Skip to main content

கண்காணிப்பு முதலாளித்துவத்தின் காலம்

 நாம் கண்காணிப்பு முதாளித்துவத்தின் (survilance capitalism*) காலத்தில் வாழ்கிறோம். நம் இருப்பின் அத்தனை கூறுகளும் பெரு நிறுனங்களின் மூலப்பொருள்களாக மாறி இருக்கின்றன. அந்த மூலப் பொருட்களை கொண்டு நமக்கான இன்றைய மற்றும் நாளைய வாழ்வை அவர்கள் நிர்மாணிக்கின்றார்கள். தனிநபர் நலன் சார்ந்த தீர்வுகளை ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப நமக்கு வழங்குவதாய் சொல்லும் அவர்கள் செய்வது எல்லாம் நம்மை கண்காணிப்பது அதன் வழியாக நமது அனுபவங்களை - யாருக்குமே தெரியாத நம் அந்தரங்கங்களை கூட அறிந்து அவற்றை கொண்டு அவர்களின் வணிக எல்லைகளை விரிவாக்குவது மற்றும் நம்மை கட்டுப்படுத்துவது – நம் சிந்தனையின் எல்லைகளை வரையறுப்பது. நமக்கான நண்பர்களை, காதலர்களை, எதிரிகளை, பொருளாதார, ஆன்மிக, அரசியல், சமூக, மெய்யியல், அறிவியல், கலை, மொழி, பண்பாடு என்று அனைத்து எல்லைகளையும் முடிவு செய்வது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் நான் ஒரு மாதத்துக்கு எந்தனை ஆணுறைகளை எந்த கடைகளில் எந்தெந்த ஊர்களில் வாங்குகிறேன் என்பதை வைத்து என் காதல் வாழ்க்கையை அறிவது. இந்த தகவலை கொண்டு எனக்கு தேவையான பாலியல் பொருட்களை, மருத்துவ உதவிகளை, காப்பீடுகளை, டேட்டிங் செயலிகளை, அரசியல் தேர்வுகளை, திரைப்படங்களை, போர்னோ தளங்களை என்று எனக்கான அனைத்தையும் பெரும் நிறுவனங்கள் முடிவு செய்வது மற்றும் என் மீது திணிப்பது. அது மட்டும் இல்லாது என் காதலன் அல்லது காதலிக்கும் ஆணுறைகளை, காப்பர்டிக்களை, கற்பம் தடுக்கும் மாத்திரைகளை விளம்பரம் செய்வது/பரிந்துரைப்பது. மேலும், இந்த தகவல் உபரிகளை (data surplus) செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களுக்கு உணவாய் கொடுப்பது. செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) இயந்திரங்களின் கணக்கிடுகளுக்குகள் எவ்வுளவு தகவல்களை (data) திணிக்கிறோமோ அவ்வுளவு திறம்பட யோசிக்கும் வேலை செய்யும் அதை கொண்டு பெரும் நிறுவனங்கள் அதிக லாபம் சேர்க்க முடியும் மற்றும் மனிதர்களை கட்டுப்படுத்த முடியும்.

தகவல்களை ஒரு நபரிடம் இருந்து திரட்டுவது மிகவும் எளிமையானது. எடுத்துக்காட்டாக, சில காலத்துக்கு முன்பு நம்மில் பலர் போக்கிமேன் கோ எனும் விளையாட்டை அலைபேசியில் விளையாடி இருப்போம். அந்த விளையாட்டின் வேலையே நாம் வசிக்கும் இடத்தின் வரைபடத்தை கூகிளின் தகவல் கிடங்குக்கு கொண்டு சேர்ப்பது தான். ஆனால் விளையாடிய அனேகம் பேருக்கு இந்த உண்மை தெரியாது. மேலும் எந்த இணைத்தின்அல்லது செயலியின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் யாருமே வாசிப்பதில்லை, காரணம் அவை பல பக்கங்கள் நீள்வன. உலக அளவில் இணையங்களின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து பல ஆய்வுகள் நடந்துள்ளன அவை தரும் அனேக முடிவுகள் ஒன்று தான். 99% நபர்கள் அவற்றை வாசிப்பது இல்லை, அதில் நடக்கும் மாற்றங்கள் குறித்து எந்த அக்கறையும் காட்டுவது இல்லை என்பதே. இதுவே இணைய நிறுவனங்கள் தகவல்களை எளிதில் திரட்டும் பாதைகளை திறந்து விடுகிறது.

நாம் யாருமே கண்காணிப்பு முதலாளித்துவத்தின் வாடிக்கையாளர் இல்லை என்பதே முதல் விடயம், நாம் தான் கண்காணிப்பு முதலாளியத்தின் மூலப்பொருட்கள். ஒவ்வொரு தனி மனிதரின் அனுபவம், உணர்வுகள், உடல் ஆகிய அனைத்துமே மூலபொருள் (raw material) தான். பூமியின் ஆழத்தில் தேடி எடுத்த தாது பொருட்களின் காலத்தை கடந்து, மனித மனங்களில் இருந்தும் உடல்களில் இருந்தும் தாதுக்களை வெட்டி எடுக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும். கூகிள், பேஸ்புக், அமேசான், மைக்ரோ சாஃப்ட், ஆப்பிள் என்று பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களும், அரசுகளும் தனி மனித தகவல் எனும் மூல பொருளை அடையவே பேராசையுடன் அழைக்கின்றன. அதில் பல நிறுவனங்கள் உலக மக்களின் 50% பேரின் தகவல்களை ஏற்கனவே அடைந்து விட்டன, ஆனால் இது ஒரு முறை மட்டுமே தோண்டி எடுக்கப்படும், இதுநாள் வரை பார்த்த மூலப்பொருள் அல்ல. தனி மனித தகவல் என்பது ஒவ்வொரு நொடியும் புதியதாக பிறப்பது, நிரந்திரமாக அல்லது மனித மூளை சிந்துக்கும் நாள் வரை சுரந்துக்கொண்டே இருக்கும் நிலையான செல்வம். அதை கொண்டே இன்றைய, நாளைய உலகை நிறுவ அனைத்து முதலாளிகளும் விரும்புகின்றனர் அந்த உலகில் நாம் வெறும் தகவலாக அல்லது மூலப்பொருளாக இருக்கிறோம் – தனி நபர் நலன் சார்ந்து என்று சொல்லியபடி. இன்றைய மற்றும் நாளைய உலகை அறிவாற்றல் மிக்க இயந்திரங்கள் கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் இருக்கின்றன. நுண்ணறிவு மிக்க இந்த ஸ்மார்ட் இயந்திரங்களை உருவாக்கவே உலகில் இருக்கும் அநேக நிறுவனங்களும் வேலை செய்கின்றன. இந்த இயந்திரங்கள் உயிர்வாழ தேவையான உணவு தான் நம் அனுபவங்கள், நம் கனவுகள், நம் உடல்கள்.

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான சில காலகட்டங்களை வரிசை படுத்தினால் அது இவ்வாறாக இருக்ககூடும்.
  • தெருப்பை உருவாக்கும் வழியை கண்டடைதல்
  • வேட்டை சமூகம் விவசாய சமூகமாக மாறுதல் – இதை, மனித வரலாற்றின் மிக தவறான நிகழ்வாக  மானிடவியலாளர் ஜெராட் டைமண்ட் குறிப்பிடுகிறார்
  • தொழில் மயம்
  • இணையத்தின் வருகை
  • கண்காணிப்பு முதலாளித்துவ சமூகம் அல்லது அறிவாற்றல் மிக்க எந்திரங்களின் காலம்
இந்த ஒவ்வொரு நிலைகளும் மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சியின் பாதைகளை நிர்னைத்துள்ளன. வருங்காலத்தின் பாதைகளை கண்காணிப்பு முதலாளித்துவத்தின் செயற்கை நுண்ணறிவு மிக்க இயந்திரங்கள் உருவாக்க போகின்றன. அந்த காலத்தில் இன்று இருக்கும் பல இல்லாமல் போகும் குறிப்பாக மனித மனதின் உணர்வுகளான அறம், நம்பிக்கை, நேர்மை, காதல், மனிதம், பொய், துரோகம், வஞ்சம் என்று மூளை/ மனம் சார்ந்த கூறுகள் பல்வேறு மாறுதல்களை அடைந்திருக்கும். இல்லாமல் போகக்கூடும் என்று சொல்லிவிட முடியாது ஆனால் நிச்சயம் பெரும் மாறுத்களை சந்திக்கும். அவை தொழில் புரட்சி ஏற்படுத்திய விளைவுகளை காட்டிலும் பெரிதாக இருக்கும். முதல் நெருப்பை மூட்டிய மனிதன் உருவாக்கிய மாற்றதை போல், விவசாய சமூகமாக மாறிய பின்னர் மனித சமூகத்தின் அனைத்துமே உற்பத்தி உறவுகளாக மாற்றம் அடைந்ததை போல், கண்காணிப்பு முதலாளித்துவ வாழ்க்கை மனிதர்களின் அடிப்படையான, சிந்திக்கும் அதன் விளைவான கேள்வி கேட்கும் நிலையில் மாற்றத்தை உருவாக்கும் அல்லது சிந்தனை, கேள்வி என்று இரண்டையும் மனிதர்கள் இயந்திரங்களிடம் ஒப்படைத்து விடலாம். அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? பதில் தெரியாது, வாழ்தல் மூலம் பதிலை அறிய முடியும். சிந்திப்பதற்கு கேள்வி கேட்பதற்கும் எதிராக பயணிக்க நேரிடும் அடுத்த தலைமுறை மிக பெரிய உளவியல் சவால்களை எதிர்கொள்ள நேரிடும், அதன் காரணமாக வரப்போகும் ஆண்டுகளின் பிணிகள் மனம் சார்ந்தவையாக இருக்க கூடும். கான்சரையும், இதய நோய்களையும் எளிதில் குணப்படுத்த போகும் இயந்திரங்கள் மனித மனதுக்கு எதிராக வேலை செய்ய போகின்றன. கேள்வி கேட்காத சிந்திக்காத மனித மூளை. பத்தாயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியின் எதிர் பயணம்.

பரிணாம வளர்ச்சியில் மனிதர்கள் பின்னோக்கி செல்ல வேண்டும் என்றால் அது நெருப்பை உருவாக கற்றுக்கொண்ட காலத்துக்கு முன்னராக தான் இருக்க முடியும் என்று நான் சொல்வேன் – அது தவறாகவும் இருக்கலாம். ஆனால் அது அறிவியல் முறையில் முற்றிலும் நடக்கவே முடியாத ஒன்று- ஒருவேளை ரட்சகர்கள் இதை செய்யகூடும். நாம் வரும் காலங்களை செயற்கை நுண்ணறிவு மிக்க இயந்திரங்கள் உடன் தான் பயணிக்க இருக்கிறோம் அவைகளின் முதலாளிகள் யார் என்பதும் அவற்றை கொண்டு அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பது தான் அடிப்படை கேள்வி. சீனா நம் அனுபவங்களை கொண்டு அரசுக்கு எதிராக மனநிலை கொண்ட மனிதர்களை கண்டு பிடிக்கும், அமெரிக்கா அறிவாற்றல் மிக்க ஆயுதங்களை செய்யும், பேஸ் புக்கும், அலிபாபாவும், கூகிளும் வியபாரம் செய்யும், நம்மை கண்மூடித்தனமான நுகர்வர்களாக மாற்றும். அலெக்ஸா அல்லது சிரி வாங்க சொல்லும் அனைத்தையும் வாங்குவோம். கூகிள் நாம் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று அறிவுறுத்தும், நமக்கான நல்ல தலைவர்களை அவர்கள் கொடுக்கும் விளம்பர காசுகளுக்கு ஏற்றார் போல் தேர்ந்தெடுத்து கொடுக்கும்.

இங்கு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது இந்த இயந்திர உலகையா அல்லது அதை உருவாக்க முயலும் கண்காணிப்பு முதலாளித்துவத்த உலகையா? பல கோடி டாலர்களை இந்த ஆய்வுகளுக்கு முதலீடு செய்யும் சலுகைசார் முதலாளிகள் (crony capitalist) உலக நலன் அல்லது மனித நலன் சார்ந்து சிந்திக்கிறார்கள் என்று சொல்வதை அமெரிக்கர்களே நம்ப மறுக்க ஆரம்பித்து விட்டனர். முதலாளிதுவதுக்கு எதிரான முதல் குரல் ஐரோப்பாவில் இருந்து தொடங்கியதை போல, கண்காணிப்பு முதலாளித்துவதுக்கு எதிரான குரல்கள் அமெரிக்காவில் தான் முதலில் உருவாக்கி இருக்கின்றன. லாபம் மட்டுமே நோக்கமாக கொண்டு இயங்கும் இவர்கள் உருவாக்க போகும் இந்த மாற்றங்கள் பெரும் அளவில் மனித சமூகத்துக்கு நன்மைகளை செய்ய போவதில்லை என்பதை மட்டும் சொல்ல முடியும் அதற்கு காரணம் வெளிப்படை. கண்காணிப்பு இயந்திர உலகம் வறுமையை ஒழிக்கும் போர் இல்லாத உலகை உருவாக்கும், ஏற்ற தாழ்வுகளை அழிக்கும், சமத்துவத்தை சமாதானத்தை கொண்டுவரும், நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று சொல்லும் ஜூக்கர்பக், பெசோஸ், கேட்ஸ் என்று அனைவரின் நீண்ட வரிசைகளுக்கும் பின்னால் கண்காணிப்பு, மனித மூளைகளை அடிமையாக்குதல் எனும் இரண்டு அடிப்படை மனித அறமற்ற விளைவுகள் இருக்கின்றன. கண்காணிப்பு முதலாளிகள் இன்று சொல்வதை நாம் காலம் காலமாக கேட்டு வந்திருக்கிறோம். வறுமை ஒழிப்பு, மக்கள் நலன் எனும் பதங்கள் பல நூறு ஆண்டுகளாக இந்த உலகில் இருக்கின்றன. அதன் தோற்றுவாய்களே அதற்கு எதிராக போராடுவதாகவும் காலம் காலமாக சொல்லி வருகின்றன. ஃபூக்கோ நவதாராள மய உலகம் உலகின் அடிப்படை அமைப்புகளை உடைத்தெரியும் என்று சொல்லியதை போல். துப்பாக்கியும், டைனமைட்டும் உலகில் அமைதியை நிலை நிறுத்த உதவும் என்று சொல்வதை போல். சமூக ஊடகங்களின் வருகை மனித மனங்களை நெருக்கமாக இணைக்க உதவும் எனும் வாதத்தின் நிஜத்தை காட்டிலும் அதிகமானதாக அங்கு உலாவும் வெறுப்பும், சாதிய வன்மமும், மத பூசல்களையும் போல். வளர்ச்சி மற்றும் தனிநபர் நலன் கருத்தியல்களுக்கு எதை விலையாக கொடுக்க போகிறோம் என்பதே அடிப்படை கேள்வியாக மனிதர்கள் முன் இருக்கின்றது – விலை மனிதரின் சிந்தனை திறன் மற்றும் கேள்வி கேட்டும் ஆற்றல்.

அப்படி எனில், மனிதர்கள் சிந்திக்கவே மாட்டார்களா? இயந்திரங்கள் தான் சிந்திக்குமா? மனிதர்கள் இன்றைய நாள் வரை இயந்திரங்களை விட அறிவாளிகள், எனவே இயந்திரங்களை உருவாக்கும் கண்காணிப்பு முதலாளிகள் “யார் சிந்திக்க வேண்டும் என்பதையும் எதை சிந்திக்க வேண்டும் என்பதையும், யார் சிந்திக்க வேண்டும் என்பதை யார் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும் என்பதையும் முடிவு செய்வார்கள்” இந்த சிந்தனை கட்டுப்பாட்டு முறை சமூகத்தில் புதிய தொழில்சார் பிரிவுகளை (division of labour) உருவாக்கும். எமிலே துர்க்கேம் காலத்து தொழில்மய உலகின் தொழில் சார் பிரிவுகளை விட மிக இறுக்கமான அறிவு என்பது தனி சொத்தாக மாற்றப்பட காலத்தின் தொழில்சார் பிரிவுகள் பல் வேறு மாற்றங்களுக்கு விளைவுகளுக்கு வழிவகுக்கும். இந்திய சாதிய அமைப்பை போல் அறிவை சொத்துடமை ஆக்குவது எனும் நிலைக்கு வந்து நிக்கிறது கண்காணிப்பு முதலாளித்துவம் .

இணையத்தின், கணினியின் இந்த உலகை விட்டு தப்பிப்பது என்பது பேஸ்புக், டிவிட்டர் கணக்கை அழிப்பது அல்ல. அப்படி அழித்தாலும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு நிறுவனம் தகவல்களை திரட்டிக்கொண்டு தான் இருக்கும். மேலும் இணையம் இல்லாத இருப்பு என்பது மின்சாரம் இல்லாத இருப்பை போன்றது. அவற்றை விட்டு எப்படி தப்பிப்பது எனும் காலத்தை நாம் கடந்து விட்டோம். இயந்திரங்களின் உலகம் இதுவரையான உலகை காட்டிலும் மிக வேகமாக உருக்கொள்கிறது, அதனுடன் இணைத்து பயணிப்பது தான் நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ஆனால் எப்படி பயணிக்க போகிறோம்? கூகிள் பேஸ்புக் அமேசான் சொல்வதை போலவா? அல்லது தனி நபர் உரிமைகள் சார்ந்தா? என்பதே கேள்வி. இன்று இருக்கும் பெரு நிறுவனங்கள் அனைத்தும் அந்தரங்கம் என்ற ஒன்றை முற்றிலும் நிராகரிக்கின்றன. ஒரு நிறுவனத்தின் பொருட்களில் இருக்கும் வசதிகளை பயன்படுத்த தனி மனிதர்கள் அவர்களின் அந்தரங்கத்தை ஒப்பு கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக நீங்கள் எங்கே இருக்கினறீர்கள் எனும் தகவலை சொல்லாமல் கூகிள் வரைபடத்தை முழுமையாக பயன்படுத்த முடியாது. இதே தான் பொருட்களின் இணையம் என்று சொல்லப்படும் internet of things உலகிலும். ஸ்மார்ட் தொலைக்காட்சி, ஸ்மார்ட் கைக்கடிகாரம், ஸ்மார்ட் துடைப்பான், ஸ்மார்ட் படுக்கை, ஸ்மார்ட் மின் விளக்கு, ஸ்மார்ட் பூட்டு, ஸ்மார்ட் கழிப்பிடம், ஸ்மார்ட் கண்காணிப்பு கேமரா என்று அனைத்துமே, நாம் கொடுக்கும் தனி மனித தகவல்களுக்கு ஏற்ப சிறப்பாக வேலை செய்யும். முதலாளித்துவ உலகின் வர்த்தகம் பணம் அதற்கு ஏற்ற பொருள் எனும் அளவீடில் இயங்கியது, இந்த புதிய முதலாளித்துவம் பணம், தனி நபர் தகவல் அதற்கு ஏற்ற பொருள் மற்றும் அதன் பயன் எனும் அளவீடில் இயங்குகிறது. நாளைய உலகம் என்பது இந்த ஸ்மார்ட் இயந்திரங்களை கொண்டு தான் சுழல போகிறது. இது எதுமே இல்லாது வாழும் மனிதர்கள் அல்லது இணைய உலகில் மிக குறைவாக இயங்கும் அல்லது குறைந்த தகவல்களை மட்டும் வைத்திருக்கும் மனிதர்களும் கண்காணிப்பில் இருந்து தப்பியவர்கள் இல்லை, இந்த மனிதர்கள் இணையத்தில் இல்லை அல்லது குறைவான தகவல்களை மட்டுமே பகிர்ந்து இருக்கின்றனர் என்பதே கண்காணிப்பு முதலாளித்துவ இயந்திரங்களுக்கான அனுபவ உபரி தான்.

கண்காணிப்பு முதலாளித்துவத்தின் இயக்கம் மிகவும் எளிமையானதாக இருக்கின்றது அதற்கு காரணம் அதன் இயக்கத்தின் வடிவம். தனி நபர் நலன்- பாதுகாப்பு - எதிர்காலம் - எளிமையாக்கப்பட்ட இருப்பு - தவிர்க்கமுடியாத மாற்றம் - அச்சம் - பயம் எனும் புள்ளிகளில் தன் இருப்பை நிலைநிறுத்திக்கொள்கிறது. அரசுகளுக்கும் கண்காணிப்பு முதலாளிகளிடம் இருக்கும் தனி நபர் உபரிகள் அரசுகளை பாதுக்காக்க, தேர்தல்களில் வெற்றி பெற, என்று பல வடிவங்களில் தேவைபடுவதால் இந்த நிறுவனங்களின் அத்தனை செயல்களுக்கும் துணையாக தான் இருக்கின்றன.

சமீபத்தில் பார்த்த இரண்டு தமிழ் திரைப்படங்களின் காட்சிகள் தான் நாம் கண்காணிப்பு முதலாளித்துவம் குறித்து எந்த புரிதலும் இல்லாமல் இருப்பதை வெளிப்படுத்துகிறது. 1) அமெரிக்காவில் இருந்து வரும் நாயகன் நாட்டை திருத்த தேர்தலில் நிற்கிறார், தன்னுடன் தேர்தலில் நிற்கும் சக வேட்பாளர்களை அவர்களின் இணைய இருப்பின் தகவல்களை கொண்டு தேர்ந்தெடுக்க போவதாய் சொல்கிறார். ஒருவரின் மின்னஞ்சல், கூகிள் தேடல், பேஸ்புக் தகவல்கள், வங்கி கணக்குகள், மற்ற அனைத்து இணைய தகவல்களையும் கொண்டு செய்வதாய் சொல்வார் - இதையே தான் பெரு நிறுவனங்களும் சொல்கின்றன. திரைப்படத்தின் நாயகன் சொல்லும் புரட்சி தான் கண்காணிப்பு முதலாளித்துவ அடிப்படை. 2) வீட்டில் கணவன், குழந்தைகள் இல்லாத தனிமையை போக்க அமேசான் அலெக்ஸாவுடன் பழகும் நாயகிக்கு அலெக்ஸா அம்மு எனும் பெயரில் தோழியாக மாறிவிடுகிறாள். அந்த தோழியின் வருகை நாயகியின் வாழ்வில் மாயாஜாலத்தை நிகழ்த்துகிறது. இதை தான் அமேசானும், கூகிளும் சொல்கிறது - உங்களின் உற்ற தோழமை.

நம் தனிமை, தனிமனித அந்தரங்கமும் தான் மூலதனம் மற்றும் சந்தை. தனி மனித உரிமை குறித்தான எந்த புரிதலும்/ நம்பிக்கையும் இல்லாத இந்திய சமூகத்தில் இது எதுவுமே பெரிதாக தோன்றாமல் இருக்கும். நம் அனைத்து தகவல்களையும் ஏற்கனவே அரசு, ஆதாரின் வடிவில் வைத்திருக்கிறதே. பேஸ்புக் முழுவதும் எனது கூகிள் தேடுதல்களுக்கு ஏற்ப விளம்பரங்கள் ஏற்கனவே வருகிறதே என்று எளிதில் கடந்துவிட கூடும். ஆனால் தகவல் பாதுகாப்பு உரிமை குறித்தான உரையாடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பை போல் நமது தலைமுறைக்கான போராட்டமாக இருக்க போகின்றது என்பதை சமீபத்தில் வாசித்த இரண்டு புத்தகங்கள் வெளிப்படையாக சொல்கின்றன. இந்த மொத்த கட்டுரையும் இரண்டு புத்தகங்களில் வெளியான கருத்துக்களை கொண்டே எழுதப்பட்டிருக்கின்றது.

1)சென்ற வருடம் வெளியான பேராசிரியர் ஷோஷானா ஸுபாப் (Shoshana Zuboff) எழுதிய கண்காணிப்பு முதலாளித்துவத்தின் காலம் (the age of surveillance capitalism). இணைய பெரு நிறுவனங்கள், தனி மனித தகவல் சார் அரசுகளின் கொள்கைகள், கண்காணிப்பு முதலாளித்துவ வணிக அமைப்பு குறித்தும், அது சமூக கட்டமைப்பில் செய்யும்/செய்யப்போகும் மாறுதல்கள் குறித்தும் பல வருட ஆய்வுகளுக்கு பின் சமூகவியல் நோக்கில் எழுதப்பட்ட புத்தகம். மனித சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி புத்தகங்களில் டார்வின் எழுதிய உரினங்களின் தோற்றம், ப்ராயிட் எழுதிய கனவுகளின் விளக்கம், மார்க்ஸ் எழுதிய மூலதனம், கலிலியோ எழுதிய இரண்டு புதிய அறிவியல்கள் வரிசையில் கண்காணிப்பு முதலாளித்துவத்தின் காலம் இருக்கும்.

The Age of Surveillance Capitalism 
Shoshana Zuboff 
PublicAffairs, 2019

2) இந்த வருடம் தமிழில் வெளிவந்திருக்கும் அதிஷாவின் ‘சர்வைவா’. அதிஷா மிகவும் நம்பிக்கையான மனிதர். புத்தகம் முழுவதும் நம் தலைமுறை உலகுக்கான மானிட இருப்பின் நம்பிக்கையை தேடுகிறார், அதற்கு ரயிலை கண்டுபிடித்த கதை முதல் ஏனைய பல அறிவியல் கண்டுபிடிப்புகைளையும் துணைக்கு அழைக்கிறார். ஆனால் அப்படி நம்பிக்கையான ஒரு காலத்துக்குள் தான் செல்ல போகிறோமா அல்லது வாழ்கிறோமா என்றால் “நான் அவநம்பிக்கையான மனிதன், வருங்காலம் நம்பிக்கையற்றதாக தான் இருக்கிறது” என்று கோட்பாட்டு அறிவியலாளாளர் கார்லோ ரவோலியின் வார்த்தைகளை தான் மேற்கோள் கட்டவேண்டி இருக்கிறது. நம்பிக்கையினை தாண்டி பல இடங்களில் கண்காணிப்பின் விளைவுகளை நேரடியாக பேசுகிறது இந்த புத்தகம். அறிவாற்றல் மிக்க இயந்திரங்கள் என்னவெல்லாம் செய்ய போகின்றன அதன் காரணமாக நம் வாழ்வியல் எத்தகைய மாற்றங்களுக்கு உள்ளாகும் என்று பேசுகிறது சர்வைவா. இந்த புத்தகத்தில் இருக்கும் அதிகப்படியான நாளைய உலகின் நம்பிக்கைகைளை தாண்டி - அதில் எனக்கு உருவாகும் முரண்களை தாண்டி, அலெக்ஸாவை தோழியாக பாவிக்கும் தமிழ் கதைகளுக்கு நடுவே இன்றைய மற்றும் நாளைய கண்காணிப்பு இயந்திர உலகத்துக்கு (surveillance machine world) மிகவும் எளிமையான அனைத்து வாசகர்களும் புரிந்துக்கொள்ளும்படியான ஒரு அறிமுக பிரதியை எழுதியிருக்கின்றார் அதிஷா. 


சர்வைவா 
அதிஷா 
விகடன் வெளியிடு ,2020

* surveillance capitalism - ஷோஷானா ஸுபாப் உருவாக்கிய இந்த வார்த்தையின் விளக்கம் அல்லது அர்த்தம் "மனித அனுபவங்களை வர்த்தக நலன்களுக்காக, இலவச மூலபொருளாக பயன்படுத்தும் பொருளாதார முறை. முதலாளித்துவம் - சலுகைசார் முதலாளித்துவம் வரிசையின் புதிய பரிணாமம் "கண்காணிப்பு முதலாளித்துவம்." 
இந்த வார்த்தைக்கு எட்டு விளக்கங்களை ஷோஷானா ஸுபாப் கொடுத்திருக்கிறார். அதில் மிகவும் பொருத்தமானதாக முதல் விளக்கம் இருக்கும் என்பதால் அதையே இங்கு கொடுத்திருக்கிறேன்.

Comments

Popular posts from this blog

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்: வெறுப்பை ஜனநாயகப்படுத்தும் அழகியல்!

0. பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்: “நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது” 1. மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போ...

In the most health-obsessed society ever, all is not well*: On Trauma

1 Philosopher Byung-Chul Han's essay Neuronal Power begins with the following lines: " Every age has its signature afflictions. Thus, a bacterial age existed; at the latest, it ended with the discovery of antibiotics. Despite widespread fear of an influenza epidemic, we are not living in a viral age. Thanks to immunological technology, we have already left it behind. From a pathological standpoint, the incipient twenty-first century is determined neither by bacteria nor by viruses, but by neurons ". Modern integrative body mind science defies Byung-Chul Han’s statement, that it is reductive to define human suffering solely in terms of ailments. However, we are living in an era, where production relations dictate nearly everything about human existence, in this specific context Byung-Chul Han’s statement—that the majority of human society is afflicted by mental or neuronal issues—serves as a foundational lens to understand contemporary humans and their struggles. In today’...

படுகொலைக்கு முன்னான சில மணி நேரங்கள்

    ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன் , எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை . அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட   நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன் , ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல் . கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை . உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை , இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை . அதே நேரம் ஒளியற்று , ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது , சூடான மழைத் துளியை போல் . மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது ... அம்மாவின் முலை காம்புகள் , விபத்தொன்றில் மரணித்த நன்பன் , தேர் திருவிழா , அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள் , அவளின் முதல் முத்தம் , இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம் , கல்லூரியின் விடுதி அறை , முதல் காமத்தின் வெள்ளை இரவு ... இப்படி சொல்லி ம...