தனிமையின் நூறு ஆண்டுகளை எழுதி முடிப்பதற்கு பதினாறு வருடங்களுக்கு முன், பின்பனி காலத்துக்கு பின்னான, வெப்பமண்டல நிலத்தின் கோடையில் மார்க்கேஸ் மகாந்தோவில் இருந்த ஒரே தெருவின் வடக்கு எல்லையில் ஒரு வீட்டினை கட்டினார். உயரமான வாசலையும், மிகப் பெரிய சன்னல்களையும், உயர்ந்த வாசலையும் கொண்ட அந்த வீட்டின் முன் கதவு சூரியன் மறையும் முன் தாழிடப்பட்டிருந்ததின் நினைவுகள் யாரிடமும் இல்லை. அந்த வீட்டுக்குள் யார் வேண்டும் என்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம், விசாலமான எப்போதும் குளிர்ச்சியுடன் இருக்கும் அந்த வீட்டைச் சுற்றிப் பார்க்கலாம், சில சமயம் ஓய்வு எடுக்கலாம். மார்க்கேஸ், அந்தவீட்டினை புயேந்தியாக்களுக்காய் காட்டினார். அந்த வீட்டில் புயேந்தியா குடும்பம் அடுத்த நூறு ஆண்டுகளை வாழப் போகின்றார்கள். அந்த வீடும் மகாந்தோவும் ஒன்றாக உருவாக்கி ஒன்றாகச் செழித்து ஒன்றாக சிதிலமடையப் போகின்றன. அதை உர்சுலா மட்டும் பார்த்துக்கொண்டே இருக்கப் போகிறாள். மெல்கியதேஷ் பரிசாகக் கொடுத்த அவுரி மையினை கொண்டு மார்க்கேஸ் அந்த வீட்டின் கதையை நமக்கு எழுதுவார். அவர் அந்த கதையை எழுதி முடிப்பதற்கு முன்பே லத்தின் அமெரிக்காவில் வாழ்ந்த பலர் தங்கள் கைகளில் புயேந்தியாக்களின் வீட்டின் வரைபடத்தை வைத்து இருந்தனர்.
ஒரு நாவலுக்கான குறிப்புகள் எனும் அந்த கட்டுரை புயேந்தியாக்களின் வீடு பற்றிய குறிப்புகளுடன் 1954 ஆம் ஆண்டு க்ரோனிக்கா எனும் ஸ்பானிஷ் இதழில் வெளியானது. அந்த கட்டுரை வெளியாகி பதினாறு ஆண்டுகள் கழித்தே தனிமையின் நூறு ஆண்டுகள் வெளியானது. தென் அமெரிக்காவினை தாண்டி மார்க்கேஸ் உலகமெங்கும் அவரின் நாவல்களுக்காகக் கொண்டாடப்பட்டாலும், நாவல் ஆசிரியர் என்பது மட்டுமே மார்க்கேஸ் அல்ல. நோபல் பரிசு வாங்கியபின் ஒரு நேர்காணலில் மார்க்கேஸ், தன்னை ஒரு எழுத்தாளர் என்று அடையாளப்படுத்திக் கொள்வதை விடப் பத்திரிகையாளர் எனும் அடையாளமே பொருத்தமானதாக இருக்கும் என்று கூறினார். என் கதைகள் எல்லாமே ஒரு பத்திரிகையாளரின் கதைகளே என்று சொன்ன மார்க்கெஸ், வேறு ஒரு சமயம் இந்த உலகின் மிக சிறந்த வேலை பத்திரிக்கையாளர் வேலை தான் என்றார். அவர் தனது பத்திரிகை தொழிலை மிகவும் நேசித்தார், அந்த வேலை மார்க்கேஸ் எனும் எழுத்தாளரை உருவாக்கியது என்பதை அவரின் பத்தி எழுத்துக்களைப் படிக்கும்போது அறிய முடியும்.
மார்க்கேஸ் மறைந்து ஐந்து ஆண்டுகள் கழித்து ஆனி மேக்லேன் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கும் “நூற்றாண்டின் மிகப்பெரிய மோசடி மற்றும் பிற எழுத்துக்கள்” வழியே மார்க்கேஸ் எனும் மனிதரின் எழுத்துலகின் இன்னொரு பகுதியினை அறிய முடியும்.1950 முதல் 1984 வரை எழுதப்பட்ட பல பிரதிகளில் இருந்து தேர்ந்தெடுத்து, மொத்தம் ஐம்பது கட்டுரைகளை ஆனி மொழிபெயர்த்திருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் அதன் இயல்பில் மார்க்கேஸின் மொழி வளத்தில் தனித் தனி கதைகளாக உருகொள்கின்றன.
இளம் பத்திரிக்கையாளர் ஒருவரின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளும் , பெட்டி பத்திரிக்கை செய்திகளும், ஒரு எழுத்தாளனின் புலம்பெயர் வாழ்வின் தருணங்களும், அந்த ஆண்டுகளின் பத்திரிகை தலைப்பு செய்திகளை ஆக்கிரமித்திருந்த வரலாற்று நிகழ்வுகளும், கொலம்பிய வீதிகளில் தன் முன்னோர் விட்டுச் சென்ற மொழியின் மிச்சங்களைக் கொண்டு மார்க்கேஸ் உருவாக்கிய பிரதிகளின் ஊடாக புனைவின் அரிதாரங்களைச் சூடிக் கொள்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் அதனளவில் தனித்தனி முக்கியத்துவங்களை கொள்கின்றன - லத்தின் அமெரிக்காவின் அரசியல், சமூகம், புரட்சிகள், ஏமாற்றங்கள், கொண்டாட்டங்கள், வன்முறைகள், என்று பூர்வகுடி அமெரிக்க நிலத்தின் ரத்த நாளங்கள் வழியாகப் பயணிக்கிறன இந்த கட்டுரைகள்.
ஆயிரம் முறைகள் அழைப்பு மணியை ஒலிக்கும் தபால்காரர் - தொலைந்த தபால்களின் கல்லறையினை பார்வையிடுதல் எனும் கட்டுரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் மானிட வாழ்வியலில் கடிதங்கள் கொண்டிருந்த மைய இடத்தை வர்ணிக்கிறது. ஒவ்வொரு கடிதமும் ஒவ்வொரு தபால்காரரின் அழைப்பு மணியும் ஏதோ ஒரு மனிதரின் மகிழ்ச்சியினை, துயரத்தை, நம்பிக்கைகளை, ஏமாற்றங்களை, காதலை, காமத்தை, பிறப்பை, இறப்பை, போரை, அமைதியை, பிரிவை, தொடர்பைத் தாங்கியே இருந்திருக்கின்றன. ஒரே ஒரு வாட்சப் செய்திக்காகக் காத்திருக்கும் 21ஆம் நூற்றாண்டு வாழ்க்கையைப் போல் மனிதர்கள் ஒரே ஒரு கடிதத்துக்காக வாழ்நாள் முழுவதும் காத்திருந்த கதைகளின் இன்னொரு முகமே இந்த கட்டுரை. அப்படிக் காத்திருந்த மனிதர்களைச் சென்று சேராத கடிதங்களின் கல்லறைகள் பற்றிய கதையே இந்த பிரதி. ஒரு வேளை நம் காலத்தில் அப்படி ஒரு கல்லறையைத் தேடிச் சென்றால் அந்த கல்லறைகள் கூகிள் அல்லது பேஸ்புக்கின் உயிருடன் இருக்கும் தரவு இயந்திரங்களின் மூளைகளாக இருக்கக்கூடும்.
எந்த தலைப்பையும் என்னால் சிந்திக்க முடியவில்லை எனும் ஒரு கட்டுரை, லத்தின் அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில் மிக அரிதாக நடக்கும் நம்பிக்கை ஒளிக் கீற்றின் முதல் கதிர்கள் உதித்த துல்லியமானநிமிடங்களை விவரிக்கின்றது. புரட்சிக்கு முன்னான கூபா குறித்து நினைவுகூறும் மார்க்கேஸ் “ஹவானா, அமெரிக்கர்கள் ஆக்கிரமித்திருக்கும் பாலியல் தொழில் விடுதி என்பதையும், மற்ற கிருத்துவ தேசங்களில் பாலியல் திரைப்படங்கள் நடைமுறை வழக்காக மாறும் பல வருடங்களுக்கு முன்பே அங்கு ஒரு அமெரிக்க டாலருக்குக் கலவியில் ஈடுபடும் ரத்தமும் சதையுமான மனிதர்களின் உடல்களை அரங்குகளின் திரைகளில் காணமுடியும் என்பதையும் தாண்டி வேறு எந்த முக்கியத்துவமும் இல்லாத நகரமாக இருந்தது” என்கிறார். ஆனால் புரட்சி ஹவானாவின் இடத்தை வரலாற்றில் மிக முக்கியமானதாக மாற்றியது என்று சொல்லும் மார்க்கேஸ், கூப புரட்சியின் வெற்றிக்காகக் காத்திருந்த நாட்களை நினைவு கூர்ந்தபடியே புரட்சியின் வெற்றி நிறைந்ததோடும் ஹவானாவின் தெருக்களுக்குச் செல்ல தயாராகிறார். அப்பொழுது வெனிசுலாவில் வாழும் மார்க்கேஸ், அன்று இரவே ஹவானா செல்ல கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி வீட்டுக்குச் சென்று உடைகளையும், கடவு சீட்டினையும் எடுக்கக் கூட நேரம் இல்லாமல் கராகஸ் விமான நிலையம் சென்று கையில் இருந்த ஒரே அடையாளசீட்டான மின்சார கட்டண ரசீதினை காட்டி அதில் குடியுரிமை அதிகாரி முத்திரையிட்டு கூபா விமானத்துக்கு வழியனுப்பி வைத்த கிளர்ச்சியூட்டும் கதையைக் கதையை விவரிக்கும் மார்க்கேஸ், பழைய அமர்வதற்கு இருக்கைகள் இல்லாத கூப விமானத்தில் பயத்துடன் பயணித்த கதையினையும் நகைச்சுவையாக தனக்கு வாழ்நாள் முழுவதும் இருந்த விமான பயணம் குறித்தான அச்சத்தையும் சொல்கிறார். அந்த கட்டுரை அன்றைய நாட்களில் லத்தின் அமெரிக்க மக்கள் இப்படியான ஒரு புரட்சியின் வெற்றிக்காக ஏங்கிய நினைவுகளை நமக்குச் சொல்லக்கூடும்.
இன்னொரு கட்டுரை, மார்க்கேஸ் பாரிஸ் நகரத்தில் வாழ்ந்த போது நடந்த சம்பத்தை ஒட்டி எழுதப்பட்டது. அது அவரின் அனேக வாசகர்கள் அறிந்த அடிக்கடி நினைவுகூரும் ஒன்று. என் தனிப்பட்ட ஹெம்மிங்வே எனும் அந்த கட்டுரை மார்க்கேஸ் ஹெம்மிங்வே மீதும் அவரின் எழுத்துக்கள் மீதும் வைத்திருந்த நேசத்தை விவரிக்கின்றது. பாரிஸின் மிக முக்கிய தெருக்களில் ஒன்றான, சோர்பான் பல்கலைக்கழகம் இருக்கும், பழைய புத்தகக் கடைகளும் பல்கலைக்கழக மாணவர்களும் நிரம்பிய அந்தத்தெருவில் ஹெம்மிங்வேயை மார்க்கேஸ் தூரத்தில் இருந்து பார்க்கிறார். தன்னிச்சையாக அவரது உதடுகள் “மாஸ்டர்ரோ” என்று சப்தமாக உச்சரிக்கின்றன. மக்கள் தலைகள் நிரம்பிய அந்த தெருவில் எந்த சந்தேகமுமின்றி உறுதியுடன் ஒரு குழந்தையின் குரலில் கைகளை உயர்த்தி “அடியோஸ், அமிகோஸ்” என்று பதில் வணக்கம் செலுத்துகிறார் ஹெம்மிங்வே. இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தின் உணர்ச்சிகரமானதும், கிளர்ச்சியானதுமான இந்த கட்சியுடன் ஆரம்பிக்கும் அந்த கட்டுரை, இருவருக்குமான ஆசிரியர் மாணவர் உறவு குறித்து நெகிழ்ச்சியுடன் விவரிக்கிறது.
இப்படி இந்த தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு கட்டுரைகளும் மார்க்கேஸ் எனும் ஆளுமையின் உலகுக்குள் நெருக்கமாகப் பயணிக்கும் வாய்ப்பினை கொடுக்கின்றன. அந்த உலகம் முழுவதும் லத்தின் அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த ஏக்கமும் கனவுகளுமே நிரம்பி இருக்கிறது. லத்தின் அமெரிக்காவின் ஆன்மா குறித்து எழுதப்பட்ட மிக முக்கிய பிரதிகளாக இருக்கும் லத்தின் அமெரிக்காவின் திறந்த ரத்தநாளங்கள், மோட்டார் சைக்கிள் குறிப்புகள், அச்சப்படாதே அமெரிக்க நண்பனே போன்ற பிரதிகளின் வரிசையில் மார்க்கேஸின் இந்த கட்டுரைகள் இருக்கக்கூடும்.
The Scandal of the Century and Other Writings
Gabriela Gracia Marquez
Translated by Anne McLean
Alfred A. Knopf pressகாலச்சுவடு
Comments
Post a Comment