1

thrice2k (Dylan Kuhn)
1943ஆம்வருடம் ஜூலை 16ஆம் தேதி இரண்டாவது ஆஸ்விச் முகாமான பிர்கெனோ முகாமில் குண்டுகள் வீனாகுவதை தவிர்பதற்காய் நாசி படைகள் கண்டுபிடித்த மிக சிறந்த உக்தியான விஷ வாய்வு கொட்டடிகளில் அடைத்து படுகொலை செய்யப்பட்ட 567 யூதர்களில் ஒரே மலையாள யூதனான பேஃபோர்டு சேலத்தின் கதையை, கேரளத்தின் மேற்கு கரை நகரான கொச்சியின் மட்டன்சேரியில் இருக்கும் யூத பட்டினத்தின் மிச்சமிருக்கும் ஒரே யூத தெருவான சின்னகாக் சந்தில் பல நூறு வருடங்களாய் யார் கண்களுக்கும் புலப்படாது வாழும், உடலிலிருக்கும் ரோமங்கள் அனைத்தும் உதிர்ந்து தோல் எலும்புகளோடு ஒட்டிப்போனவரும், கேரளத்து யூதர்களின் ஆதி மகன்களில் ஒருவருமாகிய யோசப் கோதர் என்னிடம் சொன்ன நாளிலிருந்து சரியாக ஏழு மாதங்கள் கழித்து இந்த கதையினை நான் எழுத ஆரம்பிக்கின்றேன்.
ஐரோப்பா முழுவதினையும் ஆக்கிரமித்திருந்த இரண்டாம் அகில யுத்தத்தின் நாட்களில் பேஃபோர்டு சேலம், ஸ்காட்லாந்து சென்றது வரலாற்று துயர் இல்லை என்றாலும் காதலின் பொருட்டு அவன் கல்வி கற்ற அபர்தீன் பல்கலைக்கழகமிருந்த அபர்தீன் நகரத்தை விட்டு தன் காதலி லீபா சாசுனுடன் அவளின் பெற்றோர்களை தேடி போலந்து சென்றது அவனது வரலாற்றில் மிகவும் துயரகரமான சம்பவமே என்று சிரித்தப்படி என்னிடம் சொன்னார் கோதர். கோதர் அப்படி சிரிக்கும் போது எழும்புகளுடன் ஒட்டிப்போனஅவர் முகத்தின் தோல்கள் மேலும் சுறுங்கி விரிந்தன. பற்களற்ற அவர் வாயிலிருந்து வெளியேறியகாலத்தின் துற்நாற்றத்தை என்னால் சகிக்க முடியவில்லை, அது அழுகிப்போன தக்காளியின் புளித்த வாசத்தை ஒத்திருந்தது. காதலின் பொருட்டு பேஃபோர்டு போலந்து சென்றிருக்காவிடில் மட்டன்சேரியின் யூத பட்டினத்தையின் எதிர்கரையில் அமைந்திருக்கும் தன்னுடைய கருப்பு யூத தெருவுக்கு அவன் திரும்பி வந்திருக்கக்கூடும், அந்த தெருவின் முதல் பொறியாளன் எனும் பட்டத்தையும் அவன் அடைந்திருக்க கூடும்ஆனால் இது ஏதும் இல்லாது காதலின் பொருட்டு வலது கையில் தாவித்தின் நட்சதிர பட்டையை அனிந்தப்படி சைக்லான் பி’க்கு 566 வெள்ளை யூதர்களுடன் சேர்ந்து அவனும் பலியானான்.
நாங்கள் இப்படி மரிப்பது எங்களுக்கு புதித்தல்ல சாலமனின் முதல் கோவிலை இடித்து தள்ளியபோது அவர்கள் எங்களை முதன் முதலாய் கொன்றார்கள், அதற்கு பின் பல முறை பல்வேறு வடிவங்களில் நாங்கள் கொல்லப்பட்டுவிட்டோம் - வெட்டி கொல்லுதல், கூட்டமாக எரித்தல், வெடிகுண்டுகள், இதோ பேஃபோர்டை போல் விஷ வாய்வு கொண்டு கொல்லப்படுதல் என்று பல்வேறு வடிவங்களில். எனவே எங்களுக்கு கொலைகள் பழகிப்போன ஒன்று தான் என்று கோதர் மலையாளத்தில் சொன்னதை நான் முழுவதுமாய் புரிந்துக்கொண்டதாக தான் உணர்ந்தேன். அப்படி பேசி பின் எந்த உணர்வுகளையும் காட்டாத அவரது கிழட்டு முகம் இறுகிப்போய் எதையோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது, அவர் பார்வை சென்ற திசையிலிருந்த வெள்ளை சுவற்றில், கருப்பு பளிங்கு கல்லில் யூத பட்டினத் தெருஎன்று ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் செதுக்கப்பட்டிருந்தது.
தூக்கமற்ற ஒரு வெக்கை நாளின் நடுநிசியில் தான் யோசப் கோதருடனான எனது அறிமுகம் நடந்தேறியது. தூக்கம் பிடிபடாத அந்த இரவில் என்னசெய்வது என்று தெரியாது நான் தங்கியிருந்த அறையினை விட்டு வெளியேறி எதிரேயிருந்த கடற்கரையில் அமர்ந்து வெட்கை வெளியிடும் கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, தேன் நிறத்திலான பழமை மண்டிய கையொன்று என்னை தூக்கிக்கொண்டு ஆகாயத்துக்கு சென்றது. மேகங்களுக்கு கீழாக, நட்சத்திரங்கள் நிறம்பிய இருட்டு வானில் நான் மிதந்துக் கொண்டிருந்தேன். என் கால்களுக்கு கீழே கொச்சியின் இருண்ட கடலும், டச்சு கால கட்டிடங்களும் மாறிமாறி வந்துப்போய்க் கொண்டிருந்தன. இறுக பற்றியப்படி என்னைஆகாயத்தின் வழியே தூக்கி சென்ற தேன் நிற ஒன்றறைக்கை, அடுத்த சில நிமிடங்களில் யூதபட்டினத்தின் சின்னகாக் சந்தில் எனக்காய் காத்திருந்த அதே தேன் நிறத்தில்மின்னிய எழும்புகளோடு, தோல் ஒட்டிப்போன, நிர்வானமான ஒரு ஆதி கிழவனின் முன் நிறுத்தியது. என்னை பார்த்து புன்னகையித்த அந்த கிழவர் யோசப் கோதர் என்று தன் பெயரை சொல்லி கைகளை நீட்டினார். அந்த கையில் பாதி இருக்கவில்லை மூன்று விரல்களும் அரைவாசி கையுமே மிச்சமிருந்தது. காலம் என்னை அரித்து சென்றுவிட்டது என்று சொன்ன கிழவர் உனக்கு சொல்ல என்னிடம் ஒரு கதை இருக்கின்றது என்றார். நான் கைகள் நடுங்கஅவரின் கைகளை பற்றி என் பெயரை சொல்லி அறிமுகம் செய்துக்கொண்டேன்.
கதையாக எழுதக்கூடாது என்று கோதர் எனும் பேய் என்னிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு கூறிய, எழுதப்படக்கூடாத ஆனால் சத்தியம் மீறப்பட்ட அந்த உரைமொழிப் பதிவு:
மனிதர்கள் பொதுவாக நம்பிக்கையற்றவர்கள், நான் மனிதர்களை நம்புவதில்லை. மனிதனாக இருந்த போது நானும் நம்பிக்கையற்ற ஒருவனாக தான் இருந்திருக்க வேண்டும் என்ற கோதர் நிலவின் வெளிச்சத்தில், எங்களுக்கு எதிரேயிருந்த யூத தேவாலையத்தின் மீது நான் செய்த சத்தியத்தை தன்னிடமிருந்த பழைய பச்சை வர்ண புகைப்படகருவியில் படமெடுத்தார் – தகவல் சாட்சிக்கு என்று சொல்லி என்னை பார்த்து சிறிதாக புன்னகையித்தது கோதர் எனும் பேய். பற்களற்ற அந்த வாய் இடது புறம் வளைந்து திரும்பியது . நான் ஏதும் சொல்லாது அவரை பார்த்து பதிலுக்கு புன்னகையித்தேன். தேவலையத்தின் முகப்பிலிருந்த மணிக் கூண்டு இரவு இரண்டு மணிக்கான ஒலியை எழுப்பி அடங்கியது. பேஃபோர்டு எங்கள் பட்டினத்தை சேந்தவன் அல்ல. பேஃபோர்டின் அப்பனும், தாத்தனுமான சேலம்கள் நீரின் மறுக்கரையில் இருக்கும் யூத தெருவில் பிறந்தவர்கள். அத்தெருவினரை எந்த காரணம் கொண்டும் நாங்கள் இந்த தெருவுக்குள் கூட அனுமதிக்க மாட்டோம். அவர்கள் தங்களையும் கடவுளின் பிள்ளைகள் என்று சொல்லிக் கொண்டாலும் அவர்கள் நாங்களாக மாட்டார்கள் ஏனெனில் அவர்களின் ரத்தம் புனிதமற்றது. அது அடிமைகளின் ரத்தம், கருப்பின் ரத்தம். ஒரு புனித யூதன் எப்படி கருப்பு நிறத்தில் இருக்க முடியும்? உங்களின் அரசர்கள் எங்களையே ஏற்றுக் கொண்டார்கள், எங்களிடமே உறவு கொண்டாடினார்கள். நாங்களே இஸ்ரேலின் பிள்ளைகள், வெள்ளை தானே உண்மையின் வரிகளாகஇருக்க முடியும். நாங்களே சாலமனின் வாரிசுகள், எங்களின் உயிர்களையே எங்களின் ஆதி தகப்பன் யோசப்ரப்பான் கடலில் சுமந்துக்கொண்டு இந்த கரைக்கு வந்தான். சரி! எல்லாம் முடியவிருக்கின்றது இன்னும் இதை பற்றி பேச ஏதும் இல்லை. இங்கு ஒரு ஐந்து பேரும் மறு கரையில் ஒரு பத்து பேரும் மிச்சமிருக்கின்றோம். எனவே அதை பற்றி பேச எனக்கு எந்த விருப்பமும் இல்லை, பழங்கதைகளை பேசி பேசி அழுத்துப்போய்விட்டது. உன்னைப்போல் பல நூறு பேர் எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொண்டு இந்த வீதியில் அலைந்திருக்கின்றார்கள். எங்கள் மக்களும் பல நூறு முறை இதே கதைகளை சொல்லி விட்டார்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் இதோ இந்த இருண்ட கடைகளின் வனிகர்கள் என்னையும், என் ஆவியினையும் கூட துரத்தி விடுவார்கள், பிறகு எங்களுக்கென்று இங்கு ஏதுமே இருக்காது. சரி வேண்டாம், என் புலம்பல்களை நிறுத்திவிட்டு நான் சொல்ல வந்த பேஃபோர்டின் கதையை உனக்கு சொல்லிவிடுகின்றேன்.
பேஃபோர்டு சேலம் எர்னாகுளத்திலிருக்கும் யூத தெருவில் பருவகால மழை நாள் ஒன்றின் மாலையில் ரேமாண்ட்டுக்கும், ஜூலியட்டுக்கும் நான்கவது மகனாக பிறந்தான். நான் பொதுவாக அடிமைகளின் தெருவுக்குள் செல்வதில்லை, அடிமைகளின் தெருவுக்குள் செல்வது அசுத்தமானது தானே. ஏன் மௌனமாக இருக்கின்றாய்? ஏதாவது பதில் சொல். சரி நீ மௌனமாகவே இரு, நான் சொல்லும் கதையை மட்டும் கேள். எனவே அவன் பிறந்த செய்தியை எடுத்துக்கொண்டு அந்த வாரத்தின் ஷபாத்துக்கு கருப்பர்கள் வந்தார்கள், அப்படி தான் அவனின் பிறப்பு செய்தி என்னை வந்து சேர்ந்தது. அதற்கு பிறகு பல நூறு அடிமை யூதர்களை போல் அவனும் ஒருவனாக தான் அதோ அந்த எதிர்கரையில் வளர்ந்தான். பரதேசி தெருவில் இருப்பவர்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த கொச்சி யூதர்கள் அனைவரின் பார்வைகளும் அவனை நோக்கி திரும்ப செய்த அந்த சம்பவம் அவனது இருபத்தி மூன்றாவது வயதில் நடந்தேறியது. திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆதரவில் ஸ்காட்லாந்திலிருக்கும் அபர்தீன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்கான வாய்ப்பை பெற்ற முதல் கருப்பு யூதன் பேஃபோர்டு சேலம் தான். அதை ஒரு மாபெரும் வரலாற்று சம்பவம் என்று தான் சொல்ல வேண்டும். கொச்சியின் ஒட்டு மொத்த யூத மக்களும் ஆச்சரியத்தில் வியந்த செய்தி அது, ஒரு கருப்பு யூதன் மேற்படிப்புக்காய் ஐரோப்பா செல்கின்றான். அதே காலகட்டத்தில் தான் இந்த ஆப்ரஹாம் சேலம் பல போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தான். கருப்பர்கள் பரதேசி தேவாலையத்துக்குள் செல்லும் உரிமை, தோரா பாடும் உரிமை என்று அவன் ஒரு பக்கம் விடாது தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான். இதுவே என் காலமாக இருந்தால் இவர்கள் இப்படி எல்லாம் செய்திருப்பார்களா அல்லது செய்திருக்க தான் முடியுமா? எங்கிருந்து கிட்டியது இத்தனை தைரியம், அடிமைகள் அடிமைகளாக தானே இருக்க வேண்டும். சாலமன் வீட்டு பிள்ளை என்று தன்னையும் தன் தெருவினரையும் நினைத்துக் கொண்டான்அந்த ஆப்ரஹாம் அதனால் தான் தேவனின் இடத்துக்கு பங்கு கேட்டான். என்ன செய்ய இத்தனைநடந்தாலும் நான் ஏதும் செய்யமுடியாத ஆவியாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன், கொண்டிருக்கின்றேன். உனக்கு என்னை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கின்றது தானே. மொத்த ஊரும் புனித நிலத்துக்கு திரும்பி போய்விட்ட நிலையில், இஸ்ரேல் பற்றிய கனவில் நாள் தவறாமல் தோரா பாடிய இந்த கிழத்துக்கு புனித நிலத்துக்கு போக எந்த பாக்கியமும்இருக்கவில்லை, அதனால் தான் யாருமற்ற வனாந்திர தனிமையில் அலைந்துக் கொண்டிருக்கின்றேன். நான் ஏதும் சொல்லாது வானத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஸ்காட்லாந்து சென்ற பேஃபோர்டு மின்சார பொறியியல் பயின்று வந்தான். போர் அதுகாலம் இங்கிலாந்தை நெருங்கியிருக்கவில்லை ஆனால் ஏனைய ஐரோப்பிய தேசங்களை நாசி படைகள் உடைத்தெரிந்துக் கொண்டிருந்தன. உலக வரைப்படத்திலிருந்து பல தேசங்கள்கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்துக் கொண்டிருந்தன, அகண்ட செர்மனி விரிந்துக் கொண்டிருந்தது. ருஸ்யாவும், இங்கிலாந்தும் மற்ற நேச படைகளும் என்ன செய்வது என்று தெரியாது கையறு நிலையில் நின்றுக் கொண்டிருந்தன. அபர்தீன் நகரத்திலும் போரின் வடுக்களை பேஃபோர்டு அவ்வப்போது பார்த்தான், அங்கவீனமான ஏதோ ஒரு ரானுவவீரன் இறுகிய முகத்துடன் தடிகளை ஊன்றி நடந்து செல்லும் காட்சிகளை சந்திக்க நேர்ந்தது அவனுக்கு. போர் எந்த நேரத்திலும்அபர்தீன் நகருக்குள் வந்துவிடும் எனும் அளவிலே நாட்கள் நகர்ந்தன. போரின் தீவிரத்தை தான்டி ஸ்காட்லாந்து விடுதலைக்கான முழக்கம் நகரெங்கும் வலுவாக கேட்டது. எங்கு பார்த்தாலும் தனி ஸ்காட்லாந்துக்கான அரைகூவல்களை அவனால்கேட்க முடிந்தது. பெரும்பாலனா அவனது ஸ்காட் நண்பர்கள், குடிக்கும் ஒவ்வொரு முறையும் விடுதலை குறித்தே பேசினார்கள். போர், விடுதலை என்று இரட்டை முனைகளுக்கு நடுவில் தான் அந்த நகரத்திலிருந்தஅனைவரின் நாட்களும் கழிந்தன.
ஸ்காட்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் நடுவே தனித்து விடப்பட்ட பேஃபோர்டு, லீபாவுடன் நட்பானது வியப்பான செய்தி ஏதும் இல்லை. அவளும் அவனை போலவே தனித்துவிடப்பட்டிருந்தாள். பல்கலைகழகத்தின் கலை வகுப்பில் சமூகவியல்பயின்று வந்த அவள் வட்டமுகமும், குட்டையான கூந்தலும், ஆறு அடி உயரமும், வெளிறிய கண்களையும் கொண்டவளாய் இருந்தாள். தப்பிக்கவே முடியாத நாசிக்களின் கட்டுப்பாடுகளையும், தடைகளையும் தாண்டி அவளின் யூதபெற்றோர்கள் அவளை போலந்தை விட்டு இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தனர். ஆரம்ப நாட்களில் லண்டன் நகரத்தில் தனியாக அலைந்து திரிந்தவள் கையிலிருந்த பணத்தை கொண்டு கல்லூரியில் சேரும் முடிவை எடுத்தாள். மாணவி எனும் அடையாளம் போரிலிருந்தும், தனிமையிலிருந்தும் தன்னை விடுவிக்கும் என்று அவள் நம்பினாள்.
கோட்டைகள் நிறம்பிய கடற்கரை நகரான அபர்தீனின் மைய சதுக்கத்தில் அவளும்அவனும் ஒருவரை ஒருவர் அனைத்தபடி நடந்தனர், அந்த அனைப்பு இருவருக்கும் வார்த்தையாய் சொல்லமுடியாத ஏதோ ஒரு பாதுக்காப்புணர்வை கொடுத்தது. போர் பற்றிய செய்திகள் ஒவ்வொரு நாளும் அச்சம் தருவதாய் இருந்தது, ஐரோப்பியாவில் இருக்கும் யூதர்கள் பல்லாயிரம் பேர் தினம் தினம் மாண்டனர். தன்னுடைய பெற்றோர்களின் நிலை என்னி ஒவ்வொரு நாளும் பயந்த, லீபா ஒரு நாள் எல்லா தடைகளையும் தாண்டி மீண்டும் போலந்துக்கு சென்று அவளின் பெற்றோர்களை தேடி கண்டுப்பிடிக்க முடிவுசெய்தாள். பேஃபோர்டும் காதலின் உச்சத்தில் அவளுடன் வருவதாய் சொன்னான். வாழ்க்கையை நோக்கிய அவர்களின் இறுதிப் பயணம் அப்போது தான் ஆரம்பித்தது – என்று சொல்லி கதையினை இடை நிறுத்திய கோதர், பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினார். இரவு மழுங்கிக்கொன்டே வந்தது, இன்னும் ஒன்றிரண்டு மணி நேரத்தில் சூரியன்அரபி கடலுக்கு எதிரே உதித்துவிடும். அதற்குள் கோதர் இந்த கதையினை என்னிடத்தில்சொல்லி முடித்துவிட வேண்டும் இல்லை என்றால் நான் அடுத்த நாள் இரவு வரை அவருக்காய் காத்திருக்க வேண்டிவரும். கதைகளுக்காய் காத்திருப்பது அவஸ்தையான ஒன்று . யார் கொடுத்த சாபமோ பேயான பின்னரும் கோதரை துரத்திக் கொண்டிருக்கின்றது, அவரால் பகலில் யாரிடமும் பேசமுடிவதில்லை அல்லது அவர் பேசுவது யாருக்கும்கேட்பதில்லை. பல நூற்றாண்டுகளாய் செல்லரித்து போய்கிடக்கும் அந்த மானிட ஆன்மாவை பகலில் பார்க்க முடிவதில்லை. தனக்கு பகலை பல நூற்றாண்டுகளாய் பிடிப்பதில்லை என்று அவர் சொன்னது நினைவுக்கு வந்தது.
பேஃபோர்டை எண்ணி வருத்தம் கொள்கின்றாய் தானே. அவன் லீபாவுடன் போகாமலேஇருந்திருந்தால் எனும் கேள்வி உனக்குள் எழுகின்றது தானே? அப்படி நினைப்பது உனக்கே அபத்தமாக இல்லையா?. அது காதல், வெட்கமற்றகாதல். வாழ்வின் அத்தனை காரண காரியங்களையும் கடந்தது. உலகில் இருக்கும், இல்லாத அத்தனை முட்டாள்தனங்களையும் செய்ய தூண்டுவது, ஏனெனில் அது காதல்! என்றுகூறி சப்தமாக சிரித்தது கோதர் எனும் பேய். கோதரின் கண்களினுள் ஊடுறுவிய நான் நீங்கள் காதலித்திருக்கின்றீர்களா என்று கேட்டேன். பூளை படித்துப்போய், உளுத்துகிடந்த அந்த கண்களை சுருக்கிசிமிட்டிய கோதர் நாம் அந்த கதையைஇப்போது பேசவில்லை தானே என்றார்.
போலந்து எனும் தேசம் இருந்ததற்கான எந்த அடையாளங்களும் மிச்சமிருக்கவில்லை. லீபாவின் பெற்றோர்கள் வசித்த, போலந்தின் தலைநகரான வார்சா நகரம் முற்றிலும் இடிந்துபோய் எரிந்துக் கொண்டிருந்தது. பாதி எரிந்து அழுகிய உடல்களையும், உடைந்து போன கட்டிடங்களையும், கைகளும், கால்களும் இழந்த மனிதர்களயும், பீரங்கி, விமான சப்தங்களையும், எலிகளும் பூரான்களும் வாழும் இடுக்குகளில் மறைந்து வாழும் மக்களையும் கொண்ட நகரமாக அது இருந்தது. நகர் முழுவதிலும் மண்டிக் கிடந்த போரின் கரும்புகையில் கலந்திருந்த குருதியின் நாற்றம் பேஃபோர்டுக்கு குமட்டலை ஏற்படுத்தியது. நீ பார்த்த வழமையான இரண்டாம் உலக போர் ஆங்கில ஐரோப்பிய படங்களில் வரும் காட்சிகளின் கலை அமைப்பை காட்டிலும் கொடூரமானதாக நிஜம் இருந்தது, என்பதை நினைவில் வைத்துக்கொள் என்று சொன்னார் கோதர். அந்த கொடூரத்தின் மத்தியில்தான் காதலின் வேகத்தில் லீபாவின் கைகளை பற்றியபடி அவளின் பெற்றோர்களை பேஃபோர்டு தேடிக் கொண்டிருந்தான். வலது கையில் தாவித்தின் நட்சத்திர பட்டையை அனிந்து உயிர் மட்டும் மிச்சமிருந்த யூதர்கள் கெத்தோக்களை நோக்கி வரிசையில் சென்றுக் கொண்டிருந்தனர். நகரம் முழுவதையும் நாசிக்களின் சப்பாத்துக்கள் ஆக்கிரமித்திருந்தன.
காதல் திரும்ப திரும்ப அபத்தங்களை மட்டுமே செய்ய தூண்டும் என்பதை நீ ஒத்துக்கொள்வாயா? ஆனால் பேஃபோர்டின் கதையை முழுமையாக கேட்டாய் என்றால் நீ ஒத்துக்கொள்ள தான் செய்வாய். அதனால் தான் அவன் மரணத்தின் பிடியிலிருந்த நகரத்தில் மாலை வழிப்பாட்டின் பொருட்டு எரிந்து, உடைந்துப்போன கட்டிம் ஒன்றின் இடுக்கான சந்தில் சப்தமாக தோரா பாடி ஜெர்மானிய வீரர்களிடம் மாட்டிக் கொண்டான். நாசிப் படைகளிடம் மாட்டி அவனது வலது கையில் தாவித்தின் பட்டை அனிவிக்கப்பட்ட அனேக நாட்களுக்கு முன்பே லீபா கானாமல் போயிருந்தாள். ரயிலின் வருகைக்காய் வரிசையாக காக்கவைக்கப்பட்டிருந்த நூற்றுகனக்கான வெள்ளை யூதர்களுக்கு மத்தியில் அவனும் நின்றிருந்தான். பல நூறு வருடங்களாய்அவன் மீதும் அவனின் தெரு மீது படர்ந்திருந்த தீட்டினை போர் நீக்கியிருந்தது. அவனும் கொல்லப்படவேண்டி வரிசையில் நிற்கவைக்கப்பட்டுள்ள பல நூறு யூதர்களில் ஒருவன், அவன் இப்போது அடிமை யூதனோ கருப்பனோ அல்ல அவனும் சாலமனின் பிள்ளை அவனின் உயிரையும் சுமந்துக் கொண்டு தான் யோசப் ரப்பான்கேரள கரைக்கு வந்தார். வரிசையில் நின்றிருக்கும் வேளை இப்படி யோசித்தது அவனுக்குள் இனபுரியாத மகிழ்ச்சியினை கொடுத்தது. மரணம் தன் தீட்டினை விடுவிக்கவிருக்கின்றது எனும் எண்னமே அவனுக்கு போதுமானதாக இருந்தது. அனேகமாய் அங்கிருந்த மொத்த கூட்டத்திலும் தான் கொல்லப்பட போவதுகுறித்து மகிழ்ச்சி அடைந்த ஒரே ஒருவனாக அவன்மட்டுமே இருந்தான்.
அடிவானாம் வெளுக்க இன்னும் ஒரு மணி நேரமிருந்தது. கதையினை மீண்டும் நிறுத்திய கோதர். அவன் மீது தயவுசெய்து பச்சோதாபம் கொல்லாதே. அவனை போன்றவர்களால் தான் புனிதத்தின் மகிமை இன்றைய நாட்களில் அழிந்தே போய்விட்டது. தூய்மையினையும், புனிதத்தையும் நாங்கள் எப்படி பேனி பாதுகாத்தோம் என்று நீ அறிவாயா? அதோ அந்த அடிமை ஐரோப்பாவில் செத்து எங்கள் புனிதத்தை மாசுபடுத்திவிட்டது. யூத படுகொலைகளில் செத்துப் போனவர்கள்பட்டியலில் அவன் பெயரும் இருக்கின்றது. அதற்கான ஆவனம் பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரத்து அருங்காட்சியகத்தில் கான கிடைக்கின்றது, வேண்டுமென்றால் அங்கு சென்று அந்த ஆவனத்தை பார்த்து மகிழ்ச்சிக்கொள். அவனது மரணம் பற்றி அறிந்துக்கொள்ள ஆசைப்படுகின்றாயா? உன்னுள் உருவாகும் ஆவலை தடுக்கமுடியவில்லை தானே. ஒருகொலை பற்றி அறிந்து கொள்வது கிளர்ச்சியான ஒன்றாக இருக்கின்றது அல்லவா? சில சமயம் அந்த வேட்கை அடிவயிற்றில் பட்டாமபூச்சிக்களை கூட பறக்க செய்யும். அவன் எப்படி கொல்லப்பட்டான் தெரியுமா? பேகிராப்டுடன் சேர்த்து மொத்தம் 567 யூதர்களும் மோனோவிஷ் முகாமின் நூறு பேர் கூடநிற்க முடியாத மிக சிறிதான ஆறாவது கொட்டடியில் அடைக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் சைக்லான் பி வாய்வு செலுத்தப்பட்டு, மூச்சு விட முடியாமல் தினறிமூக்கிலும், வாயிலும், கண்களிலும் ரத்தம் பெருக்கெடுத்து ஓட ஒவ்வொருவருவராய் வீழ்ந்துமாண்டனர். மரித்த அத்தனை சடலங்களையும், குப்பைகளை தூக்கி வீசுவதை போல் யூத பினங்களைஎரிப்பதற்கென்று தோண்டப்பட்ட பெரிய பள்ளத்தில் வீசி, நெருப்பிட்டு கொளுத்தினார்கள் நாசி வீரர்கள்.
தன் உடல் எரிய எரிய அதை விட்டு வெளியேறிய பேஃபோர்டு உடலில்லாத தன்னை எப்படி இயக்குவது என்று யோசித்தப்படி செய்வதறியாது வெகு நேரம் தன் உடல் எரிவதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். 567 சடலங்கள் ஒரே குவியலாய் பெரும் ஒளி வெள்ளத்தில் எரிந்துக் கொண்டிருந்தன. அந்த பள்ளத்திலிருந்து வெளியேறிய தீயும், புகையும் வான் வரை நீண்டன. அதற்கு பின் வெகுகாலம் எங்கு செல்வது என்று தெரியாது அந்த முகாமையே அவன் சுற்றி வந்துக் கொண்டிருந்தான். சில காலம் எப்படியாவது லீபாவை கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற வேட்கையுடன் இரவு வேளைகளில் வார்சா நகரின் அத்தனை தெருக்களிலும் அலைந்தான் ஆனால் அவனால் அவனை தவிர வேறுயாரையுமே கண்டுபிடிக்க முடியவில்லை. போர் முடிந்து வார்சா நகரம் தன் ரனங்களிலிருந்து மீண்டுவந்துக் கொண்டிருந்தது. தான் இப்படி தனித்து அலைவது வீண் வேலை என்று முடிவு செய்தவன், கொச்சிக்கே திரும்பி வந்தான். அந்த சமயத்தில் தான் அவன் என்னுடன் அறிமுகமானான். தொடக்கத்தில் ஒரு கருப்பனுடன் நட்புபாராட்டுவதென்பது எனக்கு அவமானகரமானதாகவே இருந்தது ஆனால் என்னுடன் பேச வேறு எவரும்இல்லை என்பதால், நான் தனிமைக்கு விலையாக புனிதத்தை கொடுத்தேன்.
என்னுடன் சேர்ந்து அவனும் பல நூறு பொழுதுகள் அலைந்துக்கொண்டு தான் இருந்தான். அற்பமாய் முடிந்து போன தன் வாழ்க்கை பற்றிய ஏக்கம் அவனிடத்தில் மிகவும் அதிகமாக இருந்தது. தான் மீண்டும் எப்படியாவது மனிதனாக பிறந்துவிட வேண்டும் என்று விரும்பினான். அந்த நேரத்தில் தான் அவனுக்கு ஒரு யோசனையினை சொன்னேன் என்று சொல்லி புதிர் போடுவதான தோரனையில் என்னை பார்த்தார் கிழவர். நான் புருவங்களை வினா குறிகளை போல் உயர்த்தி அவரை பார்த்தேன். மனிதர்கள் காத்திருக்க விரும்புவதில்லை, அவர்களுக்கு அனைத்து உடனடியாக தெரிந்துவிட, கிடைத்துவிட வேண்டும் எனும் பேராசை எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கின்றது ஆனால் என்ன செய்ய, சிந்திக்க ஆரம்பித்து பல்லாயிரம் வருடங்கள் கழித்து தான் உலகம் தட்டை இல்லை எனும் உண்மையினையே மனிதர்களால் அறிய முடிந்தது. இப்போழுது என்ன சொல்கின்றாய், காத்திருப்பது தகுதியானது தானே? யாருக்கு தெரியும் இதோ இன்னும் சில மணித்துளியில் விடியவிருக்கின்ற இந்த சூரியன் மறைந்து அடுத்த இரவு வரும் போதுநான் உனக்கு புதிய கதை ஒன்றை சுமந்துக் கொண்டு வரலாம் என்றது அந்த பேய். என்னையறியாமலே என் கோபம் தலைக்கு ஏறியது. நான் உன்னிடம் எனக்குகதை சொல் என்று கேட்டேனா? இல்லை நடு சாமத்தில் அந்திரத்தில் தொங்கியபடி எனக்கு இந்த ஊரை சுற்றிகாட்டு என்றேனா? முதலில் நீ யார் கிழட்டு முண்டமே? இந்த கதையினை ஒழுங்காகசொல்லி முடித்துவிட்டு போ. இனியொரு முறை உன்னை சந்திக்க நான் விரும்பவில்லை என்றுகத்தினேன். ஏதும் பேசாது என்னை பார்த்து புன்னகையித்த கோதர் நீ சோர்ந்து போய்விட்டாய் என் நண்பனே. உன்னை நாளை சந்திக்கின்றேன். நாளை சொல்லப்போகும் கதை புதிதான ஒன்றாககூட இருக்கலாம் என்று சொல்லி மறைந்துப் போனார். சூரியன் கிழக்கில் உதிக்க ஆரம்பித்திருந்தது, பறவைகளில் கீச்சொலி என் காதுகளை அடைத்தது. தூக்கம், பசியும் ஒன்றாக கலந்து மயக்கம் வருவதை போலிருந்தது. இரண்டு மைல் தூரத்திலிருந்த என் விடுதி அறையினை நோக்கி கூகில் மேப் காட்டிய தடத்தில் நடக்க ஆரம்பித்தேன்.
கண் விழித்த போது மணி மாலை 4 மணி, தலை வலித்தது எழுந்து முகத்தை மட்டும் துடைத்துக் கொண்டு பக்கத்திலிருந்த் உணவகத்துக்கு சென்றேன். முதலில் ஒரு தேனிர் அருந்தினேன் பிறகு இரண்டு பரோட்டாக்களை தின்று விட்டு அறைக்கு வேக வேகமாக சென்று குளித்து தயாரானேன்.பின், இரவின் வருகைக்காய் காத்திருக்க தொடங்கினேன். ஆனால் காலம், தேவை எனும் போதுவேகமாக நகர்வதில்லை ஆனால் நகரதேவையற்ற சமயங்களில் மிக வேகமாக கடந்துசென்று விடுகின்றது. காதலனின் வருகைக்காய் காத்திருக்கும் விடலை சிறுவனை போல் நிம்மதியற்று கோதரின் வருகைக்காய் காத்திருந்தேன். நேரம் செல்ல செல்ல என் மூச்சின் கனம் அதிகமானது, என் இதய துடிப்பை அடிவயிற்றில் உணர முடிந்தது. இந்த சனியன் பிடித்த பேய் ஏன் என்னை இத்தனை தூரம் வதைக்கின்றது என்று மனதுக்குள்ளே கோதரை திட்டி தீர்த்தேன். இரவு ஒரு மணி அளவில் கோதர் என் தோல்கள் மீதுதட்டினார், அதுவரை கடற்கரையினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டு திரும்பினேன். என்ன, வெகு நேரமாக என் வருகைக்காய் காத்திருக்கின்றாயா என்றார். இன்று ஆகாயத்தில் பறப்பேன் என்று நம்பினேன் ஆனால் நீங்களே வந்துவிட்டீர்கள் என்றேன். வாயை திறந்து சிரித்தார்- அழுகிய தக்காளியின் முடை நாற்றம் அவர் வாயினை விட்டு வெளியேறியது. எழுத்தாளன் பொறுமைசாலியாக இருப்பது மிகவும் அவசியம் கிடைத்ததை எல்லாம் கதையாக்க முடியாது அல்லவா என்றார் கோதர். எனக்கு தெரியவில்லை என்று சொல்லிவிட்டு, அவரை உற்றுபார்த்தபடி மீதி கதையினை சொல்லி முடிக்கின்றீர்களா நான் நாளை ஊருக்கு செல்ல வேண்டும் என்றேன்.
யார் காதுகளிலிலும் எளிதில் கேட்டு விடாத ஊமை குரலில் அவர் மீதி கதையினை சொல்ல தொடங்கினார். எங்கள் இருவரையும் எங்களுக்கு மேலேயிருந்த கண்கானிப்பு கேமரா பதிவு செய்துக் கொண்டிருந்தது. கண்கானிப்பு கேமராவில் பதிவான காட்சியில் நிச்சயமாக கோதர் இருக்க போவதில்லை என்பது எனக்கு தெளிவாக தெரியும். இந்த காட்சிகளை பார்க்கநேரிடும் காவலர் ஒரு பைத்தியகார இளைஞன் குடிபோதையில் தனித்து பேசிக் கொண்டிருக்கின்றான் என்று எண்னக்கூடும் என்று நினைத்தேன். பேஃபோர்டுக்கு நான் என்ன யோசனை சொல்லியிருப்பேன் என்று ஏதாவது யூகித்தாயா என்று என்னை பார்த்து கேட்டார். நான் இல்லை என்று தலையாட்டினேன். நல்லது, சில வேளைகளில் சூன்யமாக இருப்பது சுகமானது தான் என்றவர். அவனை கடவுகளை சந்திக்க சொன்னேன், சந்தித்து தான் மீண்டும் மனிதனாக பிறக்க வேண்டும் என்றும் ஆனால் யூதனாக அல்ல என்றும் சொல்ல சொன்னேன். நான் அப்படி சொல்ல காரணம் அவன் மீண்டும் ஒருமுறை கொலை செய்யப்பட்டு விட கூடாது என்பது தான். நாங்கள் யூதர்கள், சாலமன் காலத்துக்கு பின்னால் வரலாற்றின் எல்லா தினங்களிலும் படுகொலை செய்யப்பட்டவர்களாகவே இருக்கின்றோம், எனவே அடுத்த பிறப்பிலாவது அவன் முழுமையாக வாழ வேண்டும் என்று ஆத்மார்த்தமாய் விரும்பினேன். அவன் என்ன தான் கருப்பு அடிமை என்றாலும் என் தனிமையின் தோழன் அல்லவா. கடவுள் அவன் குரலுக்கு செவி கொடுத்தார். அவன் வேண்டியதை கடவுள்அவனுக்கு அருளினார். அதுகாலம் என்னுடன் சேர்ந்து அலைந்துக் கொண்டிருந்த அவனுக்கு மறு பிறவியினை கொடுத்தார், அதுவும் யூதனாக அல்லாமல் வேறு மதத்தவனாக. இதுஎல்லாம் ஒரு சில வருடங்களுக்கு முன்பு தான் நடந்தது. இல்லை என்றால் நீ அவனையே நேரில் சந்தித்திருக்கலாம். இன்று அவன் ஒரு கிருத்துவனகவே, இந்துவாகவே, இசுலாமியனாகவோ அல்லது பௌத்தனாகவோ இந்த உலகத்தின் ஏதோஒரு மூளை பிறந்திருப்பான், அவனுக்குஒரு நாலு அல்லது ஐந்து வயது இருக்ககூடும். என்று சொல்லி முடித்த கோதர், அவனின் மீதி கதையின் நீயே கண்டுபிடி என் நண்பனே என்றுசொல்லிவிட்டு என்னை கட்டியனைத்து நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு மறைந்துப்போனார்.
அவசரகதியில் அவர் மீதி கதையினைசொல்லிவிட்டு மறைந்து போனது எனக்கு மீளாசிக்கலை கொடுத்தது. பேஃபோர்டின் கதையினை விட்டு வெளியேற முடியாமல் அடுத்த சில மாதங்கள் கழிந்தன. காதலன்களை கட்டி அணைத்து முத்தமிடும் வேளைகளில் கூட பேஃபோர்டு குறித்த நினைவுகளுக்கே ஆட்பட்டுக் கிடந்தேன். முழுமையற்ற காதல், முழுமையற்ற காமம், முழுமையற்ற உணவு, முழுமையற்ற எழுத்து, முழுமையற்ற வாசிப்பு என்று எல்லாமும் முழுமையற்றதாகவே கழிந்தன. முழுமையற்ற அனைத்தின் மறுபாதியிலும் பேஃபோர்டு இருந்தான்.
2
சலீமுக்கும் தீமாவுக்கும், பரூக் பிறந்த தினத்தில் குண்டு சப்தங்கள் ஏதும் இருக்கவில்லை, என்றுமே இல்லாத அதிசயமாய் அமைதி, ஈரமற்ற பாலைவன வெப்ப காற்றினை ஆக்கிரமித்திருந்தது. பீரங்கி ஓசைகளும், விமான ஒலிகளுமற்ற பாரூக்கின் வரவை நல்ல சகுனத்தின்வரவாக சலீமும், தீமாவும் நம்பினார்கள். அன்று மட்டுமில்லாது அடுத்த கிழமை முழுவதினையும் சிறு துப்பாக்கி ஓசைகூட இல்லாத அமைதி ஆக்கிரமித்திருந்தது. இரவுகளும், பகல்களும் ஏதுமற்ற மௌனத்தில் அஸ்தமித்து உதித்தன. கந்தக மனமில்லாத தொழுகை பொழுதுகளின் நிம்மதியில், மக்கள் கடவுளை நோக்கி தூவா பாடினார்கள். பலகாலம் மானிட இருப்பின் வாசமற்று, வெறிச்சோடி கிடந்த தெருக்களில் அனார்களையும், காப்பி கொட்டைகளையும், வெங்காயங்களையும், கபாப்களையும் கூவி விற்ற தெருவனிகர்கள் தங்கள் கூடைகளை சுமந்தபடியும், வண்டிகளை தள்ளியப்படியும் சென்றுக் கொண்டிருந்தார்கள். முப்பது வருடங்களுக்கு முன்னான பழைய நாட்கள் திரும்பி வந்துவிட்ட நிம்மதியில் மூச்சுவிட்ட முதுமக்கள், முதுகுகளை முறித்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர். போரின் விடுமுறை தினங்கள் எப்போதும் அதிக காலம் நீடிப்பதில்லை. குண்டுகளை வீசுவதற்கு - பாதுகப்பு, வெற்றி, துரோகம், விடுதலை, தோல்வி என்று ஏதொ ஒரு காரணம் எல்லோரிடமும் எப்போதும் இருக்கவே செய்கின்றது. வீதியில் சுற்றி திரிந்த சிறுவர்கள், நிலத்தின் எல்லையிலிருந்த சுவற்றில் காது வைத்து கேட்டுவிட்டு வந்து கிடைக்கவே அரிதான அமைதியினை அறிவிக்க செய்தனர், சுவற்றின் மறுபக்கத்தில் ராணுவ வாகனங்களின் அனிவகுப்பு ஏதும் இல்லை என்று பிள்ளைகள் சொன்னது அனைவரையும் ஆண்டுக்கு ஒருமுறை வரும் பாலை மழையினை போல் குளிர செய்தது. இருபதடிக்கும் குறையாத உயரத்திலிருந்த அந்த சுவற்றின் கிழக்கு முகத்திலிருந்து மூன்று மைல் தூரத்தில் தான் சலீமும், தீமாவும் வசித்து வந்தனர். அவர்கள் மட்டுமல்லாது அவர்களின் தேசமே அந்த சுவற்றின் கிழக்கு முகத்தை பார்த்தபடி தான் வசித்து வந்தது. கடவுளர்கள் தோன்றாத பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பான ஊழியின் முடிவில் மணல் மூடிக் கிடந்த அந்த நிலத்தை சிறை சாலையாக சுவர் மாற்றியிருந்தது. மத்திய தரைக்கடலின் சீன பெருஞ்சுவர் என்றுஒரு யூத எழுத்தாளர் அந்த சுவர் குறித்து பெருமையுடன் தனது கதை ஒன்றில் எழுதியிருந்தார்.
இரண்டாம் அகில யுத்தம் கோடி சாவுகளை, லட்சம் அனாதைகளை, ஆயிரக்கணக்கான அங்கவீனர்களை, ஒரு சில வெற்றியாளர்களை மிச்சம் விட்டு சென்றது. குழந்தைகளின் விளையாட்டு படங்களை வெட்டி ஒட்டுவதான தோரணையில் அகிலத்தின் வரைபடத்தை வெட்டி ஒட்டிய போரின் வெற்றியாளர்கள் தங்களுக்கு தொடர்பே இல்லாத மத்திய தரைக்கடலின் ஆதி நிலத்தையும் இரண்டாக பிளந்து இரண்டு இரண்டு நகரங்களை உருவாக்க முடிவு செய்த நாளில் தொடங்கிய சண்டை இன்று வரை தொடர்ந்துக் கொண்டிருக்கின்றது. ஏவுகனைகளின் ஒளியுடன் விடியும் பொழுதுகள் மீது கற்பனைகளை கசக்கிபிழிந்து மிச்சமிருக்கும் காட்சிகளாய் இரவுகள் கவிந்தன. சாவுகளுக்கு நடுவே தான் மக்கள் தொழுகையின் தூவாகளை பாடினார். ஒவ்வொரு போர் நாளின் முடிவில் வெற்றியும், தோல்வியும் மிச்சமிருக்கவில்லை, அங்கிருந்ததெல்லாம் வெடித்த ஷெல்களின் சிதறல்களும், அதை ஓடி பொறுக்கி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளும், சில பல சாவுகளும்.. ஒப்பாரிகளும், ஓலங்களும் மட்டும் தான்
கருணையும், மேன்மையும் மிக்க கடவுள் சலீமுக்கும், தீமாவுக்கும் அருளிய மீட்பரான பரூக் பிறந்து சரியாக ஒருவாரம் கழித்து, முதல் குண்டு நகரத்தினை தாக்கியது. குண்டு விழுந்த நாளில் தன் பிறப்புடன் நகரத்துக்குஅவன் கொண்டு வந்திருந்த நல்ல சகுனமும் முற்றாக சிதறிப் போனது. நகரத்தில் உடைப்படாமல் மிச்சமிருந்த ஒரே கட்டிடமான மேபல் அடுக்குமாடி குடியிருப்பும் குண்டு வீச்சில் முழுமையாக சிதைந்துப் போனது. தொடந்து நடந்த விமான தாக்குதலில் இருபத்து நான்கு குழந்தைகள் உட்பட மொத்தம் நூற்றி பத்து பேர் சடலமானார்கள். மதிய தொழுகையின் பாடலை கேட்டுக் கொண்டே மக்கள் பிணங்களையும், காயமடைந்தவர்களையும் தூக்கிக்கொண்டு திக்கு தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தனர். இருபது வருடங்களய் சௌஹாத் தெருவின் அடையாளமாயிருந்த அந்த சிவப்பு வெள்ளைநிற கட்டிடமும் அதன் மக்களும் உரு தெரியாமல்அழிக்கப்பட்டு காற்றில் கரும்புகையாக கறைந்து போனார்கள். துயரம் நகரத்தை மீண்டும் ஆட்கொள்ளத் தொடங்கிய அன்றைய நாள் முதலாய் பரூக் வெடிகுண்டு ஒசைகளுக்கு பழகிக் கொண்டான். அவன் குண்டு வெடிப்புகளையோ, பீரங்கி சப்தங்களையோ, விமானங்களின் ஓசைகளையோ பார்த்து இப்போதெல்லாம் அச்சம் கொள்வதில்லை அல்லது அழுது, தாயினை தேடுவதில்லை. அதற்கு பதில், மிகச் சரியாக பதுங்கு குழிகளை தேடி சென்று பாதுகாப்பாக அமர்ந்து அம்மா கொடுத்த பால் புட்டியை வாயில் வைத்துக் கொள்கின்றான்.
தனது ஐந்தாவது வயதில் அந்த மாபெரும் சுவர் தொடரை முதன் முதலாய் பார்த்த பாரூக் ஆதியும் அந்தமுமாய் விரிந்து நின்றஅதன் பிரமாண்டத்தில் தன்னை மறந்து லயித்து போனான். சாம்பல் நிறத்திலான அந்த சுவரை கண்ட நொடி முதல் தனக்கேயான குழந்தைதன்மையுடன் அதனை நேசிக்க தொடங்கினான. ஒவ்வொரு நாளும் அவன் சுவரினை நோக்கியே இழுக்கப்பட்டான. வீட்டிலிருந்து காற்றைபோல் பறந்து மறையும் அவனின் வீடு திரும்பலுக்காய் தீமா பகல் முழுவதும் காத்திருக்க தொடங்கினாள், ஆனால் அவனோ ஒவ்வொரு நாளும் மாலை தொழுகைக்கு பின்பே வீடு திரும்பினான். இரவிலும்அவனது பார்வை அனேக நேரம் அந்த சுவரை நோக்கியதாகவேயிருந்தது. அடர் இருட்டிலும் தூரத்திலிருக்கும் அந்த சுவரினை அவனால் அடையாளம் கான முடிந்தது. பூமியின் முடிவாயிருந்த அந்த சிமண்ட் மலை அவனுக்கு எல்லாமுமாக இருந்தது. அவனது பொழுதுகள் சுவருடன் ஆரம்பித்து, சுவருடனே அஸ்தமிக்க தொடங்கின. நாட்கள் செல்ல செல்ல யாருக்கும் தெரியாமல் அவனும் சுவரும் தோழர்களாகினர். அதுகாலம் யாருடனும் பேசாது அந்த நிலத்தில் எல்லை கோடாய், சிறை கொட்டடியாய் யாராலும் நேசிக்கப்படாது தனித்து கிடந்த சுவரின் வாழ்க்கையில் பரூக்கின் வருகை பனை மரத்தின் வாசத்தை வீசியது. தீராத இலையுதிர்கால கனவுகளை போல் அந்த சுவரின் வாழ்வில் அவன் இனைந்துக் கொண்டான். ஒவ்வொரு நாளும் சுவர் அவனின் வருகைக்காய் காத்திருக்க தொடங்கியது. அவனுக்காகவே சுவரின் இன்னொரு முகத்தில் இருந்த மறு உலகத்தின் கதைகளை சேமித்து வைத்து அவனிடம் சொன்னது. அந்த உலகத்தின் அனார் அருவியை பற்றியும், வைர கிரீடம் தரித்த அரசனை பற்றியும், பழுப்பு தேவதைகளை குறித்தும் அவனுக்கு திரும்பி திரும்பி சொன்னது. அந்த கதைகளில் வரும் வைர கிரீடம் தரித்த அரசன் தான் அவன் நகரத்தின் மீது குண்டுகளை வீசுவதாகவும், அவனுக்கு ஓய்வு நேரங்களில் குண்டுகளை வீசி கொண்டாடுவது பொழுதுபோக்கு என்றும் சுவர் பரூக்கிடம் சொன்னது. கதைகளுக்கு நடுவே குண்டுகள் விழுந்தால் சுவர் தன்னை வளைத்து அரனாக்கி அவனை பாதுகாத்தது.
நாளும் ஒரு கதை அவனுக்காய் காத்துக் கிடந்தது. அவனும் சுவருக்கென்று வீட்டிலிருந்து தீமா செய்யும் உணவுகளை திருடி கொண்டு வந்தான். அவன் கொண்டு வரும் உணவுகளை வாஞ்சையுடன் வாங்கி தின்னும் சுவர், ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு முடித்ததும் அவன் கைகளில் முத்தமிட்டது. சுவரின் கதைகளில் வரும் கிழக்கு முக நகரத்தின் மனிதர்கள்நீல நிற தோல்களையும், நீண்டமூக்குகளையும், ஒடுங்கிய கண்ணங்களையும் கொண்டவர்களாய் இருந்தனர். அவர்களில் பலரின் தலை மயிர் பிட்டம் வரை நீண்டிருந்தது. அந்த மனிதர்கள் பரூக்கின் கனவுகளில் வந்து அவன் மீது குண்டுகளை வீசினார்கள். அப்படி ஒரு நாள், சுவர் தான் உயிர்பெற்ற கதையினை அவனிடத்தில் சொன்னது. வைர கிரீடம் தரித்த அரசன் தான் சுவரை எழுப்பியிருக்கின்றான், அவனே அதற்கு பாதுகாப்பு சுவர் என்றும் பெயர் சூட்டியிருக்கின்றான். தன்னை போல் சுவருக்கும் ஒரு பெயர் இருக்கின்றது எனும் செய்தி பரூக்கை மகிழ்ச்சி கொள்ள செய்தது. அன்று முதல் அவன் சுவரை பாதுகாப்பிஎன்று பாசத்துடன் அழைக்க தொடங்கினான். அவனும், பாதுகாப்பியும் தங்களை சுற்றி நடக்கும் போரையும், சாவுகளையும் மறந்துபோய் தனி உலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தனர். அவர்களின் உலகில் கதைகள் மட்டுமே நிறம்பியிருந்தது.
ஒவ்வொரு நாளும் போர் தீவிரமடைந்துக் கொண்டே வந்தது. இப்போதெல்லாம் வானிலிருந்து விழும் வைர கிரீட அரசனின் குண்டுகள் அதற்கு கீழ் இருப்பவர்களை மட்டும் கொல்வதில்லை, பல மைல்களுக்கு அப்பால் இருப்பவர்களையும் கொல்கின்றன. இன்னும் சில குண்டுகளோ மனிதர்களை உயிருடன் உருக்கி அழிக்கின்றன. நகரத்தில் மரணத்தை தவிர்த்து வேறு எதுவுமே மிச்சமிருக்கவில்லை. இடைவிடாது இரண்டு நாட்கள் நடந்த ஏவுகனை தாக்குதலில் தீமா இறந்து போனாள். வாழ்வதற்கான வழி ஏதும் நகரத்தில் இல்லை என்பதை உனர்ந்த சலீம் பரூக்கை தூக்கிக்கொண்டு தப்பித்து செல்வதற்கான வழியினை தேட ஆரம்பித்தான். அவன் எதிரில் சாம்பல் நிறத்திலான சுவறை தவிர வேறு எதுவுமே இருக்கவில்லை. சுவரின் ஓரமாகவே தன்னை தூக்கிக் கொண்டு அப்பன் நடப்பதை பார்த்த பரூக்கிற்கு ஒன்று மட்டும் புரிந்தது. தான் இனி எபோதுமே தன் தோழனை பார்க்கபோவதில்லை என்று. அவனுக்கு அழுகை வந்தது, தந்தையின் கழுத்தைவிட்டு இறங்கி ஓடிவிட வேண்டும் என்றிருந்தது. ஆனால் அவன் ஏதும் பேசாதுஅமைதியாக அப்பாவின் கழுத்தில் அமர்ந்துக் கொண்டிருந்தான். தூரத்தில் எங்கோ வெடி சப்தங்களும், விமானத்தின் உருமல்களும் கேட்டுக் கொண்டிருந்தன. சுவரின் மறுபுறத்தில் தொடர்ச்சியாக வாகனங்களின் அனிவகுப்பு ஒலிகள் கேட்டப்படி இருந்தன.
எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை, கணக்கிட முடியாத நாட்கள் பாலை காடுகள், மலைகளினூடே சோறு தண்னியற்று பயணித்து இறுதியில் அந்த நகரத்துக்கு பரூக்கும், சலீமும் வந்து சேர்ந்த போது நகரம் பனி காலத்தை வரவேற்றுக் கொண்டிருந்தது. இலைகள் உதிர்ந்த மரங்களும், குதிரை தோல் ஆடை அனிந்த மனிதர்களும், வீடுகளின் மேல் கூரையை விட்டு வெளியேறிய கனப்பு அடுப்புகளின் புகைகளும் பனியின் வருகையை அறிவித்தன. பரூக் முதன் முதலாய் சுவர் இல்லாத அதிலும் தங்கள் நகரத்தை போல் மணலின் நிறத்திலில்லாது வெள்ளை நிற நகரத்தை அப்போதுதான் பார்க்கின்றான், அவனுக்கு சுவர் இல்லாத ஒரு உலகம் இருக்கும் என்பதே ஆச்சரியமானதாக இருந்தது. சுவர் இல்லாத, ஷெல் சப்தங்கள் இல்லாத ஒரு உலகை புரிந்துக்கொண்டு அதனுடன்இனைந்து வாழ அவனுக்கு அதிககாலம் பிடித்தது. அவன் அந்த நகரத்தில் இழந்து வாடியது தன் தாய் தீமாவை தன் தோழனான பாதுக்காப்பு சுவரையும் தான். தீமாவின் நினைவுகள் கூட அவ்வப்போது தான் வந்து சென்றன, அவனால் மறக்கமுடியால் இருந்தது பாதுகாப்பியின் நினைவுகளை தான், அது சொல்லும் கதைகளை தான். பகல் முழுவதிலும் சலீம்அவனை தன்னுடன் தூக்கிக் கொண்டு யார் யாரையோ சென்று சந்தித்தான். இரவு வேளைகளில் கடும் குளிரில் அவர்கள் இருவரும் பாழடைந்த பூங்கா ஒன்றில் தூங்கினார்கள். எந்த மாற்றமும் இல்லாமல் நாட்கள் அப்படியே நகர்ந்துக் கொண்டிருந்தன. கடுமையான பனி பொழிவிருந்த நாளில் தான் சலீமுக்கு அந்த நல்ல செய்தியை பழுப்பு மனிதன் ஒருவன் சொல்லிவிட்டு சென்றான். சலீமின் முகம் பிரகாசித்தது, தன் வாழ்க்கைக்கு ஒருவிடிவு வந்துவிட்டது என்று முழுமையாக நம்பினான். அந்த பழுப்பு மனிதன் சொல்லிவிட்டு சென்ற நாளின் இரவுக்காய் காத்திருக்கு தொடங்கினான். அந்த நாளுக்கு இன்னும்முப்பது பகல்களும், இருபத்தி ஒன்பது இரவுகளும் மிச்சமிருந்தன.
மாலை ஆறு மணிக்கே பரூக்கை கூட்டிக்கொண்டு சலீம் கடற்கரையின் பக்கம் வந்துவிட்டான். பழுப்பு மனிதன் சொன்ன இடத்திற்கு இரவு பத்து மணிக்குள் சென்றுவிட வேண்டும். கடற்கரையின் வழியே நான்கு மைல்கள் நடந்து செல்ல வேண்டும், இப்போது ஆரம்பித்தால் தான் பத்து மணிக்குள் சென்று சேர முடியும் என்னு எண்ணியபடி பரூக்கை தலையில் சுமந்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான் சலீம். இருட்டில் வழியேதும் தெரியவில்லை. கடலின் அலை ஓசை இடைவிடாது அவர்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது, அந்த ஓசை பரூக்கிற்கு இடைவிடாத ஏவுகனை தாக்குதலின் ஒலியை நியாபகப்படுத்தியது. களைப்பான நீண்ட பயணத்துக்கு பின் பழுப்பு மனிதன் சொன்ன இடத்துக்கு அவர்கள் இருவரும் வந்து சேர்த்திருந்தனர். அது ஒரு நதியின் கழிமுகமா அல்லது கடல் நிலத்துக்குள் வந்திருக்கின்றதாஎன்பதை தெளிவாக அறிய முடியவில்லை ஆனால் அது ஆறு போல் இரண்டு கரைகளை கொண்டதாய் இருந்தது, வெகுத்தொலைவில் இருந்த மறுகரையின் விளக்கொளிகளை இங்கிருந்து பார்க்க முடிந்தது. அங்கு பழுப்பு மனிதனையும் பரூக்கையும், சலீமையும் போல் பயணிக்கவிருந்தவர்களையும் சேர்த்து மொத்தம் எழுபது பேர் இருந்தனர். யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை அனைவரின் பார்வையும் நீர் நிலை மீதே நிலைத்திருந்தது. அடுத்த வெள்ளையும், மஞ்சளும் கலந்த ஒரு சிறிய படகு அங்கு தோன்றியது அவர்கள் பயணிக்கவிருக்கும் படகு அது. அவர்களை ஊழியிலிருந்து மீட்கவிருக்கும் நோவாவின் படகு. அதில் தான் அந்த எழுபது பேரும் மாபெரும் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து ஐரொப்பா செல்லவிருக்கின்றார்கள். பயணம் ஆரம்பிப்பதற்கு முன் கடற்கரையில் மண்டியிட்ட அனைவரும் கடவுளை தொழுதனர். எல்லா வல்லமையும் பொருந்திய கடவுள் அவர்களை மீட்பாராக. பயணம் ஆரம்பித்த ஆறு நாட்களில் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் போனது. அவர்களை சுற்றி நீல நிற கடலை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. அவர்கள் எந்த திசையில் பயணிக்கின்றார்கள், என்று ஐரோப்பிய மண்ணில் காலடி எடுத்து வைப்பார்கள் என்று எந்த கேள்விக்கும் யாரிடமும் பதிலிக்கவில்லை. படகு காற்றடித்த திசையில்தன் பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தது. அடுத்த நான்கு நாட்களில் வாந்திக்கும், வயிற்று போக்கிற்கும் பதினைந்து பேச் பலியாகியிருந்தனர். யாரும் யாருடனும்பேசிக்கொள்ளவில்லை. பேசுவதற்கான திரானியோ, மனநிலையோ யாருக்கும் இருக்கவில்லை. நூறு ஆண்டுகளின் சாபம்அந்த சிறிய மீனவ படகை பீடித்திருந்தது. சுவாசிக்க கூட விருப்பமற்றவர்களாய் கிடைத்த இடங்களில்எல்லோரும் ஒடுங்கிக்கிடந்தனர். மரணம் பேரொளியாய் மாறி அந்த படகை புசிக்க ஆரம்பித்திருந்தது, மிச்சமிருந்த அனைவரின் நம்பிக்கையும் உளுத்து உதிரிந்துபோயிருந்தது.
அல்-ஜசிராவில் வெளிவந்த ஆவண படம் ஒன்றிலிருந்து நேரடியாகா எடுதாளப்பட்ட படக்காட்சி:
வெள்ளை பெண் ஒருவர் பேசிக் கொண்டிருக்கின்றார், பின்னனியில் கடலும், போர் காட்சிகளும், சீறிப்பாயும் ஏவுகனைகளும், துப்பாக்கியேந்திய படை வீரர்களும், படகுகளும், வறிய அகதிகளின் முகங்களும், இறந்த சடலங்களின் கட்சிகளும் வந்துக் போய் கொண்டிருக்கின்றது. காட்சி ஒளிபடமாகநிலைத்து நிற்கின்றது, அதில் விரைத்துபோய் கடலில் மிதந்துக் கொண்டிருக்கும் பரூக்கின் சிறிய உடல் காட்டப்படுகின்றது அவன் கால்களில் மாட்டப்பட்டிருக்கும் வெள்ளை சப்பாத்துக்கள் கூட நீங்காமல் அப்படியே இருக்கின்றது. அவன் அந்த சுவரை பார்க்கும் போது அவன் முகத்தில் உருவாகும் ஆச்சரியமான உனர்வுகளே இறுக்கிப்போனா அந்த சிறிய முகத்திலும் இருக்கின்றது. அந்த வெள்ளை பெண் அந்த குழந்தையின் படம் மனிதம் மீதான நம்பிக்கையினையே முற்றிலுமாய் தகர்த்துவிட்டது, இந்த உலகம் எதைநோக்கி செல்கின்றது என்று தெரியவில்லை. மனிதர்கள் நேசமற்றவர்களாய் இருக்கின்றார்கள். பிஞ்சு குழந்தைகளை கொல்ல கூட நாம் வெட்கம் கொள்வதில்லை. எதற்காய் இந்த போர்கள் யாரை வெற்றி கொள்ள இத்தனை சாவுகள் என்று கூறு மேலும் பேசமுடியாது தேம்பி அழுதார்.
கடலில் மிதந்துக் கொண்டிருக்கு பரூக்கின் விரைத்த உடல் புகைப்படம் உலகின் அத்தனை ஊடகங்களிலும் வெளிவந்தது. போர் குறித்தும் அதில் குழந்தைகள் கொல்லப்படுவது குறித்தும் அறிவு ஜீவிகள் பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர். உலக நகரங்கள் அனைத்திலும் போராட்டங்கள் நடந்தேறின. சமூக ஊடகங்களை #நான்பரூக் எனும் வாசகம் தாங்கிய பதிவுகளும், புகைப்படமும் ஆக்கிரமித்திருந்தன. நானும் கூட சில நாட்கள் தொடர்ந்து பரூக் குறித்து சில கவிதைகளை ஆங்கிலத்தில் எழுதினேன். அதில் ஒரு கவிதை இப்படிமுடிந்தது.
துயரின் கடலே!
நான் ஆத்திரப்படுகின்றேன்
அவர்களிடம் சொல்,
அவனை கொன்றவர்களிடம் சொல்
அவர்கள் வெட்கமற்றவர்கள் என்று!

Comments
Post a Comment