Skip to main content

போலி செய்திகளின் காலம் அல்லது ஒரே இரவில் கோட்பாட்டு இயற்பியலாளராக மாறுவது எப்படி?

நாம் போலிச் செய்திகளின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்மைச்சுற்றிப் பல்லாயிரம் கோடிப் போலிச் செய்திகளும், சில ஆயிரம் உண்மைகளும் உண்மை என்று சொல்லப்படுபவையும், காற்றில் உலவிக்கொண்டிருக்கின்றன. 21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பங்கள் போலிகள் நிறைந்த புதிய உலகினை உருவாக்கி இருக்கின்றன என்று அபத்தமாக எழுத முடியாது. ஆனால் 21ஆம் நூற்றாண்டின் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களும் சமூக ஊடகங்களும் அவற்றை உருவாக்கிய பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தகவல் வேட்கையும் மனித வரலாற்றின் போக்கை நிர்ணயிக்கும் வலிமை கொண்டதாக மாறியிருக்கும் போலிச் செய்திகளின் உருவாக்கத்தையும் பரவலையும் எளிமையாக்கியிருக்கின்றன.

மானிட அறிவின் எல்லைகளை உடைத்து அறிவையும், தகவல் பரிமாற்றத்தையும் கட்டற்ற சனநாயகமாக மாற்றியிருக்கக் கூடிய ஆற்றலைக் கொண்ட மெய் நிகர் உலகம், வரலாற்றின் துயராக, செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களின் தகவல் வேட்கையின் பொருட்டு அறிவுக்கு எதிரான போலிகளின் திசையில் பயணிக்கின்றது. அப்படி பல்கிப் பெருக்கும் போலி தகவல்களின் பலிகடாக்களாக நாம் ஒவ்வொரு நாளும் மாறுகின்றோம்.

தகவல் தொழில்நுட்ப உலகம் உருவாகுவதற்கு முன்பும் போலித் தகவல்கள், வதந்திகள், கட்டுக்கதைகள் உலவிக்கொண்டுதான் இருந்தன. ஆனால் அவை ஒரு மனிதரை விட்டு வேறு ஒரு மனிதருக்கு அல்லது ஒரு திசையை விட்டு வேறு ஒரு திசைக்குச் சென்று சேர்வதற்கான கால அளவு அதிகமானதாக இருந்தது. சமூக ஊடக உலகம் காலத்தின் எல்லையை நொடிகளுக்குள் சுருக்கிவிட்டது. அது மட்டுமில்லாது போலிச் செய்திகளுக்கும் உண்மைத் தன்மையைக் கொடுக்கக் கூடியதாக சமூக ஊடக உலகம் இருக்கின்றது. ஒரு நாளில் இணைய உலகில் பார்க்கும், கேட்கும், படிக்கும் தகவல்களில் சரிபாதி போலிச் செய்திகளாகவே இருக்கின்றன கற்றவர் கற்காதவர் என்று அனைவரையும் சம அளவிலே இந்தப் போலிச் செய்திகள் சென்று சேர்கின்றன, அதே அளவில் அந்தப் போலிச் செய்திகளை நம்பவும் செய்கிறோம். சமூக ஊடகங்களின் போலித் தகவல்கள், காட்சி, அச்சு, பிற வெகுஜன ஊடக வெளிகள் மீதும் பெரும் தாக்கத்தைச் செலுத்துகின்றன.

இன்றைய வெகுஜன ஊடக வெளிகள் சமூக ஊடகங்களின் அசைவியக்கத்தை சார்ந்தே இயங்கிக்கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கோவிட்-19தால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சார்ந்த சார்லஸ் ஆயுர்வேத சிகிச்சையில்தான் நோயிலிருந்து குணமானார் எனும் செய்தி டிவிட்டர் வழியாகப் பதிவிட்டார் பாரம்பரிய மருத்துவங்களுக்கான இந்திய அமைச்சர். இந்த டிவிட்டை அனேக இந்தியச் செய்தி ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. ஆனால் அந்தச் செய்தி தவறானது என்ற மறுப்பை இங்கிலாந்து அரச குடும்ப மருத்துவர்கள் வெளியிட்டனர்.

பெரும்பாலான போலிச் செய்திகள், அதற்கான உண்மைத் தன்மையினை பெறுவதற்கு ஏதுவாக, ஆக்ஸ்போர்ட், ஹாவர்ட் போன்ற பெரும் கல்வி புலங்களின் இலச்சினைகளையோ CERN, NASA போன்ற ஆய்வு நிறுவனங்களின் பெயர்களையோ பயன்படுத்திக்கொள்கின்றன. போலிச் செய்திகள் உண்மை நிலையை அடைய இந்த இலச்சினைகளும் பெயர்களும் போதுமானவையாக இருக்கின்றன.

இவற்றினூடாகத் தான் கைதட்டினால் கோவிட்-19 அழிந்துவிடும், எதிரிகளை ஆளில்லா விமானங்கள் மூலம் மேகங்களுக்கு இடையில் மறைந்து ரேடார்களில் சிக்காமல் அழிக்க முடியும் அல்லது புதிய ரூபாய் தாள்களில் மின்காந்தச் சில்லுகள் இருக்க்கின்றன் போன்ற உண்மைக்குப் புறம்பான கட்டுக்கதைகளை அறிவியல் உண்மைகள் என்று பரப்ப முடிகிறது.

போலிச் செய்திகள் நிரம்பிய உலகம் என்பதைத் தாண்டி, இந்தச் செய்திகள் உண்மைத் தன்மையைப் பெறுவதற்கான மானிட உளவியல் முக்கியமானதாக இருக்கின்றது. மனிதர்கள் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு எழுத்து வடிவத்தை உருவாக்கியது முதல் தங்களின் அனேக நம்பிக்கைகளை எழுத்தை முன்வைத்து ஆரம்பித்த, ‘நம்பிக்கையின் உளவியல்’ தான் இன்றைய சமூக ஊடகங்கள் மீதான நம் நம்பிக்கையின் ஆதாரமாக இருக்கின்றது. எழுத்தில் அல்லது காட்சி மொழியில் பேசப்பட்ட அனைத்தும் உண்மை என்று நம்பும் மனித மனம் சமூக ஊடகத்தில் பகிரப்படும் அனைத்துக் காட்சிகளையும், தகவல்களையும் நிஜம் என்று நம்புகின்றது. எழுத்தின் மீதான நம்பிக்கையே, இணைய வெளி மீதான நம்பிக்கையின் ஆதாரமாக இருக்கின்றது - இதிலிருந்தே போலிச் செய்திகளின் உண்மைத் தன்மை வலுப்பெறுகின்றதை உணர முடியும்.

போலிச் செய்திகள் எனும் உலகத்தின் இயக்கத்துக்குள் செல்லும் முன், அச்செய்திகள் ஆதாரமாக முன்வைக்கும் கூறுகளைப் பேசுவது போலிச் செய்திகள் குறித்து புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.. சமூக ஊடகங்களில் உலவும் ஐம்பது சதவீத போலிச் செய்திகள் ஆய்வுக்கு உட்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளத் க்க ஆதாரங்களைக் கொண்டு முன் வைக்கப்படுகின்றன. ஏன் இந்த ஆதாரங்கள் தேவைப்படுகின்றன? எப்படி இந்தச் சான்றுகள் கட்டுக்கதைகளுக்கு உண்மையின் நிறத்தைக் கொடுக்கின்றன?

இதை புரிந்துகொள்ளச் சிக்கலான தர்க்கங்கள் தேவையில்லை.. பதில் மிகவும் வெளிப்படையானது. நாம் அறிவியலின் ஆதிக்கம் நிரம்பிய காலத்தில் வாழ்கிறோம். பிறந்தது முதல் எண்களையும் சான்றுகளையும் கொண்ட எதையும் நம்புவதற்குப் பயிற்றுவிக்கப் பட்டிருக்கின்றோம். அறிவியல், கல்வி நிலையங்கள் மூலம் பெறும் அறிவும் நூறு சதம் சரியானது அல்லது நிலையானது இல்லை என்றாலும், மனித இனம் கண்டுபிடித்த துலக்கமான சிந்தனை முறை, அறிவியல். எடுத்துக்காட்டாக, பூமி தட்டையானது என்று சொன்னால் இன்றைய உலகில் இருக்கும் அனேக மக்கள் - குறைந்த எண்ணிக்கையிலான பூமி தட்டையானது என்றருத்தியல் ஆதரவாளர்களைத் தவிர்த்து - என்னை மனநலம் குன்றியவன் என்றே சொல்லக்கூடும். வானியல் குறித்து ஒரு சதம் அறிவு இல்லாத எவருக்கும்கூட பூமி தட்டையானது அல்ல, கோள வடிவமானது என்பார்கள். கடவுளர்கள் குறித்து வெளியாகும் மதம் சார்ந்த திரைப்படங்களில்கூட பூமியை உருண்டை அல்லது கோள வடிவத்திலே காண்பிக்க முடியும் என்பதே நாம் அறிவியலின் உலகில் வாழ்கிறோம் என்பதின் சான்று.

யாரேனும் ஒருவர் நான் கடவுளைத் தரிசித்தேன் என்று கூறினால் இந்த நூற்றாண்டில் பெரும்பாலோர் ஆதாரம் கேட்க கூடும் அல்லது குறைந்தபட்ச சந்தேகத்தையாவது எழுப்பக் கூடும். தகவல்களே மனித பரிணாம வளர்ச்சியின் ஆதாரமாக இருக்கும் அடிப்படையில் பார்த்தால் இந்த நூற்றாண்டைக் காட்டிலும் வேறு எந்த காலத்திலும் இவ்வுளவு இணக்கமாக அறிவியல் சார்ந்து மனிதர்கள் வாழவில்லை என்று சொல்லமுடியும்.

போலிச் செய்திகளைப் பரப்புவதற்கும், கட்டுக்கதைகளைச் சொல்வதற்கும் கூட அறிவியல் தேவை. பல மத நிறுவனங்களின் சாமியார்கள், வெகுஜன அறிவியல் புத்தகங்களின் சாராம்சங்களைப் படித்துவிட்டு, துகள் இயற்பியல் குறித்தும், உயர் ஆற்றல் இயற்பியல் குறித்தும் மதக் கோட்பாடுகளுடன் இணைத்துப் பேசுகின்றனர், அத்தகைய சாமியார்களையே தெய்வங்களாக நாம் பூசிக்கின்றோம்.

போலிச் செய்திகள் குறித்துப் பேசுவது என்பது மனித மூதாதைகளின் அறிவை நிராகரிப்பது அல்ல. போலி ச்செய்திகளில் முடங்காமல் மூதாதையர்களின் அறிவைக் கொண்டு புதிய எதார்த்தத்துக்குத் தகவமைத்துக் கொள்வதே பரிணாமமாக இருக்க முடியும். ஆனால் நம்மிடையே மெய் நிகர் எதார்த்தத்தில் அதிகம் நிகழ்வது எல்லாம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை கதைகளே.

குறிப்பாக, ஜான் டால்டன் பதினெட்டாம் நூற்றாண்டில் அணுவைக் கண்டுபிடிப்பதற்குப் பல நூறு வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் சங்க காலம் முதலே அணுத் துகள் குறித்து அறிந்த கதை குறித்துப் பெருமை பேசுவதைக் கேட்க முடியும். இந்தச் செய்தியில் போலி செய்யப்படும் இடம் தமிழர்கள் மட்டுமே சங்க காலத்தில் அணுத் துகள் குறித்து அறிந்துவைத்திருந்தார்கள் எனும் கருத்து. நமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்களின்படி அணுக்கள் குறித்து முதலில் பேசிய கிரேக்கத்தைச் சார்ந்த டெமாகிரடஸ், 370 BCEலேயே அணுக்கள் குறித்து உரையாடல்களைத் தொடங்கினார்.

இருவேறு நிலப்பகுதியில் வாழ்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட மனிதக் குழுக்களுக்கு இடையேயான உறவு, அறிவு ஆற்றலைப் பகிர்ந்துகொள்ளக் கூடியதாக இருந்திருக்க முடியும். எனவே அணுக்கள் குறித்து கிரேக்கர்கள் தான் முதலில் பேசினார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதே அறிவியல் பூர்வ வரலாற்றுப் புரிதல். அறிவியலியக்கத்தின் தொடக்கம் ஏன் fertile crescentயை  சார்ந்ததாக இருந்தது, மற்ற நிலங்களில் அறிவியல் வளர வெகுகாலம் ஆனது போன்ற உரையாடல்கள் தனியானவை .

வரலாற்றுத் தரவுகளை நிராகரிப்பதும் மறைப்பதும் சில தனி மனிதர்கள் அல்லது சமூக அரசியல் கருத்தாக்கங்களுக்கு ஆதரவானதாக இருக்கக்கூடும். இக் கற்பிதங்கள், மனிதர்களுக்கு தங்கள் இருப்பின் மீது பழைய பெருமிதங்களை நிறுவுவதற்கு மட்டுமே உதவியாக இருக்கும். இதே வடிவத்தை பல்வேறு வரலாற்றுப் பெருமிதங்களைப் புரிந்துக்கொள்ளப் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, இந்திய நிலப்பரப்பில், மதம் சார்ந்து உலவும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை குறித்த, மரபணு மாற்றம் குறித்த, ஏவுகணை குறித்த புராண அறிவியல் கட்டுக்கதைகளை புரிந்துகொள்ளலாம்.

உலக அளவில் இருக்கும் பல கட்டுக்கதைக் கருத்தாக்கங்கள் மீது இதே தர்க்கத்தை வைத்து அணுகினால் அதன் போலித் தன்மைகள் எளிதில் புலப்படும். எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் முன்னாள் அதிபர் டிரம்ப் பயன்படுத்திய தேர்தல் வாசகமான “make america great again”. இங்கு எந்த பழைய உயர்ந்த அமெரிக்காவை மீட்டெடுக்க டிரம்ப் விரும்பினார் என்பதே. கிருமிகளையும், துவக்குகளையும் கொண்டு பூர்வ குடிகளைக் கொன்று அழித்து உருவான ஐரோப்பிய அமெரிக்கவா? அல்லது லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்களை அடிமைகளாகக் கொண்டு அமெரிக்காவையா? அல்லது இருபது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் தடம் பதிக்காத அமெரிக்காவையா? பதில் மிக எளிது: நிறவெறி நிரம்பிய, வெள்ளையின ஆதிக்கம் மிக்க ஒரு போலி அமெரிக்காவைத்தான் டிரம்ப் நிறுவ விரும்பினார். அதற்காகவே “make america great again” எனும் போலிப்பதத்தை கொண்டு பிரச்சாரம் செய்தார். அந்த போலியை உண்மையென நம்ப வைக்கவே சமூக ஊடகங்கள் முழுவதும் கோடிக்கணக்கான போலிச் செய்திகளை உற்பத்தி செய்தார்கள். போலிச் செய்திகள், ஒரு தனி மனிதரின் அரசியல்/சமூக/பொருளாதார லாபத்துக்காக வெறுப்புகளை உமிழ்ந்தன. இவ்வகை வெறுப்புப் பிரச்சாரங்களைக் கொண்ட போலிச் செய்திகளின் வடிவங்கள் இழந்துவிட்ட அல்லது புராதனப் பெருமிதங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். அந்தப் பெருமிதங்கள் நிகழ்காலத்தில் இழந்துவிட்ட பெருமைகளையும் அடையாளங்களையும் மேன்மையையும் இடித்துரைக்க வேண்டும். பல நேரங்களில் இனம், நிறம், மொழி, மதம் என்று சமூக வடிவம் சார்ந்த பொது எதிரியைக் கொண்டிருப்பது இப்போலிச் செய்திகளை மேலும் வலிமையானதாக்கும். பொது குறித்தானா அச்சம் போலிச் செய்திகளை மனிதர்கள் இலகுவாக நம்பவைக்கும்.


சில போலிச் செய்தி வகைமைகளுடன் அறிவியல் செய்திகளை ஊடுருவச் செய்வதன் மூலம், அக்கட்டுக்கதைகளை நிஜமானதாகவும் மாற்றிட முடியும். குறிப்பாக, மத நிறுவனங்களின் சடங்குகளுக்கான விளக்கங்களைக் கொடுக்க வேண்டிய இடங்களில் அறிவியல் பதங்களைப் பயன்படுத்துவது மதங்கள் சார்ந்த கட்டுக்கதைகளை நம்பவைக்க மிக சிறந்த உத்தி. மெழுகுவர்த்தியை ஏற்றுவதில் கிடைக்கும் நன்மைகள், முழந்தாளிட்டு வணங்குவதால் உடல் ஆரோக்கியம், மாட்டுக் கழிவில் மருத்துவ நலன்கள், மந்திரங்களில் காஸ்மிக் கதிர் வீச்சுகள் என்று எதை வேண்டுமென்றாலும் உண்மை என்று நம்பவைக்க முடியும்.

எடுத்துக்காட்டாக, நாசா பதிவு செய்தததாகக் கூறப்படும் பேரண்ட ஒலி; 'ஓம்' எனும் ஒலி பொருந்திய இருண்ட காணொளி ஒன்று இணையத்தில் உலாவுவதை பார்க்க முடியும். அது. அது உண்மையா என்று கேட்பதற்கு முன் அண்டம் என்றால் எது ? எனும் கேள்வியைக் கேட்கும்போது, அதில் பல நூற்றாண்டுகளுக்கு முன்புமனிதர்கள் பூமியைத் தவிர்த்துவிட்டு வானத்தைப் பார்த்து ’வெளி’ என்று சொன்ன கதையைத்தான் அந்தக் காணொளியில் பார்ப்போம்.  ஆனால் இந்தப் பதிவுக்கு நாசா எனும் பதம் உண்மைத் தன்மையைப் புகுத்திவிடுகின்றது. எனவே அந்தக் காணொளியில் இருக்கும் செய்தியை உண்மை என்று நம்புகிறோம். இதைப்போல் அனைத்து மத நிறுவனங்களும் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள 21ஆம் நூற்றாண்டில் அறிவியலின் துணையை நாட வேண்டியிருக்கின்றது. அறிவியல் பதங்களுடன் கூடும் எந்தப் போலித் தகவலும் உண்மைத் தன்மையை அடைந்துவிடும்.

19ஆம், 20ஆம் நூற்றாண்டைப் போல் இன்று ஒரு சாமியாரோ இறை தூதரோ அறிவியலை விட்டுவிட்டுக் கடவுளைப் பேச முடியாது. அல்லது போலிச் செய்திகளையே கடவுளரின் செய்தி என்று சொன்னாலும் அதில் அறிவியல் பதங்கள் இருந்தால் மட்டுமே அவர்களைக் குருக்களாகப் பெரும்பான்மையானோர் ஏற்றுக் கொள்வார்கள். குருமார் பேசுவதில் இருக்கும் நகைமுரண், அவர்கள் நியூட்டன் கால அறிவியலையே இன்றும் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதுதான். அறிவியல், குறிப்பாக, அனேக சாமியார்கள் பேசும் போலி இயற்பியல் நியூட்டனைத் தாண்டி, ஐன்ஸ்டீனில் நிலைகொண்டு பெரு வெடிப்பையும் கடந்து மேலும் விரிவடைந்து கொண்டிருக்கின்றது.


போலித் தகவல்களின் இன்னொரு வடிவம் பொருளாதாரத்தையோ அல்லது அரசையோ அல்லது தேசத்தையோ சார்ந்ததாக இருக்கும். ஒரு தேசத்தின் பொருளாதாரம் குறித்துப் பேசும் போலிச் செய்திகளில் சர்வதேச அமைப்புகளின் குறிப்புகளோ அல்லது இலைச்சினைகளோ இருந்தாலே போதும்; அவை ஆதாரபூர்வத் தகவல்களாக மாறிவிடும். குறிப்பாக, வளர்ச்சி என்று பேசும் இடங்களில் உலக வங்கி, சர்வதேச நிதி ஆணையம், ஐநா சபை என்று இலைச்சினைகள் இருந்தால் அப்போலிச் செய்தி கூடுதல் பலத்தை பெற்றிவிடுகின்றது. தேசப் பெருமை அல்லது தலைவர் ஒருவர் பற்றிப் பெருமையாகப் பேசும்போது டைம்ஸ், போர்ப்ஸ் போன்ற சர்வதேச இதழ்களின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசுவதில் போலிச் செய்திகளின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படுகின்றது.


இந்த கட்டுக் கதைகள் அல்லது போலிச் செய்திகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வடிவம் என்று ஒன்று இல்லை. ஆனால் உறுதியான செயல்திட்டம் கொண்டவை. அந்தச் செயல்திட்டம் யாரோ ஒரு தனி நபர் நலன் சார்ந்ததாக அல்லது ஒரு கருத்தியல் நலன் சார்ந்ததாக அல்லது ஒரு குறிப்பிட்ட அமைப்பு நலன் சார்ந்ததாக இருக்கின்றது. எனவே பல்வேறு நேரங்களில் அனேக போலிச் செய்திகளுக்கு மெய் நிகர் எல்லைகளும் தானாக உருவாகிவிடுகின்றன.

“Make america great again” எனும் பதம் பிரேசிலில் தேவையற்றதாக்கி விடுகின்றது. எனவே அதைச் சார்ந்த போலிச் செய்திகளும் பிரேசிலுக்கு தேவையற்றதாக்கி விடுகின்றன. எனவே “Make america great again” எனும் பிரச்சாரம் சார்ந்த போலித் தகவல்கள் ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் மெய் நிகர் எல்லைக்குள்ளே உலவும் நிலையில் தங்களைத் தகவமைத்துக்கொள்கின்றன, அதற்கான வேலைகளை செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் செவ்வனே செய்கின்றன. 

பிரேசில் “Make america great again” என்ற பிரச்சாரத்தை ஒட்டி தங்களுக்குத் தேவையான புதிய ஒரு பதத்தையும், அதைச் சார்ந்த போலிச் செய்திகளையும் உருவாக்கி தங்களின் எல்லைக்குள் உலாவ விடலாம் அதன் மூலம் மனிதர்களின் சிந்தனையில் வெறுப்பு எண்ணங்களை வளர்க்கலாம் அல்லது தேர்தலில் வெற்றி பெறலாம். பிரேசிலில், அப்படியான வெறுப்பு பிரச்சாரத்தைக் கொண்டே பொலான்சாரோ தேர்தலல் வெற்றி பெற்றார். ஒரு போலிச் செய்தியின் மெய் நிகர் எல்லைகள் அத்தகவலின் கருத்தைப் பொறுத்ததாக இருக்கின்றது. மதம்,கடவுள் சார்ந்த கருத்துக்கள், அரசியல் -சமூக - தேச - எல்லைகளைக் கடந்து அனைத்து நிலத்துக்கும் சென்று சேரக்கூடும். அதன்மூலம் போலிச் செய்திகள் தொடர்ந்து உயிர்பெறுகின்றன. 

கோவிட்-19 பெருந்தொற்று, பல லட்சம் திடீர் மருத்துவ அறிஞர்களையும்தொற்று ஆய்வாளர்களையும் புவிசார் அரசியல் வல்லுநர்களையும் உயர் ஆற்றல் இயற்பியல் மேதைகளையும் பொருளாதார மேதைகளையும் வரலாற்று ஆய்வாளர்களையும் காளான்கள்போல் ஒரே இரவில் தோற்றுவித்தது. அவர்கள் அனைவருமே கோவிட்-19 பெருந்தொற்றை ஒரு பதிவில், ஒரு காணொளியில் அல்லது பாட்டி மருத்துவம் மூலம் அழித்துவிடும் வல்லமை பொருந்தியவர்களாக இருந்தார்கள். இன்னும் சில உயர் ஆற்றல் இயற்பியல் வல்லுநர்கள் கைதட்டி அதீத ஒலி எழுப்புவதன் மூலம் அண்டத்தின் எல்லையில் மறைந்திருக்ருக்கும் சக்திமிக்க காஸ்மிக் கதிர்களை ஒன்று திரட்டி பெருந்தொற்றுக் கிருமியைக் கொன்றார்கள். சிலர் கோவிட்-19 குறித்த புவி அரசியலைப் பேசினார்கள், பொருளாதார துயரங்களை, மேன்மைகளைப் பேசினார்கள்.

சில கோவிட் காலப் போலிச் செய்திகளில் அற்புதமான கற்பனைத் திறன் பொருந்தியிருந்தன, ஆனால் பெரும்பாலானவை ஹாலிவுட் பாணி சதிக் கோட்பாடுகளால் நிரம்பிச் சலிப்பூட்டின.குறிப்பாக, பாட்டி வைத்தியம் குறித்தான செய்திகள் பரவலாகப் பகிரப்பட்டன. பூண்டு தின்பது, எலுமிச்சைச் சாறு அருந்துவது, இஞ்சியும் மஞ்சளும் கலந்த கசாயம் அருந்துவது என்று அது ஒரு பெரிய பட்டியலாக நீண்டது . இவற்றிலிருக்கும் நோய் எதிர்ப்புக் குணம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை ஆனால் இவைதான் அனைத்து நோய்களுக்குமான ஒற்றைத் தீர்வு என்று சொல்வதுதான் அபத்தத்தின் உச்சம்.  உண்மையில் இவை அனைத்தும் கிருமிகள் உண்டாக்கும்  நோய்களை அழிக்க வல்லது எனில், இந்தியாவில் பெரியம்மையினாலும்இளம்பிள்ளை வாதத்தினாலும் பல லட்சம் பாதிப்புகள் உண்டாகியிருக்காது. 

பாரம்பரிய வைத்திய முறைகளைக் குறை சொல்வதோ இந்திய உணவு முறையில் இருக்கும் மருத்துவ குணங்களைச் சந்தேகிப்பதோ பிரதியின் நோக்கம் அல்ல. ஆனால், இவ்வாறான போலிச் செய்திகளை உறுதியான உண்மைகள் அல்லது தீர்வுகள் என்று முன்வைப்பதும்/நம்புவதும், அனைத்து சமூக இயக்கத்தையும் சதி கோட்பாடுகளாக கடந்துவிடுவதும் இணையதள தலைமுறையின் அடிப்படை பண்பாக இருப்பதின் உளவியல்  உருவாக்கும் பாரதூரமான விளைவுகளைப் பேசுவது தேவையானதாக இருக்கின்றது. இங்கு பெரும் மருந்து நிறுவனங்களின் லாப வேட்கையினூடாக உருவாகும் மருத்துவ அறிவியலின் எதிர்மறை விளைவுகளையும் குறிப்பிட்டே போலிச் செய்திகள் குறித்து உரையாட வேண்டி இருக்கின்றது.

கோவிட்-19 தொற்றின் பரவலுடன் எழுந்த அழுத்தமான தடுப்பூசிகளுக்கு எதிரான கருத்துகள் முக்கியத்துவமும், ஆபத்து நிறைந்தவையாகவும் பார்க்க வேண்டி இருக்கின்றது. குறிப்பாகத் தடுப்பூசிகளுக்கு எதிரான கருத்துகளைத் தாங்கிய பல போலிச் செய்திகள் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் அல்லது அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஏதோ ஒன்றின் இலைச்சினைகளைக் கொண்டிருந்ததே அபத்தமானதாக இருந்தது. இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட ஒருவனாக என்னால் இந்த தருணத்தில் எட்வர்ட் ஜெர்னரும், லூயி பாஸ்டரும் அல்லது மனித இனமே தடுப்பூசி எனும் ஒன்றைக் கண்டுபிடிக்காமலிருந்திருந்தால் என்னவாக இருக்கும் எனும் சிந்தனையே எழுகின்றது. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் நமக்கு தேவைப்படுவது எல்லாம் இணைய சேவையும், அலைபேசியுமே. இந்த இரண்டும் நம்மைப் போலிச் செய்திகளை உருவாக்கவும் அதை பெருமளவில் நுகரவும் போதுமான சாதனங்களாக இருக்கின்றன. 

குறிப்பாக deep fake போன்ற தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் நாம் பார்க்கும், கேட்கும், வாசிக்கும் உள்ளடக்கம் எது உண்மை அல்லது போலி அல்லது உண்மை போன்றது என்பதை வேறுபடுத்திப் பார்க்க மனிதர்களால் முடியாது என்பதே எதார்த்தம். உறுதியான உண்மை என்று ஏதும் இல்லை என்றாலும், அறிவியல் பூர்வமான உண்மைகள் என்று சில இருக்கவே செய்கின்றன. அவ்வுண்மைகளும் தேவையான பொழுது தங்களை புதுப்பித்துக்கொள்ள தயாராகவே இருக்கின்றன.

இங்கு உண்மை எனும் இடத்தில் அறிவியலை உறுதியான உண்மை என்று வாதிட விரும்பவில்லை ஆனால் இயற்கையினை அல்லது மானிட இருப்பை புரிந்துகொள்ள அறிவியலைக் காட்டிலும் வலிமையான வழி மனிதர்களிடத்தில் இல்லை. எனவே அறிவியலைப் புனிதப்படுத்தி அதன் எதிரில் இயங்கும் கருத்தாக்கங்களை சிறுமைப்படுத்துவது இப்பிரதியின் நோக்கம் அல்ல. அறிவியல் ஏன் முதலாளித்துவத்துடன் ஒன்றிணைந்து இயங்குகிறது என்பதை அறிவியலின் வரலாற்று மெய்யியல் மூலம் புரிந்துகொள்ளலாம்.

போலி தகவல்களின் காலத்தில் கிருமிக்கும் கூட இன, நிற, மத அடையாளங்கள் சூட்டப்பட்டன. தோல்வி அடைந்த வலதுசாரி அதிகாரங்கள் கோவிட்-19தை சீன வைரஸ் என்றன. இசுலாமியர்கள் மூலமே கோவிட்-19 பரவுகின்றது என்று தகவல் இந்திய நிலப்பரப்பில் பரப்பப்பட்டது. அதற்கு ஆதரவான போலிப் பதிவுகளும்புகைப்படங்களும் காணொளிகளும் பரவின. உலகை கைப்பற்றச் சீனா ஆய்வகத்தில் உருவாக்கிய கிருமி என்று பரப்பிய youtube காணொளிகளை இப்போதும் தேடிப் பார்க்கலாம். அல்லது இலுமினாட்டி முதலாளிகளின் கொள்ளை லாப சதி என்றும், சாத்தானின் வருகை என்றும், கலிகாலத்தின் முடிவு என்றும், தேவ தூதனின் வருகையின் அறிவிப்பு என்றும், இன்னும் பல வகைச் செய்திகள் பகிரப்பட்டன. இதன் உச்சமாக அமெரிக்க அதிபர் உலக சுகாதார நிறுவனத்தின் மீது சதி பழி சுமத்தினார். 

மனித இனம் கடந்த நூற்றாண்டில் சந்தித்த பெரும் தொற்றான ’ஸ்பானிஷ் ஃப்புளு’ ஸ்பெயினில் உருவாகவில்லை, அது பிரான்ஸ், இங்கிலாந்து வழியாக ஸ்பெயினுக்குள் வந்தது, ஆனால் இன்றுவரை அதன் பெயர் ஸ்பானிஷ் ஃப்புளுதான். இப்படியான வெறுப்புப் பிரச்சாரங்களும், போலிச் செய்திகளும் மக்களைப் பாதுகாக்காது. மாறாக, மக்கள் தோல்வியுற்ற அரசுகளை நோக்கிக் கேள்வி எழுப்பாமல் கோபத்தை வேறு ஒரு கற்பனையான பொது எதிரி மீது திசை திருப்பவே உதவுகின்றன. இந்தியாவில், பெருந்தொற்றின் ஆரம்ப நாட்களில் உருவான இசுலாமிய வெறுப்பின் அடிப்படை 90களில் ஆரம்பித்த உலகளாவிய இசுலாமிய வெறுப்பில் தங்கியிருக்கின்றது. இலங்கை தீவில் கோவிட்-19 தொற்றில் மரித்த இசுலாமியர்களை அடக்கம் செய்ய அனுமதிக்காமல் எரித்தது என்பதும் இந்த இசுலாமிய வெறுப்பின் தொடர்ச்சியே.. இசுலாமிய வெறுப்பு என்பது மக்களை எளிதில் திசைதிருப்பும் ஆகசிறந்த வழியாக அனேக அரசுகள் எண்ணிக்கொண்டிருக்கின்றன.

பெருந்தொற்றின் ஆரம்ப நாட்களில் சுவாரசியமான போலிச் செய்திகள் என்று இரண்டைச் சொல்லமுடியும். முதலாவது, ஜெயர் பொலன்சாரோ புகைப்படத்தைத் தாங்கிய ஒரு பதிவு, அதில் “நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டோம், இனி செய்ய எங்களிடம் ஏதும் இல்லை, கடவுளை மட்டுமே இப்போது நம்பி இருக்கிறோம்” எனும் வாசகமும் அதன் முடிவில் இத்தாலியப் பிரதமர் எனும் சொற்களையும் கொண்டு உலவியதுபரவியது. அதைப் பலரும் தங்களின் சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். அதன் அங்கதம் என்னவெனில், படத்திலிருந்த பிரேசில் அதிபர் ஜெயர் பொலன்சாரோ வோ இத்தாலியின் பிரதமரான ஜசெப்பி க்கவ்ண்ட்டேவோ அப்படி ஒரு செய்தியை எங்குமே சொல்லவில்லை என்பதுதான். உண்மையற்ற அந்தப் பதிவு எப்படி உண்மைத் தன்மையை அடைந்தது? பதில் அந்தக் கருத்தில் இருக்கும் கடவுள் எனும் சொல். மேலும், அதிருக்கும் வெள்ளையின முகமும் கழிவிரக்கம் மிகுந்த வார்த்தைகளும்தான். கடவுள் எனும் சொல்லாடல் அல்லது அறிவியல் சார்ந்த அல்லது புகழ் பெற்ற கல்வி நிலையங்கள் சார்ந்த அல்லது பலம் பெருமைகள் சார்ந்த சொல்லாடல்கள் மக்களை ஏமாற்ற போதுமானதாக இருக்கின்றது. அப்படி ஏமாறுவதற்கு ஏற்ற மெய் நிகர் மனமாக மனிதர்கள் மாறிச் சில காலம் ஆகின்றது என்றே நினைக்கிறேன்.

இரண்டாவது, முன்னாள் ஜிம்பாவே அதிபரான ராபர்ட் முகாபே சொன்னதாக உலாவிய தனிமை படுதிக்கொள்ளுதல்,ஊரடங்கு முடக்கம் பற்றிய மேற்கோள். ஆனால் முகாபே 2019ல் இறந்துவிட்டார், 2019இல் மரித்த மனிதர் 2020இல் கோவிட்-19 ஊரடங்கு குறித்துப் பேசுவதென்பது அற்புதம் தானே. போலியான மேற்கோள் எப்படி உண்மை என்று பகிரப்பட்டது? பதில் எப்போதும் போல் எளிமையானது, அதில் பொதிந்திருக்கும் நிகழ்காலத்துக்கான ஒப்புமை மற்றும் மனைவியுடன் வீட்டில் இருப்பது பற்றிய பல நூறு வருடங்கள் பழமையான ஆணாதிக்கக் கருத்தாக்கம்.

சமூக ஊடகங்களில் உலவும் பல கோடி போலிச் செய்திகளின் எடுத்துக்காட்டாக இவை இரண்டையும் சொல்ல முடியும். , மேலும், இந்தக் கட்டுரையில் பேசப்பட்ட வடிவங்களைத் தாண்டி , இன்னும் பல வடிவங்களிலும் வடிவங்களற்றும் பல கட்டுக்கதைகள் இணையத்தில் உலவுகின்றன .போலித் தகவல்கள் பற்றிய தரவுகள் பல செய்திகளாக, ஆய்வு கட்டுரைகளாக கிடைக்கப்பெறுகின்றன.

போலிச் செய்திகளோ, சதி வேலைகள் குறித்த கட்டுக்கதைகளோ மனிதர்களுக்கு புதிது அல்ல, ஆனால் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தகவல், லாபம் மீதான வேட்கை போலிச் செய்திகளின் அதீத உற்பத்தியில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. மனித இனம், இணையத்தில் படிக்கும்/கேட்கும்/பார்க்கும் செய்திகள்/தவல்கள் குறித்து எந்த கேள்வியினையும் எழுப்பாமல் அடுத்தடுத்த செய்திகளை/காணொளிகளை தேடி ஓடிக்கொண்டிருக்கிறது. மனிதர் எனும் விலங்கின் பலம் அதன் சிந்திக்கும் திறனிலே இருக்கின்றது. சிந்தனையும், கேள்வி கேட்கும் திறனே மனிதர்களை சில லட்சம் வருடங்களாக உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது. ஆனால் மெய்நிகர் உலகின் மனிதர்கள் keywords எனப்படும் சொல்லாடல்களால் தான் வழி நடத்தப்படுகின்றார்கள், மனிதர்களின் சிந்தனை அளவை, கேள்வி கேட்பதின் திறனை big data இயந்திரங்கள் நிர்ணயம் செய்கின்றன அல்லது எதை கேள்வி கேட்க வேண்டும் கேட்கக்கூடாது என்பதையும் அவைகளே முடிவு செய்கின்றன.

இப்போலிச் செய்திகள் அனைத்தையும் உண்மை என்று நம்பும் மனித இனம் அவற்றின் மூலம் சக மனிதர்கள் மீது வெறுப்பை உமிழ்வதைத் தவிர்த்து வேறு எந்தப் பரிணாமவளர்ச்சியையும் அடைந்துவிட முடியாது. சக மனிதர்கள் மீதான வெறுப்பு மனித இருப்பைச் சுருக்கி, சிறு கூட்டுக்குள் அடைத்துவிடக் கூடியது. பன்முகத்தன்மையும், பரந்துவிரிதலுமே பரிணாம வளர்ச்சியின் அடிப்படை. போலிச் செய்திகள் நிரம்பிய செயற்கை நுண்ணறிவு எதிர்காலம் பாரதூரமான விளைவுகளைக் கொண்டதாக இருக்கக்கூடும் என்பதை உளவியலாளர் கிரிசாலிஸ் ரைட், “மனிதர்கள் போலித் தகவல்களை நம்ப த் தொடங்கியதும் உண்மையான தகவல்கள் குறித்து அவர்கள் ஐயம் கொள்கின்றனர். எனவே அவர்கள் அறிவியல் உண்மைகளை மறுக்கின்றனர். தவறான தகவல்களை நம்பும் அவர்கள், அவற்றினூடாக சதி கோட்பாடுகளையும் அவை சார்ந்த போலிச் செய்திகளையும் நம்புகின்றனர். அவர்கள் நம்பும் போலிச் செய்தி அல்லது தவறான தகவல் அவர்களின் நடத்தையைப் பாதிக்கும்.”

நன்றி - கலைமுகம்




Comments

Popular posts from this blog

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்: வெறுப்பை ஜனநாயகப்படுத்தும் அழகியல்!

0. பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்: “நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது” 1. மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போ...

In the most health-obsessed society ever, all is not well*: On Trauma

1 Philosopher Byung-Chul Han's essay Neuronal Power begins with the following lines: " Every age has its signature afflictions. Thus, a bacterial age existed; at the latest, it ended with the discovery of antibiotics. Despite widespread fear of an influenza epidemic, we are not living in a viral age. Thanks to immunological technology, we have already left it behind. From a pathological standpoint, the incipient twenty-first century is determined neither by bacteria nor by viruses, but by neurons ". Modern integrative body mind science defies Byung-Chul Han’s statement, that it is reductive to define human suffering solely in terms of ailments. However, we are living in an era, where production relations dictate nearly everything about human existence, in this specific context Byung-Chul Han’s statement—that the majority of human society is afflicted by mental or neuronal issues—serves as a foundational lens to understand contemporary humans and their struggles. In today’...

படுகொலைக்கு முன்னான சில மணி நேரங்கள்

    ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன் , எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை . அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட   நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன் , ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல் . கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை . உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை , இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை . அதே நேரம் ஒளியற்று , ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது , சூடான மழைத் துளியை போல் . மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது ... அம்மாவின் முலை காம்புகள் , விபத்தொன்றில் மரணித்த நன்பன் , தேர் திருவிழா , அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள் , அவளின் முதல் முத்தம் , இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம் , கல்லூரியின் விடுதி அறை , முதல் காமத்தின் வெள்ளை இரவு ... இப்படி சொல்லி ம...