா

ம்ம்..

இந்தியாவுக்கான ஆம்வே தலைமை அதிகாரி வில்லியம் பிங்க்னே சில காலத்துக்கு முன் பண முறைகேடு தொடர்பாக இரண்டு முறை காவல் துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த நேரத்தில் என் நினைவுக்கு வந்தது, எதார்தமான ஒன்றாகவே இருந்தது. ஆனால் நான் அதை என்னிடம் அதுவரை பேசிக்கொண்டிருந்த  35 வயது மதிக்கதக்க குள்ளமான வழுக்கை தலை மனிதனிடத்தில் சொல்லவில்லை. அமைதியாக, ரயிலுக்கு வெளியே தெரிந்த உலகத்தை மீண்டும் பார்க்க ஆரம்பித்தேன். உப்பு நிலம் முழுவதுமாய் மறைந்து போய், கோரை புற்களை போல் முளைத்திருந்த கட்டிடங்களினூடாக ரயில் விரைந்துக் கொண்டிருந்தது. கட்டிடங்களில் ஆங்காங்கே ஒளிர்ந்த ஒன்றிரண்டு மின் விளக்குகள் ஒளி கற்றைகளாய் காற்றில் கலந்து பின்னோக்கி போய்க்கொண்டிருந்தன. அந்த இரண்டு கண்களும் துளைத்துவிடுவதை போல் எங்கிருந்தோ பார்த்துக்கொண்டிருப்பதான உணர்வு என்னை சுற்றிலும் நிறம்பி இருந்தது.

 நிலத்தின் கடைசி புள்ளி:

    அந்த தீபகற்பத்தின் தென்கோடி முனையில் மனித நெரிசல்களுக்கு மத்தியில் அமர்ந்தபடி அங்கிருப்பதாய் சொல்லப்படும் மூன்று கடலகளையும் எப்படியாவது பிரித்து பார்த்துவிடும் முனைப்பில் எதிரே தெரிந்த நீர் பரப்பினையே உற்று பார்த்துக் கொண்டிருந்தேன். கூட்டம் கூட்டமாய் மக்கள் தங்கள் பாவங்களை போக்கிக்கொள்ளும் ஆசையில் கடலில் நீராடிக்கொண்டிருந்த முனையில் பட்டொளிவீசி பறந்துக்கொண்டிருந்த காவி கொடி கடல்களை பிரித்து பார்க்க விரும்பிய எனது ஆவலில் ஒரு நொடி இடையிட்டது. காவி கொடியினை புறம்தள்ளி மீண்டும் எனது பார்வை கடல்களை பிரித்தாயும் முயற்சியில் நிலைத்து நின்றது. வெகு நேரமாய் கடலினை உற்று பார்த்தும் என்னால் மூன்று கடல்களையும் தனித்து இனம் கானமுடியவில்லை, எல்லாம் ஒரே மாதிரி நீள் வண்ணமாய் இருந்தது. பசிப்பது போல் இருந்தது, ஏதாவது குளிர்ச்சியாக குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது, கடைகளிருந்த தெருவினை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். “திரிவேனிசங்கமம் என்று எழுத்தப்படிருந்த பெயர் பலகையினை கடந்து போகும்வேலையில் தான் அவளை பார்த்தேன். கருப்பு நிற அரைகை குர்தாவும், மஞ்சள், சிவப்பு, நீள வண்ண கலைவையிலான அலிபாபா பேண்டையும் அனிந்திருந்த அவள் கரையின் ஓரத்தில் தனித்து கிடந்த  மண்டபத்தில் அமர்ந்தவளாய் ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தாள். அந்த புத்தகத்தில் இருந்த எழுத்துக்களை படிக்கும் முனைப்புடன் கூர்ந்து நோக்கினேன் ஆனால் அவை ஜப்பானிய சித்திர எழுத்துக்களின் சாயலில் இருந்தன. அது சீன மொழியா, கொரிய மொழியா அல்லது ஜப்பானிய மொழியா என்று உறுதியாக சொல்லமுடியவில்லை. அவள் என்ன படிக்கின்றாள் என்பதை அறிந்துக்கொள்ளும் பேராவல் என்னுள் உதித்தது ஆனால் அவளிடம் பேச எனக்கு தைரியம் இருக்கவில்லை. அவளுக்கு எதிரே அமர்ந்து அவளையே இமைக்காமல் பார்க்க ஆரம்பித்தேன் அவளது முக சாயலை வைத்து அவள் ஜப்பானை சார்ந்தவளாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன் அது எனக்கு போதுமானதாக இருந்தது, எழுந்து கடைகள் இருந்த நெருவினை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மூன்று நாட்களாய் என்னை துரத்திக்கொண்டு வந்த கண்கள்...மஞ்சள் முகத்தினுடைய கண்கள் அவளுடையதாக தான் இருக்கும் என்று உள்ளுணர்வு சொல்லியது, மீண்டும் வேக வேகமாக மண்டபம் இருந்த திசையினை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். ஆனால் அவள் அங்கிருக்கவில்லை, அவள் காணாமல் போயிருந்தாள்.     
  
ஒரு நடனத்தின் மிச்ச சொற்கள்!

               இரவு தன் கரங்களை அகல விரித்து பூமியினை மூடியிருக்கின்றது, மழை வருவதற்கான அறிகுறி பலமாக வீசும் காற்றில் தெரிகின்றது. ஆள் அறவமற்ற மேடான மலை பரப்பிலிருந்து கீழிறங்கிய சரிவின் முடிவில் அரைவட்ட குகையினை போல் சுருங்கியிருக்கும் அந்த கடற்கரையில் தனித்து விடப்பட்டவனாய் அமர்ந்திருக்கின்றேன். மழை மேகங்களுக்கு மத்தியில் தெரிந்த பிறை நிலவின் ஒளிவெள்ளத்தில் முடிவற்ற கடல் பிரபஞ்சத்தின் முழுமையாய் விரிந்து கிடக்கின்றது, கடலை தவிர்த்து என் கண்ணில் ஏதும் தெரியவில்லை. அலைகள் ஆவேசத்துடன் நிலத்தினை தீண்டி செல்லும் ஓசை என்னுள் ஒருவித அச்சத்தை தோற்றுவிக்கின்றது. பகலுக்கும், மின்விளக்குகளின் ஒளிக்கும் பழகிய நகரத்து மனம், இருளின் பிரமாண்டத்தில் பயந்து பதுங்கி கிடக்க, மானுட குரல்களும், இயந்திரங்களின் இரைச்சல்களும் இல்லாத இயற்கையின் பேரோசையில் நிலையற்று நடுங்கிக் கொண்டிருக்கின்றேன். அப்போது தான் அதை நான் பார்க்கிறேன்.... அந்த கண்கள், இத்தனை நாட்களாய் விடாமல் என்னை பார்த்துக்கொண்டிருக்கும் அந்த கண்கள், நான் நம்பிய அதே மஞ்சள் முகத்தின் கண்கள்.... அலைகளுக்கு மத்தியில் நின்றபடி ஜப்பானிய சித்திர எழுத்துகளில் எழுதப்பட்ட அந்த புத்தகத்தை இமைக்காமல் கண்கள் அகல விரித்தப்படி படித்துக் கொண்டிருக்கின்றாள். அவளிடம் பேச வேண்டும் என்று தோன்றிய பேராவலை கட்டுபடுத்திக்கொண்டு அவளை பார்த்துக்கொண்டிருக்கின்றேன். நேற்று பார்த்த போது அணிந்திருந்த அதே கருப்பு நிற அரைகை குர்தாவினையும், மஞ்சள், சிவப்பு, நீள வண்ண கலைவையிலான அலிபாபா பேண்டையும் அணிந்திருந்தாள். அவளிடம் பேச வாய் திறந்தும் என்னால் பேச முடியவில்லை, எனது தொண்டையினை விட்டு சொற்கள் வெளியேற மறுக்கின்றன.. “ங்ங்மட்டும் என்னிலிருந்து வெளிவந்துக்கொண்டிருக்கின்றது. காற்றின் வேகத்தில் முகத்தில் படர்ந்த தன் கூந்தல் முடியினை இடது கையினால் பின்னுக்கு தள்ளியபடி அவள் புத்தகத்தை வாசித்துக்கொண்டே கடலின் மேல் நடக்க ஆரம்பிக்கின்றாள்


Comments

Popular posts from this blog

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்: வெறுப்பை ஜனநாயகப்படுத்தும் அழகியல்!

0. பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்: “நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது” 1. மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போ...

In the most health-obsessed society ever, all is not well*: On Trauma

1 Philosopher Byung-Chul Han's essay Neuronal Power begins with the following lines: " Every age has its signature afflictions. Thus, a bacterial age existed; at the latest, it ended with the discovery of antibiotics. Despite widespread fear of an influenza epidemic, we are not living in a viral age. Thanks to immunological technology, we have already left it behind. From a pathological standpoint, the incipient twenty-first century is determined neither by bacteria nor by viruses, but by neurons ". Modern integrative body mind science defies Byung-Chul Han’s statement, that it is reductive to define human suffering solely in terms of ailments. However, we are living in an era, where production relations dictate nearly everything about human existence, in this specific context Byung-Chul Han’s statement—that the majority of human society is afflicted by mental or neuronal issues—serves as a foundational lens to understand contemporary humans and their struggles. In today’...

படுகொலைக்கு முன்னான சில மணி நேரங்கள்

    ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன் , எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை . அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட   நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன் , ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல் . கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை . உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை , இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை . அதே நேரம் ஒளியற்று , ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது , சூடான மழைத் துளியை போல் . மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது ... அம்மாவின் முலை காம்புகள் , விபத்தொன்றில் மரணித்த நன்பன் , தேர் திருவிழா , அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள் , அவளின் முதல் முத்தம் , இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம் , கல்லூரியின் விடுதி அறை , முதல் காமத்தின் வெள்ளை இரவு ... இப்படி சொல்லி ம...