Skip to main content

இங்கு ஒரு விரல் புரட்சி செய்யப்படும்.

ரு விரல் புரட்சி குறித்து பேசும் போது, இரண்டாயிரம் வருடங்களாக வழக்கில் இருக்கும் ஒரு சொல் குறித்து பேசுவதும் தேவையானதாக இருக்கிறது. அதாவது பூமி தட்டையானது, அண்டத்தின் மையமாக பூமி இருக்கிறது, சூரியன் உட்பட மற்ற அனைத்து நட்சத்திரங்களும் கோள்களும் பூமியை சுற்றி வலம் வருகின்றன என்று உறுதியான நம்பிக்கையை கொண்டிருந்த காலத்தில் இருந்து பயன்பாட்டில் இருக்கும் ஒரு வார்த்தை, இன்றளவும் அதன் வீரியத்தை இழக்காமல் மக்களுக்கான அதிகாரத்தை மக்களின் கைகளில் கொண்டு சேர்க்கும் அனைத்து வலிமையையும் கொண்ட மாபெரும் அரசியல் வடிவம் என்று கொண்டாடப்படுகிறது. மக்களாட்சி அல்லது ஜனநாயகம் என்று சொல்லப்படும் அந்த வார்த்தையின் அபத்தம் என்னவெனில் அறிவியல், பூமி மைய வாதத்தை கடந்து, சூரிய மைய வாதம், குவாண்டம், கருந்துளை, பன்மை அண்டங்கள் எனும் கருத்தியல்கள் ஊடாக பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்றளவும் மக்களாட்சி முறையே அரசியல் அமைப்பின் உச்சம் அல்லது அதை தாண்டிய சிறந்த அரசியல் முறையை மனிதர்கள் இன்னும் கண்டடையவில்லை என்று நம்பிக் கொண்டிருக்கிறோம்.

இன்றுவரை அரசியலின் மேன்மைகள் மக்களாட்சி கொள்கைகளை அளவீடுகளாக கொண்டே அணுகப்படுகிறது. மக்களாட்சி அமைப்பின் அதி உயரிய கூறாக “வாக்கு” இருக்கிறது அல்லது வாக்கு மக்களாட்சியின் ஆன்மாவாக இருக்கிறது. அதன் அடியொட்டி சமூகத்தில் வாக்கு மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் புனித அடையாளங்கள் அலாதியானது. வாக்கு அனைத்தையும் மாற்றும் வல்லமை பொருந்திய ஆயுதமாக பார்க்கப்படுகிறது. ஜனநாயக அமைப்பு முறையில் நிகழும் அனைத்து சிக்கல்களுக்கும் ஒற்றை தீர்வாக வாக்கு கருதப்படுகின்றது.

இந்திய சமூகத்தில் வாக்கு குறித்த பெருமித நம்பிக்கைகளை ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் பிரச்சார விளம்பரங்களாக வெளியிடுகிறது. நூறு சதவீத வாக்குப்பதிவு என்று இல்லாத ஒன்றை கற்பனையாக கொண்டு உருவாக்கப்படும் இப்பிரசாரங்கள் நிகழப் போகும் அற்புதத்தின் வாயிற்கதவாக வாக்கு இருப்பதாக நமக்கு சொல்கின்றன. இப்படியான நம்பிக்கைகளே மனிதர்களை அமைப்புக்குள் இயங்க வைக்கும் வல்லமை பொருந்திய சமூக நுணுக்கங்களாக இருக்கின்றன. நாளை குறித்த அபரிதமான நம்பிக்கையே இன்றைய மனிதர்களை சமூக அமைப்பு முறைகள் மீது அதீத உறுதியுடன் இணங்கிப் போக வைக்கிறது.

அதன் வழியில் வாக்கு எனும் மேன்மை தாங்கிய ஆயுதம் பற்றிய புனித கதையாடல்கள் தமிழ் புனைவு வெளிகளை பெருமளவில் ஆக்கிரமித்திருக்கிறது. குறிப்பாக தமிழ் சினிமா திரையில் தேர்தல் அரசியலின் வீர தீர கதைகளை வருடத்துக்கு ஒரு முறையேனும் காணும் பெரும் வாய்ப்பை பெற்றவர்களாக தமிழ் சினிமா பார்வையாளர்கள் இருக்கிறார்கள். அத்தகைய சில படைப்புகள் அதிசய படைப்பு என்றும் மக்களை காக்க வந்த கலை படைப்பு என்றும் கொண்டாடப்படுவதும் உண்டு.

கடந்த இருபது வருடங்களில் வந்த ஓட்டரசியல் குறித்த அனேக தமிழ் திரைப்படங்களிலும் சமூகநீதி திட்டங்கள் குறித்த பார்வை மட்டும் ஒன்று போலவே இருக்கின்றது. மொழிக்குள் அபத்தமாக பயன்படுத்தப்படும் பொருளாதாரம் சார்ந்த வார்த்தைகளில் முதன்மையானது ‘இலவசம்’. இலவசம் எனும் வார்த்தை குறித்த ஒவ்வாமை முதலாளித்துவ சமூகத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கின்றது. ஆனால் அந்த ஒவ்வாமை சூழ்நிலைக்கு ஏற்ற பக்க சார்பானதாக இருக்கிறது. அப்பக்க சார்புகளை ஊடகங்களும், கலை வடிங்களும் உருவாக்கி வைத்திருக்கின்றன. லாபம் சார்ந்த பொருளாதாரம் கொடுக்கும் சலுகை அல்லது இலவசங்கள் குறித்து எந்த விமர்சனமும் இல்லாத சமூகத்திற்கு அரசு நிறுவனம் சமூகநீதி திட்டங்களாக கொடுக்கும் எதை ஒன்றை குறித்தும் ‘இலவசம்’ என்று இழிவாக அணுகும் இயல்பு முதலாளித்துவ அமைப்பு முறையின் அடிப்படை அறமாக இருக்கின்றது.

ஒவ்வொரு தனி மனிதரும் சமூகத்தில் தனித்து விடப்பட்டவர்கள், அவர்களின் இருப்பு, மேன்மை, இறப்பு என்று அனைத்தும் அவரவர் உழைப்பு/ முயற்சி சார்ந்தது என்ற இயற்கைக்கு மாறான அல்லது மனிதர்கள் சமூக விலங்கு எனும் அறிவியல் கூற்றுக்கு எதிரான ஆடம் ஸ்மித் காலத்து முதலாளித்துவ கருத்தாக்கத்தின் தொடர்ச்சியே சமூக நலன் சார்ந்த கட்டமைப்புகளை இலவசங்கள் என்று ஏளனம் செய்வது.

இலவச அறச்சீற்றத்தின் காரணமாகவே மண்டேலாக்களும், சுந்தர் ராமசாமிகளும் உயிர்ப்பிக்கிறனர் . அவர்களுக்கு இலவசங்கள் குறித்த ஒவ்வாமை பெருமளவில் இருக்கின்றது. குறிப்பாக தேர்தல் அரசியல் சார்ந்த இலவசங்கள் ஓட்டுக்கு கொடுக்கப்படும் கையூட்டு என்று அவர்கள் நம்புகிறார்கள். சமூகநீதி திட்டங்களில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் அல்லது அவை ஏன் பெரும்பான்மையான நேரங்களில் தேர்தல் அரசியல் சார்ந்து அறிவிக்கப்படுகிறன போன்ற தேவையான எதையும் பேசமல், தேர்தல்- இலவசம் - விலை போகும் மக்கள் எனும் பழமை மண்டிப்போன மூளையின் இன்னொரு வடிவமாகவே இவர்கள் இருக்கிறார்கள். இதன் காரணமாக தேர்தலில் வாக்கு செலுத்துவதன் மூலம் மட்டுமே அரசை கேள்வி கேட்பதற்கு தகுதி உடையவர்களாக மக்கள் கருதப்படுவர் எனும் அபத்த வாதத்தின் தமிழ் வடிவமாக வாக்குக்கு பணம் வாங்காதவர்களே அரசு செயல்பாடுகளை கேள்விக்கு உட்படுத்தும் தகுதியை உடையவர்களாக வாக்கு குறித்த சமூகத்தின் புனித அளவீடுகளின் படி தீர்ப்பளிக்கப் படுகிறது.

'இலவச' தொலைக்காட்சி குறித்த அபத்தமான வாதம் தமிழ் சமூகத்தில் வழமையான ஒன்று. ஏன் தேர்தல் சார்ந்தே இலவச தொலைக்காட்சி அறிவிப்பு வெளியாகியது எனும் கேள்வி, தேர்தல் அரசியல் சார்ந்த மற்றொரு உரையாடலுக்கு வழிவகை செய்யும். ஆனால் இலவச தொலைக்காட்சி என்பது வெறும் ஓட்டுக்கான ஆடம்பர கையூட்டு என்ற குறுகிய பார்வை சற்று சிக்கலானது என்று நினைக்கிறேன். மனிதர்களின் அடிப்படை உரிமைகளில் உணவுக்கு சம அளவில் - உடை உறைவிடம் போன்றவற்றை காட்டிலும், முக்கியமானது தகவல் பரிமாற்றம். இந்த பேரண்ட இயக்கத்தின் அடிப்படை விதி என்று entropyயை சொல்வோம் என்றால் அதே அளவில் அடிப்படைதகவல் பரிமாற்றம். அண்டத்தில் உள்ள பொருட்கள்/துகள்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாற்றங்களை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டே இருக்கிறன என்பது அறிவியல் உண்மை. சிக்கலான உடலியல் மற்றும் சமூக அமைப்புகளை கொண்ட மனித இயக்கத்துக்கும் பரினமதுக்கும் அடிப்படையாக தகவல்களே உள்ளன. Quantum தொழில்நுட்பங்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம் என்று அனைத்தும் தகவல் பரிமாற்றத்தின் அடிப்படை தேவைகளாக இருக்கின்றன. ஆனால், காசு இருக்கும் மனிதர்கள் மட்டுமே இந்த பொருட்களை பயன்படுத்த தகுதியானவர்கள் எனவே அவர்கள் மட்டுமே தகவல்களை அறிய உரிமை உடையவர்கள் என்று கருத்தாக்கம் நிலப்பிரபுத்துவ கால சமூக கட்டமைப்புகளின் நீட்சியாகவே பார்க்க வேண்டி இருக்கிறது.

எப்போதும் ஆண்களாகவே உயிர்த்தெழும் மண்டேலாக்கள், கேஸ் அடுப்பு, மிக்ஸி என்று சமையலறை பொருட்களை இலவசங்கள் என்று சாதாரணமாக சொல்லிவிடவும், நாப்கின் வழங்குவதை தங்களின் ஆண்மைக்கு ஏற்பட்ட இழுக்கு எனும் அளவில் ஆவேசமாக பேசவும் முடிகிறது. வளர்ச்சியின் மேன்மைகளை பேசும் இவர்கள் பார்த்து வியக்கும் பல மேற்கு நாடுகளில் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆணுறை, காப்பர்-டி போன்றவை பாலியியல் பாதுகாப்பின் பொருட்டு வழங்கப்படுகிறது என்பதை அறிந்தால் எப்படி அணுகுவார்கள் என்று தெரியவில்லை.

சமூகநீதி திட்டங்கள் மீதான வெறுப்பின் உச்சம் எப்போதும் தமிழ் சினிமாக்களில் இட ஒதுக்கீட்டில் வந்து சேரும்.இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களில் முதன்மையானது ‘தரம்’ எனும் தர்க்கமற்ற வாதம். இட ஒதுக்கீட்டில் சேர்வதாலே எவர் ஒருவரும் அவர் படிக்கும் கல்விப்புலத்தில் தேர்ச்சி அடைந்ததாக கருதப்படுவதில்லை மாறாக அவர் படிக்கும் காலத்தில் வைக்கப்படும் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றால் தான் தேர்ச்சி அடைந்தவர் என்று கருதப்படுகிறார். 

எடுத்துக்காட்டாக மருத்துவ இடஒதுக்கீட்டில் கல்லூரியில் சேரும் ஒருவர் தனது ஆறு வருட கல்லூரி படிப்பில் இருக்கும் அணைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர் மருத்துவர் என்று பட்டம் அளிப்படுவார். அதற்கு பின்னே அவர் மருத்துவராக பணி செய்ய முடியும். இங்கு தரம் குறித்து கேள்வி இருப்பின் அது கற்பிக்கும் மற்றும் தேர்ச்சி முறையில் தான் இருக்க முடியுமே தவிர இடஒதுக்கீடு மீது அல்ல. அப்படியான கேள்வியை முன்வைத்தால் அது மொத்தமான இந்திய கல்வி முறை மீதான கேள்வியாகவே இருக்க முடியும்.

நான் இட ஒதுக்கீட்டில் இளங்கலை சமூகவியல் படித்தேன். என் ஊரிலிருந்து கோயம்புத்தூர் சென்று இளங்கலை படிப்பது என்பதே 2004ல் நான் செய்த தனிப்பட்ட சாதனையாக இருந்தது. எனக்கு தெரிந்த ஒரு தொழிலதிபர் தன் 22 ஆம் வயதில் நிறுவனத்தை தொடங்கினார், இன்று அந்த நிறுவனம் அதன் துறையில் இந்தியாவின் முதன்மையான நிறுவனமாக இருக்கிறது. அவர் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன் National university of singaporeல் இளங்கலை கல்வி கற்றார். 12ஆம் வகுப்பு முடித்த போது நான் அறிந்த மிகப்பெரிய கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை மருத்துவ கல்லூரி. National university of singapore குறித்து இருபத்தி எட்டாவது வயதில் தான் அறிந்துக்கொண்டேன். நான் கூறிய நண்பருக்கும் எனக்கும் university of singapore குறித்து அறிந்து கொள்வதில் இருக்கும் பதினைந்து வருட இடைவெளியை நிரப்புவதின் முயற்சியே சமூகநீதி ஒதுக்கீட்டின் பணி என்று நான் கருதுகிறேன். அந்த பதினைந்து வருடங்களே நண்பருக்கு கிட்டிய 2000 வருட சலுகை என்று நினைக்கிறேன். ஒருவேளை அந்த கல்லூரியில் சமூகவியல் படிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போயிருந்தால் சாதியம் ஊறிப்போன ஒரு நிலத்தை விட்டு வெளியே வராமல் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய ஒருவனாக வறட்டு பெருமைக்கு சாதிய கொடியை தூக்கி பிடித்துக்கொண்டு அலைந்திருக்க கூடும்.

உலகளாவிய சமூகநீதி திட்டங்கள் குறித்த பல்வேறு பொருளாதார ஆய்வுகள் பல நூறு வாசிக்க கிடைக்கின்றன. மண்டேலாக்களும், கிச்சாகக்ளும். சுந்தர் ராமசாமிகளும் எப்போதும் போல் இலவச அரசியல் பேசாமல் அவற்றை வாசிக்கலாம் என்றே நினைக்கிறன். குறிப்பாக தொலைக்காட்சி, மிக்ஸி அனைத்தும் இலவசம் என்று சொல்லி தீயில் கொளுத்தும் அமெரிக்க சுந்தர் ராமசாமிகள் அமெரிக்காவில் இருக்கும் Affirmative actions குறித்து படித்து பார்க்கலாம்.

சஞ்சிகை உரையாடல் ஒன்றில் தமிழ்நாட்டின் தனித்தன்மை குறித்து குறிப்பிடும் இந்திய உள்துறை அமைச்சர், இங்கு அரசியல் விழிப்புணர்வு கடைக்கோடி ஊர் வரை பரவி இருப்பதாக சொல்கிறார். அரசியல் குறித்து அடிப்படையான புரிதல் கொண்ட அல்லது அரசியல் மனிதர்களின் வாழ்வில் எவ்வளவு ஆழமாக ஊடுருவி இருக்கிறது என்பதை ஓரளவேனும் தமிழ் சமூகம் தெரிந்திருப்பதாக நான் கருதுகிறேன். குறைந்தபட்சம், பணமதிப்பிழப்பு யாரால் ஏற்பட்டது என்ற அடிப்படை அரசியல் தெரியும் ஒரு சமூகத்துக்கு அரசியல் ஆசிரியர்களாய் சென்னையின் தமிழ் திரைகள் இருக்க தேவை இல்லை கருதுகிறேன். எண்கள் அளவிலேனும் ஊர்கள் சென்னைவாசிகளை விட அதிகமாக ஒரு விரல் புரட்சியை செய்கிறார்கள்.

ஒருவிரல் புரட்சியின் வடிவில் சமூக சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று நாளை குறித்த நம்பிக்கையை அள்ளி கொடுக்கும் தமிழ் காட்சி வெளிகள், இங்கு இருக்கும் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஊழல் மற்றும் தேர்தலுக்கு பெரும் இலவசங்கள் என்று போகிற போக்கில் தீர்ப்பெழுதும் ஆடம் ஸ்மித் காலத்து முதலாளித்துவ சிந்தனைகளையும், நாளை காலை அனைத்தும் மாறிவிடும் என்ற மிகை உணர்ச்சிகளையும், ஒரே கதைகளை திரும்பத்திரும்ப பார்க்கும் சோர்வையும் மட்டுமே கொடுக்கின்றன.

Comments

Popular posts from this blog

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்: வெறுப்பை ஜனநாயகப்படுத்தும் அழகியல்!

0. பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்: “நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது” 1. மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போ...

In the most health-obsessed society ever, all is not well*: On Trauma

1 Philosopher Byung-Chul Han's essay Neuronal Power begins with the following lines: " Every age has its signature afflictions. Thus, a bacterial age existed; at the latest, it ended with the discovery of antibiotics. Despite widespread fear of an influenza epidemic, we are not living in a viral age. Thanks to immunological technology, we have already left it behind. From a pathological standpoint, the incipient twenty-first century is determined neither by bacteria nor by viruses, but by neurons ". Modern integrative body mind science defies Byung-Chul Han’s statement, that it is reductive to define human suffering solely in terms of ailments. However, we are living in an era, where production relations dictate nearly everything about human existence, in this specific context Byung-Chul Han’s statement—that the majority of human society is afflicted by mental or neuronal issues—serves as a foundational lens to understand contemporary humans and their struggles. In today’...

படுகொலைக்கு முன்னான சில மணி நேரங்கள்

    ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன் , எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை . அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட   நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன் , ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல் . கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை . உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை , இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை . அதே நேரம் ஒளியற்று , ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது , சூடான மழைத் துளியை போல் . மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது ... அம்மாவின் முலை காம்புகள் , விபத்தொன்றில் மரணித்த நன்பன் , தேர் திருவிழா , அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள் , அவளின் முதல் முத்தம் , இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம் , கல்லூரியின் விடுதி அறை , முதல் காமத்தின் வெள்ளை இரவு ... இப்படி சொல்லி ம...