Skip to main content

96 & 69

ன்புள்ள ராம் என்கின்ற கே. ராமசந்திரனுக்கு,

வணக்கம்! இக்கடிதத்தின் வழியாக உங்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி கொள்கின்றேன். 22 வருடங்கள் கழித்து ஜானுவை சந்தித்த பேரானந்தத்தில் இருக்கும் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுவதற்கான காரணம் உங்கள் மீதான பொறாமை மட்டுமே என்பதனை முதல் குறிப்பாகவும், உங்கள் காதல் குறித்து சில பல கேள்விகள் இருந்தாலும் அவற்றை இக்கடிதத்தின் இரண்டாம் பகுதியில் கேட்க முடிவு செய்திருப்பதாலும், உங்கள் மீதான் பொறாமைக்கும் உங்கள் காதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை இரண்டாம் குறிப்பாகவும் சொல்லிக்கொண்டு இந்த கடிததை
தொடர்கின்றேன்.

1

உங்களுக்கு ஆனந்தமான ஒரு பள்ளி காலம் கிடைத்திருக்கின்றது, கல்வி நிலையங்கள் குறித்து மகிழ்ச்சியான எந்த நினைவுகளும் இல்லாத அல்லது அப்படியான எந்த சூழலும் வாய்க்காத ஒருவனுக்கு உங்களுக்கு கிட்டிய பள்ளி காலம் குறித்து பொறாமையே மிஞ்சும். ஃபூக்கோவை வாசிப்பதற்கு முன்பே கல்வி கூடங்களை சிறைசாலைகள் என்றே நான் புரிந்து வைத்திருந்தேன். அந்த சிறை கூடங்களில் தான் என் வாழ்வின் 15 ஆண்டுகளை கழித்திருக்கின்றேன். அதிகாரமும், அடக்குமுறைகளும் மட்டுமே நிறம்பிய அந்த இடங்களில், எங்கெங்கும் வன்முறை மட்டுமே நிறைந்திருந்தது. அங்கிருந்த மேசைகளுக்கும், சுவர்களுக்கும் கூட அதிகாரமிருந்தது. அந்த அதிகாரத்தின், வன்முறையின் வழிகாட்டல்களின் படி தான் அடிமைகளான நாங்கள் வாழ்ந்தோம். அந்த சிறைக் கூடங்களில் சுவாசிக்கவும், தண்ணீர் பருகவும், சிறுநீர் கழிக்கவும் கூட முறையான முன்அனுமதி தேவைப்பட்டது. அடிமைகளான எங்களுக்கு இடப்பட்ட ஏவல்கள், எங்கள் முன் இருக்கும் பனுவல்களை குடித்து அவற்றை அப்படியே திரும்பி வாந்தி எடுக்க வேண்டும் என்பதும், அவர்களுக்கு எங்கள் உடல்களையும், மூளைகளையும் முழுமையாக ஒப்பு கொடுக்க வேண்டும் என்பதே. நாங்கள் சிந்திக்க கூடாது, கேள்விகள் கேட்க கூடாது என்று திரும்ப திரும்ப வலியுறுத்தப்பட்டோம். எங்கள் உடல்களையும், மூளைகளையும் அதிகாரத்தின் லத்திகளை கொண்டு அவர்கள் வடிவமைத்தார்கள். அவர்களின் வடிவமைப்புக்கு உடன்படாத உடல்கள் மீது கடுமையான வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன. அவ்வன்முறைகளின் தடங்கள் இன்றும் என்னில் மிச்சமிருக்கின்றன. வாரத்துக்கு ஒரு முறையேனும், உயர்நிலை பள்ளி தேர்வில் தோல்வியடைந்து, அதற்காய் தலைமை ஆசிரியரிடம் உதை வாங்குவதாய் கனவு கான்கின்றேன். என் சிறை வாழ்க்கை எனக்கு கொடுத்த கொடை அந்த கனவு.

ஒரு சிறை கூடத்தில் என்னவெல்லாம் நடக்கும், இருக்கும்? சிறையில் இருக்கும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர், பள்ளி காவளாளி இப்படி அனைவர் கைகளிலும் லத்தியிருக்கும். லத்தியினை எந்த அடிமை மீதும் எந்த காரணத்துக்காகவும் பயன்படுத்த ஏகபோக உரிமையை பெற்றவர்களாய் அவர்கள் இருப்பார்கள். குறைந்த மதிப்பெண் வாங்கினால், விடுமுறை எடுத்தால், குசு விட்டால், சப்தமாக பேசினால், கேள்வி கேட்டால், விளையாடினால், காதலித்தால், முன் அனுமதி இல்லாமல் தண்ணீர் பருகினால்... இன்னும் பல்லாயிரம் காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். லத்தியை தாண்டி தண்டனைகளின் வடிவங்கள் எப்படி இருக்கும்? காலை முதல் மாலை வரை பள்ளி திடலில், மண்டையை பிளக்கும் வெயிலில் முட்டி போட்டபடி இருக்க வேண்டும், அதற்கு பரிசாக பல நேரங்களில் மயக்கும் வரும். 200 அல்லது 300 உக்கிகளை சில நேரங்களில் இடைவிடாது போட வேண்டி வரும், நிறம் குறித்து, உடல் குறித்து அவமானபடுத்தபடுவீர்கள், உங்கள் பால் குறித்து கொச்சையான வசவுகளை கேட்க வேண்டி வரும், விடுதி மாணவர் என்றால் சில நேரங்களில் சோறு கிடைக்காது, இன்னும் பல நூறு தண்டனைகள் ஒவ்வொரு சிறைக்கும் ஏற்றார் போல் ஒரு சில மாற்றங்களுடன் இங்கே பட்டியலிடப்படாமல் மிச்சம் இருக்கின்றன. கண்காணிப்பின் எல்லைகள் முடிவற்று விரிந்திருந்த அந்த சிறைகளில் சுதந்திரமாய் சுவாசித்தல் என்பது கூட முடியாத ஒன்றாக இருந்தது, அந்த மதில் சுவர்களுக்கு உள்ளே இருந்த காற்றிலும் கண்காணிப்பின் தடங்கள் பதிந்திருந்தன.

நண்பர் ஒருவர் கிருஸ்துவ பள்ளியில் படித்தவர், அனைத்துக்கும் ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு கேட்டு, நன்றி சொல்லி சொல்லி அவர் தன் வாழ்க்கை என்பதே யாரோ கொடுத்த பிச்சை என்றும், அதனூடான குற்ற உணர்வு அவரின் அடிமனதில் பதிந்துபோய் இன்று வரை அவரின் பல செயல்பாடுகளில் பிரதிபளிப்பதை பார்க்க முடிகின்றது. அவரது உடலை குற்ற உணர்வின் எச்சமாய் வடிவமைத்த மகத்துவமான காரியத்தை அவரின் கல்வி நிலையம் செய்திருக்கின்றது. நான் இடதுகை பழக்கம் கொண்ட ஆள், ஆனால் ஒன்றாம் முதல் மூன்றாம் வகுப்பு வரை கை முட்டியில் அடித்து, அடித்து என் இடது கை எழுத்து பழக்கத்தை வலது கைக்கு மாற்றினார்கள். எழுதுவதை தவிர்த்து மற்ற அனைத்தையும் இடது கையிலே செய்யும் பழக்கம் தான் இன்று வரை இருக்கின்றது. எதற்காக இயற்கையான என் பழக்கத்தை அத்தனை கொடூர தண்டனைகள் மூலம் அவர்கள் மாற்றினார்கள்?

சிந்தித்தலும், கேள்விகளுமற்ற ஒரு சதை பிண்டம் என்னவாக அந்த சிறை கதவுகளை விட்டு வெளியே வந்திருக்கும்? ஒரு மிக சிறந்த அடிமையாக தானே வந்திருக்க முடியும்? யோசித்து பார்த்தால் என் பள்ளி கல்வியில் நான் எதையுமே கற்றுக் கொள்ளவில்லை. உடைந்து போன மொழி, புரிதலற்ற கனிதம், அறிவியல், இலக்கியம் என்று அனைத்துமே எழுத்தகளாய் மட்டுமே மூளைக்குள் சென்று வெளியேறின. கல்வி நிலையங்களை விட்டு வெளியே வரும் போது சமூகம் சொல்லும் அனைத்துக்கும் சரி என்று தலையாட்டும் பொம்மையாக வெளியே வந்தேன்.

மேலே சொன்ன எதுவும் இல்லாத 90களில் மாணவராய் நீங்கள் இருப்பதும், வகுப்பு தோழிகளுடம் எந்த தடைகளும் இல்லாமல் பேசி பழகுவதும், உங்கள் பள்ளி வளாகத்தில் உங்களுக்கு இருக்கும் மகிழ்ச்சியான நினைவுகளும் எனக்குள் பொறாமையை உண்டு செய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அல்லது வன்முறைகளையும், அடக்குமுறைகளையும் இயல்பான வாழ்வியல் அனுபவமாய் பார்க்க பழக்கப்பட்டிருக்கின்றோம்.

2

அத்தனை அதிகாரங்களுக்கும், அடக்குமுறைகளுக்கும், வன்முறைகளுக்கு, கண்காணிப்புகளுக்கு மத்தியிலும் நான் காதலித்தேன். என் முதல் காதல் மூன்றாம் வகுப்பில் என்னை கடைசி வரை அடிக்காத, அந்த ஒரு வருடம் மட்டுமே பாடம் சொல்லி தந்த கனித ஆசிரியை மீது வந்தது. அந்த காதலை அடுத்த சில மாதங்களில் மறந்து விட்டேன். அடுத்த காதல் எட்டாம் வகுப்பில் வந்தது, அதே நேரத்தில் தான் ஆங்கில ஆசிரியை மீது உண்டான மோகம் காதலுக்கு துரோகம் செய்வதாய் தோன்றிய குற்றவுணர்வையும் தான்டி என் முதல் காமத்தை வெளிப்படுத்தியது. அந்த காதலும், காமமும் அடுத்த ஆண்டு மறந்துப் போனது. பள்ளி முடிக்கும் வரை என் காதல் குறித்து யாரிடமும் பேசியதில்லை, காதலை சொன்னதும் இல்லை. அதற்கு பின், காதல் வாழ்வின் ஒரு பகுதியாக நதியினை போல தொடர்ந்து பயனித்துக்கொண்டே தான் இருக்கின்றது. காதல் பல அற்புத மனிதர்களை சந்திக்க வைக்கவும், அதே அற்புத மனிதர்களை கடந்து செல்லவும் செய்கின்றது. என் முதல் காதலில் அல்லது வேறு ஏதேனும் காதலில் தேங்கி போயிருந்தால் மற்ற காதல்கள் அறிமுகப்படுத்திய அற்புத மனிதர்களை சந்திக்காமலே போயிருப்பேன் எனும் உண்மையை அடிக்கடி நினைத்து பார்க்கின்றேன். மேலும் அப்படி சொல்லாத காதல்களை கண்டு பிடித்த ஆசிரியர்களிடம் வாங்கிய அடிகளும், உதைகளும், வசவுகளும் தான் காதல்களை தாண்டி நினைவில் நிற்கின்றன.

காதல் பற்றிய உங்களின் புனித கதையாடல்கள் பெரும் அயர்ச்சியினை கொடுக்கின்றது. தமிழ் சினிமாக்களில் திரும்ப, திரும்ப காதல் மீது ஏன் இத்தனை தேவதை பிம்பங்கள்? காதல் என்பது காதல் அவ்வுளவு தான்! உடலின், மூளையின் அடிப்படை தேவை. அதை தாண்டி அது குறித்து பேச என்ன இருக்கின்றது? காதல் குறித்தான, உடல் குறித்தான புனித கதையாடல்களை பேசி, பேசி தான் நாம் உடல்களை தீண்ட மறுக்கின்றோம். உங்களின் “கன்னி” தன்மை குறித்தான உரையாடல் வரும் இடங்களின், அது சார்ந்து நீங்களும் உங்கள் கதை மாந்தர்களும் வெளிப்படுத்தும் உணர்வுகளும் சமூகம் சொல்லும் காதல் குறித்த அத்தனை புனிதங்களுக்கும் சொறிந்து கொடுப்பதாய் இருக்கின்றது, அதற்கான சாட்சிகளாய் அந்த குறிப்பிட்ட கட்சிகளில் அரங்குகளில் அதிரும் கைதட்டல்களும், ஆரவாரங்களும் இருக்கின்றன. கன்னி எனும் சொல்லாடலையே மறுக்கும் எனக்கு, அக்காட்சிகள் அருவெருப்பானதாக இருக்கின்றன. ஒருகட்டத்தில் நான் தவறாக யோசிப்பதாய் நம்பி உங்கள் பாத்திரத்தை asexual என்பதாக் புரிந்துக்கொள்ள முயற்சித்து தோற்றேன், நீங்கள் asexual என்பதற்கான எந்த அடையாளங்களையும் உங்கள் பாத்திரம் வெளிப்படுத்தவில்லை அல்லது உங்கள் பாத்திரத்தை உருவாக்கிய ஆண் மனம் asexual என்ற புரிதலில் உங்களை வடிவமைக்கவில்லை என்றே புரிந்துக்கொள்கின்றேன். அதற்கான மிக சரியான எடுத்துக்காட்டு உங்கள் பெயர், ராம்.

உங்கள் படைப்பை 90களில் பெண்களிடம் பேச தெரியாமல், காதலை சொல்லாமல் இருக்கும் எதிர்பாலீர்ப்பு ஆண்களின் பிரதிபளிப்பு என்று கொண்டாலும், நீங்கள் 37 வயது வரை அந்த காதலை முதல் காதலை, 10ஆம் வகுப்புக்கு முன்பு வரை தோழியாக இருந்த ஒருவரின் மீது வரும் காதலை கடந்து வராமலே போவது எந்த அளவில் சாத்தியம் என்று தெரியவில்லை? அப்படியான ஒரு சமூக எதார்த்ததில் தான் வாழ்கின்றோமா? முதல் காதலின் தோல்வியால் நீங்கள் உங்களையே பூட்டிக்கொண்ட நபராகவும் இல்லை, நீங்கள் ஒரு புகைப்பட கலைஞர் அதுவும் பயணங்களின் கலைஞன். பயணம் ஒரு மனிதருக்கு எத்தனை பெரிய திறப்புகளை செய்யும் என்பதை சுய அனுபவத்தில் தெரிந்தவன் நான். நீங்கள் அந்த பாடலில் பயணித்த அனேக இடங்களுக்கும் - அந்தமான், கட்ச் பாலை நிலம் தவிர்ந்து, சென்று வந்திருக்கின்றேன். ஆனால் எந்த ஒரு பயணமும் வாழ்வின் அடிப்படையான காதல் குறித்து எந்த திறப்பையும் உங்களிடம் நிகழ்த்தாதது பெரும் ஆச்சரியத்தை தருக்கின்றது அல்லது உங்களுக்கு வேறு காதல்களும் இருக்க கூடும் ஆனால் ஜானு மீதான காதல் பற்றி மட்டுமே இந்த கதையில் சொல்ல முற்படுகின்றீர்கள் என்று புரிந்துக்கொள்ள முயன்றும் தோல்வி அடைகின்றேன், வேறு காதல்களுகான எந்த அறிகுறிகளும் உங்கள் கதாபாத்திரத்தில் இருக்கவில்லை. நீங்கள் கட்டமைக்க விரும்பும் எதார்த்தம் என்பது, இந்த சமூகம் நம்பிக் கொண்டிருக்கும் புனித காதல் கதைகளுக்கு மேலே சொன்னதை போல் சொறிந்து கொடுப்பதை தவிர்த்து வேறு எதையும் செய்யவில்லை என்றே நம்புகின்றேன்.

இறுதியில் உங்கள் மீதும் பரிதாபமே மிஞ்சுகின்றது தோழரே! வேறு என்ன சொல்வது.. முடிந்தால் உங்கள் அலைபேசியில் tinderரை பதிவிறக்கம் செய்யுங்கள்.

நன்றி!
இளவேனில்

Comments

Popular posts from this blog

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்: வெறுப்பை ஜனநாயகப்படுத்தும் அழகியல்!

0. பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்: “நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது” 1. மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போ...

In the most health-obsessed society ever, all is not well*: On Trauma

1 Philosopher Byung-Chul Han's essay Neuronal Power begins with the following lines: " Every age has its signature afflictions. Thus, a bacterial age existed; at the latest, it ended with the discovery of antibiotics. Despite widespread fear of an influenza epidemic, we are not living in a viral age. Thanks to immunological technology, we have already left it behind. From a pathological standpoint, the incipient twenty-first century is determined neither by bacteria nor by viruses, but by neurons ". Modern integrative body mind science defies Byung-Chul Han’s statement, that it is reductive to define human suffering solely in terms of ailments. However, we are living in an era, where production relations dictate nearly everything about human existence, in this specific context Byung-Chul Han’s statement—that the majority of human society is afflicted by mental or neuronal issues—serves as a foundational lens to understand contemporary humans and their struggles. In today’...

படுகொலைக்கு முன்னான சில மணி நேரங்கள்

    ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன் , எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை . அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட   நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன் , ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல் . கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை . உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை , இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை . அதே நேரம் ஒளியற்று , ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது , சூடான மழைத் துளியை போல் . மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது ... அம்மாவின் முலை காம்புகள் , விபத்தொன்றில் மரணித்த நன்பன் , தேர் திருவிழா , அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள் , அவளின் முதல் முத்தம் , இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம் , கல்லூரியின் விடுதி அறை , முதல் காமத்தின் வெள்ளை இரவு ... இப்படி சொல்லி ம...