Skip to main content

அருவி: 2017இன் தமிழ்த் தேவதை

     பார்வையாளரை அதீத உணர்ச்சிவப்படலுக்கு உள்ளாக்கி அழ வைப்பது என்பது இலகுவான வேலை. ஒரு குறிப்பிட்ட வார்த்தையையோ
காட்சியையோ அமைத்து அதைச் சாத்தியப்படுத்திவிட முடியும், இதற்கு மெனக்கெடல் என்று தனியாக எதுவும் தேவையில்லை; மனிதம், அன்பு, காதல்,தாய்மை போன்ற நைந்து போன க்ளிஷே வார்த்தைகளே போதுமானவை. இறுதியில் மனம் கனத்து உச்சிமுகர்ந்து கண்ணீருடன் அப்படைப்பை கொண்டாடுவார் பார்வையாளர். அது எக்காலத்துக்குமான காவியம் என்றும்கொண்டாடப்படலாம்.

அது எக்காலத்துக்குமான காவியமாக மாறுமா? இந்த கேள்விக்குகாலம் தான் பதில் சொல்ல முடியும் அல்லது இதுவரையிலான செவ்வியல் ஆக்கங்கள் கண்ணீரை மட்டும் மூலதனமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை அல்ல என்றும் பதில் சொல்லலாம். பார்வையாளரை கண்ணீர் மல்கக் கதற விடுவதுதான் கலையின் நோக்கமா? இல்லையென்றால் சமூகத்தில் கலைக்கான வேலை என்ன? இந்தகேள்விக்கான பதில்கள் வேறுவேறு காலங்களில் பல்வேறு வடிவங்களில் பலபல மனிதர்களால் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன, மேலும் கலை என்றால் என்னஎனும்கேள்விக்கு பதில் காணும் கோட்பாட்டுக் கட்டுரை இது இல்லை என்பதால்...

தமிழ் உலக சினிமாவை சமைத்தல்:

தமிழ் சினிமாவின் மாற்று சினிமா படைப்பாளிகள், அவர்கள் உலக சினிமா என நம்பும் படைப்பை உருவாக்க ஏற்கனவே குறிப்பிட்டது போல மூலதனமாய் வைப்பது பார்வையாளரின் கண்ணீரை. பார்வையாளரின் கண்ணீரை வரவழைக்க ஒரு குறிப்பிட்ட வடிவத்தை குறிப்பிட்ட படிநிலையில் பின்பற்றுகின்றனர்- குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் மத்தியதர வர்க்கத்தின் அன்பு, மனிதம் பற்றிய மதிப்பீடுகளைக் கொண்டு அது கட்டமைக்கப்படுகிறது. இதற்கு காரணம் தமிழ் சினிமாவின் பெரும்தொகையான பார்வையாளர்கள் இந்திய பொருளாதார தரநிர்ணயத்தின்படி மத்திய தரவர்க்கத்தினர். படம் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியேறும் பார்வையாளரின் இதயம் மனிதத்தால் நிரம்பி வழிகின்றது அல்லது கண்ணீர் விட்டுஅழுகின்றார். இந்த பொதுவான அம்சம் அநேக தமிழ் மாற்று சினிமாக்களிலும் இருக்கின்றது.

பெண்ணிய சினிமாவை சமைத்தல்:

பெண்ணிய சினிமாவை உருவாக்குதல் தமிழ் உலக சினிமாவை காட்டிலும் எளிதானது. இதற்கு மூலதனம் ஒரு பெண் கதாபாத்திரம். அடிப்படையில் அப்பெண் குடிக்க வேண்டும், புகைபிடிக்க வேண்டும், கஞ்சா குடித்தால் இன்னும் சிறப்பானது. சில வேளைகளில் குருதி தோய்ந்த மாதவிடாய் பஞ்சினை காட்டலாம். ஆண் மனம் பெண்ணாகவும் பெண்ணுக்கான உரிமைகளாகவும் எதை புரிந்துகொண்டிருக்கிறதோ அதை திரைக்கதையாகப் பொருத்தி இறுதிக் காட்சிகளில் பார்வையாளர்களை கதறவிட்டால் போதுமானது அல்லது ஒரு நீண்ட புரட்சிகர வசனத்தை ஏதோ ஒரு கதாபாத்திரம் பேசினாலே அதுவே போதுமானதுதான். ஒரு பெண்ணியப் படம் தயாராகிவிடுகிறது.

அருவி பற்றி மீடியம் இணையத்தில் வெளிவந்த கட்டுரையில் குறிப்பிடுவதை போல படத்தின் முடிவில், திரையில் கலைஞர்கள் பெயர்கள் வரிசையாக ஓடிக் கொண்டிருக்கும்போது, நாயகியைத் தவிர்த்து எழுதியவர் இயக்கியவர் என தொழில்நுட்பக் கலைஞர்களாக மொத்த திரையினையும் ஆண்கள் பெயர்கள் ஆக்கிரமித்திருந்தால் அது பெண்ணிய படம் என்று கொள்க.

புரளியால் உருவான அருவி:

அருவி - அன்பானவள், நேசம் மிகுந்தவள், சுதந்திரமானவள், சமூகம் குறித்த அக்கறை கொண்டவள், சமூகத்தில் இருக்கும் அடிப்படை கட்டமைப்புகளை உடைத்து வாழ்பவள், தாஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்களை வாசிக்கக்கூடியவள்; கஞ்சா புகைப்பவள்; அவளின் நெருங்கிய வாழ்நாள் முழுதும் உடன் வரும் தோழி திருநங்கை அதாவது அருவிதிருநங்கைகளை வெறுப்பவள் அல்ல. அருவி இப்படியான 'மானிட' உச்சநிலைக்கு வருவதற்குஅவளுக்கு எய்ட்ஸ் வரவேண்டும் அதாவது தான் இனி வாழப்போகும் காலம் மிகக் குறைவுஎன்று அவள் உணரும் வேளையில் தான் அவள் நாடோடியாக மாறவேண்டும்; மானிட உச்சத்தை அடைய வேண்டும். அதுவும் உடலுறவின் மூலம் அவளுக்கு எச்.ஐ.வி வரக்கூடாது; காரணம், அவள் தமிழ்ப் பெண். திருமணத்துக்கு முன்னான காமம் தவறானது, தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது. அருவி நல்லவள் எனவே அவளின் கற்பும் பாதுகாக்கப்பட வேண்டும், ஒழுக்கக்கேடான பெண்கள் மட்டும் திருமணத்துக்கு முன்னான காமத்தில் ஈடுபட்டு எச்.ஐ.வி தாக்குதலுக்கு ஆளாவார்கள். சமூக அமைப்பைக் கேள்வி கேட்காமலோ உடைக்காமலோ அருவிக்கு எய்ட்ஸ் வர வேண்டும்.

எனவே அருவி தெருவில் இளநீர் விற்கும் மனிதர் மூலம் எச்.ஐ.வி தாக்குதலுக்கு உள்ளாகிறாள். அதாவது அவள் இளநீர் வாங்கும்போது இளநீரைச் சீவும் கடைக்காரரின் கைவெட்டுப்பட்டு ரத்தம் குடிக்கும் ஸ்ட்ராவில் ஒட்டிக்கொள்கிறது. அதற்கு முன் காட்சியில் அவளுக்கு நடக்கும் சிறுவிபத்தில் வாயில் அடிப்பட்டு ரத்தம் வருகின்றது. எனவே இளநீர் கடைக்காரரின் ரத்தத்தில் இருக்கும் எச்.ஐ.வி அவள் வாயிலிருக்கும் காயத்தின் வழியாகஅருவியின் உடலுக்குள் சென்று விடுகின்றது. தெருவில் பானிபூரி சாப்பிடும்போது கடைக்காரரின் குருதி பட்டு ஒரு பெண்ணுக்கு எயிட்ஸ் வந்தது எனும் புரளியொன்று பல காலமாய் இச்சமூகத்தில் உலவி வருகிறது. அந்தப் பெண் யார் எனும் உண்மைத் தகவல் இன்று வரைக்கும் யாருக்கும் தெரியாது. ஒரு சமயம் அவள் கோவையைச் சேர்ந்தவள் என்றும் மற்றொரு சமயம் அவள் மதுரையைச் சார்ந்தவள் என்றும் புரளி சொல்பவரின் மனநிலையைச் சார்ந்து மாறும். இறுக்கமான அமைப்பைக் கொண்ட ஒரு சமூகத்தில் எய்ட்ஸ் பற்றிய புரிதல் ஏற்கனவே மிக மோசமானதாக இருக்கும்போது, அதைஅடிப்படையாக கொண்டு உருவாகும் ஒரு படைப்பு அதுவும் ஒரு’கலை’ப் படைப்பு; அந்த நோய் எப்படி ஒருவருக்கு வரும் என்பதை மருத்துவத் தகவல்களை கொண்டுஉருவாகியிருக்கலாம், இத்தகைய அடிப்படை தகவல்களை கூகிள் செய்தாலே போதுமானதுதான். அதைவிடுத்து வாட்சப்பில் வரும் வதந்திகளைத் தகவல் சாட்சிகளாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்றை கலையின் உச்சம் என்று கொண்டாடுவதை அபத்தம் என்று மட்டுமே அடையாள படுத்த வேண்டியுள்ளது. அருவிக்கு எயிட்ஸ் வந்த விதம் குறித்து ஒரு மருத்துவரிடமும், மூலக்கூறு உயிரியல் மாணவி ஒருவரிடமும் பேசியபோது - பல்வேறு அறிவியல் இதழ்களின் கட்டுரைகளையும், தரவுகளையும் அனுப்பி வைத்தனர் (U.S National library of medicine,National Center for Biotechnology Information - இந்த இரண்டு இணையதளங்களும் உலகில் வெளியாகும் அநேக ஆராய்ச்சி கட்டுரைகளையும் சேமித்து வைத்திருக்கின்றன. பெருபான்மையான நேரங்களில் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் தகவல்களுக்காய் இத்தளங்களைப் பயன்படுத்துவர்.) எச்.ஐ.விவைரஸ் இருக்கும் குருதியைக் குடிப்பதால் அது உடலுக்குள் செல்லாது என்பது அறிவியல் உண்மை மேலும் காயத்தின் வழியே அது உடலுக்குள் செல்ல வேண்டும் என்றால் அந்த காயம் மிக பெரிதாக இருக்க வேண்டும் என்று தான் மருத்துவ தகவல்கள் சொல்கின்றன. அவ்வாறு மிகப் பெரிய காயமாக இருந்தால் அருவியும் அவள் தோழியும் உட்கார்ந்து இளநீர்அருந்திக் கொண்டிருக்க மாட்டார்கள். ஒரு வேளை என் பார்வை அல்லது நான் படித்த தகவல்கள் தவறாக இருக்கலாம். எனவே அருவிக்கு அறிதினும் அறிதான நிலையிலேயே எயிட்ஸ் வந்தது என்றே எடுத்துக்கொண்டு- படத்தில் மருத்துவ தகவல்கள் எந்த அளவு தவறாக கையாளப்பட்டுள்ளது அல்லது சரியாக கையாளப்பட்டுள்ளாது என்பதை பற்றிது அல்ல இக்கட்டுரை. அப்படி தவறாக இருப்பின் அது குறித்து மருத்துவ உலகை சார்ந்த எவரேனும் பேசுவார்கள் என்று நம்புகிறோம். அருவி எப்படி ஒரு முழுமையான தமிழ் ஆண் மனமாக உருவாகியிருக்கின்றாள் என்பதையே இப்பிரதி பேச விரும்புகிறது.

அருவிக்கு உடல் உறவு மூலம் எச்.ஐ.வி வந்தால் என்ன? ஏன் பெரும்பான்மையான தமிழ் படங்களில் குறிப்பாக தமிழ் உலக சினிமாக்களில் பெண்னின் உடல் தொடர்ந்து புனிதப்படுத்தப்படுகின்றது. உடல் உறவு என்பது இயல்பான செயல்பாடு; அதைத் தாண்டி அதன் மூலம் நோய் வருவதும் இயற்கையானது இரண்டுமே எந்த விதத்திலும் அவமானகரமானது அல்ல, எய்ட்ஸ் எனும் நோய்க்கான ஒரே பிரச்சனை மலேரியா, டைபாயிட்டை போல் அதற்கு மருத்துவம் இல்லை என்பது மட்டுமே. மனித உடல் மீது குறிப்பாக பெண் உடல் மீது காலம்காலமாக சமூகம் கட்டமைத்திருக்கும் புனிதங்கள் குறித்துக் கேள்வி எழுப்பாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு சமூக மனதை புண்படுத்தாது "மனிதம்" "அன்பு" மட்டுமே எல்லாம் என்று பேசுவதை கலையின் எந்தக் கோணத்திலிருந்து
பார்ப்பது?

அருவி சிலுவையைச் சுமக்கிறாள்:

அருவி எல்லோரையும் மன்னிக்கிறாள், அவள் தனக்கு தவறு செய்தவர்களிடம் யாசிப்பது எல்லாம் மன்னிப்பு எனும் ஒற்றை வார்த்தையைத் தான். அவர்கள் தன்னைப் பாலியல் வன்புணர்வு செய்தவர்களாக இருந்தால் கூட அவள் அவர்களிடம் மன்னிப்பை மட்டுமே யாசிக்கிறாள் வன்புணர்வுகளைச் சரி என்று சொல்லும் ஒரு சமூக, அரசியல் அமைப்பில் – உச்சநீதிமன்றம், குடும்பத்தில் நடக்கும் வன்புணர்வுகளை எதுவும் செய்ய முடியாது; அப்படி அவற்றுக்கு எதிராக சட்டம் இயற்றினால் குடும்ப அமைப்பே சிதைத்துவிடும் எனும் வாதத்தை இங்கு கருத்தில் கொண்டு. வன்புணர்வுகளுக்கு எதிரான எந்த உரையாடலையும் நிகழ்த்தாமல் நான் சிலுவை சுமக்கிறேன் நீங்கள் மன்னிக்கப்பட்டு விட்டீர்கள் என்று வன்புணர்வாளர்களைப் பார்த்து ஒரு கலை பேசுமாயின் அந்தக் கலையை எந்த கோணத்தில் பார்ப்பது? குற்றம் - தண்டனை - குற்றத்தை ஒழித்தல் என்பதை எல்லாம் விடுத்து எல்லோரையும்’மன்னித்து’ விடுவோம். சாதிய ஆணவ கொலைகள் செய்தவர்களை, இன படுகொலைகளைசெய்தவர்களை, வன்புணர்வாளர்களை, நிற வெறியர்களை, மாற்று பால்/பாலியல்வெறுப்பு குற்றவாளிகளை எல்லோரையும் மன்னித்துவிடுவோம். ஒருபக்கம் கொலை தண்டனைகளை நியாயப்படுத்தும் போலீஸ்/தேசியவாத சினிமாக்கள் மறுபுறம்சிலுவை/மன்னிப்பு மாற்று சினிமாக்கள்.

அருவி தனக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்பதை அறிந்து தன்னுடன் யாராவது புணர்ந்தால் அவர்களுக்கு எய்ட்ஸ் வரக்கூடாது எனும் எண்ணத்தில் பாதுகாப்புடன் இருக்கின்றாள். அதாவது சமூகத்தில் வன்புணர்வு என்பது எப்போதும் நடக்கும். பெண்கள் எப்போதும் பாதுகாப்புனர்வுடன் தங்களையும், தங்களை வன்புணர்வு செய்ய வருபவரையும் பாதுகாப்பாக இருக்கவைக்கவேண்டும். இப்படி அருவி பாதுகாப்பாக இருப்பதால் மூன்று அப்பாவி வன்புணர்வாளர்களின் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல், குடும்ப வன்முறைகளை பற்றி எதையும் பேசாமல் மீண்டும் சமுகத்தின் பொதுமனநிலைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் “மானிட அன்பு” “நேசம்” எனும் பசப்பு வார்த்தைகளை கொண்டு எல்லாமும் நியாப்படுத்தப்படுகின்றது.

தன் மகளுக்கு எய்ட்ஸ்இருப்பதை அறிந்து அவளை வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார், இருந்தும் அப்பாவுக்காய்அருவி கடைசிவரை ஏங்குகிறாள்..காரணம் அவள் தமிழ் மகள். அபத்தமான அப்பா-மகள் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. மகள்களை முத்தமிடும் அப்பாக்களுக்கு மட்டுமே முத்தம் காமத்தில் சேர்ந்தல்ல என்ற உண்மை தெரியும் என்று சொன்ன அப்பா பாத்திரங்களையும், ஆறு – ஏழு வயது மகளிடம் நீ எங்கள் மகள் இல்லை தத்து பிள்ளை என்பதான எதார்த்ததுக்கு மீறிய அறங்களை பேசும் அப்பா பாத்திரங்களையும் நாம் பார்த்தே பழகியிருக்கின்றோம் என்பதால் அருவியின் அப்பா பாசம் அதிர்ச்சியான ஒன்றாக இல்லை, ஒழுக்கமான பெண்கள் தங்கள் பெற்றோர் அவர்களை வெறுத்தாலும் பெற்றோர்களை நேசிக்கவே செய்வார்கள்அதுவே சமுக அறம். எதிர்பார்த்தபடி அருவிக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிந்தும் பீட்டர் அவளை காதலிக்கிறான் காரணம் அவனும் அன்பானவன், கருணையானவன். பீட்டருக்கு அருவி மீது ஏற்படும் அனுதாபக் காதலை கலையின் எந்த கோணத்தில் பார்ப்பது? ஏன் அருவி காதல் இல்லாமலே இறந்து போனால் ஏதாவது மாறிவிட போகின்றதா?

இறுதி காட்சிகளில், நோய் முற்றி தனித்து வாழும் அருவியை பார்ப்பதற்காய் அனைவரும்வருகின்றார்கள் - வெறுத்தவர்கள், ஒதுக்கியவர்கள், வன்புணர்வு செய்தவர்கள், தூற்றியவர்கள், இகழ்ந்தவர்கள், பயன்படுத்திக்கொண்டவர்கள், நேசித்தவர்கள். எல்லோரையும் மன்னித்து அன்புடன் ஏற்றுக் கொள்கிறாள் அருவி. அருவி தமிழ் தேவதை, தேவதைகள் மன்னிக்கும் இயல்புடையவர்கள். எனவே ஆண் சமூகமே நீங்கள் உங்கள் வன்முறைகளை பெண்கள் மீது ஏவிக்கொண்டே இருங்கள் அவர்கள் உங்களை மன்னித்துக் கொண்டே இருப்பார்கள் என்கிறாள் அருவி...

சாதிய எதிர்ப்பு திரைப்படத்தை சமைத்தல்:

பிராமணீயம் குறித்து எந்த ஒரு கருத்தும் கூற முடியாத காலகட்டத்தில் அதன் தடைகளை உடைத்து, பிராமணியத்தின் சாதிய கருத்தாக்கத்தை தமிழ் நிலத்தில் தகர்த்த பெரியார் நிறுவிய வழியில் எளிமையாகப் பிராமணர்களை மட்டும் விமர்சிப்பது என்பதுதான் சாதிய எதிர்ப்புச் சினிமா.கவுண்டர்களும் தேவர்களும், இன்னும் பல இடைநிலைச் சாதிகளுமே தமிழ்ச் சாதிகளின் காவலர்கள்எனும்சூழலில், பிராமணியவிமர்சனத்தினளவு மிகத் தீவிரமாய் இயங்க வேண்டியது கவுண்ட விமர்சனமும்தேவ விமர்சனமும்தான். ஆனால் தமிழ் சினிமாக்கள் தேவர் மகனையும், சின்ன கவுண்டரையும் உருவாக்கத்தான் பழகியிருக்கின்றனவே தவிர எதிர்க்கவோ விமர்சிக்கவோ அல்ல. அருவியிலும் சில பிராமண பாத்திரங்கள் லேசாக கேலிப் பார்வையோடு காட்டப்படுகிறார்கள், பார்வையாளர்கள் கொண்டாடுகின்றார்கள் அத்துடன் எல்லோரின் சாதிய எதிர்ப்பும் முடிந்துவிடுகிறது, மிக 'எளிதாக' சாதியைக் கேள்வி கேட்டாகிவிட்டது J

அருவி எனும் குயர் (queer) ஆதரவாளர்:

அருவியின் நெருங்கிய தோழி எமிலி திருநங்கை, அவளும் எயிட்ஸ் நோயாளி. அவள் படம் முழுவது அருவிக்கு ஆதரவாகவே நிற்கின்றாள். எமிலி படைப்பாளியின் முற்போக்கு அடையாளமாகவே படம் முழுவதும் வருகின்றாள். இன்னொரு முனையில் சுபாஷ் எனும் கதாப்பத்திரம் எமிலி குறித்து அருவருப்பான கேள்வியினை பலமுறை வெளிப்படுத்துகின்றது. அதற்கு மொத்த அரங்கமும் கைத்தட்டி ஆர்பாரிக்கின்றது, அப்படி கைத்தட்டி சிரித்து ஆர்பாரிக்கும் அதே பார்வையாளர்கள் இறுதி காட்சியில் மனிதம் என்று சொல்லி அழவும் செய்கின்றார்கள். வண்புனர்வு என்பது உடல் ரீதியானது மட்டும் அல்ல, ஒரு மனிதரின் பால்/பாலியல்/உடல் சார்ந்த நகைச்சுவைகளும்/வசவுகளும் வண்புனர்வுகளே. இன்னொரு காட்சியில் எயிட்ஸ் நோயாளிகள் விடுதியில் காட்சியின் பின்னனியில் வரும் ஆங்கில செய்திதாள் துண்டு எயிட்ஸ் நோய் LGBTIQ+ சமுகத்தினரையே அதிக சதவிதம் தாக்கியிருபதற்கான தகவலை முன்வைக்கிறது. எயிட்ஸ் நோய் பற்றிய புரிதல் பொது சமுகத்தில் LGBTIQ+ சமுகத்தை இனைத்தே புரிந்துக் கொள்ளப்படும் நிலையில் ஏற்கனவே சமுகத்தால் நிராகரிக்கப்பட்டவர்களாய் இருக்கும் LGBTIQ+ சமுகம் மேலும் நிராகரிக்கப்படுவதற்கான இன்னொரு வாய்ப்பை வழங்குகிறது. எயிட்ஸ் நோய் காப்பகங்களில் இப்படியான செய்தி துண்டுகள் மிக எளிதாக ஆங்காங்கே ஒட்டப்பட்டு இருக்கும் என்பதும், ஒரு படைப்பு எதை எங்கு பேசுகிறது அது என்ன புரிதலை ஏற்படுத்தும் என்பதும் ஒன்றாகாது மேலும் எதார்த்ததில் எதிர்பால் ஈர்ப்பாளர்கள் தான் அதிக சதவிதம் எச்.ஐ.வி பாதிப்புக்குஉள்ளாகுகின்றனர் எனும் தகவல்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கப் பெருகின்றது.

இங்கு இன்னொரு வாதமும் முன் வைக்கப்படலாம்- “திரையின் பின்னணியில் வரும் ஒரு சிறு துண்டு என்ன பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட போகிறது?”. காட்சி மிகவும் வலிமையானது அது அத்தனை வகைகளிலும் மனித மனங்களை ஊடுருவும் இயல்புடையது. அருவி பேசிய மனிதம் எனும் மையம் கைத்தட்டி, கண்ணீர் சிந்திய அடுத்த ஒருமணி நேரத்தில் மறக்கடிக்கப்பட்டுவிடும் ஆனால் சிறு சிறு துணை-காட்சிகள் பல நூறு மனித மனங்களில் பதிந்து போகும் இயல்புடையது, இது காட்சியின் அடிப்படை உளவியல்.

கொண்டாடுதல் எனும் பொதுமனநிலை:

ஒரு சமுகத்தின் அனேக சதவிதம் பேர் ஒரு படைப்பை கொண்டாடுகின்றார்கள், தமிழ் சினிமா கலையின் உச்சம் என்கின்றார்கள். சமுக ஊடங்களும், தொலைக்கட்சிகளும் இதை தாண்டி ஒரு சினிமா உருவாகவே முடியாது எனும் அளவில் பேசுகின்றனர். காக்கா முட்டை வந்த போதும் இப்படி தான் பேசப்பட்டது. இந்த சமுகமனநிலை எப்படி உருவாக்கப்படுகின்றது? அனைத்து செய்திகளும் உருவாக்கப்படும் ஊடக உலகில், நல்லதும், கெட்டதும் உருவாக்கி கொண்டாடப்படுகின்றது. ஒரு இடத்தில் உருவாகும் ‘பாராட்டு’ ஊடக செய்தியாக மாறி கொண்டாட்ட நிலைக்கு செல்கின்றது. ஒரு கட்டத்தில் அப்படைப்பு பேசும் அரசியல், கதை என்று அனைத்தும் மறக்கப்பட்டு கொண்டாட்டம்-பொருளாதார-வெற்றியுடன் மறக்கப்பட்டுவிடுகின்றது. இதில் சமுக ஊடகங்கள் மற்றும் இணையங்களில் பங்கு மிகவும் அதிகமானதாக் நம் காலத்தில் இருக்கின்றது. இந்த கொண்டாட்டத்துக்கு அனேக நேரங்களில் ஒரு சினிமாவை தயாரிக்கும் தயாரிப்பாளரும், அவரின் பலங்களும் காரனமாக அமைகின்றது. தமிழ் சினிமா கலை எனும் அளவில் இல்லாமல் வியாபாரம் என்றே பார்க்கப்படுவதால் ஒரு படைப்பின் வெற்றியில், கொண்டாட்டத்தில் அதன் தயாரிப்பாளர்களின் இடமும் மிக முக்கியமானதாக இருக்கின்றது. அனேக நேரங்களில் பாராட்டுக்களும், கொண்டாட்டங்களும் உருவாக்கப்படுகின்றன, பிறகு ஊடகங்கள் அதை பொது மனநிலையாக்குகின்றன.

மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள், காலமும் சூழலும் தான் அவர்களைத் தீயவர்கள் ஆக்குகிறது அவர்களை மன்னித்து எல்லோரும் அன்பை விதைப்போம் என்று எல்லா பிரச்சனைகளுக்கும் ஒற்றைத் தீர்வொன்றை முன் வைக்கிறான் அருவி. ஆம், அருவி பெண் அல்ல, ஒரு ஆண் உருவாக்கிய கற்பனைப் கதாபாத்திரம், ஆண்கள் செய்யும் தவறுகளை மன்னித்தருளும் தேவதைப் பாத்திரம். எல்லா தவறுகளுக்கும் மன்னிப்பே தீர்வு, மானிட அன்பே எல்லாம் என்று திரும்ப திரும்ப போதிக்கும் தேவதை. நீங்கள் – ஆண்கள் எந்த கொடூரங்களையும் என் மீது தினிக்கலாம் நான் மன்னிப்பேன் என்று சொல்லும் ஆண் உருவாக்கிய தேவதை. அமைப்பு எனும் ஒன்றை கேள்வி கேட்காமல் தனி மனிதர்கள் எல்லோறும் நல்லவர்கள் எனவே அமைப்பு எவ்வுளவு மோசமானதாகவும் இருக்காலாம் அதை கேள்வி கேட்க தேவையில்லை எனும் தேவதை. இதுவரை இந்த உலகில் இருந்த தேவதைகள் போதும், அவர்களின் உடல்கள் மீது ஏற்றி வைத்த சமுக புனிதங்களும், கட்டமைப்புகளும் போதும். மீண்டும் மீண்டும் ஆண்கள் ஆண்களுக்கான பெண் படைப்புகளை உருவாக்காமல் இருப்பதே அவர்களின் ஆக சிறந்த பெண்ணியமாக இருக்க முடியும். பெண்களால் படங்களை எடுக்க முடியும்.. அவர்கள் எடுத்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்...

காலச்சுவடு

Comments

Popular posts from this blog

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்: வெறுப்பை ஜனநாயகப்படுத்தும் அழகியல்!

0. பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்: “நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது” 1. மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போ...

In the most health-obsessed society ever, all is not well*: On Trauma

1 Philosopher Byung-Chul Han's essay Neuronal Power begins with the following lines: " Every age has its signature afflictions. Thus, a bacterial age existed; at the latest, it ended with the discovery of antibiotics. Despite widespread fear of an influenza epidemic, we are not living in a viral age. Thanks to immunological technology, we have already left it behind. From a pathological standpoint, the incipient twenty-first century is determined neither by bacteria nor by viruses, but by neurons ". Modern integrative body mind science defies Byung-Chul Han’s statement, that it is reductive to define human suffering solely in terms of ailments. However, we are living in an era, where production relations dictate nearly everything about human existence, in this specific context Byung-Chul Han’s statement—that the majority of human society is afflicted by mental or neuronal issues—serves as a foundational lens to understand contemporary humans and their struggles. In today’...

படுகொலைக்கு முன்னான சில மணி நேரங்கள்

    ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன் , எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை . அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட   நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன் , ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல் . கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை . உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை , இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை . அதே நேரம் ஒளியற்று , ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது , சூடான மழைத் துளியை போல் . மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது ... அம்மாவின் முலை காம்புகள் , விபத்தொன்றில் மரணித்த நன்பன் , தேர் திருவிழா , அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள் , அவளின் முதல் முத்தம் , இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம் , கல்லூரியின் விடுதி அறை , முதல் காமத்தின் வெள்ளை இரவு ... இப்படி சொல்லி ம...