
எழுத்து தன் வடிவங்களை இடைவிடாது மாற்றிக்கொண்டே இருக்கிறது. ஒரு சமயம் மரபார்ந்த நடைகளாகவும், கடுமையான சட்ட திட்டங்களுக்குள்ளும் ஆட்பட்டுக் கிடந்த எழுத்துகள், அதன்பின் நவீனத்தின் தாக்கங்களிலிருந்து விடுதலையாகி தான்தோன்றியாய் புதிய வகைமைகளை பிறப்பித்தன. ஒற்றைத் தன்மையான கதையாடல்களிலிருந்து விலகிய இன்றைய எழுத்துகள் வாசகருக்கு கட்டட்ட வெளிகளையும் திறப்புகளையும் அனுபவங்களையும் கொடுக்கும் பன்முகத்தன்மையானவலை பின்னல்களாய் உருவம் கொள்கின்றன. வாசகரின் மனதைப் பொறுத்து ஒரு பிரதி அதன் வடிவங்களை மாற்றிக் கொள்கிறது, வாசிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அனுபவங்களை பெறுவதற்கான அணைத்து சாத்தியப்பாடுகளையும் புது எழுத்துக்கள் முன்வைக்கின்றன. பின்நவீனம், மாய எதார்த்தம் எனும் வடிவங்கள் அகிலம் முழுவதிலும் எழுத்தாளர்களின் மீது பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன். இவை இரண்டும் ஏதோ ஒரு வகையில் இன்றைய எழுத்து தனக்கான வெளியை உருவாக்குவதற்கான அடிப்படைக் காரணிகளாய் இருக்கின்றன. 1)போர்ஹேஸ், மார்க்குவெஸின் வருகை, அவர்கள் இலக்கிய உலகம் மீது ஏற்படுத்திய தாக்கம். 2) அதே காலத்தில் நவீனத்திலிருந்து பின் நவீனத்துக்கு பயணித்த எழுத்து வடிவம், தெரிதாவும், ரோலான் பார்த்தும் பின் நவீன வடிவங்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் இந்த இரண்டுமே எழுபதுகளுக்கு பின்னான இலக்கிய வடிவங்களை நிர்மாணிக்கின்றன.
குறிப்பாக தமிழ் சூழலில் நிறப்பிரிகை காலத்துக்கு பின்னான இலக்கியமும், புதிய கதை சொல்லிகளின் வரவும் பின்நவீனத்துவம், மாய எதார்த்தம் எனும் இரண்டு சிந்தனை முறைகளின் தாக்கங்கங்களால் உருப்பெற்றவையாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக மாய எதார்த்தம் தமிழ் இலக்கியத்துடன் நெருங்கி நின்றது. தொன்மங்களைளையும், வாய்மொழி கதையாடல்களையும் மீளுருவாக்கம் செய்த தமிழ் எழுத்தாளர்கள் அதனுடாக வாசிப்பவருக்கு புதிய அனுபவங்களை கொடுக்கும் கதைகளை உருவாக்கினார். மரபார்ந்த கதை சொல்லும் முறையிலிருந்து/தளங்களிலிருந்து தங்களை முற்றிலும் விடுவித்துக்கொண்டு புதிய பிரதிகள் உருக்கொண்டன. ரமேஷ்- பிரேம், சாரு நிவேதித்தா, பாமா, கோணங்கி, சோ தர்மன், அழகிய பெரியவன் என்று பலரும் தமிழ் கதை சொல்லும் முறைகளையம், தளங்களையும் முழுமையாக மாற்றி அமைத்திருந்தனர். சாத்தியமற்றவைகளிலிருந்து புதிய தமிழ் கதைகள் பிறந்தன. அவை பெரும்பான்மையான நேரங்களில் அதிகாரங்களையும், சமூக கட்டமைப்புகைளயும் கேள்வி கேட்டன, உடைக்க எத்தனித்தன. தொன்னூறுகளுக்கு பின்னான காலகட்டம் என்பது தமிழ் போர் இலக்கியத்தின் காலகட்டம் என்று தான் சொல்ல முடிகின்றது. ஈழத்தின் விடுதலை போர் பல புதிய கவிகளை, கதை சொல்லிகளை உருவாக்கியது. துவக்குகள், கிபீர்கள், சாவுகள், சப்பாத்துகள், அகதி வாழ்க்கை, வீரம் - துரோகம் என்று கதையாடல்கள் விரிந்தன. தமிழின் போர் பெருமைகளை பேசும் சங்க இலக்கியங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு போரினுடான வலிகளை, சாவுகளை, போரின் கொடூரங்களை, போரில் வாழ்ந்த மக்களின் கதைகளை, வாழ்வியலை பேசின. ஈழத்து போர் சூழலில் தமிழ் கதையாடல்கள் உச்சங்களை கண்டன என்பது தான் அபத்தத்தின் உச்சம் . ஷோபா சக்தியின் தங்க ரேகையும், கண்டி வீரனும், குண்டு டையானாவும், எம்ஜியார் கொலை வழக்கும் கதை சொல்லும் முறையின் புதிய பரிமானங்களை கொண்டிருந்தன. தமிழ் சிறுகதைகளின் உச்சங்களை ஷோபாவின் கதைகளே அடைந்திருக்கின்றன என்பதற்கு தங்க ரேகையும், குண்டு டையானாவுமே தகவல் சாட்சி. அதே காலத்தில் எழுத வந்த சயந்தன் நவீனத்துக்கும் அதற்கு பின்னான எழுத்துக்களுக்குமான இடையில் ஆறாவடுவை எழுதினார், போருக்கு பின்னான சூழலின் கதைகளில் சயந்தனின் இறுதி வணக்கம் ஒரு அற்புதம் என்று தான் சொல்ல வேண்டும், போருக்கு பின்னான தலைமுறையின் அல்லது போரிலிருந்து உடனடியாக வெளியேறிய தலைமுறையின் உளவியலை அப்பட்டமாய் பதிய வைத்த கதை அது.
அதற்கு பின்னான புதியவர்களின் வருகை என்பது மீண்டும் தமிழ் கதை சொல்லும் வடிவம் ஒற்றைத் தள கதை சொல்லும் முறைக்கே திரும்பி போய்விட்டதோ என்று என்னும் அளவில் நவீன வடிவத்தின் கதைகளாக வெளிப்பட்டன, வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விலக்காக ஒரு சிலரின் கதைகள் பின் நவீனத்தின், மாய யதார்த்ததின் நீட்சியாக நீழ்கின்றன குறிப்பாக சமிபத்திய வாசிப்புகளில் சிவசங்கரின் கதைகள் கதையின் வடிவங்களை உடைத்து உட்காலனியத்தின் புதிய வடிவங்களை வாசகர் முன் வைக்கின்றன. இந்த இடத்திலிருந்துதான் நாம் மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலத்தை அனுக வேண்டியுள்ளது. போரும், சாவுமான வாழ்க்கையினூடாக போரின் உடலை சுமந்துக்கொண்டு பிறந்த நாள் முதலாக அழைந்த ஒரு மனதின் தன்னிலை வெளிப்பாடாக தான் மெடூசா பிறந்திருக்கின்றாள்.
போரின் புனித உடல்களை புறம் தள்ளி அதன் வெற்றி தோல்வி கதைகளை விட்டு விலகி, போரில் வாழ்ந்த மனிதர்களின் கதைகளை அவர்களின் வாழ்வியலை கதையாடலின் அனைத்து சாத்யப்பாடுகளினூடாகவும் வெளிப்படுத்துகின்றாள் மெடூசா. புற உடல்களுக்குள் போரின் அக உடலை தூக்கிக்கொண்டு திரியும் மெடூசாவின் கதைகள் வாசிப்பவரின் கழிவிரக்கத்தை கோராது, போரை தாண்டி/ போருக்கு பின்னான போரின் கடைசி வடுக்களுடன் வாசகருடன் உரையாடுகின்றன. போருக்கு பின்னான மக்களின் வாழ்வியல், உளவியல் சிக்கல்களை பிரதி முழுவதிலும் பேசும் மெடூசா போர் பெருமைகள் பழங்கதைகளாகிவிட்டதை உணர்த்துகின்றாள். கதைகளில் வரும் அனைத்து மனிதர்களும் தங்களுக்கான போரின் சுய அனுபவங்களுடன் பிரதி முழுவதும் அலைந்துக்கொண்டே இருக்கின்றனர்.
போரில் வாழ்ந்த, மரித்த, தப்பித்த, அங்கவீனமான, அகதியான அத்தனை மனிதர்களின் மனதிலும் அவநம்பிக்கையை மட்டுமே விட்டுவைத்துள்ளது, அனைத்திலும் நம்பிக்கை இழந்த மனிதர்கள் நம்பிக்கையின் கடைசி தரிப்பிடமாக சாத்திரிகளையும், மிளகாய் செடிகளையும் நாடி செல்கின்றனர். போர், மக்களை மட்டும் கொள்ளாது அப்பா வளர்த்த கோழிக்கால் பட்டியின் அத்தனை வெள்ளை மாடுகளையும் கொன்று விடுகின்றது. போரிலிருந்து முற்றிலுமாய் விட்டு விலகி, பள்ளியின் விடலை பருவ ஆண் மனதை பேசுகின்றனர் மக்ரலினும் அவளின் அறுபதாயிரம் புறாக்களும். கடல் பார்த்திருக்க நிலம் உரித்து உத்தரித்து மாண்ட மக்களின் மேல் கொண்ட அன்பினால் துயறுற்ற மெடூசா தன் கண்களை மீண்டும் திறந்து அகிலத்தையே கல்லாக்குகின்றாள். போரின் மிச்சத்தில் அலையும் தீட்டுத்துணி, போரின் ஒரு இரவை சேர்ந்து கழிக்கும் கோலியாத்தும் தாவித்தும்..... ஆசிரியரை விலக்கி வாசகருடன் நேரடியாக உரையாடும் இக்கதைகள், தங்கள் வடிவங்களை தாங்களே தீர்மானித்து, வாசிப்பவரின் உணர்வுகளினூடே வாசிப்பின் அனுபவங்களை கடத்துகின்றன. பிரதி முழுவதிலும் சிதறி கிடக்கும் விவிலிய, கிரேக்க தொன்மங்கள் இடைவிடாது புதிய கதை சொல்லும் முறைகளை உருவாக்கி, கதைகளை புதிய வெளிகளில் பிறப்பிக்கின்றன.
ஆட்காட்டியின் முன்னுரையிலிருந்து:
போர் நினைவுகளும், வெளிப்பாடுகளும், அணுகுமுறைகளும் தன்னிலை சார்ந்தவை. அவற்றைப் பொதுமைப் படுத்தல்களுக்குள் அடைபட முடியாத விலகல்களின் தொகுப்பாக மட்டுமே வாசித்து, உரையாட முடியும். யதாரத்தனின் புனைவுகளில் திரளும் போர்த் தன்னிலை, போரை உள்ளிர்ந்து அணுகிய சுயமாகவே இருக்கிறது. அதற்குப் போர் குறித்த் புனித கதையாடல்களை தக்கவைத்திருக்க வேண்டிய தேவையிருப்பதில்லை. போரை இரத்து செய்யும் போக்கே புனைவில் உருவாகி வருகிறது.
தமிழின் இன்னும் ஒரு புது கதை சொல்லி அற்புதமான தன் கதைகளுடன் வாசகர்களை வந்தடைந்திருக்கின்றார்.
மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்
யதார்த்தன்
வெளியீடு: ஆட்காட்டி
Comments
Post a Comment