Skip to main content

சிறைப்பட்டிருக்கும் காலத்தை விடுவிக்கும் வண்ணங்கள்

எல்லாவற்றுக்கும் முன்னால் நாம் காலத்தையும் வாழ்வையும் காண்கிறோம்
அவை பந்தயத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன
படத்தின் இடப்புறம் நோக்கி கரை கரையை சந்திக்கும் இடமது
ஆனால் இந்த சந்திக்குமிடம் காண்பிக்கப்படுவதில்லை
அது கித்தானுக்குள் நடைபெறவில்லை
ஏனெனில் கரையின் மறுபுறம்
இருப்பவை சொர்க்கமும் நித்தியமும்
– ஆலன் கின்ஸ்பெர்க்.


செதில் செதிலாக உதிரும் அதிகாரம்

ரிந்த சாம்பலிலிருந்து உருப்பெற்ற கித்தான் முழுவதும், கருகிச் சிதைந்த மனித உடல்கள் நிறைந்திருந்தன. புழுத்துப்போன அதிகார குமட்டலாலும் வன்முறையாலும் எழுதப்பட்ட இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றை அந்த ஓவியம் அறிவித்தது. கொழுந்துவிட்டு அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் சாதிய தீ நாக்குகள் எரித்த இதயங்களும் நரம்புகளும் சாம்பலாகிப் போன எலும்புக் குவியல்களும், முடை நாற்றமடிக்கும் வரலாற்றின் சாட்சிகளாக அந்த சாம்பல் வர்ண ஓவியம் முழுவதிலும் பரவிக்கிடந்தன. ஓவியத்தின் உள்ளடுக்குகளில், காலத்தால் என்றேனும் ஒருநாள் விடுவிக்கப்படவிருக்கும், யார் கண்ணுக்கும் தெரியாத, மானிட இருப்பின் நம்பிக்கை புதைந்திருந்தது’ என்று நடராஜின் வரலாற்றின் மின்மினிப் பூச்சிகள் ஓவியம் குறித்து நாட்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறேன்.

சிறைப்பட்ட அன்பின் கதைகள், நடராஜின் ஓவியங்களில் முடிவற்ற சித்திரச் சீலைகளாக உருக்கொள்கின்றன. கோடுகளையும் வர்ணங்களையும் கொண்டு மானிட அகத்தைச் சிறை மீட்டு காலத்தையும் வெளியையும் கடந்த இருப்புக்குக் கூட்டிச் சென்று பத்திரப்படுத்துகின்றன. நிகழ்கால அவலங்களை விட்டு தப்பித்தலின் சாட்சியாக கடந்த காலங்களை வரையும் நடராஜ், வரலாறு என்று நாம் அறிந்திருப்பவற்றை வரையாமல், வரலாற்றின் அபத்தத்தில் சிக்குண்ட மனிதர்களைத் தன் ஓவியங்கள் வழி மீட்க எத்தனிக்கிறார்.

பெருங்காமம் உயிர்ப்பித்த கானகப் பிரபஞ்சம்

பெருங்காமம் உயிர்ப்பித்த வனாந்தரத்தின் இடுக்குகளின் வழி காட்டின் ஈரநிலத்தை தரிசிக்கும் சூரியக் கதிர்களும் - செழித்து விரிந்திருக்கும் பச்சைகளின் வழி தோன்றும் உயிர்களும் - தோன்றி அலையும் உயிர்களுக்கு அடைக்கலமளிக்கும் விருட்சங்களும்- வனாந்தரத்தின் பசுமையில் லயித்திருக்கும் மனிதர்களும் - முடிவற்ற கானகத்தின் சுழற்சியில் நிற்காமல் சுழலும் உயிர்களும் - செந்நிற தீயில் எரிந்து அழியும் காடும் -அழிந்த சாம்பல் நிலத்தை விட்டுத் தப்பிக்கும் மனிதர்களும் - தண்ணீரற்ற நிலத்தில் குடுவைக்குள் தண்ணீருக்கு ஏங்கியபடி அடைபட்டுக் கிடக்கும் குழந்தையும் - நிலத்தைப் பிளந்துகொண்டு காற்றுடன் கலந்து போகும் நீலப் பெண்ணும் என்று நடராஜின் ஓவியங்களுடன் காடும் அதன் அகமும் அண்டத்தின் உவமையாக பயணிக்கின்றன. அநேக படைப்புகளில் காடும் இயற்கையும் மனிதர்களும் ஒன்றாக வாழ்கிறார்கள்; ஒன்றாக சண்டையிடுகிறார்கள்; நடராஜ் உருவாக்கும் புதிய வெளியில் ஒன்றாகத் தஞ்சமடைகிறார்கள். ஓவியத்தில் வியாபித்திருக்கும் அனைத்திற்கும் காடு ஆன்மாவாக இருக்கிறது.

நடராஜின் ஓவியங்கள் பலவற்றுக்கும் காடே பூர்வீகமாகவும் வெளியின் உவமையாகவும் இருந்துவருகிறது. அதே காடு, நிகழ்காலம் தரும் அலுப்பிலிருந்து மனிதர்களை மீட்கும் பணியையும் மேற்கொள்கிறது. இந்த ஓவியங்கள் மனிதர்களை மட்டுமல்லாது இயற்கையையும் அதிகாரங்களிடமிருந்து மீட்கச் சண்டையிடுகின்றன.

பிளாஸ்டிக் குடுவைக்குள் அடைக்கப்பட்ட தண்ணீருக்கு ஏங்கித் தவிக்கும் அந்த குழந்தை இந்த பூமியாக உருக்கொள்கிறது. காற்றும் சோறும் நீரும் இல்லாத இந்த பூமி பிளாஸ்டிக் குப்பைகளின் கரிய இருட்டில் அமிழ்ந்து போகிறது. குருதி வழியும் மனிதக் காலடித் தடங்கள் பதிந்த நீண்ட கரிய தார்சாலை, ‘வளர்ச்சி’ அழித்த பூமியை மீட்கச் சொல்லிக் கதறுகிறது. அந்த தார்சாலையின் மேலும், அதன் அடியிலும் வளர்ச்சியின் வரலாறு வெட்டி வீழ்த்திய வறிய மனிதர்களின் குருதி நிரம்பியிருக்கிறது. அந்தக் கித்தானுக்குப் பின்னால், காட்சிக்கு எட்டாமல் நீளும் சாலையில் சாரை சாரையாக மனிதர்கள் பிள்ளை குட்டிகளுடன் சோறு தேடி அலைகிறார்கள்.

சிதைந்துச் சிதறும் காலமும் வெளியும்

ஓவியத்தின் காட்சிகளில் உள்ள எதார்த்தத்தின் வன்முறையையும், அவற்றின் அகத்தில் புலப்படும் மானிட மீட்சியையும் குறித்து ஒவ்வொரு கான்வாஸும் பார்வையாளர்களுடன் தொடர்ந்து உரையாட முற்படுகின்றன. அம்மீட்சி அதிகாரத்துக்கு எதிரானதாக, அடக்குமுறைகளை உடைத்தெறிவதாக, வரலாற்றை புதிய வண்ணங்களில் அணுகுவதாக இருக்கிறது. வண்ணங்களின் கீழ் அடுக்குகளில் காலத்தை வெளியேற்றும் அநேக ஓவியங்களும், இந்த பிரபஞ்சம் நிகழ்வுகளால் ஆனது, பொருட்களால் அல்ல என்று சொன்ன கார்லோ ரவொலியின் வரிகளை நினைவுபடுத்தி, நிகழ்வுகளில் மறைக்கப்பட்ட நிகழ்வுகளை மீளுருவாக்கம் செய்கின்றன.

கருனையற்ற வரலாறு பெருமத நிறுவனங்களின் வருகையினூடே அழித்தொழித்த காளியும் பேச்சியும் தொல்லிருள் கிழவிகளாகக் காத்திருக்கிறார்கள். பிறப்பும், வாழ்வும், இறப்பும் சுழற்சியில் நிகழ்கிறது. மனிதர்கள் தோன்றிய காலம் முதலாக வெளியேற காத்திருக்கும் ஆதி மனிதன், தனது ஒளிவீசும் ஆன்மாவை கையில் ஏந்தியபடி விட்டு விடுதலையாகிறான். இரண்டு மனிதர்களின் காதலில் இணைந்த சூலும், உயிர்க்கொடியும் கானகத்தை உயிர்ப்பிக்கின்றன.

தீ ஜுவாலைகள்

சிறைப்பட்ட மனித அன்பின் திரைச்சீலைகளில் கானகத்தை விட்டு வெளியேறும் நடராஜன் ஓவியங்கள் தங்கள் உடல் முழுவதும் தீயின் ஜுவாலைகளை அணிந்து கொள்கின்றன. அங்கு தீக்கங்குகளுக்கு மத்தியில் ஒரு மனிதன் ஒளிபொருந்திய தன் இதயத்தை கைகளில் பத்திரப்படுத்தியப்படி தீ நிரம்பிய ஓவியத்தை விட்டு வெளியேறுகிறான். தீயை அளித்த காட்டுக்கும் பச்சை பூசிய கானக வெளிக்கும் இடையே சிக்கித் தவித்த சூழலும் ஒரு மனித உடல். அது தான் சிக்கிக் கொண்ட புதிய வழியை விட்டு வெளியேற முடியாமல் திமிறிக்கொண்டிருக்கிறது. உளுத்துப்போன உடலையும் கசங்கிக் கிழிந்த பழைய ஆடைகளையும் வெள்ளை தொப்பி அணிந்த மனித உடல், நிகழ்காலத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது. பிளாஸ்டிக் வலைக்குள் சிக்கிக் கொண்ட புராதன பறவை ஒன்று அசைவற்று மீட்பருக்காகக் காத்திருக்கிறது. யானை மலையின் சிவன் மனிதர்களை கழுவேற்றிய களிப்பில் ஒய்யாரமாக நடனமாடுகிறான். மனிதர்களிடமிருந்து சிவன் திருடிய யானை மலைக்கு நிகழ் உலகில் லாபத்தின் பொருட்டு புதிய கதை புனையப்படுகிறது.

கித்தான்களில் சிக்கிக்கொண்டிருக்கும் அத்தனை உயிர்களும் காலமும் வெளியும் ஓவியங்களை விட்டு வெளியேறவே தவித்துக்கொண்டிருக்கின்றன. நடராஜின் உலகில் மனிதர்களும், கானகமும், ஆதி விலங்குகளும், கல் மலைகளும் ஒன்றாகவே இருக்கிறார்கள் – அவர்களில் எவரையும் தனித்துக் காட்ட வண்ணங்கள் எதுவும் அவருக்குத் தேவைப்படுவதில்லை. அவர்கள் முடிவற்ற ஒரு புதிர் சுழற்சியில் சிக்கித் தவிக்கிறார்கள். கருனையற்ற காலம் அவர்களைச் செந்நிற தீயின் வன்முறையில் சாம்பலாக்கிச் சிதைக்கிறது.

பறத்தலின் விதி

மனிதர்கள் ஆகாயத்தைப் பார்த்து பிரபஞ்சத்தைத் தேடிக்கொண்டிருந்த நாட்களில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மனிதர்களைப் பார்த்து நீங்களும் அந்த வெளியில் துகள்களாக இருக்கிறீர்கள் என்றார். ஸ்தூலமான இந்த வெளிகளை உடைத்துக் கொண்டு வெளியேறும் நடராஜின் ஓவியங்கள் வழியாக, அதிகாரங்களால் அடக்கிவிட முடியாதபடி சுதந்திரமானதும் நிச்சயத்தன்மையற்றதுமான வெளியில் உயிரினங்கள் திரிகின்றன. வெண்மணியின் தீச்சுவாலைகளை விட்டு வெளியேறும் மனிதர்கள் பாழடைந்த சாதி மூளைகளை வெட்டி வீழ்த்துகிறார்கள். சிறகு முளைத்த குதிரையோடு கானக இருளை விட்டு வெளியேறுகிறான் ஒரு பழுப்புச் சிறுவன். உடைந்து சிதறிய கோடி முகங்களைக் கொண்ட நிர்வாண யட்சி, தன் சதைகளை வெட்டி பசியாற்றுகிறாள். கரிய சிறகுகளை கொண்ட அந்த செந்நிற மனித உடலும், பச்சை உடல் பெண்ணும் பறக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

சிறகுகள் நிரம்பி ஓவிய வெளி, பார்வையாளருக்கு ஆசுவாசத்தையும் நம்பிக்கையையும் ஒருசேர அள்ளிக் கொடுக்கின்றன. அந்த நம்பிக்கையைத் தேடியே நடராஜின் ஓவியங்களைத் திரும்பச் சென்று பார்க்கிறேன். மனிதர்களின் வன்முறையும், வாழ்வின் அபத்தமும் ஒருசேர கேள்விகளாக நிரம்பிய மானிட மூளைக்குப் பதில்களைக் கொடுக்கவில்லை என்றாலும் ஒரு புதிய வெளி அங்கு கேள்வி கேட்கும் நம்பிக்கையைக் கொடுக்கின்றன.

வாழ்வின் அனுபவங்களிலிருந்தும், அவற்றைச் சுற்றி புனையப்பட்ட வரலாற்றுப் புனைவுகளிலிருந்தும் நடராஜின் ஓவியங்கள் உருக்கொள்கின்றன. நீலமும் பச்சையும் நிறைந்த அவரது கித்தான்களில் வியாபித்திருக்கும் அனைத்து மனிதர்களும் பறக்கவே எத்தனிக்கிறார்கள். ஆதி முதல் சேகரித்த சிறகுகள் அனைத்தையும் தன் ஓவிய மாந்தர்களுக்கு பரிசளிக்கும் ஓவியர் அவற்றைக் கொண்டு அவர்களைத் தன்னுடன் பறக்க அழைக்கிறார்.

நிகழ்காலத்தின் தீ நாக்குகளில் இருந்து ஓவியங்களில் வாழும் அனைவரையும் அதே ஓவியங்களின் வழி சிறை மீட்கும் நடராஜ், நீல சாயத்தையும் கானகத்தின் பச்சை வர்ணத்தையும் தூரிகையில் கொண்டு அந்த உயிர்களை ‘யதார்த்த’ உலகிலிருந்து கடத்தி, அடக்குமுறைகளையும் அபத்தமான வன்முறைகளையும் கேள்விகளால் உடைத்தெறியப்பட்ட புதிய பிரபஞ்ச வெளி ஒன்றில் பத்திரப்படுத்துகிறார்.

இவை இல்லாமல் நம்மால் வாழமுடியாது என்றும், இவற்றுக்குள் நம்மால் வாழமுடியாது என்று நாம் அறிந்திருக்கும் முகமூடிகளில் இருந்து அன்பு நம்மை விடுவிக்கிறது - ஜேம்ஸ் பால்வின்.

நீலம்

Comments

Popular posts from this blog

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்: வெறுப்பை ஜனநாயகப்படுத்தும் அழகியல்!

0. பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்: “நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது” 1. மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போ...

In the most health-obsessed society ever, all is not well*: On Trauma

1 Philosopher Byung-Chul Han's essay Neuronal Power begins with the following lines: " Every age has its signature afflictions. Thus, a bacterial age existed; at the latest, it ended with the discovery of antibiotics. Despite widespread fear of an influenza epidemic, we are not living in a viral age. Thanks to immunological technology, we have already left it behind. From a pathological standpoint, the incipient twenty-first century is determined neither by bacteria nor by viruses, but by neurons ". Modern integrative body mind science defies Byung-Chul Han’s statement, that it is reductive to define human suffering solely in terms of ailments. However, we are living in an era, where production relations dictate nearly everything about human existence, in this specific context Byung-Chul Han’s statement—that the majority of human society is afflicted by mental or neuronal issues—serves as a foundational lens to understand contemporary humans and their struggles. In today’...

படுகொலைக்கு முன்னான சில மணி நேரங்கள்

    ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன் , எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை . அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட   நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன் , ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல் . கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை . உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை , இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை . அதே நேரம் ஒளியற்று , ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது , சூடான மழைத் துளியை போல் . மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது ... அம்மாவின் முலை காம்புகள் , விபத்தொன்றில் மரணித்த நன்பன் , தேர் திருவிழா , அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள் , அவளின் முதல் முத்தம் , இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம் , கல்லூரியின் விடுதி அறை , முதல் காமத்தின் வெள்ளை இரவு ... இப்படி சொல்லி ம...