0.
சமகால மனித சமூகங்கள், தண்டனை சட்டங்களால் வழி நடத்தப்படுகின்றன. ஒரு சமூகத்தின் அறத்தையும், நீதியையும் முடிவு செய்யும் வலிமை கொண்டவையாக இருக்கும் தண்டனை சட்டங்கள் அறத்தையும் , நீதியையும் நிலைநிறுத்த வேண்டி, வன்முறை மற்றும் பயத்தினை மூலதனமாகக் கொண்டு இயங்குகின்றன. தண்டனை சட்டங்களால் இயக்கப்படும் நம்
சமூகங்களில் வாழும் மனிதர்களின் இருப்பு என்பதே இந்த சட்டங்கள் இயல்பாக உருவாக்கும் அச்சம் மற்றும் வன்முறை உண்டாக்கும் பயத்துடனான வாழும் இருப்பாகியிருக்கிறது. சமூக மயமாக்கப்படுத்தலின் ஊடக, இந்த வன்முறை மற்றும் பயத்தை இயற்கையான சமூக செயல்பாடாக நம்பவைக்கப்படுகிறோம்.
சமூகத்தில் நீதி மற்றும் அறத்தை உறுதி செய்வதாகச் சொல்லும், அரசியல் சட்ட நூல்களில் எண் வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும் தண்டனை சட்டங்களுக்கும் நீதிக்கும் அறத்துக்கும் எப்போதும் பாரிய இடைவெளிகளே இருக்கின்றன. இச்சட்டங்கள் இயங்குவதற்கு ஆதாரமாகவிருக்கும் நீதித்துறை எனும் அதிகார அமைப்பு, ஃபூக்கோ சொல்வதைப் போன்று, “தீவுக்கூட்டத்தை” போல் சிக்கலான உபஅமைப்புகளை கொண்ட ஒரு நிறுவனமாகச் செயல்படுகிறது - நீதிமன்றம், சிறை, காவல், கண்காணிப்பு, ராணுவம், உளவுத்துறை முதலியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கருதலாம். ஒழுங்குபடுத்தப்பட்ட நெறிமுறைகளின் வழியாக ஒன்றுக்கொன்று இயந்து செயலாற்றும் நீதி இயந்திரத்தின் "தீவுக்கூட்ட" அமைப்புகள் அனைத்தும் அதிகார வர்க்கத்தினால் உருவாக்கப்படுகிறது, மறுசீரமைக்கப்படுகிறது அல்லது இயக்கப்படுகிறது. இது, நிறுவன மையமாக்கப்பட்ட அவ்வியந்திரத்தைப் பராமரிப்பதற்கான இயக்குவதற்கான அதிகாரத்தைக் கைக்கொண்டவர்களின் நலன் சார்ந்து இயங்கவே எத்தனிக்கிறது. அதன் காரணமாகவே சட்டங்கள் நீதியிடமிருந்தும் அறத்திடமிருந்தும் வெகுதூரம் விலகி நிற்கிறன.
உலகமெங்குத்திருக்கும் தண்டனை சட்டங்கள் அனேகமும் காலனியத்தின் வழி ரோமானியர்களிடமிருந்து இரவல் பெறப்பட்டவை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அரசியல் அமைப்பு சட்ட நூல்களின் வரலாறு ரோமானியர்களுக்கு முன்பிருந்தே மனித சமூகங்களில் பரவலாகப் புழக்கத்திலிருந்தாலும், அவை அந்த சமூகத்திலிருக்கும் அனைவரும் கட்டாயம் பின்பற்றவேண்டிய நிறுவனமாக அல்லது ஒரு சமூகத்தின் ஆணிவேராக மாற்றப்பட்டதென்பது ரோமானியர் சிவில் சட்டங்களின் ஊடாக நிகழ்ந்தது. இந்த வரலாற்று நிகழ்வுகளின் நீட்சியாகவே நாம் பின்பற்றும் பல்வேறு தண்டனை சட்டங்களும் அதன் ஆதார அமைப்பான நீதித்துறையும் இருக்கின்றன. ஐரோப்பிய மையமாக்கப்பட்ட பின்-காலனிய உலகம் ரோமானிய சட்டங்களின் பைனரிகளை தாண்டிய மனித இருப்பை யோசிக்க மறுக்கின்றது. இந்த பைனரிகளை கொண்டே மனித இனத்தின் கடைசி சில ஆயிரம் வருடங்களின் வரலாற்று அணுகப்படுகிறது. ஆய்வுத்துறைகளான தொல்லியல் மற்றும் மானுடவியலில் கூட இந்த ஈரிணைகளை தாண்டிய மனித வரலாற்றைத் தேட முயல்வதில்லை. பைனரிகளை தாண்டியதாக கிடைக்கப்பெறும் தகவல்களும் கூட இந்த பைனரிகளுக்குள்ளே அடைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக மனிதர்களின் வரலாறு விவசாயத்தை கண்டுப்பிடித்ததற்கு பின்னான நாகரீக மனிதர் x விவசாயத்தை கண்டுப்பிடிப்பதற்கு முன்னான தீங்கற்ற காட்டுமிராண்டி எனும் இருமுனைகள் வாயிலாகவே அணுகப்படுகிறது. ஆபிரகாமிய மதங்களிடமிருந்து, பைனரி அணுகுமுறையை ஏற்றுக்கொண்ட ரோமானிய சட்டங்கள் மூலம் மொத்த உலகமும் தன்னை பைனரி அணுகுமுறைக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறது.
காலனியத்தின் ஊடாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பின்காலனிய தேசங்களில் வழக்கத்திலிருக்கும் பல்வேறு சட்டங்கள் நிகழ்காலத்தில் ஐரோப்பிய நாடுகளிலே வழக்கிழந்து போயிருப்பதுவே சட்டத்துக்கும் நீதிக்கும் அறத்துக்கும் இடையேயான இடைவெளியின் அளவீடாகக் கருதலாம். காலனியம் தழைத்தோங்கிய பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் அதிகம் லாபம் தரும் வர்த்தகமாக கினிமேன் எனப்படும் அடிமை கப்பல் நிறுவனங்கள் இருந்தன. இந்த கப்பல் நிறுவனங்களில் முதலீடு செய்து செல்வங்களைச் சேர்த்த ஐரோப்பியர்களின் தற்கால தலைமுறைகள் அல்லது அவர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள், இன்று அடிமை வர்த்தகத்தை முறைப்படுத்தப்பட்ட முதலாளித்துவ தொழிலாகச் செய்ய முடியாது என்பது மட்டுமில்லை, அவர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்கள் கறுப்பர் உயிரும் உயிரே (black lives matters) போன்ற இனவெறிக்கு எதிரான சமூகநீதி இயக்கங்ளுக்கும் ஆதரவு கரங்களை நீட்டவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. அதே போல் இன்று உலகத்தின் எந்த ஒரு மூலையிலிருக்கும் தேசத்தின் சட்ட புத்தகமும் அடிமைமுறையை அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக, அமைப்பாகக் கொண்டிருக்க முடியாது.
அறம் அல்லது நீதி பல்வேறு நிலைகளில் மனிதர்களின் சமூக அடுக்குகளிலிருந்தும், தேவைகளிலிருந்தும் தானாக உருக்கொள்கின்றன. அதிகார நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகளால் நடைமுறைப்படுத்தப்படும் தண்டனை/அரசியல் சட்டங்கள் பல சமயங்களில் நீதிக்கும் அறத்துக்கும் எதிராகவே நிற்கின்றன. பின்பு சமூக மற்றும் கலாச்சார முன்னெடுப்புக்களின் வாயிலாக மனித நீதிக்கும் அறத்துக்கும் இணக்கமான நிலைக்கு வர கட்டாயப்படுத்தப்படுகின்றன. மனிதர்களை அடிமைகளாக வைத்திருப்பது சட்ட நீதியாக இருந்த சமூகங்களில் இன்று அடிமைமுறைக்கு எதிரான வலுவான சட்டங்கள் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இந்த சட்டங்களை நிர்வகிக்கும் அதிகார பீடங்கள் தங்கள் முன்னோர் சட்டத்தின் பெயரில் நிகழ்த்திய வன்முறைகளுக்கும் , ஒடுக்குமுறைகளுக்கும் மன்னிப்புகோரி தங்கள் மீது இருக்கும் குருதி கறையை கழுவிக்கொள்கின்றன மேலும் அதன் காரணமாக புனிதமாகின்றன. கனடா போன்ற சில மேற்கத்தியத் தாராளவாத ஜனநாயக அரசுகள் தானாக முன்வந்து பூர்வக்குடிகளிடம் மன்னிப்பு கோருவதை இதற்கான எடுத்துக்காட்டுகளாகக் கருதலாம்.
1.
நிறுவனமையமாக்கபட்ட நீதி அமைப்பை இயக்கும் அதிகார வர்க்கத்தின் நலன் சார்ந்த ‘நீதி’ இந்தியச் சமூகத்தில் காலனியத்துக்கு பின்னான செயற்பாடு அல்ல. இந்தியச் சமூகத்தின் அரசியல் அதிகாரமும் சமூக அதிகாரமும் பல நூறாண்டுகளாக இணைத்தே இயங்குகின்றன - சமூக அதிகாரத்தைக் கொண்டவர்களே இங்கு அரசியல் அதிகாரமும் கொண்டிருக்கின்றனர். அதன் காரணமாகவே சாதிய ஒடுக்குமுறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை அரசியல் சட்டங்கள் குற்றம் என்று வரையறை செய்திருந்தாலும், இந்தியச் சமூகத்தில் நாள்தோறும் நிகழும் ஒன்றாகச் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் இருக்கின்றன.
இன்றும் ஆதிக்கச் சாதிகளின் வழித்தோன்றல்கள், காட்சி ஊடகம் இணையம் என்று நவீனத் தொழில்நுட்பங்களின் வழியாகவும் கூட தங்கள் சாதிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயல்வது மட்டுமல்லாமல் அதை வாழ்வுமுறை என்று பெருமைகொள்வதும் இந்தியச் சமூகத்தில் நீதி அமைப்பு கொண்டிருக்கும் வேடிக்கையான இடத்தை வெளிப்படுத்துகிறது. தேச வரைபடத்தின் அணைத்து திசைகளிலும் எந்த வெட்கமுமில்லாமல் சாதிய வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் ஒரு தலித்-பகுஜன் அல்லது ஆதிவாசி சாதிய வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாக அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய பேரழிவு நிகழ்வால் கூட இந்தியாவில் சாதிய வன்முறைகளைத் தடுத்து நிறுத்த முடியாமல் போனது அதிர்ச்சியான ஒன்று அல்ல.
எவ்வாறாயினும், ஆதிக்க சாதியினரின் பொதுவான கருத்து என்னவென்றால், சாதி என்பது கடந்த காலத்தின் கதை, சாதிச் சான்றிதழ்கள் ஒழிக்கப்பட வேண்டும், சமூக நீதி திட்டங்கள் இந்தியத் திறமைகளைப் புறந்தள்ளுகின்றன எனவே அவை ஒழிக்கப்பட வேண்டும் - அதாவது சில ஆயிரம் ஆண்டுகளாக ஒரு பெரும் பகுதி மக்களைக் கல்வி அறிவற்றவர்களாக, நிலமற்றவர்களாக, தீண்ட தகாதவர்களாக வைத்திருந்ததின் திறமை அங்கீகரிக்கப்படவேண்டும். சாதியத்தின் அணைத்து சலுகைகளையும் அனுபவிக்கும் மற்றும் சாதிய படிநிலைகளை வாழ்க்கை முறையாக நம்பும் தற்கால ஆதிக்கச் சாதி இளைய தலைமுறை, மேற்கத்தியத் தாராளவாத குடியாட்சிகளைப் போல் கூட தங்களின் முன்னோர்களின் குற்றங்களுக்குத் தார்மிக மன்னிப்பைக் கேட்கக் கூட தயாரில்லை. மேலும் ஒரு சமூகமாக இந்தியா குடியாட்சியில் சாதியின் அனுகூலங்கள் அனைத்து அமைப்புகளிலும் தீவிரமாகச் செயல்புரிகின்றன. இதில் தண்டனை சட்டங்களைக் கொண்டு நீதி வழங்கும் நீதித்துறையின் அனைத்து “தீவுகூட்ட” அமைப்புகளும் அடங்கும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் எனில், இந்திய நீதித்துறையின் தலைமைப்பீடமான உச்சநீதிமன்றத்தில் இதுவரை ஒரு தொல்குடி கூட நீதிபதியாகப் பதவி வகிக்கவில்லை. 1980கள் வரையான காலகட்டத்தில், அதாவது இந்தியா விடுதலை அடைந்து முப்பது ஆண்டுகள் வரை பிற்படுத்தப்பட்ட அல்லது பட்டியல் வகுப்பிலிருந்து ஒருவர் கூட உச்ச நீதிமன்ற நீதிபதியாக இல்லை. மேலும் இதுநாள் வரையான கணக்கெடுப்பின்படி 30 சதத்துக்கும் அதிகமான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் பிராமண சாதியினரே.
2.
இந்தியத் திரைத்துறைக்கு எப்போதும் சமூகத்தின் மீட்பராக இருப்பதில் பெரு விருப்பமிருக்கிறது. அனேகமான மையநீரோட்ட இந்தியத் திரைப்படங்களின் கதை நாயகர்கள் மீட்பர்களாக அவதாரம் கொண்டு தீமையிடமிருந்து தேசத்தை, மக்களை, குடும்பத்தை, காதலை அல்லது ஏதோ ஒன்றை வன்முறையை ஆயுதமாகக் கொண்டு மீட்டுக்கொண்டே இருக்கின்றனர். இந்தியத் திரைப்படங்களின் வரலாறு ஆரம்பித்த காலந்தொட்டு இரண்டாயிரத்தின் முதல் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் வரையிலும் கூட, காக்கி அல்லது அடர் பச்சை நிற ராணுவ சீருடைகளைத் தரித்த பெரும்பான்மையான இந்த மீட்பர்கள் சமீப காலத்தில் கருப்பு அங்கி அணிய ஆரம்பித்திருக்கின்றனர். பிங்க் - ஹிந்தி, ஜெய்பீம் - தமிழ், ஜன கன மன - மலையாளம் போன்ற குறிப்பிட்ட திரைப்படங்களை எடுத்துக்காட்டுகளாகக் கருதலாம்.
காவல் நிறுவனத்திடமிருந்த மீட்பர் அடையாளத்தைப் பறித்து அதை வழக்காடு மன்றத்திடம் கொடுத்திருக்கின்றனர் சமகால இந்தியத் திரைத்துறை கதைசொல்லிகள். இன்றுவரை தனது பல்வேறு நடைமுறைகளிலும் காலனிய மரபுகளைப் பின்பற்றும் இந்திய வழக்காடு மன்றங்களே இந்த சமூகத்தில் நடக்கும் அனைத்து தீமைகளுக்கும் தீர்வை தரும் வல்லமை பொருந்திய நிறுவனமாக சமீபத்திய இந்தியத் திரைத்துறைகள் முன்வைக்கின்றன.
2106ல் இந்திய ஒன்றிய அரசு, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை உயர் நீதிமன்றங்களின் பெயர்களை மாற்றும் முடிவை எடுத்தபோது, வழக்கறிஞர் சஞ்ஜோய் கோஸ், “உயர் நீதிமன்றங்களின் பெயர்களை மாற்றுவது மட்டும் நமது சட்ட அமைப்பின் காலனித்துவ பாரம்பரியத்தை உடைக்காது” எனும் கட்டுரையை எழுதினார் அதில், “my lord”, கோடைக்கால விடுமுறை,வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் அணியும் கருப்பு அங்கி என்று இன்றும் நடைமுறையில் இருக்கும் காலனிய மரபுகளைப் பட்டியலிட்டு, நீதித்துறையில் இருக்கும் காலனிய எச்சங்களை மாற்றாமல் உண்மையான ஜனநாயக மாண்பை இந்தியச் சமூகத்தில் அடைந்துவிட முடியாது என்கிறார்.
மராத்தியில் வெளியான 'கோர்ட்' எனும் திரைப்படத்தைத் தவிர்த்து இந்தியாவில் நீதி அமைப்பினை விமர்சன ரீதியாக அணுகிய திரைப்படங்கள் எதுவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. பெரும்பாலான இந்திய வழக்காடு மன்றங்கள் குறித்தான திரைப்படங்கள் தனிநபர் சாகங்களாக நிறைவு பெறுகின்றன. அந்த தனி மனித சாகசங்கள் நலிந்தோருக்குத் நீதியைப் பெற்றுத்தரும் மீட்பர் கதையாகவே முடிவு பெறுகின்றன. ஜெய்பீம் திரைப்படம் குறித்த கட்டுரையில் பேராசிரியர் தர்ம ராஜ், "நலிந்தவர்களை ஈடேற்றும் போதை" எனும் பதத்தைக் கட்டுரையின் தலைப்பாக பயன்படுத்தியிருப்பார். அந்த பதத்தின் பொருளை விளக்குபவையாகவே இந்திய நீதியியல் சினிமாக்கள் இருக்கின்றன.
எளியவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் இந்த சாகச கதையாடல்களின் நீதிபதிகள் கதையின் பாத்திரங்களாக இல்லாமல் திரை வெளியினை நிரப்பும் திடப்பொருட்களில் ஒன்றாகவே வருகிறார்கள். அவர்களுக்கும் திரையில் நிகழும் நீதி போராட்டத்துக்கும் எந்த தொடரையும் திரைக்கதைகள் உருவாக்குவதில்லை. அதற்கு முக்கிய காரணமாக இந்திய திரை வெளிகள் புராண காலத்து 'அப்பாவி- பாவி' நீதி கதைகளை மீண்டும் மீண்டும் உருவாகி மனிதர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுதலின் மூலம் நிகழும் விளையாட்டுகளாகவே இருக்கின்றன.
இந்த விளையாட்டில், அந்த விளையாட்டு நிகழும் கலமான அமைப்பு குறித்து எந்த கேள்வியும் எழுப்பத் தேவையில்லை. காரணம் நிகழும் விளையாட்டின் நோக்கம் பார்வையாளர்களின் கண்ணீரை/ உணர்ச்சிகளைக் கோருவது மாற்றாக சமூக அமைப்பில் இயங்கும் பலம் பொருந்திய ஒரு நிறுவனத்தைக் கேள்வி கேட்பது அல்ல. நிகழும் இந்த நீதி விளையாட்டில் பாவி பாத்திரத்தைக் காவல் நிறுவனத்துக்கு வழங்கும் கதைசொல்லிக்கு அதை செய்வதில் பெரிய சிரமங்கள் இருப்பதில்லை காரணம் மனிதர்கள் பொதுப் புத்தியில் காவல் நிறுவனம் மீது இருக்கும் அல்லது நாம் நாள்தோறும் வாசிக்கும் பழக்கப்பட்ட செய்திகளில் ஒன்றாக இருக்கும் காவல் வன்முறைகளைக் கொண்டு எளிதில் உருவாக்கிவிடலாம்.
சமகால அரசியல் நிலைமைகளின் தாக்கங்கள் குறித்து நேரடியாகப் பேசிய ஜன கன மன போன்ற திரைப்படத்தின் திரைக்கதையில் கூட இந்திய நீதி நிறுவனம் மீது எந்த ஒரு விமர்சனமும் வைக்கவில்லை. மாறாகச் சமகாலத்தில் நிகழும் அநீதிகளுக்குத் தீர்வாக இந்திய நீதி நிறுவனம் முன்வைக்கப்படுகிறது.
கடைசி விவசாயி போன்ற திரைப்படங்களின் திரைக்கதைகள் ஒருபடி மேலே சென்று நீதி அமைப்பை அல்லது அந்த அமைப்பின் அடையாளமான நீதிபதியைக் கருணையின் வடிவமாக முன்வைக்கின்றன. கருப்பு அங்கி தரித்த நீதியின் தேவ தூதுவர்கள் எளிய அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி மழை பொழிவதைத் திரையில் காணும் பார்வையாளர் பேரும் உணர்ச்சி ததும்பலில் உடல் சிலிர்க்க ஆரவாரம் செய்து கொண்டாடுகின்றனர். இது நீதியின் வெற்றி என்பதாக இல்லாமல் ஒரு சாகச விளையாட்டின் வெற்றி என்பதாகவே நிறைவு பெறுகின்றது. இந்த திரைப்படங்கள் ஈடேற்றும் போதை ஒரு மட்டைப்பந்து அல்லது கால்பந்தாட்டத்தின் முடிவு கொடுக்கும் பெரும் உணர்ச்சிக்கு ஒப்பானதாகவே இருக்கிறது.
காவல் நிறுவன வன்முறைகளைச் சாடும் இந்த திரைப்படங்கள், காவல் அமைப்பு குறித்து முன்வைக்கும் அடிப்படை கேள்விகள் ஒன்றைக் கூட நீதி நிறுவனங்கள் மீது முன்வைக்க விரும்புவதில்லை. காவல் படுகொலைகளைக் கேள்வி எழுப்பிய விசாரணை, ஜன கன மன போன்ற படங்கள் கூட நீதி நிறுவனங்களில் நிகழும் தவறான தீர்ப்புகள் குறித்தோ அதற்கான சமூகவியல் அரசியல் காரணங்கள் குறித்தோ எந்த கேள்வியையும் எழுப்புவதில்லை.
தவறான தீர்ப்புகளுக்கான நஷ்டஈட்டை உறுதி செய்யும் சரத்து 32 மீதான பாராளுமன்ற விவாதத்தில் பாபாசாஹேப் அம்பேத்கர், “நமது அரசியல் அமைப்பில் இருக்கின்ற சட்டங்களிலே மிகவும் முக்கியமானது என்று இந்த சரத்தைத் தான் கூறுவேன் காரணம் இந்த சட்டம் இந்தியக் குடியாட்சியின் ஆன்மாவைத் தாங்கி இருக்கின்றது” என்றார். ஒரு மனிதரைத் தவறான தீர்ப்பின் மூலம் தண்டனைக்கு ஆட்படுத்துவதென்பது மனித உரிமையற்ற செயலாகும், சரத்து 32 முன்வைக்கும் தீர்வு எந்த அளவிலும் தண்டனைக்கு உள்ளானவரின் இழந்த வாழ்க்கையை மீட்டுக் கொடுத்துவிட முடியாது என்றாலும் குறைந்தபட்சம் இந்த சட்டம் எந்த அளவில் நடைமுறையில் இருக்கின்றது என்பதே பெரும் கேள்வி. இந்திய நீதி அமைப்பிலிருந்து தப்பித்து வெளியேறும் ஒருவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிர்த்து மீண்டும் நீதி அமைப்பை நாடிச் செல்வது என்பது வெகு அரிதான ஒன்று. அதற்கு மிக முக்கிய காரணம் இந்திய நீதி அமைப்பில் இயல்பாக வெளிப்படும் காலனிய மரபுகளின் நீட்சி. அந்த மரபுகள் எளிய மனிதர்களை அதிகாரம் பொருந்திய நீதி நிறுவனத்தின் முன் அடையாளம் இல்லாத ஒரு துகளாக மாற்றிவிடுகிறன.
நடைமுறையில் இருக்கும் சட்டங்களைக் கொண்டு மேற்கொள்ளவேண்டிய விமர்சன பூர்வ அணுகுமுறையே இல்லாத சூழலில், ஒட்டுமொத்த நீதி அமைப்பின் மீது அரசியல் அல்லது கலை வடிவிலான விமர்சனம் என்பது வெகு அரிதாக மாறிவிடுகிறது. இந்த சிக்கலின் மூலம் திரைக்கதை ஆசிரியர்களைத் தாண்டி, நம் சமூக அமைப்பிலே இயல்பாக இருப்பதால் அதுவே இந்திய திரை வெளிகளிலும் வெளிப்படுகிறது.
இந்திய நீதித்துறையில் இதுக்கலாம் வழங்கிய தவறான தீர்ப்புகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளில் கூட அதிகப்படியான தரவுகள் வெளிப்படவில்லை. மாறாக அங்கொன்றும் இங்கொன்றுமாக பொது வெளியில் பேசப்பட்ட தவறிய தீர்ப்புகளைப் பட்டியலிட்டே இந்த ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. நீதி அமைப்பு பற்றிய ஆய்வுப் புலங்களே இப்படி இருக்கும்போது சமூக பொது மனநிலையும், அப்பொதுமனநிலையிலிருந்து வெளிப்படும் படைப்புகளும் நீதி நிறுவனங்களை விமர்சனமின்றி ஏற்பது மட்டுமல்லாது சமூகத்தில் நிகழும் சிக்கல்கள் அனைத்தும் தீர்வு நல்கும் அமைப்பாகக் கருதுவதில் எந்த அதிர்ச்சியும் இருக்க முடியாது.
இந்திய திரைப்படங்களின் இந்த பொது கருத்தோட்டத்திலிருந்து விலகி குறைந்தபட்சம் தனது வன்முறை திரைக்கதைக்கான கருவியாக நீதி அமைப்பை, அதில் இயங்கும் சாதியத்தைக் கேள்வி எழுப்பிய சமீபத்திய திரைப்படமாக சாணிக்காகிதம் இருக்கிறது.
பொதுப் புத்தியின் ஊடக இயல்பாக வெளிப்படும் இந்த மீட்பர் கதையாடல்கள், நடைமுறையில் இருக்கும் அமைப்பில் எந்த சிக்கல் எழுந்தாலும் அதற்குத் தீர்வை இந்த அமைப்பில் இருக்கும் ஒரு நிறுவனத்திடமே பெற்றுக்கொள்ளலாம் எனும் நம்பிக்கையை மனிதர்களிடம் வலுக்கட்டாயமாகத் திணிக்கிறது. அதன் மூலம் இந்த அமைப்புகளைக் குறைந்தபட்சம் விமர்சனப்பூர்வமாக அணுகி அதன் சீரமைப்புக்கு வழிவகை செய்யும் மிக சாதாரண சமூக இயக்கங்கள் கூட இத்தகையை அமைப்புகளில் நிகழாமலே இருக்கின்றன. அது இந்த அமைப்புகளை மேலும் இருக்கமானதாகவும், அதிகாரத்துடன் இயைந்து இயங்கக்கூடியதுமான வழியைத் தோற்றுவிக்கிறது.
பொதுப் புத்தியின் ஊடக இயல்பாக வெளிப்படும் இந்த மீட்பர் கதையாடல்கள், நடைமுறையில் இருக்கும் அமைப்பில் எந்த சிக்கல் எழுந்தாலும் அதற்குத் தீர்வை இந்த அமைப்பில் இருக்கும் ஒரு நிறுவனத்திடமே பெற்றுக்கொள்ளலாம் எனும் நம்பிக்கையை மனிதர்களிடம் வலுக்கட்டாயமாகத் திணிக்கிறது. அதன் மூலம் இந்த அமைப்புகளைக் குறைந்தபட்சம் விமர்சனப்பூர்வமாக அணுகி அதன் சீரமைப்புக்கு வழிவகை செய்யும் மிக சாதாரண சமூக இயக்கங்கள் கூட இத்தகையை அமைப்புகளில் நிகழாமலே இருக்கின்றன. அது இந்த அமைப்புகளை மேலும் இருக்கமானதாகவும், அதிகாரத்துடன் இயைந்து இயங்கக்கூடியதுமான வழியைத் தோற்றுவிக்கிறது.
Comments
Post a Comment